இணைய இதழ் 97சிறுகதைகள்

இடம் பொருள் ஏவல் – யாத்திரி

சிறுகதை | வாசகசாலை

1

பூமியே சாம்பல் போர்வையால் போர்த்தப்பட்டது போல வானம் மேகம் கூடி நின்றது. காற்று பட்டதும் உதிர்ந்துவிடுவதற்கு எல்லாத் துளிகளும் தயாராக இருந்தன. அது ஏனோ மனம் கனக்கும் பொழுதுகளிலும் மலரும் பொழுதுகளிலும் மழைக்காலம் ஏகப்பொருத்தமாக இருக்கின்றது. வாகன இரைச்சலும் சனத்திரள் நெருக்கடிகளும் நிறைந்த பேருந்துநிலைய முனையில் இந்துமதியிடம் பைக்கில் ஏறச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தான், கெஞ்சுவது போல அதட்டிக் கொண்டிருந்தான் வினோத்.

”இப்ப வண்டில ஏறப் போறியா இல்லையாடி? இன்னும் கொஞ்ச நேரத்துல மழை வந்துடும்.” 

”No வினோத், நான் பஸ்ல போயிக்கறேன். It’s over.” அழுகையை முழுங்கிக் கொண்டு சொன்னாள். வினோ-வை வினோத்திற்கு மாற்றி இருந்தாள். கோபம் வரும்போதெல்லாம் முழுப்பெயரைச் சொல்லி அழைப்பது ஒரு பழக்கம். ஏதொன்றையும் கைநெகிழும்போது வருகின்ற இழப்பின் சுவடுகளை எதிர்கொள்ள முடியாத அழுகைக்குள் இருந்தாள்.

”இது சாதாரண விஷயம். இதுக்குப் போய் ஏன் பெரிய வார்த்தைலாம் பேசற?” நண்பன் ஒருவன் பெயரைச் சொல்லி, ”அவன் ஆள அவன் அடிச்சுலாம் இருக்கான் தெரியுமா? நீ என்னன்னா…”

”அடிச்சானா? ஓ! நீ அடிக்காம இருக்கறதால அவனை விட நல்லவன்? காதலிச்சா அடிக்கலாம் தப்பில்ல, உங்க கால சுத்தி சுத்தி வந்தா நீ அடிக்கலாம் தப்பில்ல? முட்டாள், முட்டாள், முட்டாள். நீ இல்ல. நான்தான் முட்டாள். உன்னைப் போயி காதலிச்சேன் பாரு? ச்சை. இனி உன் முகத்துலேயே முழிக்க மாட்டேன்” என்று பொருமினாள்.  கடைசி வரைக்கும் உன்னைவிட்டு நீங்க மாட்டேன் என்று வாக்குத் தந்தவர்களையே வாக்கை முறியடிக்கச் செய்வது ஒரு கலை. அநேகம் பேர் அதில் வெற்றி பெறுகிறார்கள். கொடுத்த வாக்கை மீறியதற்கும் சேர்ந்து அழவேண்டும் அவள்.

எதிர்வந்த பேருந்தில் ஏறப் போனவளை நிறுத்தி, ”கூட்டமா இருக்குடி” என்றான். 

“ஏன் எல்லாவனும் இடிப்பான், உரசுவான், அதான உன் பிரச்சனை?’’

வினோத் அமைதியாக இருந்தான். நிஜமாக அதுவும் அவன் பிரச்சனைதான். 

பேருந்து வரைக்கும் சென்றவள் திரும்பி வந்தாள். ”நான் எவன்கிட்ட பேசுனாலும் உனக்கு ஏன்டா  பொத்துக்கிட்டு வருது, நீ சொல்ற மாதிரி இதுக்குப் பேர் பொசசிவ்னஸ் கிடையாது, this is insecurityடா இடியட்” அடக்கி வைத்த கோபத்தைக் கொட்டும்போதெல்லாம் நாம் சண்டையை முடிக்க விரும்புகிறோம், தவறுகளைச் சுட்டிக் காட்டும்போதெல்லாம். சமாதானத்திற்குப் பாதை அமைக்கிறோம். இந்துமதி சுட்டிக் கொண்டிருந்தாள்.

”okay. அப்படியே வச்சிக்கோ, ஆனா ஒரு ஆம்பளையா எனக்கு ஆம்பளைகளப் பத்தி உன்னை விட அதிகமாவே தெரியும்ன்றத ஒத்துக்கோ.”

“நீ ஒழுங்கா இருந்தா உலகமே ஒழுங்கா இருக்கும், உன்ன மாதிரியேதான் எல்லா ஆண்களும் இருப்பாங்களா என்ன? it’s all in your head.” சுடுமணலில் முதல் மழைத்துளி விழுந்து மண்ணைக் கருக்கியது, கருகல் வாசனை. பயணிகள் நிழற்குடைக்குள் தஞ்சம் சேர்ந்தார்கள்.   

”இதெல்லாம் விதண்டாவாதம் இந்துமா, நான் என்ன எல்லாவள்ட்டயும் போயி பல்லக் காமிச்சிட்டு இருக்கேனா! இல்ல உன்கிட்ட வந்து வழியிறானுகளே உன் ஃபிரண்ட்ஸ். அப்படிப் போயி எவகிட்டயாது வழிஞ்சிட்டு நிக்கிறேனா? சம்பந்தமே இல்லாம என்னைய பாயின்ட் பண்ணுற?” மழையின் சப்தம் என்பது இரைச்சல்தான். சட்ட சடசடவெனப் பொழியும் மழை மிகப்பெரிய பரப்பில் பெருமழையாகப் பொழியும்போது மற்றெல்லா ஒலிகளையும் அமுக்கி விடுகிறது. வினோத் கொஞ்சம் சப்தமாகவே பேச வேண்டி இருந்தது, இந்துமதியும். 

”They are My friends.  just friends. உன் மரமண்டைக்குப் புரியுதா இல்லையாடா?”

”ஆரம்பத்துல நாமளும்  just friends ஆகத்தானே இருந்தோம்? ஆணும் பெண்ணும் வெறும் நட்போட மட்டுமே பழகிட முடியாது. I mean it. எதாச்சு ஒரு புள்ளில நீ பாதுகாப்புன்னு சொல்லி தடைபோட்டு வச்சிருக்கற எல்லாமே தகர்ந்துடும். அந்தப் புள்ளி எங்கயாச்சு நிகழ்ந்து நான் உன்னைப் பறிகொடுத்துடுவேன்னு பயப்படறேன்.”

”Bravo! So எந்தப் பொண்ணு கூட பழகுனாலும் நீ அவளைக் காதலிக்க chances are there, right?”

”இல்லன்னு சொல்வேன் நினைச்சியா? No. Absolutely yes. That’s Human nature. அதுக்குதான் எவளையும் நெருங்க விடாம  என் நேரம் மொத்தத்தையும் உனக்குன்னு கொடுத்துட்டு  உன்ன மட்டும் சுத்தி சுத்தி வந்துட்டுருக்கேன்டி இடியட்.”

”நீ அப்பிடி இருக்கலாம், ஆனா நான் உன் அளவுக்கு வீக் இல்ல. யாரை எங்க நிறுத்தனும்ன்னு எனக்குத் தெரியும், எந்தப் பேச்சை எதோட தடை செய்யணும்ன்னு எனக்குத் தெரியும், நீ சொன்னத ஒத்துக்கிட்டா நீ சொன்னதுலாம் உண்மைன்னு ஆகிடும். இல்ல, எனக்கு அறிவு இருக்கு. என்னால உன்னை மட்டுமே டிபன்ட் செஞ்சு வாழ முடியாது, நீயும் அப்பிடி இருக்காத. எனக்கு இந்த உலகமே வேணும். அந்த உலகத்துக்குள்ள நீ அதிகமே அதிகமா வேணும்.”

”என் உலகமே நீதான்டி.”

”மயி…” வாயெடுத்தவள் நிறுத்தினாள். ”ஏதாவது சொல்லிடப் போறேன்…”

மேற்கொண்டு பேச வந்தவளைத் தடுத்தான். “please stop, ரொம்ப புத்திசாலித்தனமா என்னை மடக்குறதா நினைச்சுப் பேசாத. எப்பப் பார்த்தாலும் கண்ட புக்ஸ படிக்க வேண்டியது, அதை என்கிட்ட வந்து கொட்ட வேண்டியது, யார் கூடயும் பழகு, பழகாதனு உன்னை restrict பண்ணல நான். ஆண்கள்கிட்ட பழகும்போது Just be cautious. எவனும் இங்க உத்தமம் இல்ல, That’s all.” சண்டையை முடிக்க எண்ணினான், ஆனால் சண்டையே இங்குதான் நிஜமாகத் தொடங்கியது.

”wait. what? ஏன் நான் எச்சரிக்கையா இருக்கனும்? அப்படி என்ன நடந்துடும்? சொல்லு, a rape? அப்படி ஒன்னு நடந்தா அத எப்படி ஹேண்டில் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும். எனக்கு அப்படி ஒன்னு நடந்துடுச்சுன்னா அத எப்படி ஹேண்டில் பண்றதுன்னு உனக்குத்தான் தெரியாது. அப்படி எதுவுமே நடக்காத பரிசுத்தமான ஒருத்தியாதான் நான் உனக்கு வேணும்ல?   இதுக்கு பேர் நீ எனக்குத் தர்ற protection. Love. care. அதை நான் நம்பனும், fine.” மழை ஓய்ந்திருந்தது. ”எவனும் உத்தமன் இல்ல உத்தமன் இல்லைன்னு சொல்லி நீ ரொம்ப நல்லவனா காண்பிக்க முயற்சிக்கிற, அதே சமயத்துல எவனும் உத்தமன் இல்லன்னு சொல்லி நீ செய்யக்கூடிய எல்லா அயோக்கியத்தனத்திற்கும் ஒரு கேடயத்த உண்டு செஞ்சு வைக்கற. oh my dear male society. காலம் முழுக்க உனக்கு இத நான் விளக்கிட்டே இருக்க முடியாது, நீயும்தான? உன்னாலயும் முடியாதுதான? i need a break, ப்ரேக்தான், break up இல்ல. Six months. ஆறு மாசத்துல யாரையாவது எனக்குப் பிடிச்சாலோ, இல்ல யாரையாவது உனக்குப் பிடிச்சிட்டாலோ நீ சொல்றது உண்மை. அதுக்கடுத்து நாம சேர்ந்திருக்குறதுல நியாயமே இல்ல. இன்னொரு பொண்ணோட ஈஸியா காதல் வந்துடுற human nature கொண்ட ஆணோட என்னால வாழ முடியாது. Let’s experiment on this.”

”ஆறு மாசத்துல நீ என்னை மறந்துடுவடி” 

”அப்படின்னா அவ்ளோ பலகீனமான காதல் கொண்ட ஒருத்தி உனக்கு வேண்டாம்.”

”ஏ… என்னடி…”

”முடிவெடுத்துட்டேன் வினோத். ஒருவேளை நாம சேர்ந்து வாழ்ந்தா, வாழப்போற அடுத்த முப்பது வருசத்துக்காக இது ரொம்ப முக்கியமா எனக்குப் படுது.” 

2

வாசலில் இந்துமதியின் செருப்புகள் திசைக்கொன்றாக சிதறிக் கிடப்பதைப் பார்த்துவிட்டு, “பாப்பாக்கு என்ன? ஏன் கோவமா வந்திருக்கு?” என்றபடியே வீட்டிற்குள் நுழைந்தார் அப்பா.

உளுந்தம்பருப்பில் கல் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து பார்த்தாள். “வந்துட்டாரு செல்லங்கொஞ்ச பாப்பா நோப்பான்னு, இப்பத்தான் பிறந்து விழுந்து இருக்கா பாரு. ஏழு கழுத வயசாச்சு. ஒரு வீட்டு வேலையும் பார்க்கறது கிடையாது. வந்தோடனே நேரா ரூமுக்கு போயி கவுந்தடிச்சுப் படுத்துக்கிச்சு.” புலம்பிக் கொண்டிருந்தவளைக் கவனிக்காமல் இந்துமதியின் அறைக்கதவைத் தட்டினார்,

“என்னடா ஆச்சு?” 

”ஒண்ணுமில்லப்பா, தூங்கறேன்” 

”சரி சரி தூங்கு.”

அம்மா திரும்பி முறைத்துப் பார்த்தாள். ”அவ முழிச்சிக்கிட்டே மொபைல நோண்டிக்கிட்டு தூங்கறேன்னு சொல்லுவாளாம், இவரு தூங்கு தூங்குன்னுட்டு வருவாராம், வாய்ச்சதுதான் லூசுன்னா, வந்தது அதுக்கும் மேல லூசா இருக்கு. இந்தக் குடும்பத்துல வாக்கப்பட்டேன் பாரு என்னைச் சொல்லணும்” சொல்லிக் கொண்டே டீ ஆற்றி கணவருக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு கோப்பையில் தனக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து அவர் அருகில் உட்கார்ந்து கொண்டாள், ”என்னன்னு தெரியலைங்க வரும்போதே இந்தப் பிள்ள கடுகடுன்னுதான் வந்துச்சு, மூஞ்சிலாம் செம்மிப் போயிதான் இருந்துச்சு. எவனாச்சு கையக் கிய்யப் பிடிச்சி இழுத்து இருப்பானோ?”

”உன் பிள்ள ஒருத்தன் கையப் பிடிச்சு இழுத்தா பத்தாதா! இவ கையப் புடிச்சு ஒருத்தன் இழுக்க வேற போறானாம், ஆளப்பாரு, அவ கராத்தே கத்து வச்சிருக்கா. நீ ஏதும் வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக்காதடி” என்றபடி, ’ஹே ஹூ’ எனக் கையை கராத்தே குறி செய்து, ’டிஷ்யூம்’ என்று முஷ்டியை மடக்கி மனைவியின் கன்னத்தில் பூப்போல குத்தினார். தன் தோள்களை மனைவயின் தோளோடு சேர்த்து மேலும் கீழும் அழுத்தமாக உரசிக்கொண்டே ஓரப்பார்வை பார்த்தார். எப்போதும் பார்க்கும் பார்வைகளில் இப்பார்வையை மட்டும் தனியாக அறிந்துகொள்ளுவாள். பகற்பொழுது சூழலின் பிரக்ஞை அறிந்து வெடுக்கென்று தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் சர்ப்பம் போல விலகுவாள்.

”உங்க பொண்ணு தூங்கல, முழிச்சிட்டுதான் கிடக்கு. நினைவிருக்கட்டும்” சொல்லும்போதே உதட்டின் விஷமம். இரவுக்கான சம்மதம் இரண்டும் இருந்தது.

”ஆமாடி, அவ பிறந்ததுல இருந்து இந்த ஒரு டயலாக்க மட்டும் மாத்தாம சொல்லிட்டு இரு.” அவர் சொல்லி முடிக்கவும் அறைக்கதவைத் திறந்துகொண்டு இந்துமதி வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது. 

”அதான உங்கொப்பன் பக்கத்துல உக்காந்துருந்தா இதுக்குதான் மூக்கு வேர்த்துடுமே” 

மகள் வந்ததும் மனைவியைத் தள்ளிப் போகச் சொல்லிவிட்டு, மகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.

”சக்களத்தியப் பெத்துருக்கேன்” முணுமுணுத்துக் கொண்டே பாதியில் விட்ட உளுந்தம்பருப்பைக் கையில் எடுத்துக்கொண்டாள்.

அம்மாவையும் அப்பாவையும் மாறி மாறிப் பார்த்தாள் இந்துமதி. அப்பாவின் முகத்தில் அம்மாவின் அருகில் இருந்ததன் காதலின் குறும்பு ரேகைகள் இன்னும் அழியாமல் இருந்தன. அம்மாவின் முகத்தில் வெட்கக்கோடுகள். அதனை  மகள் மீதான  பொய்க்கோபத்தின்  மூலமாக மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள், அம்மாவும் அப்பாவும், அம்மா அப்பாவாக இருக்கும்போது சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கணவன் மனைவியாக இருக்கும்போது காதலித்துக் கொள்கிறார்கள். இரண்டிலும் ஒரு பெருவாழ்வு இருக்கின்றது.

அம்மாவும் அப்பாவும் தங்கள் இருவரையும் பற்றி கதைகதையாகச் சொல்லி இருக்கிறார்கள், bedtime stories. இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். பெண் பார்க்கும் படலத்திற்கு முன் பொருத்தம் பார்ப்பதற்கு ஜாதகம் கொடுத்துவிட ஆள் இல்லையென்று அப்பாவே தனது ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தால் சாத்திய கதவுக்குப் பின்னிருந்து கைகளை மட்டும் நீட்டி அம்மாதான் ஜாதகத்தை வாங்கி இருக்கிறாள். வந்தது யார் என்பது குறித்து அவளுக்கு எந்த விபரமும் தெரியாது. ஜாதகம் பொருந்தி வருகிறது என்றான பின் பெண் பார்க்கும் படலம். அம்மா டீ கொண்டு வந்தாள். அப்பா வாங்கி கையில் வைத்துக் கொண்டே, டீயில் சர்க்கரை இல்லை என்றிருக்கிறார். அம்மா சர்க்கரை கொண்டு வந்து மீண்டும் கலந்து தந்தாள். ”இப்போ பால் கொஞ்சம் குறைச்சலா இருக்கோ?” என்றிருக்கிறார், பாட்டி அவரைக்  கண்களால் மிரட்டி, “என்னடா, எங்க வந்து விளையாடிட்டு இருக்கற?” என்று அதட்ட, ”நீ கொஞ்சம் சும்மா இருமா” என பாட்டியைப் புறந்தள்ளிவிட்டு, ”பால் கொண்டு வாங்க கலக்கணும்” என்றிருக்கிறார். வீட்டார் அனைவருக்கும் இது விநோதமாகத் தோன்ற, அம்மா பால் கொண்டு வந்து கொடுத்து கொஞ்சம் கடுப்பான குரலில், “வேற ஏதும் வேணுமா?” என்று கேட்டிருக்கிறாள்.

”ஆமா, உள்ளங்கையில் மச்சம் கொண்ட பொண்ணு வேணும், கிடைக்குமா?” 

அப்பா சொல்லி முடித்த கணமே அம்மாவுக்கு கன்னம் சிவந்து கண்களில் நீர் கோர்த்து விட்டது. வீட்டிற்குள் ஓடிவிட்டாள். உள்ளங்கையை விரித்துப் பார்த்தாள், கரும்பரிதியாக ஒரு மச்சம் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அது இதுநாள் வரை அங்குதான் இருந்தது என்றாலும் அன்றைக்குத்தான் அதனைக் கவனித்தாள். அவளுக்குச் சொல்லாமலே எல்லாம் புரிந்தது. 

இன்றுவரை அம்மாவின் கோபங்களில் எல்லாம் அப்பா அவளின் உள்ளங்கையை வருடிக் கொண்டுதான் மன்னிப்பு கேட்பார், பார்த்திருக்கிறாள். எங்கு சென்றாலும் உள்ளங்கையை விடமாட்டார். ஒரு உள்ளங்கை பற்றுதலில் தனக்கு என்ன வேண்டுமென உணர்த்தி விடுவதில் கெட்டிக்காரர் அவர். ஒரு பெண்ணை அவள் உள்ளங்கையில் இருந்து அறிந்து கொள்வதும் உணர்ந்து கொள்வதும் அன்றி அவளை எப்படிக் காதலிக்க!  

அம்மா வேலைக்குப் போகிறாள். வங்கியில் கணக்கர். அப்பா சொந்த வியாபாரம். ஒருநாளும் அம்மாவை அவர் எதற்காகவும் நிறுத்தியதில்லை. அம்மாவின் ஆண் நண்பர்களை முகம் மலர்ந்து வரவேற்பார். ”இவனிடம் ஏன் அதிகம் பேசுகிறாய்?” என்றெல்லாம் கேட்டதில்லை. அம்மாவின் அலைபேசியை சும்மாவேனும் எடுத்துப் பார்க்க மாட்டார். இந்த வயதில் என்ன காதல் வந்துவிடப் போகிறது என்ற தைரியமாக இருக்கலாம். காதல் எந்த வயதிலும்தான் வரும். அதற்கென்ன வயது வேண்டிக்கிடக்கிறது? எல்லாம் எல்லாம் இந்துமதியின் மனதில் சுழன்று கொண்டிருந்தன. இவர்கள் இருவரைப் போலத்தானே ஒரு காதல் இருக்க வேண்டும், ஒருவேளை இம்மாதிரி உறவும் இணக்கமும் காதலும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் மட்டும்தான் கிடைக்குமோ என யோசிக்கலானாள். வினோ சொன்னது உண்மையாகிடுமோ! இல்லையில்லை, வினோவையே பெண் பார்க்க வரச் சொல்லலாம் என்றும் யோசித்தாள்.  

3

மகள்கள் அப்பாவிடமும், மகன்கள் அம்மாவிடமும் காட்டும் நெருக்கத்திற்கு காதல் என்றுதான் பெயர், வேறு எந்தப் பெயரும் வைக்கவே முடியாது. காதல் என்பதை எப்போதும் காமத்தில் கொண்டு வந்து முடிச்சுப் போடும் எவராலும் விளங்கிக் கொள்ள முடியாத மகத்துவம் அது.

வினோத்திற்கு அவன் அம்மா அப்படி ஒரு காதலி. சமயங்களில் வாணி என்று அவளைப் பெயர் சொல்லியும் அழைப்பான். அவள்தான் அவனுக்கு எல்லாம். பாட்டி எப்போதும், “இந்தா உன் வயித்துப் புருஷன் வந்துட்டான்” என்றுதான் அவனை அடையாளப்படுத்துவாள். பாட்டிக்கு வாணி மீது எப்போதும் சிறிய மனவருத்தம் இருந்து கொண்டே இருக்கும். அவளது அண்ணன் மகளை மகனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி இருந்தாள். அவரோ வாணியைக் காதலித்துக் கரம்பிடித்துக் கொண்டார்.

வந்ததும் வராததுமாக, “இந்தப் பொண்ணுகலாம் ஏன்ம்மா இப்படி இருக்காங்க?” என்று பொரிந்தான். 

”ஏன் இன்னைக்கு என்ன பண்ணிட்டு வந்த?” 

”நான் ஒன்னும் பண்ணல. அவதான் பண்ணுனா” என நடந்து முடிந்தவற்றை மிகைப்படுத்தாமல் சொன்னான்.   

“உன் மேலதான்டா தப்பு” என்றாள்.

”நான் என்ன தப்பு பண்ணேன்? இதுவே நான் எதுவுமே பண்ணாம சொல்லாம இருந்தா என் மேல அக்கறையே இல்லன்னு சண்டை போட வேண்டியது, ஏதாவது சொன்னா உடனே இதுக்கு பேர் அக்கறை இல்லைன்ன வேண்டியது.” 

“இடம் பொருள் ஏவல் இருக்குடா தம்பி, எதை எந்த இடத்தில சொல்லணும்ன்றது முக்கியம். தனியா இருக்கேன், நீ பேசிட்டு இருந்தா தைரியமா இருக்கும்ன்னு ஒருத்தி சொன்னா அப்போதைக்கு மட்டும்தான் பேசணும். எந்நேரமும்  பேசிட்டு இருக்கேன் எந்நேரமும் தைரியமா இருன்னு சொல்றது சரியில்லதான?”

”குழப்பாதம்மா என்னை…” 

“நீ ஆல்ரெடி குழம்பித்தான்டா இருக்க” 

”நீ அப்பாவ விரும்புன காலத்துல அப்பா உன் நல்லதுக்கு எதுனா சொன்னா கேட்டுக்கத்தான செஞ்சுருப்ப?”

காதல் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், ’விரும்புன’ என்று அவன் சொன்னதை வாணி ரசிக்கவே செய்தாள்.  

“அவருக்கு என் நல்லதுக்குன்னு எதையும் சொல்றதுக்குலாம் நேரமில்ல, எங்களுக்குக் கிடைக்கறதே அஞ்சு நிமிசமோ பத்து நிமிசமோ, அதுக்குள்ள சந்திச்சிப் பேசிட்டு ஓடி வரணும். காதலிக்கிறவன் காதலிக்க மட்டும் செய்யேன், உனக்கென்ன அவ நல்லதப் பத்தி அக்கறை? அவளும் உன்னை மாதிரிதானே படிச்சு வளர்ந்து இருக்கறா? அவளுக்கு அவளைப் பார்த்துக்கத் தெரியும்.”

”இதைத்தான் அவளும் சொன்னா”  

“எல்லாவளும் இதைத்தான் சொல்லுவா” 

”அக்கறை இல்லாம எப்படிம்மா காதல் இருக்கும்?”

“அக்கறைன்ற பேர்ல நீ என்ன பண்ணுற, அதுதான் இங்க கேள்வி. அக்கறையா இருக்கேன்னு ஒருநாளும் உங்க அப்பா என்கிட்டே சொன்னது கிடையாது. ஆம்பளைட்ட இருந்து பொம்பளையப் பாதுகாக்குறதா அக்கறை? உன்னைய நல்லாப் பார்த்துக்கறேன், நல்லாப் பார்த்துக்கறேன்னு சொல்றதாடா அக்கறை? நீ எங்கயுமே தனியா இல்லைன்னு உறுதியக் கொடுக்கணும், அதுதான் அக்கறை. அப்பல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒருக்க உங்க அப்பாவை நான் சந்திச்சாலே அதிசயம். தனித்தனி காலேஜ், ஒரு இடத்துல நின்னு பேச முடியாது பார்த்து சிரிச்சிக்க முடியாது.  ஃபோன் பேசணும்ன்னா எஸ்டிடி பூத்துக்கு வந்து குறிப்பிட்ட நேரத்துல பேசிட்டு ஓடனும். ஆண்ட்ராயிடு ஃபோன் கிடையாது, எந்நேரமும் ஆன்லைன் கிடையாது, அவர் பக்கத்துல நான் என்னவா இருக்கேன்னு மட்டும்தான் பார்ப்பார். அவர் இல்லாத இடத்துல நான் என்னவா இருக்கேன்னுலாம் கேட்டுக்க மாட்டார். அவர் வராத வரைக்கும் என் வாழ்க்கைய நான் வாழ்ந்துட்டு தானே இருந்தேன்? எங்களுக்கு இருந்த காதல நாங்க ரொம்ப சிக்கனமா செலவழிச்சோம். இன்னுமே தீரல. ஆனா நீங்க? கைல கிடைச்ச தங்கத்த ஒரே நாள்ல செலவழிச்சிட்டு அடுத்து என்ன செய்யன்னு தெரியாம பொம்பளையப் பாதுகாக்கறதுதான் காதல்ன்னு கிளம்பிட்டிங்க.”

”அவளும் அப்பிடித்தானே செலவழிச்சா, என்னைய மட்டும் சொல்லுற?”

”எந்தக் காலத்துலயும் பொண்ணுக அவ்வளோ அவசர அவசரமா காதல செலவழிக்க ஆசைப்படுறது இல்ல, அவ கேட்கற ஆறு மாசமே சேமிப்புக் காலகட்டம்தான்.”

”அப்போ நான் ஆறு மாசம் அவளைப் பார்க்கக் கூடாதா?” 

”பார்க்காம இரு, நானே போயி சம்பந்தம்  பேசறேன்.” 

4

ஆறு மாதங்கள் கழித்து…

காலிங்பெல் சப்தம் கேட்டு இந்துமதிதான் கதவைத் திறக்கப் போனாள். வினோத். அவள் வாங்கிக் கொடுத்த சாம்பல் நிறச் சட்டையை அணிந்திருந்தான். ப்ரியமுகம் கண்டதும் அழுகை வரைக்கும் சென்ற கண்ணைச் சுருக்கி கோபம் காண்பித்தாள், ”போன்னு  சொன்னா போயிடுவியாடா? என் நினைப்பு உனக்கு வரவே இல்லைல்ல. வந்து என் கையப் பிடிச்சு SORRY கேட்டா கிரீடம் இறங்கிடும் ல்ல?” புதுச் சண்டை பிடித்தாள்.

அயர்ந்து போய்விட்டான், அம்மாவைத் திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் அருகில் நின்றிருந்த அவன் அம்மாவே அவள் கண்ணுக்குத் தெரிந்தாள். என்ன உடல்மொழியை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் வணக்கம் வைத்தாள்.  

”ம்மா இவ லூசும்மா. நான் சொன்னேன்ல?”

வாணி ஓசை எழாமல் உதடுகளை மட்டும் உச்சரித்தாள், “இடம் பொருள் ஏவல்” 

அவன் தலையை அசைத்தான். ஆம், மறுநாளோ மறு மாசமோ இவள் சொல்வது போல வந்து மன்னிப்பு கேட்டிருந்தால் மன்னித்திருக்க மாட்டாள், சந்திக்க வந்திருக்க மாட்டாள் என்பதைப் புரிந்தால்தான் ஒருத்தியைக் காதலிக்க முடியும்.

”இந்த ஆறுமாசம் நான் என்ன செஞ்சேன் தெரியுமா?” இந்துமதி கேட்டாள்

”அது எனக்குத் தெரியாது, தெரிஞ்சுக்கவும் விரும்பல, ஆனா இருபத்தியஞ்சு வருசமா நீ எனக்காகக் காத்திருந்தன்னு மட்டும் தெரியும்” 

”ஹை! அப்பா, அம்மாட்ட பேசுற மாதிரியே பேசறான்” என்று தாவி  கட்டிக்கொண்டாள்.

வளையல் சப்தம் கேட்டு, ”வெளில யாரு பாப்பா?” என்றார் அப்பா. 

“யாருமில்லப்பா”

”சரி அந்த யாருமில்லைய வீட்டுக்குள்ள கூட்டிட்டு வா பாப்பா.”

இந்துமதி நினைத்தது போலவே வினோதான் பெண் பார்க்க வந்திருக்கிறான். வாணியை அம்மா வரவேற்றாள். அப்பாவைப் பார்த்து இந்துமதி புருவத்தை உயர்த்தி சம்மதம் கேட்டாள். 

வீட்டுக்குள் இருந்து மகளையும் கணவனையும் மாறி மாறிப்  பார்த்துக்கொண்டே அம்மா சொன்னாள், ”சரியான லூசுக”.

krthikkavii@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button