விக்டோரியாவை வட்டமிடுகின்றன
பயணக்கனவின் ஈசல்கள்
தோற்றுப்போகாத காலமொன்றின்
சுமாரான முகில்மழையில்
ஜி எம் ரி தன்னை நீட்டுகிறது வெதுவெதுப்பான தேனீர் மிடறின்
உதடு குவிப்பில்
களையப்பட்டது விவாதம்
நாளிதழ்களில் துண்டங்களாயிருந்த சொல்லொன்றில்
ருசிகரமாகச் சொல்லாகிக் கொண்டிருந்தாய்
வீசும் மொழியில் ஈரம் படர
வழிப்பயமின்றி கடந்து கொண்டிருந்தது பெயர் தெரியாத ஒரு பகல்
உருகி உருகி ஓயும் மெழுகுவர்த்தியாய் இறுதியில்
சிலுவைப்பாதை ஒன்றை
உலர்த்தி நிறுவினேன்
தேடியெடுத்த நாட்குறிப்பில்
மலர்ந்த முகத்துடன்
மழையை ரசித்தவாறு உட்கார்ந்திருந்தாய்
நகரும் பஸ்ஸின் முன்னிருக்கையில்
மெல்லிய ரகசியமொன்றில்
கனிந்திருந்தது அச்சொல்
நீயேன் கலங்கினாய் கார்மேகா
000
அல்லி முளைத்திருக்கும் பாறை நீ
வழுவழுப்பான தடம் தெரியாது
வனாந்தரமெங்கும்
அலைய வேண்டாமென
இந்த மலைக்குள் ஓர் அம்புக்குறியிட்டு
வீசும் வாசத்தோடு காத்திருக்கிறேன்
கிழிசல்கள் மேய
சர்ப்ப நாக்குகளோடு
மஞ்சள் மஞ்சளாய் அசைகையில்
மலர்த்திக்கொண்டே இருக்கும் மூக்குத்திப்பூண்டுகளை
களைந்து வாழ்வது எப்படிச்சொல்
திகட்டச் செரிக்காத வார்த்தைகளின்
பிரத்தியேகமான மொழியின் களையில்
பசுஞ்சாணி பூமி பரப்ப
தரையோடு தரையாக
ஊர்ந்து செல்லும் இக்கணங்களை
நிலா வெளிச்சத்திலேனும்
பார்க்கவில்லையா கார்மேகா
000
மிகக் கிறுக்குத்தனமான காலையில்
இன்னும் தூங்கிக் கொண்டிருந்த தவிட்டுக்குருவியின்
நீலம் அப்பிய இறகில்
உபரி வாசம்
சற்று உப்பியபடி இருக்கும்
குருதித்தாங்கியை
ஒரே ராத்திரியில் பூசிய பிரியதைலத்தில்
சேலைத்தலைப்பில்
கொய்து வைத்திருக்கிறேன்
முதல் கீற்றில் தெளியும்
விம்பத்தின் நெற்றி நடுவே
கருவுற்றிருக்கும்
செவ்விதழின் ஒற்றைக்காம்பில்
வெள்ளித்தளிராய்
துளிர்த்திருப்பது நீயா கார்மேகா
000
மனக்கூடலில் பிசைவு இல்லை
என்றாலும் நசிகிறது உயிர்
அதன் உச்சியில் இறங்கி
படிக்கட்டில் சறுக்கி விளையாடுகிறாய்
எதுவுமறியா நீலவிளிம்புகள்
மூர்ச்சையிழக்கின்றன
முளைத்திருக்கும் குறுக்குவழியில்
சொல் நிகழ்த்தாப் பதட்டம் யுகங்களாய் பிரிகிறது
கருவேலங்காடாயிருந்த சம்பவங்களை வாலிபமண் துளைத்துக்கொண்டிருக்கிறது
சதுக்கமாய் இருந்தால் என்ன
குதிரைகளின் குளம்படிகளாய்
தடதடக்கும் நினைவுகளை
லாடம் கட்டி இழுக்கிறாய்
கணுக்கால் நனைய
மண்ணைத்தோண்டி கடல் செய்கிறேன்
கடைசியில் எஞ்சியிருப்பது
முற்றத்தில் பெய்த மழையென
நதியின் சமீபம் அல்லவா கார்மேகா.