இணைய இதழ்இணைய இதழ் 105

கிருத்திகா தாஸ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அவள்
*

ஒளியென்று தேடிச் சென்று அவள் கண்டடைந்த இருள் இதற்கு முன்பு அவளுக்குப் பழக்கப்பட்டதாய் இல்லை

இரண்டு புள்ளிகளுக்கும் நீண்ட ஒரு தூரம் இல்லை

கடந்து போகப் போக அடையாளங்கள் மறைந்து போகலாம் அழிந்து விடுவதில்லை

அச்சத்தின் கண்கள் அவளிடம் சொல்லும் பொய்க்குள் எத்தனை நீள தூரம் உள்நோக்கிப் பயணித்தாலும் அதன் மறைந்திருக்கும் பகுதியை அவளால் கண்டுபிடித்து விட இயலாது

அறிமுகம் அற்றதோர் முகம் அவளுக்குத் தந்து சென்ற செய்தியினை எதிர்பார்த்து அவள் எத்தனை யுகங்களாய் காத்திருந்திருக்கக் கூடும்?

இயல்பென மாறிப் போன இயக்கங்களுக்கு அவள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறாள்

திரும்பிப் பார்த்தல் சாத்தியமற்ற ஒன்று என அவள் உணரும் பொழுதில் இன்னும் ஒரு பழக்கப்படுத்தலுக்கு தயார்படுத்தப்படுகிறாள்

நள்ளிருளுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகளுக்கு ரகசியங்கள் என்ற பூச்சுகள் தேவையில்லை.

……….

அவள்
*

காளான் குடைக்குக் கீழ் ஒட்டி இருக்கும் சிறு தூசுக்குள் ஒளிந்திருக்கும் சிறு துகள் அவள்

பறவைகளுக்குப் பெயரிட்டு அழைப்பவள் அவள்

கவனச் சிதறல்களுக்கும் கவனக் குவியல்களுக்கும் இடையே அங்கும் இங்கும் போய்வரும் எண்ணங்களை வேடிக்கை பார்த்து நீண்ட நேரம் அமர்ந்திருப்பவள் அவள்

அவளை அவள் என்று பார்ப்பதை விடவும் அவளை வேறு ஒருத்தியாய்ப் பார்ப்பது அவளுக்கு வசதியாக இருக்கிறது

சின்னஞ்சிறு செடிகளுக்கு அவளை அடையாளம் தெரியும்

தேவதைக் கதைகளில் வரும் தேவததைகளுக்கென்று சிறு சிறு வீடு கட்டி வைத்திருப்பவள் அவள்

அவளைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை அல்லது அவளைப் பற்றிச் சொல்ல எல்லாமும் உண்டு

அவளது இன்றைக்கும் நேற்றைக்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இரண்டுமே கடந்து போய்விடும் என்பதுதான்

சின்னஞ்சிறு மழைத்துளிகளுள் தென்படும் ஓவியங்களைக் கண்டு சந்தோஷப்படுபவள் அவள்

ம்ம்…பெரிய பெரிய மழைத்துளிகளுக்கெனக் காத்திருப்பவள் அவள்

தன் குழந்தைப் பருவத்துக்குள்ளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்

பொம்மைக் கதைகள் ஏராளம் உண்டு அவளிடம்..ம்ம்… பொம்மைகளும் கொஞ்சம் உண்டு

குழந்தைப் பருவத்தில் பானிபூரி சாப்பிடும்போது பல் விழுந்த நாள் இன்னும் நினைவில் உண்டு அவளுக்கு

ம்ம்…

நீண்ட நெடிய பாதைகளுக்குப் பழகி இருக்கவில்லை அவள்.

….

அவள்
*

அவள் எதிர்பார்த்திருக்கவில்லை
கண்களுக்கு இன்னும் பழக்கப்பட்டிராத கனவுகளை
என்றோ அந்நியப்பட்டுப் போய் விட்ட நினைவுகளின் உருவங்களை
அந்தப் பொய்க்கான காரணங்களை
இறுதியாகக் வழங்கப்பட்ட மூன்று ஆசைகளை
இன்னும் நிசப்தமாய் நினைவில் இருக்கும் ரகசியங்களை
அந்தக் கதையின் முடிவினை
மீண்டும் முதலில் இருந்து துவங்கப் போகும் நாளினை
மீண்டும் கிடைத்து மீண்டும் தொலைந்ததை
அன்றைய இருள் கூட்டிச் சென்ற இடத்தை
மீண்டும் மீண்டும் உருவான முதல் சந்திப்பை
என்றோ சந்தித்து மறந்து போன கொடூரங்களை
அந்தக் கடைசி மன்னிப்பை
நிராசை ஒன்று உருவான முதல் நொடியை
ம்ம்…
அந்த மரணப் படுக்கையின் உண்மையை
அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.

  • kritikakavithaikal@gmail.com
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button