ஆள் அரவமற்ற பனி போர்த்திய ஒரு நள்ளிரவில்தான் எங்கள் வீட்டில் அந்த உரையாடல் தொடங்கியிருந்தது. பகல் பொழுதுகளில் சீரியல் பார்த்துக்கொண்டும், மொபைல் நோண்டிக் கொண்டும் பேசா நோன்பு கடைபிடிக்கும் ஆட்களின் குரல்கள் இரவில் கேட்பதில் கலவரப்பட்ட ஒரு தெருநாய், விகற்பமாக பார்த்து விட்டு நீண்ட ஊளை விட்டபடி நகர்ந்தது.
“யேய். என்னத்த அப்படி பாக்காதத பாத்துகிட்டு நிக்குற மாதிரி நிக்குற, அதோட ஒரு முடி விழுந்தாக் கூட கோடி பாவம் சேரும், கொண்டுபோயி வயகாட்டுல விட்ரூ”…பாட்டி உரக்கச் சொன்னாள். அதை சொல்லும் போது ஏனோ உச்சுக் கொட்டிக்கொண்டாள்.
“யம்மா…என்னம்மா ஆச்சு அதுக்கு, பாக்குறதுக்கு பாவமா இருக்குமா”.. இது தங்கை. கன்னத்தை துடைத்த படி சொன்னாள். அழுதாள் போல.
“டேய் ..பாரு….பாரு…உசிரு இருக்குல்ல… செத்து கித்து போயிடப் போது சனியன் இருக்கிற பாவம் போதான்னு இது வேற”…அலுத்து கொண்டே எனை நோக்கி ஏவல் செய்தாள் அம்மா.
“இந்தாடி இந்த பாலை அதுகிட்ட வையி குடிக்குதா பாப்போம். பாவம், எந்தப் பாவியோ இப்படி செஞ்சிட்டுப் போயிட்டான் “….
இறுதியில் அடிபட்ட அந்தப் பூனையை எங்கள் வீட்டிலேயே இருத்திக் கொள்ள நாங்கள் முடிவெடுத்தோம்.
***
இரவுகள் ரம்மியமானவை. அதன் நிசப்தம் தரும் இதமும் சுகமும் பரவசம் கொள்ளச் செய்வன. கருமையை குழைத்து குழைத்துப் பூசிக் கொள்ளும் இரவுகள். மௌனத்தின் ஒலி வடிவம். இரவுக்கு என்று ஒரு தனியான குரல் உண்டு. கக்கத்தில் முகம் பொதித்த காதலி ஒருத்தி காதோரம் ஏறிக் கிசுகிசுக்கும் ரகசிய மொழி போன்றது அது. அந்தக் குரல் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருக்கின்றது. அந்தப் பாடல் எதையோ மனிதர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நாளும். அது உதிர்க்கும் ரகசியங்கள் மனிதர்களால் அறியப்படாமல் அங்கங்கே மிஞ்சி விடுகின்றன. வெயிலின் வெளிச்சத்தில் அது மேலும் மனித புலன்களுக்கு புலப்படாது மறைந்துவிடுகின்றது.
சும்மாவா காதலர்களும் கள்வர்களும் தங்கள் லட்சியத்திற்கு இரவுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏதோவொரு தேவைக்காக பகலில் ஓடி கொண்டிருக்கிக்கும் உலகம், இரவில் ஆசுவாசம் கொள்கிறது. நின்று கொஞ்சமாக மூச்சு விடுகிறது. மணப்பெண் மாதிரி திகட்டும் அரிதாரம் பூசிக் கொண்டு நிற்கும் பகல்தான் இரவில் முழு நிர்வாணத்தை உடுத்திக் கொண்டு அழகாகக் கிடக்கிறது. பதவி, பவிசு என்று முகமூடி அணிந்து அதிகார இருட்டில் உழலும் உலகம், இரவில் ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் ஆத்ம தரிசனம் கொள்கிறது. உலகம் உலகமாக இருப்பது இரவுகளில் மட்டும்தான்.
அந்த வகையில் எங்கள் தெருவின் இரவுகள் கொஞ்சம் கொடூரமானவைதான். பத்து மணிக்கு மேலே நீங்கள் பசியாக இருக்கிறீர்கள் என்றால் தயவு கூர்ந்து எங்கள் தெருப் பக்கம் மறுந்தும் கூட வந்து விடாதீர்கள். எங்கள் தெரு உங்களை வஞ்சித்துக் கொல்லும். ஒரு வாய் தண்ணீருக்கு விக்கிக் கொண்டு சாக வேண்டிய நிலை வரும். இருக்கும் ஒருசில கடைகளும் அடைந்து விடும் என்பதற்க்காக மட்டும்மல்ல அரிதாகத் திறந்திருக்கும் கடைகள் உங்களை வரவேற்று உக்காத்தி வைத்து இலையைப் போட்டுவிட்டு போய்விடும். பசியோடு வந்த உங்களின் பசியை மேலும் தூண்டி வேடிக்கை பார்க்கும். கொலைப்பசியாகி, பின்னர் அதை மரத்துப் போகும் நேரம் சுருக்கமாகச் சொன்னால் உங்கள் உயிர் போகும் நேரத்தில், ஒருவன் வருவான். “சார், இட்லி முடிஞ்சிருச்சு சார்”.. என்பான் இளித்துக்கொண்டே. தேவையா உங்களுக்கு..? அதான் சொன்னேன். இரவுகளில் எங்கள் தெருப் பக்கம் வந்துவிடாதீர்கள் என்று. திண்ணை விளக்குகள் அணைக்கப்பட்டு சுமார் எட்டு எட்டரைக்கு எல்லாம் கதவுகள் மூடிய நிலையில் வீடுகள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்கும். இரவு என்றால் அத்தனை எச்சரிக்கை உணர்வு எங்கள் தெரு ஆட்களுக்கு.
நான் சொல்லவிருக்கும் சில சம்பவங்களை வாசித்தால் ஒருவேளை எங்கள் பிரச்னையை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். அப்படி என்ன சம்பவம்..பெரிய சம்பவம்! சிறுகதை எழுத போதுமான ஒரு சம்பவமா என்றால் என்னிடம் பதில் கிடையாது. ஆனால், இந்தக் கதைக்கு இது போதும்தான்.
அப்போது எங்கள் தெருவில் புதிதாக தார்ச்சாலை போட்டிருந்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இரவு ஒவ்வாத ஒன்று என்றெல்லாம் இல்லை. எல்லாத் தெருக்களைப் போலத்தான் எங்கள் தெருவும் இருந்திருக்கிறது. வீட்டை அப்படியே விடிய விடியத் திறந்து போட்டபடி இடும்பன் பூஜை நடக்கும் இரவுகளில் டெக்கு எடுத்து போட்டு கொட்ட கொட்ட படம் பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள்தான் அவர்கள். ஆனால், இப்போது இப்படி மாறிப்போயிருந்தார்கள்.
இங்கே இடும்பன் பூஜை என்று குறிப்பிட்டதால் அந்த சம்பவத்தையும் சொல்லியாக வேண்டும். எங்கள் தெரு சுப்ரமணிய சுவாமி கார்த்திகை மாத பதினைந்து நாள் உற்சவம் முடித்து, சூரனை சம்பாரம் எடுத்து களைப்பாக ஓய்வு எடுக்க பாசறைக்குத் திரும்பும் கடைசி நாளை நாங்கள் இடும்பன் பூஜையாகக் கொண்டாடுவோம். விடையாற்றி என்பதால் அது தெரு மண்டகப்படி. தெருமக்களின் நன்கொடையில் பெரிய விழாவாக எடுத்து செய்வோம். அன்றைய இரவு யார் வீட்டிலும் அடுப்பு எரியாது. எல்லாம் இடும்பன் கோவில் படையல் சோறுதான். வருஷத்தில் அந்த ஒரு நாளில்தான் இடும்பன் அலங்காரத்துடன் இருப்பார். எங்கள் இடும்பன் கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர், ஏனைய நாட்களில் கேட்க நாதியற்றுத் தலையில் வைத்த எண்ணையோடு பிசுபிசுத்து ஆங்காரமாக நிற்பவர், ஒரு சொட்டு எண்ணெய் விட்டு திரி போட மறந்து போன கூட்டம் இப்படி தனக்கு தலை வாழையிலை எடுத்து படையல் போடுவதை ஆட்சேபிக்காமல் கம்மென்று இருந்து விடுவார்.
படையல் என்றால் முருகனுக்கு கூட அப்படி கிடையாது, இடும்பன் பூஜைக்கு அப்படி கலகலவென்று இருக்கும். அவர் கோவில் சந்நிதிக்கு முன்னேயிருக்கும் இடத்தில் தூத்தி பெருக்கி கோலமிட்டு, தெருவில் உள்ள பெரிய தனக்காரர்கள் வீட்டிலிருந்து ஐந்து ஆறு மர பெஞ்சுகள் கொண்டுவரப்பட்டு, அவைகள் நன்றாக நீராட்டப்பட்டு, பந்தலுக்கு நடுநாயகமாக இடும்பன் பார்வைக்கு படும்படி ஒன்றோடொன்று நெருக்கமாக குத்துவரிசையாக போடப்படும். மீதமுள்ள பெஞ்சுகளும் மேலொன்றும் கீழொன்றுமாக போடப்பட்டு சிறிய மேடை போல அலங்கரிக்கப்படும்.. பூஜைக்கு என்று வாங்கி வரப்பட்ட எட்டு முழ வேட்டியை அதன் மேல் விரித்து, பின்னர் மேடையை அடைத்துவிடும் படியாக தலைவாழையிலை போடப்படும். படையல் சோறுகள், தினை கொழுக்கட்டைகள், வாழைப்பழ பஞ்சாமிர்தம், தேங்காய் கீற்றுகள் என்று பரப்பி வைக்கப்படும்.
இருதயம் வெளியில் வந்து விழுந்து விடும் அளவுக்கு உறுமி, மேளம் அதிரும். நாயனம், தப்பு, கொட்டு, கொக்கரை என்று எல்லாமும் கலந்து களேபரமாக முழங்கும். சுற்றி நிற்கும் கூட்டம் யாருக்கு எப்போ சாமி வரும் என்று நடுக்கத்தில் இருக்கும் சமயம், சொல்லி வைத்தாற்போல வைத்தி அண்ணனுக்கு முதலில் சாமி வந்துவிடும். “யேய்…” என்று சத்தம் போட்டு நாக்கைத் துருத்தியும், கடித்துக்கொண்டும் கண்களைப் பிதுக்கி கொண்டும் பயங்காட்ட பூஜை சூடு பிடித்து விடும். தாளத்தின் வேகம் கூடி விடும். அடி ஏற ஏற அண்ணன் ஆக்ரோஷம் அடைவார். நாயனம் வசிப்பவரிடம் சென்று மெட்டுச் சொல்லிக் கொடுப்பார். உறுமி மேளக்காரருக்கு தாளம் சொல்லி அடிக்க வைப்பர். பின்னர் தலை கால் புரியாமல் ஆடுவார். உக்கிரமாக ஆடி முடித்து சன்னதம் சொல்லும் சமயத்தில் தெரு நாட்டாமை அண்ணனின் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிவிட்டிருப்பார். சட்டையைக் கழற்றித் தூர வீசிவிட்டு, இடும்பன் பக்கத்தில் வைப்பட்டிருக்கும் இரும்பு கைத்தடியை எடுத்து கொள்வார் அண்ணன் . முதுகில் ‘தம்.. தம்’ மென்று அடித்துக் கொள்வார். மெட்டு போடுவார்..ஆடுவார்..அடித்துக் கொள்வார். இப்படியே கொஞ்ச நேரம் லூப் ஆகும். பூசாரி, அண்ணனின் பின்னாலே வந்து வந்து முதுகில் விபூதி போட்டுக்கொண்டேயிருப்பார். இப்படியே கொஞ்ச நேரம் சாமியாடிய வைத்தி அண்ணனை சிலர் குண்டு காட்டாக தூக்கிக் கொண்டு போய், கோவில் கிணற்றடியில் போட்டு முங்க முங்க தண்ணீர் ஊற்றி சாந்தப்படுத்துவார்கள்.
அதற்குள் வேறு யாருக்கேனும் இடும்பன் வந்திருப்பார். இப்படி ஒவ்வொருவராக சாமியாடி, பூஜை முடிய விடிந்து விடும் . இப்படித்தான் ஒருமுறை இடும்பன் பூஜையின் போது வைத்தி அண்ணனுக்கு சாமி வரும் முன்னே சாமி மலையேறிவிட்டிருந்தார். பூஜையும் முடிந்துவிட்டிருந்தது. அந்த உப சம்பவத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேனே..ஆனால், நான் சொல்லவந்த சம்பவம் இதுவும் அல்ல.
எங்கள் தெரு இடும்பன் பூஜை கொஞ்சம் பிரசித்தி பெறத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் என்றால் அடுத்த தெருக்களை தாண்டி பக்கத்து கிராமங்களில் இருந்து தத்தமது சொந்தக்காரர்களை வர வைக்கும் அளவுக்கு பிரசித்தி. சிலர் பிள்ளை குட்டிகளுடன் பூஜை ஆரம்பிக்கும் முன்னமே வந்து சாமியாடிக் கூத்து நிகழும் இடத்தில் இடம் போட்டு வைப்பது எல்லாம் நிகழ்ந்தேறும். இடம் போடுவதில் சண்டை சச்சரவுகள் கூட வரும். இடும்பன் பூஜை நிகழ இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் கூத்தாடிகள், பொம்மை விற்பவர்கள், ஜவ்வு மிட்டாய்க்காரர், வளையல் தாத்தாக்கள், மூணு சீட்டு சூதுகாரர்கள், பஞ்சு மிட்டாய் கடைகள் என்று விதவிதமான கடைகள் விரிக்கப்பட்டு தெருவே ஜெ ஜேவென்று இருக்கும். குலுக்கல் சீட்டுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் வழங்கும் கடையை ஒருவர் விரித்திருந்தார்.
‘சீட்டு ஒரு ரூபாய். ரூவாய்க்கு ஒரு சீட்டு. விழும் பரிசுகள் சீட்டுக்காரருக்கு.. இல்லையேல் கம்பனிக்கு’, என்று கூவிக்கொண்டிருந்தார் கடைக்காரர். அந்த குலுக்களில் பெரும்பாலான சீட்டுகள் வெற்று சீட்டுகள்தான். அதில் ஒன்றுமே இருக்காது. அதில் தொடர்ச்சியாக வெற்று சீட்டு எடுத்து ஏமாந்த கோவத்தில் அறிவு, அவனே ஒரு சீட்டில் பிளாஸ்டிக் கார் என்று எழுதிப் போட்டு, அதையே எடுத்து, ‘கார் வேண்டும்’ என சண்டையிட்டான்.
“‘ஏய் ஒரு ரூவா சீட்டுக்கு எவன்டா பத்து ரூபா கார் தருவான்… அதெல்லாம் முடியாது. தர முடியாது” என்று அந்த ஆள் விரட்டி விட, அறிவு பயல் ஓடி போய் அவனுடைய அப்பாவைக் கூட்டி வர, வாய்த்தகராறு கைகலப்பாகி பெரிய சண்டையாகி முடிந்தது. போலீஸ்காரர்கள் வந்து கூட்டத்தைக் கலைக்க எல்லோரையும் அடித்து விரட்டினர். அடித்து விரட்டப்பட்டவர்களில் சாமியாடிக் கொண்டிருந்த வைத்தி அண்ணனும் ஒருவர். சச்சரவில் புழுதி படிந்த படையல் சோறு யாருக்கும் தரப்படாமல் நாக குளத்தில் கொட்டப்பட்டது.
நாம் எங்கோ சென்றுவிட்டோம். சரி, மேற்படி சம்பவத்திற்கு வருவோம். தெருவில் புது சாலை அமைக்கப்பட்டிருந்து. வாசலில் பாதாள சாக்கடை கட்டி முடிக்கப்பட்டு, அதன் மேல் தார் சாலை போட்ட பிறகானதோர் இரவில் தெருவில் யாரும் தூங்காமல் புதிதாக மின்னிக்கொண்டிருந்த சாலையில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தவர்கள்தான் எங்கள் தெருக்காரர்கள். கருங்கல் சிப்ஸ்கள் குத்துவதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.
என்றோ ஒரு இரவில் யாரோ சிலர், காசுக் கடை சந்தன செட்டியாரைத் தாக்கி விட்டு அவரின் கைப்பையிலிருந்து லட்ச ரூபாய் ரொக்கதையும், எண்பது பவுன் சாமானையும் களவு செய்ததிலிருந்து இந்த கதவடைப்பு ஆரம்பமாகி போனது. பாவம், அன்றைக்கு மண்ணில் விழுந்தவர்தான்; இன்னமும் எழவில்லை. அவர் மட்டுமா, அதற்கு பின்னர் மில்லுக்காரவங்க வீடு, எட்டு குடி, பாய் வீடு என்று குறி வைத்து தொடர்ச்சியாக நிகழ்ந்த களவுகளே தெரு பொழுதோடு அடங்கக் காரணமானது.
தங்கவேல் டைலரின் ரெண்டாவது மகன் விஜயனுக்கு களவில் தொடர்புள்ளதைக் கண்டுபிடித்த போலீஸ்காரர்கள், அவனை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்தார்கள். அந்த கலவரக் கூச்சலில் தெருவே விழித்துக் கொண்டது. டைலர் சில மாதங்களிலே வீட்டையே காலி செய்து விட்டு போய்விட்டார். ஆனாலும் இரவின் பயம் எங்கள் தெரு ஆட்களை விட்டு அகலவில்லை .
அதற்கும் ஒரு சம்பவம் இருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள் இத்தோடு சம்பவங்களை முடித்து விட்டு நாம் கதைக்கு வந்துவிடுவோம்.
ஒரு இரவில் அத்தாச்சி கிழவி (அதற்கு அப்படியொரு பெயர்) மருமகளிடம் சண்டை பிடித்துக் கொண்டு சாகப் போவதாகச் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிவிட்டது. தெருவே எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து போய் விட்டார்கள். கிழவி காணாமல் போன இரவு குமரனும் நானும் (குமரன் -கிழவியின் பேரன்) கோவில் கோவிலாகச் சுற்றி வந்தோம். எங்கும் காணவில்லை. களைப்பில் திரும்பிய நாங்கள் பிள்ளையார் கோவிலில் படுத்துக்கொண்டோம். நான் சற்று நேரத்தில் தூங்கிப் போனேன். குமரன் என்னுடனே படுத்துக்கொண்டான். ஆனாலும், ‘ஆயா… ஆயா’ என்று வெம்பிக் கொண்டேயிருந்தான். இரவு முழுதும் குமரனின் விசும்பல் மட்டும் எனக்கு கேட்டுக் கொண்டேயிருந்தது.
சமீபத்தில்தான் எங்கள் தெருவிற்கு பால் குளிரூட்டும் நிலையம் ஒன்றை பால்கார மணிசேகரன் தனது மகள் செல்வி பெயரில் தொடங்கியிருந்தார். பால் டெப்போ தொடங்கப்பட்ட நாள் முதலே விடியற்காலை நாலு நாலரைக்கே Tata 407 யின் இரைச்சலும், அலுமினிய பால் டின்களின் உரசல் சத்தமும், லோடு இறக்கும் மனிதக் குரல்களும் கர்ணகொடூரமாக கேட்கத் துவங்கிவிடும். வண்டி வருவதற்கு முன்னேமே மணிசேகரன் எழுந்து கொள்வார். காலை கடனுக்கு காத்தாயி கோவில் முள்ளுக் காட்டில் குத்துக்காலிட்டு விட்டு, கழுவுவதற்கு குளத்துப் பக்கம் வருவார். படிய கழுவி விட்டு புறங்காலால் நீரை விளக்கி அங்கேயே கொஞ்சம் நீரை அள்ளி வாய் கொப்பளித்துக் கொண்ட பின்னரே லோடு இறக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அன்று காலையும் அதே போல எல்லாம் முடித்து வாய் கொப்பளிக்க அண்ணாந்தவர் நீரில் ஏதோ மிதப்பதை பார்த்து துணுக்குற்றார். மரத்திலிருந்து தேங்காய் ஏதும் விழுந்திருக்குமோ என்று சோதிக்க சிறு கல்லை கொண்டு வீசினார். ‘நங்’ என்று சத்தம் வர பதறியபடி குளத்தில் இறங்கினார். பனிபடர்ந்த நீரின் குளிர்ச்சி சுள்ளென்று மூளைக்கு ஏறியது. கிட்டத்தில் பார்த்ததும் அலறி அரட்டியபடி, “யாப்போவ்” என்று கரைக்கு ஏறி விட்டார். சமயம் போல பால் வண்டியும் வரவே, பதறியோடி ஆட்களைக் கூட்டிவந்து குளத்தில் இறங்கி அத்தாச்சி கிழவியின் உடலை இழுத்து படித்துறையில் போட்டார்கள். கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்த கிழவி நேராக தெரு முனையில் உள்ள நாக குளத்தில் இறங்கிவிட்டிருக்கிறது.
கிழவியின் ஊறிப்போன உடலை அடக்கம் செய்துவிட்டு எல்லோரும் திரும்பினார்கள். குமரன் வீட்டுத் திண்ணையில் எங்கள் ஜோட்டு நண்பர்கள் தூங்கிப் போனோம். நடுஇரவில் தீடீரென எழுந்து ‘ஓ’வென கத்திக் கொண்டே ஓடிய அறிவை நாங்கள் ஆற்றுப்படுத்தவே முடியவில்லை. ஒருநாள் அவனை மடக்கிப் பிடித்துக் கேட்டதில் அவன் சொல்லியது இது, “டேய் ஆளு, கிழவி வந்து என்னிய எழுப்புச்சி ரா”.. அதை அவன் சொன்ன்னபோது முகமெல்லாம் வெளிறியிருந்தது.
களவு பயத்தில் இருந்த தெரு இப்பொது கிழவி பயத்தில் நடுங்கத் துவங்கியது. ரெண்டாம் ஆட்டம் சினிமா போவது கூட கிடையாது. பெண்கள் செவ்வாய் பிள்ளையார் படைப்பது நின்று போனது. இவ்வளவு ஏன். தெரு உற்சவ மூர்த்தி கூட நேரமே ஊர்வலத்தை முடிந்து விடுகிறார்.
கேபிள்காரர் வீட்டம்மாளின் உடல், தெருநாய்கள் தூங்கிக்கொண்டிருந்த ஒரு நிசப்தமான இரவில்தான் அமைதியாக வந்து சேர்ந்தது. எழவு விழுந்த வீட்டிலிருந்தே வெறும் விசும்பல்கள்தான் வந்தது என்றால் அக்கம் பக்கத்தாரை பற்றிச் சொல்ல வும் வேண்டுமா? யாருமே கண்டுகொள்ளவில்லை. சவமெடுக்கும் போது உச்சுக் கொட்டுவதோடு முடிந்து போனது அந்த முழு மனுஷியின் வாழ்வு..!
அப்படி கருணை கொண்ட எங்கள் தெருக்கார்கள் வாயில் நன்றாக விழுந்து கொண்டிருந்தது அந்த சாம்பல் நிற அராத்து பூனை. ஒருவழியாக கதைக்கு வந்துவிட்டோம்.
ஒருவழியாக எல்லா சம்பவங்களையும் சொல்லிவிட்டேன் என்று உணர்வதால், கதைக்கு நகர்வோம். உங்களை ரொம்ப சோதிக்க விரும்பவில்லை. இந்த ஒரு பக்கம்தான் கதை.
அது செய்யும் அட்டகாசத்தில் அக்கம்பக்கத்து வீட்டாரிடையே அடிக்கடி சண்டைகள் மூளுவதும், பின்னர் அதுவாகவே சமரசம் ஆவதும் எங்கள் தெரு ஆட்களின் வழமைகளில் ஒன்றாகிப் போனது. அட்டகாசம் என்றால் கொஞ்சம் நஞ்சம் அல்ல. சிங்கப்பூர் கிழவி தன் வீட்டு மொட்டை மாடியில் வடவம் காயப் போடும் இடத்தில் வந்து கழிந்து வைப்பது, திறந்து வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும் மீஞ்ச பாலை குடித்துவிட்டு ஓடிவிடுவது, சலோமி டீச்சர் வீட்டு வாசலில் போடப்படும் கலர் கோலத்தை உளப்பி வைப்பது, ஒட்டுக் கூரையின் மேல் காயவைக்கப்டும் கருவாடுகளை திருட்டுத்தனமாக களவாடுவது, மூன்றாவது படிக்கும் ஸ்ரீமதி தன் வீட்டில் ஆசையாக வளர்க்கும் மீன் தொட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு கலர் மீன்களை மட்டும் கவ்விக்கொண்டு போய் விடுவது (ஸ்ரீமதி அழுது புரள்வதை கூட சட்டை செய்யாமல்) என்று அது காட்டும் அக்குறும்பு எல்லை மீறும். துவைத்த துணிகளில் கக்கி வைப்பது. ஒரு சமயம், பேங்க்காரர் வண்டிக்கு குறுக்காக தாவி அவரைக் கவிழ்த்து விட்டு காலில் முறிவு ஏற்படக் காரணம் ஆனது இந்த அராத்து.
மீன்கார ஆத்தாவை பின்தொடர்ந்து வரும் அந்த அராத்து சரியாக யார் யாரெல்லாம் அவளிடம் வியாபாரம் செய்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, சரியாக கழுவும் நேரத்துக்கு வந்து அமர்ந்து கொண்டு “மவராசி, நீதான் மண்டைய அப்படியே போடுற.. அந்த மாடிவீட்டுகாரம்மாவும் இருக்காளே, பிசினாரி, தக்குணூண்டு போட்டா”, என்பது போல ஈன குரலில் மொவலாசி செய்யும்.
மியாவ்…
அந்த அராத்துக்கு ‘பூஸ்’ என்று பெயரிட்டிருந்தாள் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை மகள். குழந்தைகளுக்கு எதாவது ஒரு பெயர் வேண்டும் வைத்து அழைக்க. ‘பூஸ் .. பூஸ்’ என்பது உச்சரிக்க நன்றாகிப் போக, அந்த சாம்பல் நிற பூனைக்கு ‘பூஸ்’ என்று பெயர்சூட்டல் முடிந்தது. பெயர் சூட்டு முடித்த கையோடு அவள் செய்த அடுத்த வேலை, விருந்து தான். அது தின்னாது என்பதைப் பற்றி கவலை கொள்ளாமல், கத்திரிக்காய் கொஸ்த்தை வைக்க, பூஸ் அதை சீந்தவேயில்லை. அதைப் பற்றி அவள் கவலைகொள்ளவும் இல்லை.
“மாமா… பூஸ் க்கு அப்பா அம்மா எங்க இருக்காங்க மாமா..?”
“தெரியலம்மா. .”
“பூஸ் க்கு பசி வருமா மாமா..?”
“பூஸ் நைட்டு எங்க தூங்கும்..?
“அதுக்கு குளிரு அடிக்குமா..?”
இப்படி அவள் கேட்ட எதற்கும் என்னிடம் பதில் இல்லை. எனக்கு எரிச்சலாக இருந்தாலும் வெறும் ‘ம்ம்’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன்.குழந்தைகள் ஏன் இத்தனை கேள்விகள் கேட்கிறார்கள்..?
அவள் வந்து விட்டுப் போன பிறகு பூஸ் மீது எனக்கு ஏனோ ஒரு பரிவு பிறந்திருந்தது. ஏன் என்றே தெரியாமல். நாம் வளர்க்கும் சில தடைகளை குழந்தைகள் சுக்குநூறாக உடைத்து விடுகிறார்கள். அதன் மூலம் ஒரு திறப்பைக் கொண்டுவருகிறார்கள்.
அந்த நள்ளிரவில்தான், ‘மியா………….வ்’ என பூஸ்ஸின் முனகல் கேட்பது போல எனக்குத் தோன்றியது. வெளியில் வந்து வீதியைப் பார்த்தேன். மே மாதம் என்றாலும் நள்ளிரவில் பனி இருக்கவேதான் செய்கிறது. (எங்கள் தெருவை பொறுத்தவரையில் நள்ளிரவு என்றால் இரவு பத்துக்கு மேல் என்பதை சம்பவங்களை வாசித்ததால் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்) மௌனம் பெரும் கேள்வியாக என் முன்னே கிடந்தது. ஒரு தெருநாய் மட்டும் என்னைப் பார்த்து திகைத்து நின்றது. எங்கெங்கு காணினும் மௌனம். கருப்பு மாடு கவிழ்த்து விட்டுச் சென்ற கழனிப் பானை பழைய சோற்றைச் சுற்றிலும் ஈக்கள்.
என் பைக்கை ஒட்டிக்கொண்டு பூஸ் கிடந்தது. குன்னிக்கொண்டு. அது இருந்த நிலையில் அதை மட்டும்தான் அதனால் செய்ய முடியும். நான் திண்ணை லைட்டைப் போட்டதும், பூஸ் தலையைச் சற்றே தூக்கிப் பார்த்தது. அதற்கு ரொம்பவே மெனக்கெடல் இருந்தது. ‘மியாவ்’ என்று வாயை மட்டும் அது அசைத்தது. இந்த முறையும் சத்தம் வரவில்லை. அதன் வால் துவண்டு கிடந்தது. முகத்தில் எதையோ யாசிப்பது போல வைத்திருந்ததது. அதன் முன்பகுதி மட்டுமே செயல் படுவதாகப்பட்டது.
மீண்டும் ‘மியாவ்’ என்று வாயை அசைத்தது. நான் அதன் கிட்டே போய் தொட முயன்ற போது தானாக தன் தலையை ஸ்பர்சிக்க குடுத்தது. அதனால் அசைய முடியவில்லை, ரோட்டில் ஏதேனும் வண்டியில் அடிபட்டதா அல்லது தெரு ஆட்கள் யாரேனும் அதன் மேல் கருணையை, அன்பைப் பொழிந்தார்களோ தெரியவில்லை, பூஸ்ஸின் பின்பக்கம் நசுங்கிப் போயிருந்தது. ஆனால், ரத்தம் இல்லை. இரண்டு கால்களையும் அசைவில்லாமல் வைத்திருந்தது. இழுத்து இழுத்து வந்திருக்கும் போல பின்பக்கம் முழுதும் மண் படிந்திருந்தது. அதைச் சுத்தம் செய்யும் பொருட்டு அதன் கால்களைத் தொட்டேன், ‘மியாவ்வ்வ்வ்’……வீறிட்டு கத்தியது. இந்த முறை பூஸ் டப்பிங் கொடுக்கவில்லை. நிஜமாகவே கத்தியது.
அந்த சத்தத்தில்தான் எங்கள் வீட்டில் எல்லாரும் விழித்து கொண்டார்கள். வெளியில் வந்து பார்த்தார்கள்.
“ஐய்யோ..சனியன்..சனியன் எங்கேயோ கெடந்து சாவ வேண்டியதுதானே, இசுத்துக்கிட்டு இங்க வந்துருக்கு. எல்லாம் அந்த குட்டி பண்ணி வச்ச வேல. ரீவுக்கு வந்தோமா வெளயாடினோமான்னு இல்லாம, பால் வைக்கிறது, சோறு வைக்கிறதுன்னு பழக்கம் பண்ணி வச்சிட்டா. அது நம்ம வீட்டுக்கு வந்து தொல்லை குடுக்குது சனியன். என்னத்தச் சொல்ல, எங்கயாச்சம் கண் காணாத இடமா பாத்து விட்டுட்டு வந்துடு”
“ந்த, சும்மா இரேன் செத்த, சும்மா நொய் நொய்ன்னு” – என்று நான் கிழவியை அதட்டி ஓயச் செய்தேன். உண்மையில் எனக்கும் கூட அடிபட்டு கிடந்த பூஸ்க்கு என்ன செய்ய வேண்டும் என்பது அப்போது புரியவில்லை.
தங்கை மட்டும் அப்பப்போ, ‘பாவம்..பாவம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘காலையில் வேணும்னா மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்துரலாம்’ என்ற எண்ணம் வராமலில்லை. டாக்டர் இல்லை என்றாலும், ‘அந்த காம்பௌண்டு உள்ளே விட்டா அவங்க பாத்துப்பாங்க’ என்ற எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. .
“இப்படி நகர முடியாமல் கிடப்பில் கிடந்து செத்து கித்து போயிடுச்சுன்னா புதைக்க கூட கொல்லை கிடையாது நம்ம வீட்ல..பின்னால ஓடுற காவாயிலும் வீச முடியாது. தண்ணீர் கிடையாது. அழுகி நாறிப் போகும். ம்ஹும், எல்லாம் தலைவிதி”, என்று தலையில் அடித்துக் கொண்டே அம்மா சொன்னாள் .
வீட்டில் எல்லோரும் பூஸ் செத்துவிடும் என்றும், அதன் சாவை நாம்தான் எடுக்க வேண்டிவரும் என்ற கோணத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என் தங்கை மகள்தான் நினைவில் வந்தாள். அவள் இருந்தால் என்றால் பூஸ்ஸுக்கு சாதகமாக வாதாடியிருப்பாள்.
இறுதியில், “ந்த, அதெல்லாம் ஒன்னும் ஆகாது. காலை வரையில் இங்கேயே இருக்கட்டும். அதுக்கு கொஞ்சம் பால் வையி. குடிக்கிதான்னு பாப்போம்”, என்றேன் கண்டிப்புடன்.
“டேய், செத்துப் போயிடும் போல டா சனியன்”, என்று ஓயாமல் அதேயே சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா. “முனிசிபாலிட்டி ஆட்களுக்கு சொல்லி எடுக்க சொல்ல வேண்டியதுதான். அதுக்கு இருநூறு முன்னூறுன்னு அழுவனும்”, என்று வேறு புலம்பினாள்.
நான் ஒரு ஏனத்தில் பால் வைத்தேன். கஷ்டப்பட்டு ரெண்டு முறை வாய் வைத்தது.
‘அது பாட்டுக்கு இருக்கட்டும் வா’ என்று நாங்கள் தூங்கப் போனோம். சிறுநீர் கழிப்பதற்கு நடுவில் ஒருமுறை எழுந்த போது கதவைத் திறந்து பார்த்தேன். பூஸ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த பால் ஏனம் காலியாக இருந்தது. மீண்டும் கொஞ்சம் பால் ஊற்றிவிட்டு வந்தேன்.
அம்மா சொல்வது போல பூஸ் செத்து போய் விட்டால் என்ன செய்வது என்று மாற்று வழிகளை யோசித்தபடி புரண்டு கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்பதும் நினைவிலில்லை.
தூக்கம் கலைந்து பதற்றமாக எழுந்து பூஸ்ஸை பார்க்கச் சென்றேன். அது படுத்திருந்த இடத்தில் கழிந்திருப்பது ஒற்றை கம்பியாக கிடந்தது. இழுத்து இழுத்துக் கொண்டே எங்கோ போய் விட்டிருந்தது. அது படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. நான் மீண்டும் விட்ட பாலை அது குடிக்கவில்லை போலும். ஏனத்தில் பால் அப்படியே இருந்தது. என்ன சொல்ல வந்தது என்று தெரியவில்லை ஆனால், பூஸ் ஏதோவொரு செய்தியை என்னிடம் விட்டுச் சென்றுள்ளது என்பது மட்டும் புரிந்தது.
********