இறந்தவனின் ஆடைகள் என்னவாகின்றன ?
****************************** ******************************
இறந்தவனின்
ஆடைகள்
என்னவாகின்றன ?
பதில் வேண்டாத
கேள்வியோடு
மௌனிக்கும்
காலத்தை
தாங்கி பிடிக்கின்றன….
ஸ்பரிஸங்களாலும்
அணைத்தல்களாலும்
மூச்சு விட்டுக்
கொண்டிருக்கின்றன….
ஒவ்வொரு ஆடையிலும்
அவன்
அணிந்த போதிருந்த
வெளிப்பாடு
தேங்கி நிற்கின்றன…..
பாதுகாக்கப்படும்
பொருள்களோடு
பிரத்யேக கவனம்
பெறும் ஆடைகளில்
நெய்யப்பட்டுக் கொண்டே
இருக்கிறது
இறந்தவனுக்கும் நமக்குமான
உறவு
எறிதலிலும் எரிதலிலும்
அல்லாமல்
அணிதலிலும் அழித்தலிலும்
அல்லாமல்
இறந்தவனை சுமந்தபடியே
வீட்டின் ஒரு மூலையில்
வாழ்த்து கொண்டிருக்கும்
ஆடைகளின்
மிச்ச வாழ்க்கையில்
என்னவாகிறான்
இறந்தவன்…..?
எவனோ ஒருவன்
**************************
அவர்களுக்கு அப்படித்தான் தெரியும்
ஒளிந்து கொண்டே முன்னேறுவார்கள்
திடும்மென எடுத்து வீசுவார்கள்
எங்கிருந்து எது வரும் என்று தெரியாது
கிசு கிசுத்துக் கொள்வார்கள்
ஆய்தம் நிறைத்து வைத்திருக்கிறார்கள்
புகை மூடிய பகீர் காட்சிகள் ஏராளம்
தலை கீழ் நகர்வுகள் சாத்தியம்
ஈவு இரக்கமின்றி எறும்புக் கூட்டத்தை மிதித்து
நடப்பார்கள்
போதனை நிறைந்த உலகம் அது
தாடிகளும் மீசைகளும் கலந்து தான்
இருப்பார்கள்
கவிதைக்கு பஞ்சமே இல்லை.
கால் வழியும் ரத்த பிசு பிசுப்புகள்
கைக் குட்டையால் துடைத்தெறிந்தபடியே
வீர வசனம் பேசுவார்கள்
நிமிடத்தில் மூச்சடைத்து சாவும்
வெற்றுயிரைக் கொல்லும்
யாத்திரையை நாள் முழுக்க இரவு முழுக்க
காலம் முழுக்க செய்து கொண்டிருப்பார்கள்
இது போக தப்பித்தவறி
அக் கூட்டத்தில் ஒருவன் இப்படி எதையாவது
எழுதிக் கொண்டிருப்பான்
எவன் கூட்டத்திலும் ஒருவன் தப்பும் தவறுமாக
எதையாவது படித்துக் கொண்டிருப்பான்
இருந்தும் அடுத்த வேலை பசிக்கு ஒரு தோட்டா
தேவைப் படுகிறது என்று
படிக்கவோ எழுதவோ தெரியாத
எவனோ ஒருவன் ஏதாவது ஒரு கூட்டத்தில்
பேசிக் கொண்டிருப்பான்….!
\\இறந்தவனை சுமந்தபடியே வீட்டின் ஒரு மூலையில் வாழ்த்து கொண்டிருக்கும் ஆடைகளின் மிச்ச வாழ்க்கையில் என்னவாகிறான் இறந்தவன்…..?\\
மனம் தொட்ட கவிதை.