![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/07/Picsart_22-07-01_21-30-05-481-780x405.jpg)
பாளையத்தூர் வெள்ளைச்சீலை அப்பத்தா – 1
மாலை நழுவிக் கொண்டிருந்த நேரத்தில்தான்
மணிக்கா விசும்பிக் கொண்டிருந்தாள்
பத்து நாளாய்க் காணாமல்
போயிருந்த கணவன்
வேறு ஒருத்தியை
மலைக்கோவிலில் வைத்து
திருட்டுத் தாலி கட்டிய விவரம் சொல்லித் தேம்பினாள்.
வெள்ளைச் சேலையை உதறிச் செருகிய அப்பத்தா
விளக்கு வைக்கும் நேரத்துல கண்ணீர் சிந்தாத தாயி
பொறக்கும்போதே புருசனோடவா பொறந்த
என்று தேற்றினாள்.
யோனி,பெண்குறி என்று நவீன வார்த்தைகள் அறியாத அப்பத்தா
அக்காவின் காதோரத்தில்
கிசு கிசுத்தாள்
தண்ணிய நல்லாக் கொதிக்க வச்சு
தினமும் படுக்கப்போகறதுக்கு முன்னாடி
பொன்னுடம்புல நாலு போசி அடிச்சு
ஊத்திக்க தாயி
நல்லாத் தூக்கம் வரும்.
***
பாளையத்தூர் அப்பத்தா – 2
கல்யாணம் பண்ணிக் கொடுத்த
மறுவாரம் மறுவீடு வந்த
திலகமக்கா
புகுந்தவீடு போகமாட்டேன் என்று பிறந்தவீட்டோடு தங்கிவிட்டாள்.
ஆறு ஏக்ரா தோப்பும் அஞ்சு ஏக்ரா மேட்டுக்காடும் விட்ராதே
என்று சொந்தங்கள்
எடுத்துச் சொல்லியும்
மாட்டேன் என்று இரட்டைக்
காலில் நின்றுவிட்டாள்.
பல்லாங்குழியில் தங்கிவிட்ட புளியமுத்தாகிவிட்டாளே என்று
மூன்று வருடமாய்
அடுத்த வீட்டு அப்பத்தாவிடம் நொந்துபுலம்புவாள் அம்மாக்காரி.
முதல்தாரமாய்க் கேட்டு வந்தவர்களுக்கு அக்காவைப் பிடிக்கவில்லை.
இரண்டாம்தாரமாய்க்
கேட்டுவந்தவர்களை அக்காவுக்குப் பிடிக்கவில்லை.
நான்காவது வருடத்தில் வந்த நாத்தனார் மகனை
உள் அறைக்குக் கூட்டிச் சென்று
அப்பத்தா என்ன சொன்னாளோ
அடுத்த மூகூர்த்தத்திலேயே
கல்யாணம் முடிந்து
புகுந்தவீடு போனாள்.
மாப்பிள்ளையிடம் என்ன சொன்னாய் என
அப்பத்தாவிடம் கேட்டவர்களுக்கெல்லாம்
சுரைக்காய்க்கு உப்புப்பத்தலைனு சொன்னேன் என்பாள் அப்பத்தா.
திலகமக்கா இரண்டாவது
மறுவீடு வந்து வெற்றிகரமாய் புகுந்த வீட்டிற்குக்
கார் ஏறியதும்
அப்பத்தாவின் காலில் விழுந்த அம்மா அப்பத்தாவிடம் கும்பிட்டுக்
கேட்டாள்
மாப்பிள்ளைப் பையனிடம்
அன்றைக்கு என்ன சொன்னீங்க…
சிரித்தபடி அப்பத்தா சொன்னாள்
கயிறு எட்டாத
கிணத்துத் தண்ணிய
சேந்திக் குடிச்சிருப்பானா ன்னு யோசி ன்னு சொன்னேன்.
******