இணைய இதழ்இணைய இதழ் 70சிறுகதைகள்

கடற்கன்னி – வாஸ்தோ 

சிறுகதை | வாசகசாலை

ன்னை நான் புணர்ந்த பொழுதினில், தொய்ந்து போயிருந்த உன் முலையும் அதில் வயது முதிர்ந்த பெட்டை நாயின் மடிக்காம்பையொத்த தடிமனும் நீளமுமாயிருந்த முலைக்காம்பும் உன் காமவுணர்வுக்கு தலைப்பட்டு தன்னை நிமிர்த்திக் கொள்ள முயன்று, முடியாது தோற்றுப் போய் அவமானங்கொண்டு தலைதாழ்த்தி நிலம் நோக்கி கிடந்ததுவும், உன் உந்திச்சுழிக்கும் பிறப்புறுப்பிற்கும் நடுவிலிருந்த இரு கோட்டுத் தழும்புகள் என்னுள் சலனப்படுத்தியதைப் போலவே, என்னுடலிலிருந்து வெளியேறிய மச்ச நாற்றம் உன்னைச் சலனப்படுத்தியதாகக் கூறினாய். முலையின் தொய்வுக்கும், காம்பின் தடிமனுக்கும், அடிவயிற்று வடுவிற்கும் உன்னிடம் ஒரேயொரு காரணமே இருந்தது. பரதவ உடலுக்கே உரித்தான மச்ச நாற்றமானது, பரதவனல்லாத என்னிடம் எப்படி என்கிற உன்னுடைய கேள்விக்கான பதிலை எங்கிருந்து துவங்குவது என்பது தான் எனக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றைச் சொல்லத் துவங்குகையில் உனக்கது தெரியுமா என்றோ அல்லது உனக்கொன்று தெரியுமாவென்றோ கேட்டுத் துவங்குவதே நியதி. அந்த நியதியின் படி, உன் திருமண தினத்தன்று நான் என்னை தற்கொலைத்துக் கொள்ளும் எண்ணத்தோடு கடற்கரையினில் நின்று கொண்டிருந்தேன் என்பது உனக்குத் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதால், உனக்கொன்று தெரியுமா என்கிற நியதியிலிருந்தே என் காரணத்தைச் சொல்லத் துவங்குகிறேன்

உன் திருமண தினத்தன்று தற்கொலைத்துக் கொள்ளும் எண்ணத்தோடு கடற்கரையில் நின்றிருந்தேன். அப்பொழுது அவ்வழியாக வந்த பரதவனொருவன், நான் நிற்கும் நிலையைப் பார்த்து என்ன நினைத்தானென்று தெரியவில்லை. “என்னோடு கடலுக்கு வருகிறாயா…? கிடைக்கும் வருமானத்தில் ஆளுக்குப் பாதிப்பாதியெனப் பிரித்துக் கொள்ளலாம்எனக் கேட்டான். பாதிப்பாதி வருமானம் என்பது எனக்கு முக்கியமானதில்லை என்றபோதும், நான் அன்றிருந்த மனநிலையில் மனிதர்களே இல்லாத வெளியினுள் தப்பியோடிவிடும் எண்ணத்தோடு இருந்ததால், அவனது அழைப்பை என்னால் மறுதலிக்க முடியவில்லை. ஆம் வருகிறேன் என்றோ அல்லது இல்லை நான் வரவில்லை என்கிற மறுதலிப்பு பதிலோ எதுவும் பேசாமல் அவனோடு கிளம்பிவிட்டேன். சொன்னால் நம்பமாட்டாய் அரூபி. அலையடித்துக் கொண்டிருந்த கடலைக் கடந்து, அலையற்ற கடலின் நடுவினில், நிலவெளியே தெரியாமல் நீண்டு கிடந்த அந்த நீலநீர் எங்கள் படகைத் தாலாட்ட, மேகங்களேதுமற்ற நீலநிற வானைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருந்தேன். எங்கிருந்தோ திரண்டு வந்த வெண்நிற மேகங்கள் மெதுவாக நான் படுத்திருந்த படகைக் கடந்து சென்றது. என்னைக் கடந்துச் சென்றது மேகங்களா அல்லது ஆழியெழுந்த அலைகளாவென சட்டென என்னுள் சந்தேகமெழ எழுந்து நின்றேன். நான் வானத்தில் மிதக்கிறேனா அல்லது தண்ணீரின் மேல் பறக்கிறேனா என்பது புரியவில்லை. நான் திரும்பிய திசையெங்கும் நீலம். நிலத்தில் நின்றபடியே புனையப்படும் தொடுவானம் என்கிற பதம் தான் எத்தனை வேடிக்கையானது. அப்பொழுது கடலுக்குள் என்னை அழைத்து வந்த பரதவன், “கடலெனும் மூதாய் ஒரு அட்சய பாத்திரம். உனக்கென்ன தேவையோ அதைத் தரும் வல்லமைப் பெற்றவள்என்றான். எனக்கு நிம்மதி வேண்டுமென்றேன். அது தான் இங்கே அனைவருக்கும் தேவையானது என்றபடியே விரித்திருந்த வலையில் மீன்கள் சிக்கியிருக்கிறதாவெனப் பார்க்கப் போய்விட்டான்

அந்த பரதவனின் வார்த்தைகள் தான் எத்தனை உண்மையானது. என்னை விட்டு விலகிச் செல்தலே உனக்கு நிம்மதியென நீ நினைத்தாய். இந்த உலகை விட்டு விலகிச் செல்வதே எனக்கான நிம்மதியென நான் நினைத்தேன். உன் நிம்மதிக்காக நீ தேடிச்சென்றது வேறொரு உடல். என் நிம்மதிக்காக நான் தேடி வந்தது இந்தக் கடல். உடல்ஊடல், கடல்கூடல், எதுகை மோனை வார்த்தைகள், நான் சற்றுப் புன்னகைத்துக் கொள்கிறேன். நீரின்றி அமையாது உலகு என்று எவனோ சொல்லிச் சென்றிருக்கிறான். ஆனால், நீரால் அமைந்தது தான் உலகு என்பதை கடல் நடுவினில் நின்று நான் உணர்ந்துகொண்ட தினமன்று

உன் திருமணத்திற்குப் பரிசாக என் உயிரை இழக்கக் கடலுக்கு வந்தேன். ஆனால், உன் திருமணத்தன்று உன்னால் எனக்கு கிடைத்த பரிசு வேறொன்று. அந்தக் கடலோடியிடம், “வயிற்றைக் கலக்குகிறது மலம் கழிக்க வேண்டும். கழிவறையற்ற இப்படகில் நான் எங்ஙனம் என் கழிவுகளை வெளியேற்றுவது?” எனக் கேட்டேன். “இதோ, இந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு, படகின் வெளிச்சுவற்றிலிருக்கும் அச்சிறு துளையில் கால் வைத்து, உன் கழிவுகளை நேராக கடல் மீன்களுக்கு உணவாக்கி விடுஎன்றான். “கழுவுதல்..” என இழுத்தேன். “இன்னும் இரண்டடி இறங்கிச் செல், உன் அழுக்கை நம்மைத் தாலாட்டும் அன்னையான இந்தக் கடலே அன்னையாயிருந்து தன் அலைக்கரத்தால் கழுவியும் விட்டுவிடுவாள்என்றான்

அவன் கூறியபடியே கயிற்றைப் பற்றியபடியே கடல் தாலாட்டிய படகின் அசைவிற்கேற்றபடி அசைந்தாடி என் உள்கழிவை வெளியேற்றினேன். ஆனால், அதற்குப் பிறகாகவே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. என் பிருஷ்டம் கழுவ கடல் நீரில் இறங்கிய பொழுது, என் மலச்சுவையால் ஈர்க்கபட்ட மீனொன்று என் குதம் வழி குடலினுள் புகுந்து கொண்டது. அன்றிலிருந்து நீ நம்பமாட்டாய் பெண்ணே, நான் மலம் கழிப்பதில்லை. பெருங்கடலிலிருந்து என் பெருங்குடலினுள் குடியேறிய அம்மீன், என் பெருங்குடலில் சேரும் மலம்தனைத் தின்றுத் தீர்த்துவிடுகிறது

அதுவரையிலும் அந்தப் பெருங்கடலில் நானும் அம்மீனும் வேறுவேறாக இருந்தோம். என் பெருங்குடலில் அது குடியேறிய பின், நானும் அந்த மீனும் வேறுவேறல்ல. இருவரும் ஒன்றெனக் கலந்துவிட்டோம். ஆம்.. ஆண் பெண் பாலுறுப்புகளைத் தன்னகத்தே கொண்டு தன்னினம் பெருக்கிக் கொள்ளும் மண்புழுக்களைப் போலாகிவிட்டோம். அந்த மீன் என்னுள்ளேயே இருந்து என்னைப் புணர்ந்து குஞ்சுகளை ஈன்றெடுக்கத் துவங்கிவிட்டது

பிறப்பால் உறுப்பால் நான் ஆணென்றாலும், கருத்தரித்த பெண்ணின் ஒழுங்கை நான் கடைப்பிடிக்கலானேன். ஒவ்வொரு நாளும் என் வயிற்றினுள் நீந்தும் மீன் குழவிகளுக்காகவும் சேர்த்தே நான் உண்ணலானேன். நான் உறங்கும் வேளைகளில் அவைகள் என் குடலைச் சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கிவிடுகின்றன. மறுநாள் காலை பனிக்குடம் உடைந்து மகவு வெளியேறுவதைப் போல, என் பிறப்புறுப்பின் வழியே கடல் நீரின் சுவை நிறைந்த மூத்திரத்தினோடு ஒன்றிரண்டு மீன் குழந்தைகள் வெளியேறி விடுகின்றன

ஒருமுறை அந்த பரதவன் தான் என்னிடம், “நெருப்பைப் போன்றதல்ல கடல். நெருப்பைப் போன்று தன்னுள் வரும் அத்தனையையும் அது உள்வாங்கிக் கொள்வதில்லை நண்பா.” என்றான். நானும், “நெருப்பும் கூட தனக்கு ஒவ்வாததைத் தன்னுள் சேர்த்துக் கொள்வதில்லையேஎன்றேன். என்னைச் சில நிமிடங்கள் ஊடுறுவிப் பார்த்தான். பின், “நீ சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை நண்பா. ஆனால், தொடர்ச்சியாக நெருப்பினுள் அதற்கொவ்வாத பொருள் கிடக்குமாயின் அது தன் பௌதிக நிலையை மாற்றிக் கொள்ளுமாறு நேர்த்துவிடுகிறது. ஆனால், கடலில் அப்படியல்ல. தன் ஒரு துளி நீரில் கூட ஒரு நூறு உயிர்களைச் சுமந்திருக்கும் உயிர் காடு. இங்கே எதுவுமே அழிந்து போவதில்லை. இங்கே உயிர் வாழும் உயிரிகளுக்கு உணவெனவாகி ஒன்றோடு ஒன்றெனக் கலந்து விடுகிறது. நண்பா. அதனால் தான் கடல் தனக்கு ஒவ்வாத ஒன்றைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதில்லைஎன்றான். இப்பொழுது நான் அவனை உற்றுப் பார்த்தேன். “நம்முடைய மாவட்டத்தில் சுனாமி என்கிற பேரலை வந்து பல ஆயிரம் உயிர்களைக் காவு வாங்கியது உனக்கு நினைவிருக்கிறதா நண்பாஎனக் கேட்டான். ஆமாமென்றேன். பின் சந்தேகத்தோடு, “பல ஆயிரம் உயிர்களையா நண்பாஎனக் கேட்டேன். தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்துக் கொண்டு, “மனித உயிர்கள் மட்டுமே உயிர்கள் இல்லையே நண்பா. இந்தக் கடலில் நீந்தும் மீன்களும், சிப்பிகளும், நத்தைகளும், பாசிகளும் கூட உயிர்கள் தானே நண்பாஎன்றான். நான் எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்தேன்.

கடல் உள்வாங்கிய பொழுது தன்னுள் வாழத் தகுதியற்ற பல ஆயிரம் உயிரிகளை நிலத்திற்குக் கொண்டு சேர்த்து, அதன் வழியே தனக்குத் தேவையான சில நூறு மனித உயிர்களை அவர்தம் உடல்களோடு தன்னிடம் இணைத்துக் கொண்டது நண்பா”. அவனது குவிந்திருந்த உதடுகளின் வழி சாம்பல் நிறப் புகை வெளியேறி காற்றோடு ஒன்றெனக் கலந்ததைப் பார்த்தபடியே, “பெருமீன்களுக்கு நாம் தூண்டிலிடுவதைப் போன்று, நமக்கு கடலிட்ட தூண்டிலா?” என்றவாறு மேற்கொண்டு பேசத் தெரியாது அமைதியானேன்.

அவ்வப்பொழுது உயிர் தாகம் கொண்ட காட்டாறுகள் கூட இந்த மூதாய்க்கு தேவையான உயிர்களைச் சுமந்து வரத் தயங்குவதில்லை நண்பாஎன்றவன், “நான் உன்னைச் சந்தித்த தருணத்தில் உன் கண்களில் ஒரு மிகப்பெரிய வெறுமையைக் கண்டேன் நண்பா. இந்த மூதாய் கரையில் நின்று வேடிக்கை பார்க்கும், உன்போன்ற வெறுமைகளை தன்னோடு சேர்த்துக் கொள்வதில்லை என்பதாலேயே விரிகடலின் ஆழ் பகுதிக்கு உன்னை அழைத்து வந்தேன்.” என்றான்.

அத்தோடு, “இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை நண்பா. நீ சம்மதித்தால் உன்னை இந்த மூதாய் ஏற்றுக் கொள்ளும்படி என்னால் செய்யமுடியும். உன் காலில் இதோ கிடக்கும் இந்தக் கல்லைக் கட்டிஆனால், தாய் விரும்பாத உணவை அவள் வாயில் திணிக்க எனக்கு விருப்பமில்லை. உனக்கு விருப்பமிருந்தால், அதைச் செய்ய எனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லைஎன்றான்.

கண் காட்டும் தொலைவு வரையிலும் நீலம் தவிர்த்து வேறெதுவுமே தெரியாத பாலையைப் பார்த்தபின், நான் அவனிடம் மெதுவாக, “இல்லை நண்பா. விருப்பமின்றி உட்புகும் உணவு உள்ளே தங்குவதில்லை. எப்படியாகினும் வெளியே வந்துவிடும்.” என்றேன்.

மறுமொழி எதுவுமே பேசாமல், பற்களால் சுருட்டைக் கவ்வியபடியே என்னைப் பார்த்து புன்னகைத்தான். மீண்டும் கரைக்கு அவனது கலனைத் திருப்பினான்.

அன்றிலிருந்து இன்று வரையிலும், மனச்சஞ்சலம் மிகும் வேளையிலெல்லாம் இங்கே வந்துவிடுகிறேன். தாயின் வயிற்றில் தலைச்சாய்ந்துப் படுத்திருக்கையில், அவளிடும் மூச்சுக்காற்றுக்கேற்ப ஏறி இறங்கும் வயிற்றைப் போல இந்த மூதாய் என்னைத் தன் ஆழ் மூச்சினால் தாலாட்டுவாள். மனிதரிலிருந்து ஒதுங்கி வாழத் தலைப்பட்ட சித்தர்களெல்லாம் சமதளமற்ற மலைமுகட்டைத் தேடிச் சென்றார்களாம். படித்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது யோசிக்கிறேன். இந்தக் கடலானது சமதளத்தினைப் போன்று தோன்றினாலும், இங்கே சமதளமென்று எதுவுமே இல்லையே என்றும், சமதளமற்ற தரையில் கிரகங்களின் சஞ்சாரங்கள் வேலை செய்யாது என்பதை அறிந்தச் சித்தர்கள் ஏன் இந்தக் கடலைப் பற்றி யோசிக்கவில்லை என்றும்.

இப்படி ஒரு கலனை எடுத்துக் கொண்டு கடல் நடுவினில் வந்தமர்ந்து, தனியே பேசிக் கொள்ளும் என்னைத் தனிமை விரும்பி என்கிறார்கள். ஆனால், நான் அப்படியானவனல்ல அரூபி. நான் பேசுவதைக் கேட்க எவருமின்றி தனித்து அமர்ந்திருப்பவன். கேட்கும் காதுகளுக்காகக் காத்திருப்பவன். கேட்க காதுகளற்ற பொழுது இதோ இந்த உப்புசம் வீசும் காற்றோடு நான் உறவாடிக் கொள்கிறேன். இங்கு வீசும் காற்றில் அரூபியாய் மறைந்திருக்கும் உன்னிடம் என் ஒலியைச் சேமித்து வைத்துக் கொள்கிறேன். என்றேனும் என் ஒலியின் அலைவரிசையைக் கேட்கும் திறனோடு யாரோ ஒருவர் இவ்விடம் வருகையில் அவர் என் கதையினைத் தெரிந்துக் கொள்ளட்டும். என் அரூபியே நான் பேசுவது உனக்கு கேட்கிறது தானே.

**

ஆம் அரூபா, நீ பேசுவதை நான் என்னுள் சேமித்து வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். உன்னைப் போலவே தான் நானும், கடந்த நூறு ஆண்டுகளாக எனக்கேற்ற இணையைத் தேடி ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஆழ்கடலிலிருந்து மேல்மட்டத்திற்கு வந்து வானம் பார்க்க அமர்ந்திருக்கிறேன். நீரில் அமர்ந்திருப்பது எப்படியென நீ யோசிக்கலாம் என் அரூபா. புவியீர்ப்பு விசையில் வாழும் நிலம்வாழ் உயிரிகளான உங்களுக்கு மட்டும் தான் இருப்பதும், நிற்பதும், நடப்பதும், பறப்பதும். என்போன்ற நீர்வாழ் உயிரிகளுக்கு ஒரே நிலை மட்டுமே கைகூடும். வீசும் காற்றிற்கேற்ப, அசைந்தாடும் அலைகளுக்கேற்ப மிதவையாய் மிதக்க மட்டுமே எங்களுக்குத் தெரியும். கரைத் தொட்டுத் திரும்பும் அலை, கரையைத் தொட பேரார்வங்கொண்டு புரண்டு வரும் அலையிடம் தன் கரையனுபவத்தைச் சொல்லும் அந்நொடியில் இரு அலைகளும் கொஞ்சி, ஒன்றோடொன்றுப் புணர்ந்து கொள்வதைப் போன்றிருக்கும். அதை நான் பார்க்கும் பொழுதுகளிலெல்லாம், ‘நானும் இதுபோன்றதொரு கடல் மேலுருவாகும் அலையாக இருந்திருந்தால், கணமறியா காலங்கள் கூடிப்புணர ஆள் கிடைக்காது காத்திருக்கும் இவ்வாழ்க்கையெனும் சிறைதனிலிருந்து வெளியேறி, அலையைப் போன்று ஒரு கண நேரத்திய வாழ்வென்றாலும், கூடிப்புணர்ந்து வாழும் வாழ்க்கையை அனுபவித்திருக்கலாமேஎனத் தோன்றும். ‘தால்என்றும்லாம்என்றும் முடிவுறும் வார்த்தைகளைக் கொண்டு மன ஆறுதலைத் தேடிக் கொள்ளலாம். எனினும் வாழாது வீணே கழியும் காலமென்பது, கால்களில் கல்லைக் கட்டிக் கொண்டு நீரினுள் அமிழ்ந்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வித்தையைப் போன்று விந்தையானது.

கடல் நீரினுள் மூழ்கி என்னை ஈன்றெடுத்த அன்னையானவளின் கால்கட்டை நான் தான் அவிழ்த்தெறிந்தேன். இருப்பினும் அவள் என் மூதன்னையோடு தன்னை இணைத்துக் கொண்டாள். அவள் வயிற்றிலிருந்த இரு கோடுகள் விரிந்துக் கொடுக்க, தான் உயிர்வாழத் தேவையான உயிர்காற்றை நீரினுள் இருந்தே பிரித்தெடுக்கப் பழகிக் கொண்டாள். ஒரு மீனின் கர்ப்பக்காலம் இருபத்தியோரு நாட்கள். மனித உருவிலிருந்து மீனென்றான என்னை ஈன்றவளும் இருபத்தியோரு நாட்களுக்கொருமுறை என்னைப் போன்றவொரு பெண்ணை ஈன்றெடுத்து உலாவ விடுகிறாள். என்னைப் போலவே அந்தப் பெண்களும் கன்னிகழியாப் பெண்களாக ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கடலெனும் இப்பரந்தப் பாலை வெளியில், அவர்கள் கன்னித்தன்மையை இழக்கச் செய்யும் திறன்மிகு ஆடவனைத் தேடிக் காத்திருக்கிறார்கள். எங்களை ஈன்றவளைப் போல, நிலம்வாழ் பெண்களைப் போன்றோரல்ல நாங்கள். ஒற்றை ஆடவனோடு கூடிப் புணர்ந்து, ஒன்றோ இரண்டோ பிள்ளைகளைப் பெற்று வாழ்ந்து ஓய்ந்து போக. நாங்கள் நீர்வாழ் பெண்கள். உயிரிருக்கும் வரையில் புணர்ந்து உயிர்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நிலத்துப் பெண்களைப் போல ஒற்றை ஆணைத் தேடியலைந்தோமெனில், நிலத்தைப் போலவே இங்கும் ஆதிக்கச் சண்டை நிகழத் துவங்கிவிடும். எங்களுக்குத் தேவையானது எல்லாம் எங்கள் உடல் வேட்கையைத் தணிக்கவல்ல ஆணொருவன் மட்டுமே. அந்த ஒற்றை ஆண் எங்களில் எவருக்கேனும் கிடைத்தாலும் கூடப் போதும். அந்த ஒற்றை ஆணைப் பகிர்ந்து புணர்ந்துண்டு வாழ எவ்வித மனகிலேசமுமின்றி தான் இருக்கிறோம்

**

அரூபியின் குரல் எனக்கு கேட்கிறது. இதுவரையிலும் நான் கேட்டிராத மாயயெதார்த்தக் குரல். சங்கினுள் தங்கிய கடலின் ஓலம். கடலைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்ட சங்கின் ஓங்காரக் குரல். திசைகள் கலைத்து அடுக்கப்பட்ட நீலவெளியில், அரூபியின் குரல் வந்தத் திசையைக் கண்டறிவதென்பது, கலைத்து அடுக்கப்பட்டிருக்கும் இந்நீலவெளியை மீண்டுமொருமுறை கலைத்து அடுக்குவதைப் போன்றதொரு மாயவேலை

என் கலனின் கீழே நீரதிர்வு நிகழ்கிறது. தாலாட்டிய தாய்மடி, திகட்டத்திகட்ட காமமுண்ட உடலாய், காமத்தின் முதல் உச்சம் தொட்டவுடலாய் அதிர்கிறது. என்னுடலோ புணர்வில் பலமுறை உச்சம் கண்ட உடலாய் தளர்ந்து சரிய, முதன்முறையாக இத்தனை நாளும் நான் அரூபியாகக் கருதியிருந்த காற்று நீலநிற அலையின் பின்னணியில் ரூபம் கொள்கிறது. ஆம்; நான் அரூபியாக நினைத்திருந்த இவ்விருண்டவெளி ரூபம் கொள்கிறது. அரூபி என்பது ரூபியாகுகிறது. தொய்வுறாத முலையில், பீயுருட்டும் கருவண்டினளவிலும் அதே நிறத்திலும் விரைத்து நிற்கும் முலைக்காம்பும், கருத்தரித்திராத பெண்ணின் தொப்பூழின் ஆழமற்ற வடிவம் கொண்ட நாபியின் கீழ் ரோமங்கள் ஏதுமற்ற வழவழப்பான தோலின் மேல் பார்வை வழுக்கிச் செல்லச் செல்ல பிறப்புறுப்பு துவங்குமிடத்தில் பளபளப்பான மீனின் செதில்கள் தென்பட, பார்வை மீன் செதில்களில் சிக்கிக் கொள்ளாமல் துள்ளிக்குதித்து உருண்டு புரண்டு எழுந்து நிற்க அங்கே கால்களுக்குப் பதிலாக மீனின் வால் துடித்துக் கொண்டிருக்க, அதிர்ச்சியில் நிமிர்ந்து பார்க்கிறேன். இரவின் கருமை பூசிய விரிகடல் நீரே நீள்கூந்தலாய் விரிந்திருக்க, என்னை விட்டுவிலகிச் சென்றவளின் ஒத்த வடிவினள் அமர்ந்திருந்தாள். நான் காணும் பெண்ணின் உடலெல்லாம், நான் கண்ட அந்த ஒற்றைப் பெண்ணின் உடலாலேயே என்னுள் அளக்கப்படுகிறது. என் மூளையில் தேங்கியிருக்கும் அவ்வுடலையொத்த உடலைத் தான் இந்தக் கடலிலிருந்து கரைத் தொடும் அலைகளைப் போல மீண்டும் மீண்டும் என் மனம் தேடித் தேடி அலைவுறுகிறது. எனக்கும் கடலலைக்கும் இடையில் என்னவொரு வித்தியாசமெனில், கடலலை அயர்ச்சியுறுவதில்லை

அரூபத்திலிருந்து ரூபனாகி நிற்கும் என் ரூபா, நான் மனித உருக்கொண்டப் பெண்ணின் வயிறு கிழித்து மீனாய் உருக்கொண்டவள். என்னைப் புணர மீனுறுக் கொண்ட ஆடவனைத் தேடி பல பத்தாண்டுகளாக ஒவ்வொரு முழு நிலாவன்றும் இந்த எற்றுந்திரை மீதேறி பரிதி தோன்றும் வரையிலும் காத்திருக்கிறேன். இதுவரையிலும் எவரையும் நான் கண்டடைந்ததில்லை. உன் கண்களுக்கு நான் தெரிகிறேனெனில் நான் தேடும் ஆடவன் நீயாகத் தானிருக்கவேண்டும்”. 

ஆனால், நான் மீனுறுக் கொண்ட ஆடவனில்லையே. பார் உன்னைப் போல எனக்கு என் கால்கள் வாலாக இல்லாமல் மனிதக் கால்களே இருக்கின்றனஎன் கால்களை நீட்டி அவளுக்குக் காண்பித்தேன்

பச்சைநிற விழி கொண்ட அவள் முகத்தில் ஆலோசனையின் சாயலும் குழப்பத்தின் ரேகையும் ஒன்று மாற்றி ஒன்றென வந்துப் போன பொழுது, இதே முகத்தை எங்கோ இதற்கு முன் நான் கண்டிருப்பதைப் போன்றிருந்தது

இல்லை; இத்தனை ஆண்டுகளிலும் என்னைக் கண்டவர் எவருமிலர். நான் காணும் முதல் ஆடவனும் நீதான். நீ சற்றுமுன் அரூபனாயிருந்து என்னோடு பேசுகையில் மீனும் ஆணுமாய் கலந்திருப்பவன் என்று சொன்னாய் அல்லவா

ஆமாம். இப்பொழுதும் என் அடிவயிற்றில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. என் பிறப்புறுப்பின் வழி நான் கடல் நீர்த்துளிகளோடு மீன்களையும் ஈன்றெடுக்கிறேன். என் காதலியைப் புணர்கையில் என் மயிர்க்கால்களிலிருந்து வெளியேறிய வியர்வையின் துளிகளிலும் ஒன்றிரண்டு மீன் குழவிகள் வெளி வந்ததைக் கண்டிருக்கிறேன்

நீயுன் உடலிலிருந்து வெளியேறும் துளி நீரிலும் ஒரு நூறு உயிர்களைச் சுமந்து அலைகிறாய்

விந்தையாக இருக்கிறது

இதிலென்ன விந்தையைக் கண்டாய்

என் பரதவ நண்பன்தான் கடலின் ஒரு துளி நீரிலும் ஒரு நூறு உயிரிகள் இருப்பதாய் சொல்வான். நீ என்னைச் சொல்கிறாய்

இல்லை; நானும் கடலைத் தான் சொல்கிறேன்

உன் வார்த்தைகளை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை ரூபி

உன் ஊனிலிருந்து வெளியேறும் நீரில் இக்கடலின் சுவை இருப்பதை அறிவாயல்லவா?”

ஆம்

நீயிருக்கும் நிலத்தில் தித்திக்கும் நீர் கூட நிலம் விட்டு வெளியேறியதும் உன்னுடல் நீரைப் போல உவர்ப்புக் கொண்டுவிடுவதை அறிவாயல்லவா

ஆம்

நீ நிலம், உன்னிலிருந்து வெளியேறிய நீரால் உருவானவள் நான்

விந்தை

ஆம்; நீயென் எந்தை. உன்னால் பலப் பத்தாண்டுகள் முன் கைவிடப்பட்ட பெண்ணின் உடல்வழி உயிர்தோன்றியவள் நான்

எனில்

என் கன்னித்தன்மையை முழுமையாய் சுவைக்க நான் தேடிக் கொண்டிருக்கும் திறன்மிகு ஆண்மகன் நீ தான்

நான் உன் எந்தையெனில், என் வித்திலிருந்து தோன்றிய மகவை நான் புணர்தல் என்பது அறவொழுக்கதிற்கெதிரானது

உள்ளங்கால் உராய்வுக் கொள்ளும் நிலத்தில் மட்டுமே அதிகார மய்யமென்பது ஒற்றைப் புள்ளியில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும். அந்த ஒற்றைப்புள்ளி மய்யம் மூழ்கிப்போகும் இந்நீர்நிலையில் நீ மூழ்காதிருக்க வேண்டுமெனில் உன்னுடலே உராய்வுக் கொள்ளும்படிக்கு உன் அதிகார மையம் என்பது ஒற்றைப் புள்ளியில் குவியாது, பரவலாய் விரிந்திருந்தால் மட்டுமே சாத்தியம். இங்கே ஆண் பெண் என்கிற பேதம் மட்டுமே உண்டு. ஆணும் பெண்ணும் இணையத்தான் இவ்வுலகு.”

இல்லை நீ என்ன சொன்னாலும் என் மனம் ஏற்றுக் கொள்ளாது. நீயென் மகள். உன்னைப் புணர்ந்து இனப்பெருக்கம் செய்வதைக் காட்டிலும் இந்நீலநிற நீரில் காலில் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிவிடலாம்

நீங்கள் வாழும் நிலத்தின் வாழ்க்கையைப் போலல்ல எங்கள் வாழ்க்கை. எங்கள் உலகுக்கு ஒவ்வாத உடலை நாங்கள் எங்களோடு வைத்துக் கொள்வதில்லை.”

நான் உயிரற்ற உடலாய் கரையொதுங்கினாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால், ஒருக்காலும் உன் கூற்றுக்கு நான் தலைவணங்கமாட்டேன்

நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய் என்று தெரியுமா

அரூபியாயிருந்து ரூபியானவளிடமிருந்து எள்ளலும் கோபமும் கலந்த நிலையில் வார்த்தைகள் வெளியேறியது தான் தாமதம், இளமஞ்சள் பூசியிருந்த முழு நிலவு கண்ணிலிருந்து மறைய, நட்சத்திர கூட்டங்களும் காணாமல் போக, வானம் சாம்பல் நிற மேகத்தால் கருமை பூசிக் கொண்டது.

நான் எங்கிருந்தாலும் நான் என்பது நான் தான்உரக்கக் கத்தினேன்.

நான் எனும் ஒற்றைப் புள்ளியில் மய்யம் கொள்ள உன்னால் முடியாது என் ஆதிரூபனே. உன்னுள்ளே எம் இனத்தவர்கள் உன்னைப் புணர்ந்து இனப்பெருக்கம் நிகழ்த்தியபடியே தான் இருக்கிறார்கள். நீயென்பது நான் எனும் ஒற்றைச் சொல்லில் தேங்கிவிட முடியாது. உன் உடலினுள் ஒரு நூறு உடல்கள் வெளிவர நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.” இடியாய் சிரித்தாள்

அவள் கூந்தல் சந்நதம் கொண்டு மேல் நோக்கி எழ, நான் அமர்ந்திருந்த கலம் விண்ணை நோக்கி எழுந்தது. கலத்தின் மேல் பற்றற்று இருந்த நான் வெளியில் தூக்கி விசப்பட்டேன். வானிலிருந்து மழைத் தாரகை நிலம் நோக்கி விழ, அம்மழைத் தாரகையின் கைப்பற்றி நான் வந்தக் கலத்தைப் பார்த்தேன். அது அத்தனை நேரமும் என்னோடு உறவாடிக் கொண்டிருந்தக் கன்னியான அந்த ரூபியின் இரு தொடைகளின் நடுவே விரிந்த யோனியைப் போல வாய் திறந்து நின்றிருந்தது

மழைத்துளிகளோடு சேர்ந்து நான் வந்து என் கலத்தினுள் விழ, அக்கலம் முழுவதுமாய் என்னை உள்வாங்கி மூடிக் கொண்டது. அடர் இருட்டினுள் நீந்தினேன். நீரினுள் எனக்கு மூச்சு முட்டவில்லை என்பது எனக்கு விந்தையாக இருந்தது

பவளப்பாறையின் மேல் சற்றுமுன் என்னோடு உறவாடிய கன்னி எனக்காகக் காத்திருந்தாள். அந்தக் கன்னியின் முகத்தில் இத்தனை நாளும் நான் தேடியலைந்து கொண்டிருக்கும் அவள் முகம்தனைப் பார்த்தேன். அந்தக் கன்னியின் முலையில் தொய்வு இல்லை. முலைக்காம்புகள் தடித்தோ நீண்டோயிருக்கவில்லை. குறிப்பாகத் தொப்பூழின் கீழே பிறப்புறுப்பின் மேலே எவ்விதமான தழும்புகளும் காணப்படவில்லை.

நண்பா தனக்குகந்தவர்களை என்ன விலை கொடுத்தேனும் இந்த மூதாய் தன்னோடு இணைத்துக் கொள்வாள் நண்பா” – என் பரதவ நண்பனின் குரல் அசரீரியாய் என் காதில் ஒலித்தது. இறுகப் பிணைத்திருந்த என் கால்களின் கீழே பிணைக்கப்பட்டிருந்த பாரம் என்னை ஆழத்துக்கு அழைத்துச் செல்ல, பவளப்பாறையின் மீதிருந்த அந்தக் கடற்கன்னி என்னை அருகி என் மூச்சுத் திணறும்படிக்கு முத்தமிட்டாள்.

 *******

lanzadelvasto@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button