
திறமை இருக்கும் பறவைகள்
பிடித்துக் கொள்கின்றன
வேகம் இருக்கும் மீன்கள்
இரையை விழுங்கி விடுகின்றன
பொதுவானதுதான் குளம்
நான் மட்டும் தூண்டிலிடாமல்
ஒதுங்கி நிற்கிறேன்
யாரோ எடுத்துக் கொண்டார்களாம்
குத்தகைக்கு.
*
என்னுடைய ஒரு சட்டைப் பையிலிருந்து
மற்றொரு சட்டைப் பைக்கு
தினமும் மாற்றிக் கொண்டிருப்பதைத் தவிர
எனக்கும் என் சட்டைப் பைக்கும்
வேறு எதுவும் தெரியாது
சட்டைப் பைக்குள் மடிந்து கிடக்கும்
காகிதங்களைப் பற்றி…
காகிதங்களை விடுங்கள்
இப்படித்தான் நான்
எனது நாட்களையே
மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
*
பாறையொன்று
தனக்குள் இருக்கும்
சிற்பத்தைக் கண்டுகொள்வதும்
சிற்பமொன்று
தான் ஒரு பாறை
என்பதை நினைவில் கொள்வதும்
இரு வேறு வழிகளில்
சென்று அடைந்திடும்
ஒரே ஞானம்.
*
புவியீர்ப்புக்கும் காற்றின் பிடிப்பிற்கும் இடையில்
என்ன செய்வதென்று தெரியாமல்
அப்படியே நிற்கிறது
குழாயின் விளிம்பில் ஒரு சொட்டு நீர்
உறவுக்கும் உணர்வுக்கும் இடையில்
கண்ணோடு நிறுத்திக் கொண்ட
கண்ணீரைப் போன்று.
*