’பெயரிடப்படாத உணர்வுகளுடன்…’ – சுரேஷ் மான்யாவின் ‘கல்நாகம்’ வாசிப்பு அனுபவம்
அபிநயா ஸ்ரீகாந்த்
ஒன்பது கதைகள் அடங்கிய சுரேஷ் மான்யாவின் “கல்நாகம்” சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் பெயரிடப்படாத உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் தூண்டிச்செல்கின்றன. தேவையற்ற தொந்தரவுகளையும், பாலியல் சீண்டல்களையும் தவிர்க்கும் எண்ணங்களே ஒரு பெண் வலிந்து திணித்துக்கொள்கின்ற முகம்சுளிக்கும் அரிதாரங்களுக்கும், புறக்கணிக்கும் ஒப்பனைக்குப் பின்னான காரணம் என்பதை கல்நாகம் கதையின் மல்லிகா அக்கா அநாயாசமாக உணர்த்திச்செல்கின்றாள்.
“அந்த நேரத்தில் அவள் அழுக்கு நைட்டியில் அடிக்கடி மூக்கைச் சிந்தி துடைத்துக்கொள்வதையும் இடது உள்ளங்கையால் கீழிருந்து மேலாக மூக்கை அழுத்தித் தேய்ப்பதையும் கண்ட அவர்கள் அசூசையாய்த் தமது முகக்குறிப்பைக் காட்டி விட்டு மலை முகட்டின் பக்கம் திரும்பிக்கொண்டனர்.”
உடலின்பால் ஏற்படும் புணர்ச்சியைத் தாண்டி உள்ளத்தின்பால் ஏற்படும் புணர்ச்சிகளுக்கு இன்றளவும் பெயர் வைக்கப்படவில்லை. அதை புரிந்துகொள்ளவும் எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகின்றது. இணையர்களிடேயே எத்தனையோ முரண்கள் ஏற்பட்டாலும் சமூகம், குடும்ப கட்டமைப்பு, குழந்தைகள் போன்ற வாழ்வியல் முறைகள் அவர்களை விலகவிடாமல் கட்டி இறுக்கிப்பிடித்து வைத்து இருக்கின்றன. தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வேளையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும் என்பதை ‘சித்திமா’ வில் வரும் சித்தியின் செயல்பாடுகள் முன்னிறுத்துகின்றன. எதிர்பாலினத்தவரிடம் காண்பிக்கும் இணையற்ற அன்பையும் காதலையும் ‘நீல் என்றால் நிலா’வில் வரும் நிலாவிடம் கொடுக்கத் தயாராக முடிகின்றது. அவளும் நம் இரக்கத்தை அல்லாமல் பரிவையே சம்பாதித்துச் செல்கின்றாள். “உடல் இயங்கும் பொழுதும் மனது இயங்கும் என்பதைக் கண்டடைந்தவர்கள் காமத்திலிருந்து வெளியேறி எங்கோ பிறக்கிறார்கள்”
நம் பிரியத்துக்குள்ளான அத்தனை அக்காக்களின் சாயலையும் வெப்பாலை அக்காவிடம் உணர முடிகின்றது. அன்புக்குரியவர்களின் நேசத்தை உணர்ந்து கொள்வதற்காகவே நமக்கு ஏதும் உபாதைகள் வரட்டும் என்ற எண்ணம் வரமா? சாபமா ? என்ற வரையரைக்க முடியவில்லை.
“காசத்திற்கு மருந்து சாப்பிடும் போதெல்லாம் அம்மா அவருடைய நெஞ்சு முடிகள் மீது கை வைத்து இதமாக நீவி விடுவாள். அதற்காகவாவது அந்த உயிர் அவரிடத்தில் தங்கியிருக்கலாம்”.
ஏதோ ஏதோ வசதிகளுக்காக ஏங்கித்தவிப்பவர்களின் நடுவே அடிப்படை வசதிக்காக பரிதவிக்கும் சரோஜாக்கள் நம்மைச்சுற்றி இருக்கின்றார்கள் என்பதை உணரும் போது படபடப்பு அதிகரித்து விடுகின்றது. நகைச்சுவை நடை வெளிப்பூச்சாக இருந்தாலும் அதன் மையச்சரடு ஒரு பெண்ணின் வலியும் வேதனையுமாகவே விரிகின்றது.
“வெளிய இருக்கும்போது பாம்புபூச்சி ஏதும் வந்தால் கூட பொறுத்து எந்திரிப்பவள், தூரத்தில் ஆண்கள் யாராவது வந்தால் படக்கென எழுந்துவிடுவாள்”
நிலத்தினுடனான இணக்கம் பகையையும் கூட்டி வருவது தவிர்க்க முடியாத முரணாகவே தெரிகின்றது. ‘ஆகாயத்தாமரை’ யில் வருவது போன்று எத்தனையோ தாமரைகள் நம்மை ஈர்க்கின்றன. ஒருவரின் மீதுள்ள ஆழ்ந்த காதலால், நேசிக்கும் பலரையும் தவிக்க விட்டுச்செல்லும் தாமரைகள் இரணங்களை மட்டுமே பரிசளித்துச் செல்பவர்களாக இருக்கின்றன. அனைத்து சிறுகதைகளிலும் மரணமோ, ஒருவரின் இல்லாமையோ ஒரு முடிவாக அல்லாமல் தொடக்கமாக ஒரு விதையை விதைத்துச் செல்கின்றது.
யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் – 104
விலை – 120