எப்போதும் நம்மிடம் சில சொற்கள் மிச்சம் இருக்கின்றன
பெரும் துயரங்களின் போது
நானென் பூனைகளின் மெல்லிய காதுகளை
வருடிக்கொடுக்கிறேன்.
தூரத்தில் ஒளிர்ந்திடும் நட்சத்திரங்களைப் பாடியபடி
எவரேனும் என்னிடம் கை நீட்டினால்,
அவர்களின் மனதை இன்னும் இலகுவாக்குவதற்கு
என் வீட்டின் வாசல்களைத் திறந்து விடுகிறேன்.
மிஞ்சிய சொற்களிலிருந்து அவர்களுக்கெனப் பிடித்த
ஏதோவொன்றைச் செய்து காண்பிப்பேன்.
அவ்வெளிய உலகின் கரையில் நனைந்தபடியே
பாடிப்பாடிச் சாய்ந்ததற்குப் பிறகு,
என் செல்லப்பூனைகள்
எங்களதுடல்களின் மீது விளையாடி
மகிழ்ச்சிகளை உணர்ந்து கொள்கின்றன.
எப்போதும் நம்மிடம் சில சொற்கள்
இப்படித்தான் மிச்சமாகி விடுகின்றன.
*****
பெரும் மகிழ்ச்சியின் போதெல்லாம்
என் காதுமடல்களை மெல்லக் கடிப்பதற்கு
பழகிவிட்டிருந்தன
என் குட்டி நாய்கள்.
அதன் சிறிய அக்கறைகளை,
என் சேமிப்புகளுக்கான டப்பாவிற்குள்
அடுக்கி வைந்திருந்தேன்.
சாலையில், திடீரெனத் தேவைப்பட்ட ஒரு முகத்திற்கென
நான் அவசரப்பட்டுக்கொண்டிருந்த போது
என் குட்டி நாய்கள்
என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
அவ்வளவு எளிதாக ஒரு பதற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு
நான் அவற்றிடமிருந்து இன்னும் பழக வேண்டும்.
கைவசமிருந்த சில ரொட்டித்துண்டுகளின்
பிரியங்களை அவற்றை நோக்கி எறியத்துவங்குகிறேன்.
அம்மாலைப்பொழுதைக் கவ்வியபடி எனக்கு முன்பாக
அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன அவை.
*****
நேசித்தலென்பது,
ஒரு நிழலில் இளைப்பாறிடுவதுதான்.
இன்னும்,
சற்றுப் பெரிய வனாந்தரத்தில்
கிடக்கும் கல்லின் தனிமையும் அதுதான்.
*****
நாங்கள் ஒரு காலத்தில்
சில வேலிகளை அடிக்கத் துவங்கினோம்.
சில ஆயுதங்களை வெடிக்கச் செய்தோம்.
சில மன்னிப்புகளைக் காலம் கடந்தேனும்.
கொடுத்தனுப்பினோம்.
அவையனைத்தும்,
அதன் காலத்தில் முட்களைப் பரவச்செய்தன.
அதன் திசையில் பெரும் புகையை நிரப்பின.
அதன் காலத்தில் சில இதயங்களை மிகநெருக்கமானதாக
மாற்றிக் காண்பித்தன.
*******
அருமையான படிமக்கவிதை….