இந்த முற்பகல் வெயிலில்
அப்பேரிளம் பெண்
நிறம் வெளிறிய
வாதாம் பூக்களைப் போல
பிரகாசிக்கிறாள்.
அந்நிழற்குடை
சற்றே சரிந்திருக்கிறது
முதிர்மரத்தில்
இற்று விழ காத்திருக்கிறது
கிளையொன்று.
அழுகிய பழங்களை அவன்
ஒவ்வொன்றாய் வீசீக்கொண்டிருக்கிறான்.
கால்பந்தாட்டம்
முடிவுற இன்னும் சில உதைகள்
மிச்சமிருக்கிறது.
எல்லோரும் வெளியேறுகிறார்கள்.
காமத்தை தனிமையில் வைத்தாயிற்று,
எப்படியும் இன்று
நூறை தொட்டுவிடும் போலிருக்கிறது
வெயில்.
000
பல்லாயிரம் ஆண்டின் மேகம் அது
முதல் முறையாக தாழக்குவிகிறது
ஒருபோதும் மழையாகியிரா அம்மேகம்
வறண்ட பாறையின் நிழலை
அப்போதுதான் தரிசிக்கிறது
நிசப்தத்தில் உறைந்திருக்கும்
வெம்மையினூடாக வெயிலை முத்தமிடுகிறது
பாறை இடுக்குகளெங்கும் காதல் பற்றுகிறது
தவளைகள் வெளியேறி நடுங்குகின்றன
பாறைகளில் நிகழும் சலக் சலக் சப்தங்கள்
மேகத்தின் காதுகளுக்கு நழுவுகிறது
கருகத் தொடங்கியிருக்கும்
புல்லின் சிறு நுனியில்
வியர்வைச் சொட்டுச் சொட்டாய் இறங்குகிறது
அந்த வெங்குருவி உயரப் பறக்கிறது
அவன் ஆசுவாசமாய் வந்தமர்கிறான்
மேகம் பைய இளகி மழையாகிறது
இருவருமாய் நனைகிறார்கள்
சலக் சலக்… சலக் சலக்…
மேகம் நழுவியபடியே இருக்கிறது
000
சிவப்பு கொடி அசையும்
நிறுத்தத்தில்
இருக்கிறேன்
பச்சைக் கொடி அசைத்து
நகர்த்துகிற இடத்தில் நீ,
காலம் ஒரு கைகாட்டி போல
நகர்ந்தபடியே இருக்கிறது
சமதளமற்ற பாதைகளில்
பயணிக்க கூடியவனாகவே இருக்கிறேன்
காலத்தின் ஒரு துருவத்திலிருந்து
இன்னொரு துருவத்திற்கும்
வனத்திலிருந்து மலையுச்சிக்கும்
சிகரத்திலிருந்து பள்ளத்தாக்கிற்கும்
பாய்கிறவனாகவும்
எரிமலைகள் வழியாக நடந்து
நீரூற்றுகளை அடைகிறவனாவும்
இருக்கிறேன்
பூங்கொத்துக்களை பரிசளிக்கிற நான் தான்
பல சமயங்களில்
புல்வெட்டும் கத்திகளையும்
பரிசளித்து விடுகிறேன்
கனிந்த ஸ்ட்ராபெரி
பழங்களைப் போல
அத்தனை இனிப்பானதல்ல
என் இருப்பு.