கட்டுரைகள்

‘DEAD TO ME’ இணையத் தொடர் குறித்த திரைக் கண்ணோட்டம்

ப்ரசாத் சுந்தர்

மரணம் என்பது நிச்சயிக்கப் பட்டிருக்குமாயின், மனிதர்கள் ஏன் மரணத்திற்கு பயம் கொள்கிறார்கள்?. அவர்கள் சம்பாதித்த பணம், பொருள் எல்லாம் தன்னை விட்டுப் போய்விடும் என்றா? அல்லது மரணம் என்பது உடலில் கொடும் வலியை ஏற்படுத்தும் செயல் என்பதாலா? பதில், ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கும் . மனிதன் மரணத்திற்கு பயம் கொள்வதற்கான காரணம் அவன் இயல்பாகவே மனிதர்களை சம்பாதிக்கிறான். அதற்குத்தான் ‘குடும்பம் குட்டி’ என்று பெயர் . அவர்களை இழப்பதற்கு அவன் பயம் கொள்கிறான். அவ்வலியில் இருந்து போராடவே அவன் வாழ்க்கையிலும் போராடுகிறான். இறுதியில் அமைதி கொள்கிறான். துறவிகள் மரணத்திலும் சிரிப்பதற்கான காரணத்தை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட மரணம், ஒரு நாள் இரவொன்று நீங்கள் யாருமற்ற சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, எதிரே வந்த வேகமான நான்கு சக்கர வாகனத்தால் உங்களுக்கு ஏற்பட்டால், குடும்பத் தலைவனான நீங்கள் சென்றபின் உங்களது குடும்பம் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்? பிழைப்பதை விடக் கொடியது அப்படிப்பட்ட மரணத்தைக் கடப்பது அல்லவா? இது ஒரு கோணம். மற்றொரு கோணத்தை சிந்தித்துப் பாருங்கள். அந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவரும் உங்களைப் போன்று ஒரு குடும்பத்தலைவன் என்றால் அவரால் எப்படி அந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடியும்? உடம்பில் அவருக்கு ஒரு காயமும் இல்லை என்றாலும் அவரது மனதை நினைத்தால், வாழக்கை முழுவதும் குற்ற உணர்விலேயே செலவிட வேண்டும் அல்லவா?

போன வருடம் நெட்டபிலிக்ஸ் – இல் வந்த ‘DEAD TO ME’ தொடரும் அப்படிப்பட்ட ஒரு மரணம் குறித்துதான் பேசுகிறது. பின்னிரவு நான்கு சக்கர வாகனத்தால் தன் கணவனை இழந்த பெண்ணாக வரும் ஜென் ( Christiana Applegate ) ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். எதிர்பாராத விதமாய் திடீரென்று தன் கணவன் தவறியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கணவன் இறந்த விதம், Hit-and-run என்பதால் அவளால் அந்தத் துயரத்தை விட்டு வெளிவர முடியவில்லை. அந்த வழக்கு காவலர்களால் விடை காண முடியாததால் மட்டும் இல்லாமல், ஜென் அவர்களை நச்சரிப்பது கண்டு அவர்கள் சோர்வாகிறார்கள். ஆதாரம் இல்லாத Hit-and-run வழக்குகள் பெரும்பாலும் தீர்வு காணாமல்தான் கிடக்கிறது என்கிறார்கள். ஜென், தனது இரு மகன்களும் தந்தையின்றி வேதனை அடைவார்கள் என்று பயப்பிடுகிறாள். இப்படியே நாட்களைக் கழித்தால் சரியாக இருக்காது என்று நினைத்த ஜென், துணை உதவிக் குழுவில் ( support group ) சேர்கிறாள். துணை உதவிக் குழு என்பது சோகத்தில் இருப்பர்களும், சோகத்தால் வாழ்க்கையைக் கடக்க முடியாதவர்களும் ஒன்று சேர்ந்து தங்களது சோகங்களைப் பகிர்ந்து கொள்வதுதான். கூட்டமாக அமர்ந்து பகிர்ந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட துணை உதவிக் குழுவில் ஜென்னுடன் பழகுகிறாள் ஜூடி ( Linda cardellini).

ஜூடியின் வருகைக்குப் பிறகு, ஜென்னின் வாழ்வு மாறுகிறது. அவள் சிரிக்கத் தொடங்குகிறாள். காலத்தைக் கழிக்க ஜூடி உதுவுகிறாள். ஆனால் ஜூடி தன் சுயநலத்திற்காக சிறு பொய்கள் சொல்லுகிறாள். அப்படி ஜூடி கூறும் பொய்கள் ஜென்னைப் பாதிக்கிறது. ஜென்னிற்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. ஜென் கண்டுபிடித்தால் ஜூடி, தெரியாமல் செய்ததாக மன்னிப்புக் கேட்டு மீண்டும் சேர்ந்து கொள்கிறாள்.அவளது வீடு பற்றி அப்படிப்பட்ட ஒரு பொய் கூறியதைப் பின்பு ஜென் கண்டிபிடித்து மன்னித்து விட்டு, அவளது வீட்டிலேயே தங்க வைக்கிறாள். ஜென்னின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதும் இல்லாமல், அவள் ஜூடியினால் மகிழ்வாக இருக்கிறாள். ஆனால் ஜூடியின் வருகை ஜென்னின் மகன் ஷாமிற்கு பிடிக்கவில்லை . யாரென்று தெரியாதவர்கள் தன் வீட்டில் இருப்பது அவனுக்கு விசித்திரமாக இருக்கிறது.

தன் கணவனின் நினைவுகளை அழிக்க நினைக்கும் ஜென், தனது கணவனின் ரகசியங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறாள். ஒரு கட்டத்தில் தன் கணவன் இறந்ததே மேல் என்று நினைக்க முயற்சிக்கிறாள். ஆனால் அவளால் அப்படி முடியவில்லை, பெரிய மகன் ஷாமின் செயலும் ஒரு கட்டத்தில் அவளை எரிச்சல் மூட்டுகிறது . ஜெனின் மாமியாரும் , ஜெனை வெறுக்கிறாள். இளைய மகன் மட்டும் அவளுடன் அன்பாகவே இருக்கிறான். ஜூடியும் ஒரு சகோதிரியைப் போல ஜென்னிற்கு அன்பு காட்டுகிறாள் .

ஜூடியின் கணவனான ஸ்டீவ் ( James Marsden ) , ஜென்னிடம் ஜூடியைப் பற்றி அவதூறு கூறுகிறான். ஆனால் , ஜூடியை ஜென் நம்புகிறாள். ஜூடியின் வாழ்க்கையும் சோகத்திலேயே இருக்கிறது. கணவன் ஸ்டீவ் மோசமானவன் என்று தெரிந்தும் அவனை அப்படி காதலிக்கிறாள் . ஆனால் அவன் இவளை மதிக்காமல் நடத்துகிறான். ஜூடியும் ஜென்னும் ஒரு கட்டத்தில் தனி துணை ( boyfriend ) தேடுகிறார்கள் . ஆனால் ஜென்னுக்கு அது பலனளிக்க வில்லை . ஜூடிக்கு ஒரு துணை கிடைக்க அவனும் காவலாளன் என்பதால் , கதை சூடு பிடிக்கிறது . நிக் ( Brandon Scott ), ஜூடியின் காதலன் அந்த ஜெனின் கணவனின் hit-and-run வழக்கில் தீர்வு காண்பதுதான் கதை .

தொடரில் ஓருவருக்கொருவர் ரகசியங்களை ஒளித்து வைத்திருப்பதே கதையின் சிறப்பு. Casting பலமாக உள்ளதால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் பதிகிறது. சிறிய கதாபாத்திரமான ஜெனின் இளைய மகனின் தோழி கதாபாத்திரம் கூட கதைக்கு அழகு சேர்க்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்கள், புது வகையான கதை சொல்லும் முறையைக் கொண்டுள்ளது. சலிப்பு தருகின்ற ஒன்று என நாம் நினைக்கும் ஒன்றை இவர்கள் எப்படி ரசிக்க வைக்கிறார்கள்? என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயக்குநர் இயக்கியிருக்கிறார்கள். Liz Feldmen எழுத்து கூடுதல் பலம் சேர்க்கிறது. ஜூடியாக நடித்திருக்கும் Linda Cardellini, தயாரிப்பாளரில் ஒருவரும் கூட. Linda Cardellini நடிப்புதான் தொடரை வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்கிறது. இப்படிப்பட்ட, கதாப்பாத்திரம் ஒரு எழுத்தாளனையோ இயக்குநர்களையோ வதம் செய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ஜூடியின் நடை, உடை, பாவனை என்று எல்லாமே மனதில் அப்படியே பதிகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட காமெடி வகை தொடர்களில் ஏற்படும் lazy writing, இதில் துளியளவிலும் இல்லை. ஒளிப்பதிவு வேறொரு முத்திரையை பதிக்கிறது. வசனங்கள், எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி காண்போரை குழப்பத்திலேயே வைக்கிறது. ஆங்காங்கே வரும் நிகிழ்வுகள், ஒப்புவமையற்ற ஒரு தொடரைப் பார்க்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.

பெண்களை மையமாகக் கொண்டு வெளிவந்த மிகச்சிறந்த தொடர்களில் இதுவும் இடம் கண்டுள்ளது . இரண்டாவது பாகம் வருவது ஏற்கனவே அதிகார்வபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளமையால் ,இந்த வருடம் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் . கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இந்தத் தொடர் , நெட்பிலிக்ஸ் ( Netflix ) Binge Watching வரிசையில் இடம்பெற்றுள்ளது.

ஜென் ( Christiana Applegate )
ஜூடி ( Linda Cardellini )

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button