கவிதைகள் – ச. மோகனப்பிரியா
கொரோனாவின் நீளும் இரவுகள்!
தேர்ந்த பாதைகளில்
மிதமான வேகத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது
ஒரு பெரும் துயர்.
நேரடி மோதல்களை
கை விட்ட பொழுதில்
மிக சாமர்த்தியமாக
இயல்பு வாழ்வில்
புழங்கிச் சூழ்ந்து வீதிகளில்
மரணத்தின் மனுவினை
எழுதித் தீர்த்தது.
அனைவரின்
நெஞ்சுக் கூட்டுக்குள்
கரிச்சான் குருவிகளின் கூடென
தன்னைப் பரப்பி
வாதையில் வதைத்து
தன்னிலை முன்னிலையாக்கியது..
ஒவ்வொரு இரவிலும்
எண்ணிக்கைகளைக் கண்டு
பதறத் துவங்கியிருந்த மக்களை
எங்கும் நிறைந்திருந்து
வெறும் காற்றில் பரிகசித்தது.
விடாது சொல்லும்
பொய்க்கூற்றுகளை
இரண்டே நாளில்
உலகறியச் செய்து
அதிபர்களைத் திணறச் செய்தது.
மரணத்தின் உலகிற்கு
நெருங்கிச் செல்லும் ஒவ்வொரு
நொடியிலும் பெரும் கூற்றுவனென
தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது
ஒவ்வொரு நாட்டின்
ஒலிவாங்கியின் முன்பும்!
************
பசித்த வைரஸ் இரவுகள்..!
மனித உடல்களுக்கான
இடைவெளிகளை அரசு
வரைகோடிட்ட இடத்தில்
நாங்கள் நகரப் பழகியிருந்தோம்..
அத்தியாவசியங்களை வாங்க
வெளியேறுகையில்
அன்றுதான் பிறந்த
கண் விழிக்காத
பூனைக்குட்டிகளுக்கு
மடிகொடுத்துக் கொண்டிருந்தது
பசித்த தாய்ப்பூனை..
அதன் கண்களில் ஒளிரும்
ஏக்கங்களை ஒத்திருந்தது
அழுக்கேறிய உடையோடு
முன் வரிசையில் நின்று
தொண்டூழியரிடமிருந்து கையேந்தும்
ஒருவனின் பசி!
மாத தவணைகளில்
பொருட்கள் வாங்கி நிற்போரின்
கால்களை உரசும் தாய்ப்பூனைக்கு
யாரேனும் ஒருவரின்
கணக்கில்
கால் படி பாலூற்ற
நிறைந்து குளிர்கிறது
ஒவ்வொரு கொரோனா இரவும்..!
************
இருளின் அச்சமூட்டும் அருகாமை!
எந்த ஒரு பயமுமற்று
மின் தூக்கியினுள் செல்லமுடிவதில்லை தான்.
பொத்தான்களைத் தொடும் நொடியில்
உடலில் மஞ்சள் பூத்த நுண்ணெதிரிகள் படரும்
அதீத காட்சிகளை மனம் ஓடவிடுகின்றது.
படிகளைப் பயன்படுத்தும்
இக்கட்டான காலகட்டத்தில்
இதயத்துக்கு நல்லதென்று
ஆறுதல் உரைக்கிறது உள்ளிருக்கும்
குரல்…
யாரேனும் கமறினால்
இரும்புப்பொடி சூழ் காகிதத்தினடி
காந்தத் துண்டினால்
வெடவெடத்து நிற்கும்
கருப்புத் துகள்களென மனிதத் தலைகள்
விலகி நின்று அசூயையைப்
பரப்புகின்றனர்.
மூன்று நாய்களைக் கொண்டிருக்கும்
தளத்தில் குடியிருப்பதென்பதும் அதில்
ஒரு வீட்டின் இரு அழுக்குக் கருநாய்கள்
குளித்து மாதங்களிருக்குமென்பதும்
கொரானாவுக்குத் தெரியாமல்
இருந்தால் நலமென
ஒவ்வொரு இருளிலும்
வேண்டிக் கொண்டிருக்கிறாள்
எழுபதுகளைத் தொடும்
எதிர்வீட்டு முதியவளொருத்தி!
************