கட்டுரைகள்

பயம் மனிதனை மிருகமாக்குகிறது – ‘IT COMES AT NIGHT’ திரைப்படவிமர்சனம் – செல்லப்பாண்டி

 

   டிராகுலா காலம் தொட்டு, horror சினிமாக்களுக்கான கிராக்கி என்றுமே குறைந்தபாடில்லை. அறிவுஜீவிக்கள் இரண்டாம் தரப் படங்களாக ஒதுக்கித் தள்ளிய பல படங்கள், ரசிகர்களால் கல்ட் கிளாசிக்குகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனாலும் வெறும் jumpscares-ஐ மட்டும் நம்பிக் கொண்டு, பேய் வீடு, பேயோட்டுதல், பழி வாங்கும் பெண் பேய்கள் என வருடத்திற்கு நூற்றி சொச்ச ஹாரர் படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி, எது Spoof எது சீரியஸான படமென்றே தெரியாமல் ஒட்டு மொத்த ஹாரர் சினிமாவும் சாகக் கிடந்த நிலையில, Indie இயக்குனர்கள் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் அடக்கம் செய்யப்படவிருந்த ஹாரரை மீட்டதோடு,  அதை வேறு ஒரு கட்டத்திற்கு நகர்த்துகின்றனர். 

அவை வெறும் ஹாரர் சினிமாவாக இல்லாமல் சம காலத்து அரசியல், சமூக அபத்தங்கள், மனித உளவியலைப் பேசத் தொடங்குகின்றன. இந்தப் புதிய இயக்குனர்களின் தனித்துவமான கதை சொல்லல்களால் ஹாரர் சினிமா உயிர் பெறுகிறது.  வெறும் திடுக்கிடும் காட்சிகளை நம்பாமல், அழுத்தமான கதையாலும் நேர்த்தியான தொழில்நுட்பங்களாலும் பயமுறுத்தத் தொடங்கினர். ஏதேனும் ஒரு வகையில் நடப்பு சூழலோடு ஒத்துப் போகி, படம் முடிந்த பின்னும் நம்மை அச்சத்திலேயே வைத்திருந்தனர். இவர்கள் எல்லாம் எண்பதுகளில் குழந்தைகளாக, விடலைகளாக சுற்றித் திரிந்தவர்கள். David cronenberg, Carpenter, G.A.Romero-வென மாஸ்டர்களின் படங்களைப் பார்த்து பிரமித்து, பின்னாளில் அதன் பாதிப்புகளைக் கொண்டு தங்கள் படங்களை மெருகேற்றியவர்கள்.  ஹாரர் மற்றும் அதன் sub-genre களைப் பற்றி வேறு ஒரு தருணத்தில் விவாதிக்கலாம்.

       புது அலை ஹாரர் சினிமாவில் 2017 மிக முக்கியமான வருடம். Get out, It, Gerald’s game போன்ற படங்களால் ரசிகர்களுக்கு விருந்து வைத்த வருடம். அதே வருடம் ஒரு படத்தின் ட்ரைலர் மட்டுமே ரசிகர்களைக் கட்டி இழுக்கிறது. படத்தின் பெயர் ‘ It comes at night’. படத்தின் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டது. அதோடு இந்த mystery poster. 

“you just opened the door, but you didn’t go in?”

“I didn’t touch the door”

“The door was already open when you got there?”

“Yeah”

“Then who opened it?”

உண்மையில் ட்ரைலரைப் பார்த்து விட்டு எல்லாரும் எதிர்பார்த்தது வேறு. திரையில் கண்டது வேறு.  இப்படத்தைப் பற்றி படிக்கும் முன் பார்த்து விடுவதே நல்லது. நிறைய படித்து விட்டு ஒரு படத்தைப் பார்ப்பதை விட, எதுவும் தெரியாமல் ஒரு படத்தைப் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் வேறு. 

 ‘ Fear turns MEN into MONSTERS’

 Sarah: ” dad, can you hear me?  You don’t need to fight it. You can just let it all go”

சாராவின்  தந்தையின் முகமெல்லாம் கொப்புளங்களாக இருக்கின்றன. விழிகள் முழுமையாகக் கருப்பாக இருக்கின்றன.  அவரால் பேச முடியவில்லை. சாராவின் கணவர் (Paul)  மற்றும் மகன் டிராவிஸ் அவரை ஒரு சிறிய இழுவண்டியில் கிடத்தி காட்டுக்குள் எடுத்து செல்கின்றனர்.  அங்கு ஏற்கனவே தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கி, துப்பாக்கியால் சுட்டு, பின் எரித்தும் விடுகின்றனர். அடுத்த காட்சியில்,  காட்டிற்குள் தனித்து இருக்கும் அவர்கள் வீட்டில் அந்நியன் (will) ஒருவன் நுழைகிறான். அவனைப் பிடித்து மரத்தில் கட்டுகின்றனர். தன் மனைவி கிம், குழந்தை ஆன்ட்ரூவிற்கு தண்ணீர் தேடி வந்ததாகக் கூறுகிறான். அவனிடம் நிறைய ஆடு,  கோழி இருப்பதாகவும் அதைத் தண்ணீருக்காகப் பகிர்வதாகவும் கூற, பாலும் வில்லும் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றனர். இரண்டு குடும்பங்களும் ஒரே வீட்டில் தங்குகின்றன. 

வீட்டின் விதிமுறைகள் வில் குடும்பத்திற்கு விலக்கப்படுகிறது.  வைரஸிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வீடு, எல்லா பக்கங்களும் மரப்பலகைகளால் அடைக்கப்பட்டிருக்கிறது.  வீட்டிற்கு இரண்டு வழிகள். இரண்டும் அடைக்கப்பட்டிருக்கின்றன. சாவி பாலிடம் மட்டும் இருக்கும். உள்ளே வரும் கதவிற்கு சிவப்பு நிற பெயின்ட அடிக்கப்பட்டிருக்கும். இரவில் யாரும் வெளியே செல்வதில்லை. மெல்ல பிரச்சினை ஆரம்பிக்கிறது. டிராவிஸ்க்கு இரவில் அமானுஷ்ய கனவுகள் வருகின்றன. அவர்களின் நாய்(ஸ்டான்லி) மரங்களுக்கு நடுவே எதையோ பார்த்து குரைக்கிறது. இரவில் சிவப்புக்கதவு திறக்கப்படுகிறது. கதவைத் திறந்தது யார், டிராவிஸ்க்கு என்ன பிரச்சினை, ஸ்டான்லி குறைத்தது எதைப் பார்த்து,  வில் நம்பிக்கைக்குரியவனா, அந்தக் காட்டில் வேறு யாரும் உள்ளனரா?  

படத்தில் ஆரம்பம் முதலே ஒரு டென்ஷன் இருக்கிறது. எந்தக் கேள்விக்கும் நேரிடையாக பதில் இல்லை. விளாவாரியாக எதுவும் சொல்லப்படுவதில்லை. வைரஸ் எப்படி வந்தது, அதன் அறிகுறிகள் என்ன என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. பால், வில்லிடம், ” வெளியே என்ன நடக்கிறது தெரியுமா?” என்று கேட்பதோடு முடிகிறது. அதிகம் சொல்லப்படாத விசயங்களாலே பார்ப்பவர்களின் பதற்றம் அதிகரிக்கிறது. இயக்குனர் Trey Edward shults,  தான் சொல்ல வந்ததை மட்டும் சொல்லி விட்டு மற்றவற்றை நம்மை தேடி கொள்ளும்படி விட்டுள்ளார். சாவி பாலிடம் இருக்க கதவைத் திறந்தது யார்? நாய் குறைத்தது எதைப் பார்த்து அல்லது ஏன்? வைரஸ் எங்கிருந்து வந்தது?  வில் குடும்பத்தினரிடமிருந்தா அல்லது ஸ்டான்லியிடமிருந்தா? இல்லை ஏற்கனவே அது வீட்டிலேயே ஒருத்தருக்கு இருந்ததா? ஸ்டான்லிதான் என்றால் வெளியில் வேறு யாரேனும் நடமாடுகின்றனரா? Shults  திட்டம் போட்டே காட்சிகளை வைத்துள்ளார். படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் மனநிலையில் நம்மை வைக்கிறார்.

    படத்தின் பெரிய பலம் Joel Edgerton.  யாரையும் நம்ப முடியாத சூழலில், தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் பாத்திரம். கதையின் பெரும்பாலான பகுதிகள் டிராவிஸோடே நகர்கிறது. அவனை மையப்படுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  தாத்தா மற்றும் ஸ்டான்லியின் இறப்பு, கிம்மின் வருகை எல்லாம் அவனைப் பாதிக்கிறது. 

இது போன்ற ஒரு படத்திற்கு ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்தான் உயிர்நாடி. படத்தின் அமானுஷ்ய சூழலுக்கு இரண்டும் துணை போகின்றன. படத்தில் சில காட்சிகளின்  போது ஃப்ரேமின் aspect ratio மாறுவதை கவனிக்கலாம்.  டிராவிஸ் கனவு காணும் போது திரையின் உயரம் குறைகிறது.  இறுதியில் நோய் முற்றும் காட்சியில் இன்னும் குறைகிறது. இது ஒரு hint. 

படத்தின் பிரதான விசயம் நோய் அல்ல. பயம்.  அதனாலே வைரஸைப் பற்றி படத்தில் பேசி நேரத்தை வீணடிக்கவில்லை. ஒரு அசாதரண சூழலில் மனிதன் தன்னை இழக்கிறான்.  பயம் அவனை மிருகமாக்கிறது. குழப்பமடையச் செய்கிறது. டைட்டிலில் வரும் It எதை சொல்கிறது. வைரஸையா ஏதேனும் மிருகத்தையா அல்லது உண்மையில் பேயையா? அது பயத்தை சொல்கிறது.  இரவு பயத்தைக் கொண்டு வருகிறது. பாலின் பயம் வில்லின் மீது இருந்து கொண்டே இருக்கிறது. யாரவன் எங்கிருந்து வந்தான்? அவன் சொல்வதில் எது உண்மை? வில் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்தில் தன் சகோதரனோடு இருந்ததாகக் கூறுகிறான்.  பின்னர் சகோதரனல்ல மைத்துனன் என்கிறான். அப்படியானால் எது உண்மை? வில் எதை மறைக்கிறான்? எண்பது மைலுக்கு யாரையும் பார்க்கவில்லை என்கிறான். ஆனால் பத்தாவது மைலில் இருவரை சந்திக்கின்றனர் எனில் அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? மனிதன் பயத்தில் இருக்கும் போது எந்த  உண்மையும் அறிந்து கொள்வதில்லை. மேலும் மேலும் குழப்பமடையவே செய்வான். படம் பார்க்கும் நமக்கும் அதேதான் நேர்கிறது. 

படத்தில் இன்னொரு விசயம் உணவு மற்றும் தண்ணீர். வில் தேடி வருவது தண்ணீருக்காக. பால் அவனை வீட்டிற்கு அனுமதித்தது அவனிடம் இருக்கும் உணவிற்காக. மனிதமோ அன்போ கிடையாது. பசி என்று வரும் போது நியாய தர்மங்களையோ கோட்பாடுகளையோ மனிதன் உட்பட எந்த மிருகமும் யோசிப்பதில்லை. கொரோனாவிற்காக ஊரட‌ங்கு பிறப்பித்த போது,  எல்லோரும் முண்டியடித்து கொண்டு மூட்டை மூட்டையாக உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். தனக்குப் பின்னால் வருபவருக்கும் வேண்டுமே என்று யோசிக்கத் தோன்றவில்லை. திடீர் நெருக்கடியால் விலையேற்றப்பட்டு அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்களைப் பற்றியும் சிந்தனையில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், தங்களைக் காப்பாற்றுவது மட்டும்தான். ஒரு பெரும் போரின் போதோ கொள்ளை நோயின் போதோ இதுதான் எப்போதும் நிகழும். நாம் உயிர் பிழைப்பது மட்டுமே நம் நோக்கம் என்னும் பட்சத்தில்,  நாம் கொலைகாரனாகவும் மாறத் தயங்கப் போவதில்லை. நம் பயமும் பசியும் மிகக் கொடுமையானது. அது நம்மை நொடியில் மிருகமாக்கிவிடும். இப்படத்தில் இதுதான் நிகழ்கிறது. 

மேற்கொண்டு பேசினால் நிறைய spoilerகளை உடைக்க நேரிடும். ஏற்கனவே உடைத்தது போல்தான் இருக்கிறது.

புதிர்கள் விடுபட விடுபட எந்த  ஒரு படைப்பும் மிகச் சாதரணமான ஒன்றாகிவிடும். இந்தப் படத்தின் இசையைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. இப்படத்தின் horror tone தனி அலாதியானது. தற்போதையே சூழலுக்கு இப்படம் பார்ப்பது இன்னும் ரகளையாக இருக்கும். 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button