1.
உறுதி செய்யப்பட்ட
காலவரையறைக்குள்
உபரியாய் ஒவ்வொரு நாளும்
உதிர்ந்தவைகளும்
உதிரப்போகிறவைகளும்
கால ஒப்பந்தத்தில்…
விதைத்தவனே
அறுக்க வேண்டிய
விதியின் கட்டுகளில்
முதலும் முடிவும்
தெரியாமல்
கால் தேய கடப்பவைகளும்
மயானத்துக்கும்
பிணவறைக்கும் இடையே
அல்லாடும் மனிதமும்…
கண்டும் காணாமல்
கடந்து போகின்றன
கள்ள மௌனங்கள்….
*****************
2.
வரையறுக்கப் பட்டவை
நெகிழ்வதும் தளர்வதும்
கால வழு ..
கோடுகளைத் தாண்டாத
விளையாட்டில்
அவ்வப்போது
வழுவமைதி…..
புதிது புதிதாய்
வட்டங்கள் வரையப்படுகையில்
உள்ளேயும்
வெளியேயும்
பேரிரைச்சல்….
பிணைத்த சங்கிலியோடு
கானுலா போகிறது
கரிணி..,
************