![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/09/Polish_20200906_183420517-780x405.jpg)
நாட்கள்
மேசையில் பரப்பிக் கிடக்கின்றன
எனது எதிர்கால நாட்கள்
அவைகளில் எனதுக்குப் பிடித்தமான
நாட்களை மாத்திரம் தெரிவு செய்தேன்
மீதியாய் இன்னும் சில நாட்கள்
இருந்தன
அந்த நாட்களில்
ஒன்றைத் தெரிவு செய்தேன்
சிறியதும் பெரியதுமாக
மழை பொழிந்து கொண்டிருந்தது.
வீடுகளோ மனிதர்களோ அற்ற நகரமது
நான் மட்டும் எப்படி வசிப்பது
எனவே,
நாளின் இரண்டாம் பகுதிக்குள் செல்கிறேன்
தீராப் பெரும் வெயில்
உயர்ந்த கட்டிடங்களும் மனிதர்களும்
வசித்துக் கொண்டிருக்கிறார்கள்
யாரோ ஒருவனுடன் மது அருந்துகிறேன்
நகருக்குள்
துப்பாக்கி ஏந்தியவர்கள்
வருகிறார்கள்
நான் வசித்த நகரத்தை அவர்கள் கைப்பற்றுகிறார்கள்
மீதமிருக்கும் வரிகளில்
எங்கள் நிலத்தை மீட்டுத்தர தேவதூதன் வருகிறார்.
*** *** *** ***
காரணமில்லாமல் தனித்துவிடப்பட்ட
ஒரு காற்று
மௌனமாய் என் தெருவில் வீசியது.
காற்றைச் சந்தித்த எனக்கு
புதிய அனுபவமாய்
பல நூறு கதைகளை அது உரையாடியது.
அதன் உரையாடலில்
நீண்டு மூழ்கிப் போனேன்
காற்று சந்தித்த மனிதர்கள்
ஒரு கடிநாயைப் போலவும்
ஒரு கறுப்பு நிற பூனையைப் போலவும்
அப்போது கற்பனையில்
உருப்பெற்று
வள் வள் என்றும்
மியாவ் மியாவென்றும் எனக்குள் வந்து போனார்கள்.
இந்த மனிதர்களை
தேநீர் கடைகளிலும்
அலுவலகங்களிலும் நான் சந்தித்திருக்கிறேன்
ஆம்,
இந்த மனிதர்கள்
விலைக்கு வாங்காமல்
மாமிசத்தைத் தின்று குருதியைப் பருகுவார்கள்
அந்த மாமிசம் மற்றும் குருதி யாருடையதாகவேனும் இருந்துவிட்டுப் போகலாம்.
காற்றின் உரையாடலை
நானும் அப்படியே நம்பினேன்
பின் காற்று பலமாக வீசியது
தெருவில் கிடந்த குப்பைக் கூளங்கள்
காரணமில்லாமல் என் முகதில் அறைந்தன.
*** *** *** *** *** ***
காலத்தின் மீது சத்தியமாக
நான் படித்துக் கொண்டிருக்கும்
சொற்கள் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டு செல்கினறன
தேநீர்க் கடையில்
செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருக்கும் போதும்
பேருந்துப் பயணமொன்றில்
ஜன்னல் ஓரத்திலிருந்தபடி
நாவல் ஒன்றைப் படிக்க முன் வரும்போதும்
நூலகத்தில் ஆனந்த விகடனை
பக்கம் பக்கமாகப் படிக்கும் போதும்
அதில் வசித்திருந்த
சொற்கள் அழிந்து கொண்டு செல்கின்றன
இந்தனைக்கும் வாசகன் யோசிக்கத் தேவையில்லை
வயது ஐம்பதுகளைக் கடந்துவிட்டது
எனது கண்களில்தான் எத்தனை உரு மாற்றங்கள்
கடைசிவரை சொற்கள்
அந்தந்த இடத்தில்தான் வசிக்கின்றன.