சன்னல் வைக்கப்படாமல் இருந்த கிழக்குப் பார்த்த வீடு. தெற்குப் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் அப்பாவிற்கு மரக் கரிக்கொட்டை துண்டுகளை விடிந்ததும் கொடுத்துவிட வேண்டும். தனக்குத் தெரிந்த கணக்குகளை எழுதுவதற்கும், சமயத்தில் அம்மாவை வசவுச் சொற்களைக் கொண்டு திட்டுவதற்கும் கரிக்கொட்டைகளையே பயன்படுத்தினார். வேலைக்காட்டில் வெய்யிலுக்கான ஓய்வு நேரத்தில் கள்ளிமரத்தடியில் அமர்ந்துகொண்டு, இடது கெண்டைக்காலில் காட்டுக்குச்சிகளை வைத்து சிராய்த்து எண்களைப் போட்டுக் கணக்கு பார்த்துக்கொண்டிருந்த ஞபாகம் அப்பாவுக்கு இன்னும் போகவில்லை. வெய்யில் குறைந்ததும் கெண்டைக்காலில் போட்டக் கணக்குகளை அப்படியே விட்டுவிட்டு வேலையினைத் தொடங்கிவிடும் அப்பாவின் கால்களை, வியர்வை அவர் போட்டு வைத்திருந்த கணக்குகளை நனைத்து அழித்துவிடும். வேலை முடிந்தும் அவற்றை மீண்டும் பார்க்கும் அவர், மனக்கணக்கு போட்டுக்கொள்வார்.
அவர் கூட்டல் கணக்கு போட்ட விரைப்பான கைகளால் இரும்புக் கட்டிலைப் பற்றிக்கொண்டே எழுந்துகொள்ள ஆசைப்படுவார். எழுந்திருக்கும்போது இடுப்பு வெடவெடவென ஆடுவதில், கட்டிலெல்லாம் நடுங்கும். அப்பாவின் உடல் அவருக்கு புதிய கணக்கு போட்டு வைத்திருந்தது. ஒரு பக்கம் சாய்வாக இழுத்தபடி இருக்கும் அப்பாவின் வாயை மட்டும் அம்மா பார்த்துக்கொண்டே இருப்பாள். முடக்குவாதத்தில் வாய் கோணலாக மேல்பக்கம் இழுத்தபடி இருக்கும். கோணச் சிரிப்பு சிரிக்கும் அப்பா, “எனக்கு புள்ள சாமி மாதிரி பொறந்திருக்கு” என்று சொல்லுவார். நான்காவது படித்துக்கொண்டிந்த எனக்கு அம்மாவின் உடலில் சுருக்கங்கள் தோன்றியதாக நினைவில்லை. அம்மாவிடம் எதையாவது பேசிகொண்டே அப்பா என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பார். அருகில் என்னை அழைத்து தொடையில் அமர்ந்துகொள்ளச் சொல்லும் அப்பாவிடம், படுக்கை வாசனை கமழ்ந்து வரும். மூட முடியாமல் மேல்புறமாகத் தூக்கியபடியே இருக்கும் ஒற்றை இமை, அயர்ந்து தூங்குபோது கூட கண் திறந்தபடி அம்மாவைத் தேடுவதாகவே இருக்கும்.
“ஏப் புள்ளேய்… ஏய் புள்ளேய்…” என வலுவாக கூப்பிட்டபடியே இருப்பார்.
“ஏன்? என்னா? கூப்பாடு போட்டுக்கிட்டே இருக்குறே?”
அம்மா அருகில் போனதும், “இல்ல புள்ளே…இருக்குறியான்னு பாத்தேன்” என்பதாகச் சொல்லுவார்.
நடக்க முடியாத அப்பா, உபாதைக்காக எழுந்து செல்ல முடியாமல் வேதனையாக இருந்தது தெரிந்தது. படுக்கையிலேயே இரும்பு கட்டிலில் மலத்தினைக் கழித்து வைத்திருந்த அப்பாவின் மனதை, அவமானம் வெட்டி வெட்டி இழுத்தது. கழுத்து நெளிந்திருந்த தகர டப்பாவில் வாய் ததும்ப சிறுநீரைப் பிடித்து வைத்திருந்தார். அப்பாவுக்கு மனதிற்குள்ளாகவே அழுகை தொடங்கி விட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. வலது கையினை எடுத்து இடது கையினைப் பற்றி அவற்றைக் கீழே தள்ளிவிட்டார். தான் நன்றாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்கு அப்பாவிற்கு அதனைக் கட்டிலில் இருந்து கீழே மட்டுமே தள்ளிவிடத் தெரிந்திருந்தது. பார்ப்பதற்கு ரொணமாகத்தான் இருந்தது. ஆனால் அப்பாவோ, தான் எப்பொழுதும் விரும்பி அணியும் வெள்ளைச்சட்டை சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்தார். குற்றம் திரவமாய் அவரின் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
“எங்கப் பூட்டான்னுத் தெரியில”
அவரின் உதடுகள் கூடி நடுங்கி வைத்த ஒழுங்கற்ற வார்த்தைகள் அம்மாவினைத் திட்டுவதாகவே இருந்தன. தொண்டையினை அடிக்குரலெடுத்து செருமி வைத்தார். செருமி வைக்கும் சப்தம் தன் இயலாமையினை சூழலோடு சமப்படுத்தும் என்பதாக அவருடைய நினைப்பு. அப்பாவென்றாலும் மலம் அசுகைதான். விரல்களைக் கொண்டு மூக்கைப் பற்றிக்கொண்டால் அவர் கொண்டிருந்த குற்றத்தில் மேலும் உடைந்து போவார். தொண்டைக்குள்ளாகவே மூச்சினை சில நொடிகளுக்கு கட்டிக்கொண்டு, “என்னப்பா?” என்று கூப்பாடாகவே அருகில் போனதும்,
“அது ஒன்னுமில்லப் போ. இந்தா அவுத்திலியே ஒக்காரு. வெள்ளச்சட்டையாப் போட்டுருக்கே! அழுக்காயி போயிடும்”
அவசரம் காட்டிக்கொண்டே அப்பா பக்கத்தில் என்னை அண்ட விடவில்லை. அப்பாவுடனே இருக்கும் அம்மா அன்று வீட்டில் இல்லை. மலைக்காட்டுப் பக்கம் போயிருப்பாள். அப்பா எதுவும் பேசவில்லை. குனிந்தபடியே இருந்தார். கட்டிலில் இருந்து கால் தொங்கலாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. முழங்காலில் மட்டும் வீக்கம் உப்பிக்கொண்டிருந்தது. வேஷ்டி விலகிக்கிடந்த தொடையில் கண்ணீர் சத் சத் என விழுந்தது. முடங்கொண்டு படுத்துக்கொண்டிருக்கும் சாமி அழுவதாகவே இருந்தது.
தொடையின் மேற்பகுதியில் முழுவதும் விரிக்கப்படாமல் முன்பக்கமாய் மடங்கியிருந்த இரண்டு விரல்களை உள்ளங்கையால் தேய்த்துவிட்டுக்கொண்டே இருந்தார். அவை ஈஞ்சி பாயினைப்போல சுருண்டுகொண்டே வந்தது. மார்புக்கூடெல்லாம் பலவீனமாக சாம்பல் நிறத்தில் தேமல் படர்ந்து அழுக்காய் இருந்தது. பேச நினைத்தவரின் வாயில் வார்த்தைகள் வெளிவரவே இல்லை. பார்த்துக்கொண்டே இருந்தார்.
மலைக்காட்டுக்கு போய்விட்டு வந்திருந்த அம்மா, படுக்கையில் கைக்கால் முகவாய்கட்டை உடம்பெல்லாம் இலுப்பிக்கொண்டு கிடந்த அப்பாவைக் கண்டதும், மூலையில் உட்கார்ந்துகொண்டு தலையில் அடித்துக்கொண்டு உடைந்து அழுதாள். தலைமுடி அடுப்புச் சாம்பலாக பொடிப்பொடியாய் பறந்து அவள் கண்களில் சரிந்து விழுந்தது.
“நாந்தாங் இருப்புச்சட்டிக் குடுத்துட்டுப் போயிருக்குறனேங்! வந்துச்சின்னா அதுலப் போவாம இப்புடி கையிக் காலு ஒடம்பல்லாங் இலுப்பி வச்சிருக்கிருயே! அப்புடியா ஒனக்கு ஒன்னுந் தெரியாது! எத்தன நாளக்கித்தாங் பீய்யையும் சோத்தயிங் ஒன்னா சேத்து திங்கிறது. ஒன்ன வச்சிக்கிட்டு அழுவறத்துக்கு… காடு போயி சேந்துட்டாக் கூட ஒரே நாளையில அழுது முடிச்சிருவேங்… ஒனக்கு அள்ளிப்போடுன்னுமுன்னே ஆயாக்காரி என்ன பெத்துப் போட்டு வச்சிருக்ககாப் பாரு! மொளங்கையி வரைக்கிங் பெசஞ்சி திங்கற இந்த சோத்துக்குதாங், மாமன் வூட்டு சொந்தத்த வுட்டுறக்கூடாதுன்னு சொன்னாளா! பொட்டச்சிக்கிப் பொட்டச்சி இப்புடி ஒருப் பாவத்தப் பண்ணிப்புட்டியேடி! பாவி! நீயெல்லாங் நல்ல அமுசத்துக்கு போவமாட்டேடி! ” அம்மாவுக்கு ஆற்றாமை தாங்கவில்லை.
தலை கவிழ்ந்தபடி இருந்த அப்பா எதுவும் பேசவில்லை. மடங்கி இருந்த விரல்களை தொடையில் வைத்து விரித்தபடியே இருந்தார். முகத்தினைத் தூக்கிய அப்பாவின் கண்களில் தாரையாக தாவாய்க்கட்டை வரை கண்ணீர் கோடுகள் வழிந்திருந்தது. உடம்பெல்லாம் நடுக்கம் கொண்டு, அப்பாவுக்கு வாய் தழுதழுத்தது.
“இந்த ஒருக்கய்யி கொஞ்சங் மடக்கப் புடிக்க இருந்தாப் போதுங்! கவுத்த மாட்டிக்கிவேங்! அதுக்குகூட முடியில!”
முடங்கிக் கிடந்த கையை மற்றொரு கையினால் பற்றி இரும்புக் கட்டிலில் மோதி உடம்பு குலுங்க அடித்து அழுதார். மூக்கு வாயெல்லாம் கோழை ஒழுகியது. மோட்டுவலையையே ஏக்கமாய்ப் பார்த்துக்கொண்டே இருந்த அப்பாவுக்கு, உடலெல்லாம் குலுங்கிக் குலுங்கி பெரும் இருமலாக வந்தது. அல்லை எலும்புகள் புடைக்க மடங்கிக் கிடந்த கைகால்கள் நடுங்கி உதறல் கண்டது. அம்மா பெருங்குரலெடுத்து அழுதாள். வறட்டுப் பசியில் அழுதுகொண்டிருந்த குழந்தை முலைப்பால் அருந்தி கண்ணயரும் நேரம் மட்டுமே கழிந்திருக்கும். ஈயச்சட்டியினை கையில் எடுத்துக்கொண்டாள். கூட்டிப் பெருக்கி அள்ளிப்போடுவதற்குள் அம்மாவின் முழு உடம்பையும் ஈக்கள் மொய்த்துக்கொண்டன. முகத்தில் கொத்துக்கொத்தாய் அமர்ந்துகொண்டதும், முகம் அசுகைகொண்டு அரிப்பாய் இருந்தது. துடைப்பதற்குக் கூட முடியவில்லை. ’சூச்சூ…’ சத்தம் போட்டுக்கொண்டு தொடைத்துப் பெருக்கினாள்.
பின் வீடு வடக்குப் பக்கத் தொங்கல், கார்த்திகை அடைமழைக்கு இடிந்து விழுந்திருந்தது. அறைச் சுவற்றினை ஒட்டி தொங்கிகொண்டிருக்கும் எரவானத்திற்கும் மதவானை ஏரியில் வெட்டிவரப்பட்டிருந்த கவட்டையால் அம்மாதான் முட்டுக் கொடுத்திருந்தாள். இரண்டு ஈயக்குண்டான் நிறைய அம்மா வெண்ணீர் காய்ச்சி அப்பாவைக் குளிக்க வைப்பதற்கான ஏற்பாடாகின. அப்பாவின் பின் பக்கமாக இரண்டு கைகளாலும் நெஞ்சினைப் அம்மா பற்றிக்கொண்டதும், நான் அப்பாவின் கால்கள் இரண்டையும் பற்றிக்கொண்டேன். அவரின் கைகள் இரண்டும் தரையில் சிராய்த்தப்படியே வரும். வடக்கு பக்கம் தொங்கலில் தூக்கி வைத்ததும், நான் அவரின் பின்புறமாக நின்று தாங்கி பிடித்துக்கொண்டேன். அம்மா அப்பாவின் இடுப்பிலிருந்த துணி அனைத்தையும் உருவிப்போட்டாள். சாம்பல் பூத்திருந்த கண்களோடு அப்பா பேக்கு பேக்குவென இடிந்து விழுந்திருந்த சுவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்பாவுக்காக போடப்பட்டிருந்த மர நாற்காலி ஒரு பக்கம் கால் உடைந்திருந்த நிலையில், கற்களால்தான் நின்று கொண்டிருந்தது. மர நாற்காலியில் உட்காந்திருந்த அப்பாவின் உயரமும் எனது உயரமும் ஒரே மட்டத்தில் இருந்தது. அம்மாவால் அப்பாவை மர நாற்காலியில் தூக்கி வைத்து குளித்துவிட முடியாது. “ஒங்கப்பன தூக்க ஒருக்கை புடிப்பா” என்பாள் அம்மா. அப்பாவிற்கு உடம்பெல்லாம் சோப்பு போட்டுவிடப்பட்டதும், அப்பாவின் ஆண்குறிக்கும் புட்டத்திற்கும் அம்மா சோப்பு போட்டுத் தேய்த்துவிடுவாள். குனிந்து தரையினைப் பார்த்துக்கொண்டிருக்காத அவர், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். இயலாமையினை நேர்மையாக எப்படி காட்டுவது என்பது அப்பாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. வலது பக்கமாய் நின்றுகொண்டிருக்கும் அப்பாவின் கண்கள் சிவந்து கொட்டின. தண்ணீரோடு கலந்து போனாலும் அப்பாவின் அழுகையை என்னால் பார்க்க முடிந்தது. இருவரைப் பார்த்தும் அழுகை முட்டி முட்டி வரும். நானும் அழுவேன். அருகில் நின்று தலையோடு வாய் குமிழ்ந்திருந்த வென்னைப்பொவுனியில் தண்ணீரை மொண்டு ஊற்றும் அம்மாவும் அழுதாள்.
ரெட்டமலை சந்தில் பிளக்கப்பட்ட பாறையில் விழும் செக்கைகளில் அப்பா கல் அரவை மிஷினுக்கு சோளிங் உடைத்தவர். சுத்தியல் பிடித்த உள்ளங்கைகள் சோற்றுத்தாங்கடையில் இருந்து பெயர்க்கப்பட்ட கேழ்வரகு சோற்றின் நிறத்தில் இருக்கும். வேலை அலுப்பினை போக்கிக்கொள்வதற்கு கைகளில் எச்சிலைத் துப்பித் துப்பி தேய்த்துக்கொண்டு சோளிங் உடைப்பார். அம்மா குழந்தையின் கைகளாக இருந்த அவற்றை மலர்த்திக் கழுவினாள். புளியஞ்செறாக்குச்சிகளாக மென்மையாக ஊறிக்கிடந்தது.
மொட்டை அடிக்கப்பட்டு முகமெல்லாம் மழித்துவிடப்ட்டிருந்த அப்பாவின் கண்கள் அகண்டு விரிந்தன. அவர் வாயைப் பிளந்து எதையோ சொல்ல வந்தார். அவர் சொல்வதை அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை குறைப்பட்டுக்கொண்டார். கொட்டச்சீப்பின் அடிவயிறாக வீங்கி கிடக்கும் முழங்காலைப் பிடித்துக்கொண்டே,
“ இந்த முழங்கால் வலி சரியாயிட்டா தெனக்கிங் ஏரி வயக்காட்டுல போயி இந்த கன்னுக்குட்டியாச்சுங் காலாட வலச்சிக்கிட்டு, அஞ்சாறு பில்லு கொண்டாந்துருவேங். தென்னமரக்குடி தைலம் இருந்தா வாங்கிட்டு வா புள்ளே. வலி அதுக்குத்தாங் கேக்கும் ” என்பார்.
“சோறு போட்டுத் தரட்டுமா?”
“வேணாங்”
என்பதாக அப்பா தலையசைத்ததும், முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் அவரின் காதுக்குள் போய் விழுந்தது. இதைத் தவிர அப்பா வேறொன்றும் பேசவில்லை. அன்றைய இரவோடு அப்பா எழவே முடியாமல் படுக்கையாகிப் போனார். அம்மாவால் அல்லாட முடியவில்லை. பட்டி சானத்தையும் அள்ளிக்கொண்டு அப்பாவுக்கு சவர்ட்டனையும் செய்யமுடியவில்லை. முதுகு ஒடிந்து கூன் மிகுந்து போனாள். மேற்குப்பட்டியில் கட்டப்பட்டிருந்த கன்னுக்குட்டிக்கும், சினை பிடிக்காத பசுமாட்டுக்கும் வாய்க்கு வந்த விலையினைப் பேசி முடித்தாள். தலைக்கயிற்றை மாற்றாமலும், நெத்திச்சுட்டி முடியினையும் கூட அறுத்துவிடாமல் பட்டியிலிருந்தபடியே மூக்கரையானுக்கு கைமாற்றிவிட்டாள். இரவல் சாணத்தினை வாசல் தெளிக்க எடுக்கப் போகும்போது வரும் வசவுச் சொற்களோடும் அடித்துக்கொண்டு அழுவாள். அப்பா முடங்கிப் போனதில் இருந்து அம்மா எல்லா வகையான அன்றாடத்திற்கும் அழுகையோடுதான் கடக்க வேண்டியிருந்தது.
வேலிக்கருவைகள் நிறைந்து இருக்கும் இடிந்து கிடந்த வடக்குப் பக்க சுவற்றின் வழியாக பாம்புகள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் வந்து மேயும். அப்பா படுத்த படுக்கையாகிப் போனதில் கரிக்கோடுகளில் எதுவும் எழுத முடிவதில்லை. விளைந்த பாறையாக படுத்துக் கிடக்கும் அப்பாவின் நெஞ்சிக்கூட்டில் மூச்சு முட்டிக்கொண்டிருந்தது. அப்பாவிற்கு அண்டையாக இருக்கும் சுவற்றின் விரிசலில் புகுந்துகொள்ளும் பாம்பு, பிறகு எப்படி போகும் என்று தெரிவதில்லை. சமயங்களில் அப்பா இரும்புக் கட்டிலில் உதைத்துக்கொண்டே இருக்கும் சப்தம் கேட்டதும், அம்மா ஓடிப்போய் பார்ப்பாள். விளக்கு வெளிச்சத்தில் அம்மாவின் கண்களில் எப்பொழுதாவது அவை தென்படுவதுண்டு. இரவில் அப்பாவின் விரல்களின் மீது சுருண்டுகிடக்கும் பாம்பு அவரைத் தீண்டுவதில்லை. தெருவில் வந்து கத்துவாள். சுவற்றின் வெடிப்புகளில் அண்டிக்கொள்ளும். விளக்கினை எரியவிட்டுக்கொண்டு இரவெல்லாம் விழித்தபடி அப்பாவையும் இரும்புக்கட்டிலையும் பார்த்தபடியே இருப்பாள்.
“வூங்… ஊட்ட சுத்த பத்தமா வச்சிருந்தா… ஏம் பூச்சிப் பொட்டுல்லாங் வரப்போவுது! ஒன்னுக்கு ரெண்டுக்குங் ஒன்னு மண்ணாக் கெடந்தா இப்புடித்தாங் ஊட்டுக்குள்ள எல்லாம் வந்து சேரும்” அண்டையில் இருக்கும் ஓப்புடியாக்களின் சாடைப் பேச்சுகளுக்கு அம்மா காது கொடுக்கமாட்டாள். அப்பாவுடன் அல்லாடுவதே அவளுக்கு வாழ்க்கையாகிவிட்டது. பொழுது போய்விடும்.
பாறைவீட்டு மாமன்தான் ஓடி வருவார். தேடிப் பார்த்துவிட்டு கிடைக்கவில்லையென்றால், “ அது கெடந்துப் போவுது போ! அதுங்க இல்லாத எடத்துலதாங் நாம்ப இருக்குறமாக்குங்! போயி படுத்துக்கப் புள்ள! அது வூரிக்கிட்டே வேற எங்கியாச்சிங் மேச்சலுக்கு பூடும்” என சமாதானம் சொல்லிவிட்டுப் போவார்.
ஓயாமல் மூத்திர டப்பாவையும், ஈயச்சட்டியையும் எடுத்து அசந்துபோன அம்மாவுக்கு அயர்வாய் தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவின் முகத்தினைப் பார்ப்பதற்கு மட்டும் பிடித்திருந்தது. அப்பாவின் தூக்கம் மட்டும்தான் எந்த வேலையினையும் அவளுக்குத் தருவதில்லை. அம்மாவின் அன்றாடத்திற்கான ஓய்வு நேரமும் அதுதான். குளித்து முடித்த அப்பாவுக்கு உடலெல்லாம் பவுடர் போடப்பட்டதும்தான் அம்மாவுக்கு மலைக்காட்டுக்குப் போனதே ஞாபகத்திற்கு வந்தது. தகர டப்பாவில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வடக்குத் தொங்கலுக்குப் போன அம்மா அடித்துக்கொண்டு அழுதாள். புதிய குரலெடுத்து அம்மா அழுவதில்லை. அம்மாவின் அழுகை வாடிக்கையானதுதான்.
அப்பாவுக்கான வேலையினை முடித்துவிட்டு வாயில் வைக்கும் சோற்றுக் கவளம் அப்பாவின் ஈயச்சட்டியாய் குமட்டிக்கொண்டு வரும். தேகமெல்லாம் வீசும் மூத்திரவாடையில் அவளுக்கு தாகம் எடுப்பதில்லை. உடலில் இருந்து வெளியே சலசலத்து ஓடுவது உள்ளே பாய்வதாக தோன்றும்.
இரண்டு அந்திப்பொழுதாக மூச்சுக் கேறு கேறுவென மேலும் கீழுமாக இழுத்துக்கொண்டே கிடந்த அப்பா, திராட்சைப் பழத்தினை மென்று தின்றதாக படுத்தபடியே வாந்தி எடுத்தார். உடலெல்லாம் நனைத்துகொண்டதும் மூச்சு நின்று போனது. அப்பா மலம் கழித்து வைக்கும் இருப்புச்சட்டி தேய்ந்ததும், அதன் அடிப்பகுதியில் கசிய ஆரம்பித்த நாளொன்றில்தான் அதுவும் நிகழ்ந்திருந்தது. தாத்தா புதைக்கப்பட்டிருந்த குழிமேட்டினைத் தோண்டி, அவரின் மண்டை ஓடுகளையும் தொடை எலும்புகளையும் பொறுக்கி வைத்துவிட்டு அதே இடத்தில் அப்பாவின் உடலும் புதைக்கப்பட்டது.
முப்பதுக்கு அப்பாவின் குழிமேட்டின் கால்மாட்டில் காசி சொம்பு நிறைய பால் ஊற்றி, சூடம் பொருத்தி வைத்துவிட்டு வந்திருந்த அம்மா, அவரைச் சுற்றி ஈரம் கண்ட இடமெல்லாம் பச்சைச் முட்செடிகளை கொத்துக்கொத்தாய் வளர்த்து வைத்திருப்பதாகவும், இடுப்புப் பகுதியில் மட்டும் கொஞ்சம் சாமந்திப்பூக்களை மலர்த்தியிருப்பதாகவும் சொன்னாள்.
“தெனக்கிங் ஒனக்கு பீய்யையும், மூத்தரத்தையும் அள்ளிக்கிட்டு அழுவறத்துக்கு, செத்துட்டியின்னா ஓரே நாளையில அழுது முடிச்சிருவேங்” என்று இரும்புக்கட்டிலில் விரல்களைப் பற்றிக்கொண்டு சீக்கு கோழியாய் அமர்ந்திருந்த அப்பாவை வசவிய அம்மாவின் அழுகை நின்றபாடில்லை. அப்பாவின் இரும்புக் கட்டிலில் படுத்துக்கொண்டு முன்னெப்பொழுதும்போல் இல்லாமல் அம்மா கூடுதலாய் அழுதுகொண்டே இருந்தாள். வடக்குப் பக்கம் மீதமாக இருந்த தொங்கல் சுவறும், எரவானத்திற்கு முட்டுக்கொடுத்திருந்த கருவக்கட்டைத் தூணோடு மூன்று கால்களுடன் இருந்த மரநாற்காலியின் மீது சரிந்து விழுந்தது.
***
கிராமிய வழக்கில் ஏதார்த்த சொற்களினூடே, அதுவும் கொச்சை வழக்காயினும் நயம்பட உரைக்கும் ஆற்றல் தங்களது இயல்பில் இணங்கியிருப்பது வரம்தான். ஏதொரு கிராமங்களிலும் இதுபோன்று மனையாள் உற்றவனை வசைபாடுதலும் இயல்புதான், அதே இல்லாள் அந்தத் துணை இழந்து வாடும் தருணத்தில் “எதற்கும் பயனில்லாது இருந்தாலும் ஆண் துணைன்னு ஒரு ஆதரவுனு ஒரு ஓரமா இருந்தாரு,” னு சொல்லும்போதுதான் அந்த வலி தெரியும். வீட்டு சுவர் இடிந்து விழுந்தது முதற்கொண்டு திராட்சை உண்ட இறுதிவரை வாசிப்பின் வேகம் பலமடங்கு பெருகியது, காரணம் எதார்த்த சொற்களால் நெய்யப்பட்ட சொற்கோட்டையில் பேராசிரியர் அரியனையில் அமர்ந்து ஆட்சி புரிவது போன்ற அழகு அவ்விடத்தே.
வாழியவே தங்களது தமிழ்ப்பணி…