
ஜன்னல் பறவை
“என்னைத் திட்டினாங்கன்னு தான் அவங்களை அடிச்சீங்களா..?”
அமைதியாக ஜானுவிடம் திரும்பிய கீதா, “இல்ல ஜானகி..”
“இல்லையா..?”
“ம்ம்.. இல்ல..”
“ஓகே”
மீண்டும் அமைதி.
ஜானு இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. இது இல்லையென்றால் வேறு காரணம் எதுவாய் இருந்திருக்கக்கூடுமென்று அவளுக்குப் புரியவில்லை.
ஜன்னலின் அருகே சென்று அந்தக் கருப்பு நிறப் பறவையைத் தேடினாள்.
அதனைக் காணவில்லை.
வெளியிலிருந்த மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு.
மருத்துவமனையில் நிகழ்ந்த எல்லாமும் ஒவ்வொன்றாய் மனதில் ஓடின.
அந்த அந்நியமான சூழலில் மரத்துப் பறவைகளின் சத்தம் ரம்மியமாய் இருந்தது அவளுக்கு.
நீண்ட அமைதிக்குப்பின் மீண்டும் வந்து டேபிள் மேல் சாய்ந்து நின்றுகொண்டு.. கீதாவிடம் கேட்டாள் ..
“அப்படின்னா நீங்க அவங்களை அடிச்சது .. இதுக்கு அப்புறம் அவங்க யாரையுமே இப்படிப் பேசக்கூடாதுன்னா..?”
கீதா நிமிர்ந்து பார்த்தார்.
மீண்டும் கேட்டாள்.
“ம்ம் .. ? அதுக்காகவா ..?”
“எஸ் ஜானகி..”
“நிஜமாவா..?”
“எஸ்….”
“ஓகே கீத்தாக்கா..”
“ம்ம்”
கீதாவிடம் .. சட்டென்று கோவம் மறைந்து புன்னகை உருவானது.
ஜானுவின் இந்தக் கேள்வியும் புரிதலும் அவரை ஆசுவாசப்படுத்தியது.
ஆனாலும் அவர் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
கீதா அமைதியாக இருக்க நினைக்கிறார் என்று ஜானுவுக்குப் புரிந்தது.
இவளும் மௌனமானாள்.
பின் மெல்ல கீதாவுக்கு அருகில் வந்து .. டேபிள் மேலிருந்த ஏதோ ஒரு கோப்பினைத் திறந்து பார்க்கத்தொடங்கினாள்..
அமைதியாகவே கொஞ்சம் நேரம் போனது.
அவ்வப்போது ஜானுவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டார் கீதா.
இவள் மும்முரமாக அந்தக் கோப்பினைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மரத்திலிருந்து பறவைகளின் சத்தம் கேட்கும்போதெல்லாம் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள். கீதா அதை ரசித்தார்.
இன்னும் சிறிது நேரம் கழித்து கீதா, “ஜானகி ..”
சட்டென்று கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்த ஜானு , “கீத்தாக்கா..”
“லன்ச் சாப்பிடலாமா?”
“ஓகே.. சாப்பிடலாம்.. நாம லன்ச் சாப்பிடலாம்” – உற்சாகமானாள் ஜானு.
இருவர் பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளைளையும் மூடி வைத்துவிட்டு.. அவளின் லன்ச் பேகையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு போய் கீதாவின் டேபிள் மேல் வைத்து.. கீதாவுக்கு எதிரில் இருந்த சேரைத் தர தரவென்று இழுத்து வந்து கீதாவுக்கு அருகில் போட்டுவிட்டு, “உங்க லன்ச் பேக் எங்க கீத்தாக்கா..?” என்றாள்.
இவள் இத்தனை விரைவாய்ச் செய்ததைப் பார்த்து கீதாவுக்குச் சிரிப்பு வந்தது.
அவர் எழுந்து போய் தன் லன்ச் பேகை எடுத்துவந்தார்.
இருவரும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள்.
“கீத்தாக்கா.. நீங்க தான் குக் பண்ணுவீங்களா ?”
“ம்ம்.. ஆமாம்..”
“ஓகே..”
பிஸ்கட்ஸ் எடுத்து கீதாவின் அருகே வைத்தபடியே.. ஜானு கேட்டாள் ,
“கீத்தாக்கா .. “
“ம்ம்..?”
“அன்னைக்கு அரெஸ்ட் ஆனாங்க இல்ல ஆறு பேர் .. அவங்க இப்போ எங்க இருக்காங்க..?”
இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத கீதா, “இங்கதான்..” என்றார் சற்று அதிர்ச்சியாக.
“இங்கயா..” ஆச்சரியம்.. ஜானுவிடம்..
“ஆமா .. உள்ள .. பின்னாடி”
“சரி கீத்தாக்கா..” ஏதோ யோசனை தெரிந்தது இவளின் முகத்தில்.
அடுத்து ஏதோ கேட்க நினைத்து அவள் தடுமாறுவதைக் கவனித்த கீதா, “அவங்க எல்லாரும் யார் என்னன்னு தெரிஞ்சுக்கணும் இல்ல. அதுக்காக அவங்களை விசாரிக்கணும். அதுக்கு அப்புறம் அவங்களைக் கோர்ட்ல கொண்டுபோய் ஒப்படைப்போம். அங்க அவங்களுக்குத் தண்டனை கொடுப்பாங்க”
“ஓகே..”
“ம்ம்..”
கீதா தன் டிபன் பாக்ஸை ஜானுவுக்கு அருகில் தள்ளி வைத்தார். ஜானு அதை எடுத்துச் சாப்பிட்டபடியே கேட்டாள்.
“கீத்தாக்கா..”
“ம்ம்..”
“ஒரு வேளை அன்னைக்கு நான் அந்த ரோட் வழியா போயிருக்கலைன்னா..?”
“.”
எத்தனை பயங்கரமான கேள்வி!
அதிர்ந்தார் கீதா.
அமைதி.
பதில் இல்லை கீதாவிடம்.
குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜானு மீண்டும் கேட்டாள்.
“கீத்தாக்கா … நீங்க சொல்லவே இல்லையே..”
அமைதியாகவே இருந்தார் கீதா.
“கீத்தாக்கா..”
“.”
கீதாவின் அமைதி ஜானுவுக்குப் புரியத் தொடங்கியிருந்தது.
அதனால் இவளும் அதைத்தாண்டி எதுவும் கேட்காமல் அமைதியானாள்.
அதற்குப்பின் கொஞ்சம் நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
கீதாவின் டிபன் பாக்ஸ் பிளேட்டில் ஜானு இவளின் உணவை வைத்து கீதாவுக்கு அருகில் தள்ளி வைத்தாள்.
பின் ஜானு அவளின் பள்ளிக் கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.
கீதா இறுக்கமான மனநிலையில் இருந்து சகஜமாக முயன்று கொண்டிருந்தார்.
பள்ளிக் கதைகளையும் தன் பிரெண்ட்ஸைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தாள் ஜானு..
பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.
சாப்பிட்டு முடித்தபின்னும் ஜானு பேசிக்கொண்டே இருந்தாள். இது கொஞ்சம் நிம்மதியைத் தந்தது கீதாவுக்கு.
பின் இருவரும் சேர்ந்து கீதாவின் அலைப்பேசியில் ஏதோ பார்க்கத் தொடங்கினார்கள். ஜானு அதில் ஆர்வமாக கீதாவுக்கு எதையோ காண்பித்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்சம் நேரம் காலைக் கலவரங்கள் எல்லாம் மறந்து மகிழ்ச்சியாகச் சென்றது.
கீதாவைப் பார்க்க யாரோ வந்து சென்றார்கள்.
ஜானு மீண்டும் வெளியே சென்று அங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து கீதாவின் டேபிளருகே ஒட்டிக்கொண்டு நின்றுகொண்டாள்.
அப்போது கான்ஸ்டபிள் ராஜேந்திரன் அறைக்குள்ளே வந்து, “மேடம்.. அசிஸ்டன்ட் கமிஷனர் வந்திருக்கார்”
“oh ..”
அதைக்கேட்டு சட்டென்று எழுந்த கீதா.. அறையை விட்டு வெளியே வந்தார்.
அசிஸ்டன்ட் கமிஷனர் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
கீதா சத்தமாக “Good evening Sir..”
“Good evening..”
இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்து சேரில் உட்கார்ந்தார்.. அசிஸ்டன்ட் கமிஷனர் விஷ்ணு.
கீதாவின் அருகே ஜானு நின்றிருந்தாள். அவளைப் பார்த்த விஷ்ணு, “oh ஜானகி. கமிஷனரோட ஸ்பெஷல் ரெகமென்டேஷன்”
“ஆமா சார்” கீதா.
“ம்ம்.. கீதா அந்தக் கேஸை யாரு ஹேண்டில் பண்றாங்க..?”
“சப் இன்ஸ்பெக்டர் சந்த்ரு சார்”
“சந்த்ரு எங்க? “
“ஹாஸ்பிடல்ல அந்தப் பொண்ணு ஃபேமிலிக்குப் பாதுகாப்பா இருக்கச் சொன்னேன். அதான் அங்க இருக்காரு..”
“ஏன் ..?”
“அந்தப் பசங்களோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் அங்க நின்னு கத்திட்டு இருந்தாங்க. அதான்”
“ஏதும் பிரச்சனை இல்லையே”
“இல்ல சார்”
அந்தக் கேஸ் பைலை மேலோட்டமாகப் பார்த்து முடித்த விஷ்ணு., “இப்போ என்ன சிச்சுவேஷன்..?”
“அந்தப் பொண்ணு நல்லா இருக்கா சார். இந்தப் பசங்கள்ல ரெண்டு பேர் லோக்கல் பசங்க. நாலு பேர் வேற வேற ஊர். இன்னும் விசாரிக்க வேண்டி இருக்கு. வேற பழைய சில கேசஸ்ல இன்வால்வ் ஆகிருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு..”
“ம்ம்.. சந்த்ருவை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க..”
“ஓகே சார்..”
“சரி ..”
பைலை மூடி வைத்தவர்.. ஜானுவிடம் திரும்பினார் ..
“ம்ம்.. ஜானகி..”
“சார் ..”
“4th ஸ்டாண்டர்ட் பொண்ணு ..”
“எஸ் சார்..”
“இங்க வா”
“நீ என்ன செஞ்சன்னு உனக்குத் தெரியுமா..?”
“தெரியும் சார்”
“என்ன பண்ண..?”
“நான் அன்னைக்கு ஈவ்னிங் என் ப்ரெண்ட் வீட்டுக்குப் போய்ட்டுத் திரும்பி எங்க வீட்டுக்குப் போய்ட்டிருந்தேன்.. அப்போ.. அந்த வழியில அந்த அக்காவை ஆறு பேர் கிட்னாப் பண்ணிக் கூட்டிட்டுப் போனாங்க.. அதைப் பார்த்து நான் ஓடி வந்து கீத்தாக்காகிட்ட சொன்னேன். இவங்க எல்லாரும் உடனே கிளம்பிப் போய் அந்தக்காவைக் காப்பாத்திட்டாங்க..”
ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் ஜானு.
விஷ்ணு கீதாவைப் பார்த்தார்.
கீதா புன்னகைத்தார்.
ஜானுவைப்பற்றி கமிஷ்னர் தன்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது விஷ்ணுவுக்கு.
‘அந்தப்பொண்ணுக்குள்ள ஒரு முதிர்ச்சி இருக்கு விஷ்ணு.. இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் அதிர்ச்சியாவோ ஆச்சர்யமாவோ அவ பாக்கவே இல்ல.. சாதாரணமாத் தெரியுது அவளுக்கு இதெல்லாம்’
விஷ்ணு சார் ஜானுவிடம், “கை கொடு”
ஜானு வலது கையைக் கொடுத்தாள்.
ஜானுவின் கையைத் தன் இரண்டு கைகளுக்குள்ளும் பிடித்துக்கொண்ட விஷ்ணு,
“நீ வளர்ந்து பெரிய பொண்ணா ஆனதுக்கு அப்புறம்.. உனக்குப் போலீஸ் ஆகணும்ன்னு ஆசையா.?”
ஜானுவுக்கு .. இதைக்கேட்டு.. காலையில் கீதா தன்னிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. ‘உனக்கு ஏன் இதைச் செய்யணும்னு தோணுச்சு.?’ அப்போது அந்தக் கேள்விக்கு ஜானுவிடம் பதில் இல்லை..
இப்போது விஷ்ணு சார் கேட்ட இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.
ஜன்னலைத் திரும்பிப்பார்த்தாள். அந்தப் பறவையைத் தேடி.. அது அங்கே இல்லை..
இதைக் கவனித்த விஷ்ணு .. ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு .. பின் ஜானுவிடம், “என்ன பார்க்கிற அங்க..?”
“ஒண்ணுமில்ல சார்..”
“hahaa சரி.. போலீஸோட வேலைகள் என்னன்னு கத்துக்கிட்டயா..?”
சில நொடிகள் எதுவுமே பேசாமல் அமைதியாகத் தரையைப் பார்த்தபடி நின்றிருந்தாள்..
கொஞ்சமாய்ப் புன்னகை இருந்தது அவளின் முகத்தில்..
“ஜானகி..” – விஷ்ணு சார்..
நிமிர்ந்து பார்த்த ஜானு .. அதே கொஞ்சமான புன்னகையோடே.. “கத்துக்கிட்டேன் சார்..”
“ohh .. குட் குட் ..” , இந்த பதில் ஆச்சர்யம் கொடுத்தது விஷ்ணு சாருக்கு.
“இந்த மூணு நாள்ல நீ என்ன பண்ணப் போறன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு”
“ஓகே சார்..”
“ஆல்ரைட்.. உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா அல்லது ஏதாவது சொல்லணும்ன்னா எப்போ வேணாலும் நீ என்னைக் கூப்பிடலாம். என் நம்பர் வாங்கிக்கோ..சரியா.. என்னோட பேர் விஷ்ணு”
சொல்லி முடித்துவிட்டு எழுந்து நடந்தார்.
“Thank you Sir..”
இதைக்கேட்ட விஷ்ணு நடந்தபடியே, “நீ என்னை சார்’ன்னு கூப்பிட வேண்டியது இல்ல. அண்ணான்னு கூப்பிடலாம்..”
“ஓகே விஷ்ணு அண்ணா..”
“hahaah”
விடைபெற்றுச் சென்றார் விஷ்ணு.
கீதாவுக்குச் சிரிப்பு வந்தது. ஜானுவின் கன்னத்தை மெல்லக் கிள்ளினார்.
பின் சந்த்ருவுக்கு ஃபோன் பண்ணிப் பேசினார்.
பின் ஜானுவிடம் திரும்பிய கீதா, “ஜானகி நான் கொஞ்சம் வெளிய போகணும். ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடுவேன். நீ வர வேண்டாம் இங்கயே இரு. சரியா..?”
“ஓகே கீத்தாக்கா”
“பத்திரமா இரு. ஏதாவது வேணும்ன்னா முன்னாடி யார்கிட்டயாவது கேளு..”
“ஓகே”
“வந்துடுறேன்”
அப்போது சந்த்ரு வந்து சேர்ந்தார்.
சந்த்ருவோடு கிளம்பிப் போனார் கீதா.
**
ஜானு வெளியே வந்தாள்.
வாசல் கதவுக்கு வெளியே.
அங்கே வெங்கடேசன் சார் புகை பிடித்தபடி நின்றிருந்தார்.
ஜானுவைக் கண்டதும் புகையைத் தூக்கி வீசிவிட்டு, “வா பாப்பா. காபி டீ ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா..?”
“வேண்டாம் தாத்தா..”
கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.
பின் ..
வெங்கடேசன் சாரிடம்,
“தாத்தா.. “
“என்ன பாப்பா..”
“இன்னிக்குக் காலைல ஒரு அக்கா வந்தாங்க இல்ல.. அவங்க பேர் என்ன தாத்தா..?”
“யாரச் சொல்ற பாப்பா.. தெரிலயே ..”
“இந்த ஓரத்துல பெஞ்ச்ல உக்காந்து இருந்தாங்க இல்ல.. ஒரு சின்னக் குழந்தையோட..”
“ஆமா ஆமா ..”
“அந்த அக்காவோட பேர் என்ன..?”
“அந்தப் பொண்ணு பேர் காவேரி..”
“.”
“ஏன் பாப்பா என்னாச்சு..?”
“நான் அந்தக்காகிட்ட பேசினேன் தாத்தா. ஆனா, அவங்க என்கூட பேசவே இல்ல”
“அந்தப்பொண்ணு ரொம்ப பாவம் பாப்பா..”
“ஏன்..?”
“அந்தக் கொழந்த அதோட கொழந்த தான். புருஷன் கொழந்தைன்னு நல்லாத்தான் இருந்துருக்குது. ப்ச். ஆனா, ஒரே நாள்ல அதோட வாழ்க்கையே சீரழிஞ்சு போய்டுச்சு.. என்ன சொல்லி என்ன பண்றது.. எல்லாம் விதி..”
ஜானுவின் முகம் சுருங்கிப்போனது இதைக்கேட்டு.
“நீ உடு பாப்பா வருத்தப்படாத..”
“திரும்ப எப்பயாவது வருவாங்களா இங்க..?”
“தினமும் வரும் பாப்பா”
“நாளைக்கும் நாளன்னைக்கும்..?”
“ம்ம் .. வரும்”
ஜானு மெல்ல நகர்ந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சாலையைப் பார்த்தாள்.
வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது சாலை.
யாருக்காகவும் காத்திருக்காத சாலை.
வெங்கடேசன் சார் மீண்டும் தள்ளி நின்று புகைக்கத் தொடங்கினார்.
ஆழ்ந்த யோசனை உருவானது ஜானுவுக்கு.
அந்தக் கருப்பு நிற ஜன்னல் பறவை.. எங்கிருந்தோ வந்து எதிர் சுவர் மேல் அமர்ந்தது..
அருகிலிருந்த சின்னச் சின்னக் கடைகளில் ஏதோ ஒன்றிலிருந்து மெல்லிய பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்தச் சூழல் சோகத்தை உருவாக்கியது ஜானுவுக்கு.
இதை எப்படிக் கையாள்வதென்று தெரியவில்லை அவளுக்கு.
மௌனமாய் மனதுக்குள் யோசித்தாள்..
“காவேரி அக்கா..”
( ஜானு தொடர்வாள்…)