
சினிமாவுக்குப் போன ஹாங்காங் தமிழர்கள
‘பிரிக்க முடியாதது என்னவோ?’. இது தருமியின் கேள்வி. ‘தமிழும் சுவையும்’ என்பது சிவபெருமானின் பதில். இந்தப் பதிலைப் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் கேள்வி இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தக் கேள்விக்குப் பலரும் பல்வேறு பதில்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில், ‘தமிழரும் தமிழ் சினிமாவும்’ என்கிற பதில் இருக்கக்கூடும். இல்லையென்றாலும் குற்றமில்லை. அந்த வினாவிற்கான ஆகப் பொருத்தமான 10 விடைகளில் ஒன்றாக அதைச் சேர்த்துக்கொள்வதில் எந்தத் தடையுமில்லை. அது நியாயமானதுங்கூட.
தமிழர்கள் எல்லாக் காலங்களிலும் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். தாய்த் தமிழகத்தைப் போலவே புலம் பெயர்ந்த இடங்களிலும் தமிழர்களின் கொண்டாட்டங்களில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய இடம் இருந்து வந்திருக்கிறது. ஹாங்காங்கிலும் அப்படித்தான். அறுபதுகளில் அங்கு குறைவான தமிழர்களே வசித்தார்கள். என்றாலும் அவர்களைத் தமிழ் சினிமா தேடி வந்தது.
அது காணொலியும் இணையமும் இல்லாத காலம். திரைப்படங்கள் பிலிம் சுருள்களாக வரும். இந்தச் சுருள்கள் தகரப்பெட்டியில் அடுக்கப்படும். அதுதான் படப்பெட்டி. அவை சென்னையிலிருந்து பெரு நகரங்களுக்கும், அங்கிருந்து சிறு நகரங்களுக்கும் பயணமாகும். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களாகயிருந்தால் படப்பெட்டியை வரவேற்கப் பேருந்து நிலையத்தில் ரசிகர் மன்றங்கள் காத்திருக்கும். படப்பெட்டி அங்கிருந்து வாழை மரமும் மாவிலையும் கட்டப்பட்ட மாட்டு வண்டியில் மேள தாளத்தோடு திரையரங்கிற்கு வரும்.
அப்போது பத்திரிகை விளம்பரங்களில் சென்னை அகஸ்தியா, நூர்ஜஹான், சாந்தி மற்றும் தென்னாடெங்கும் என்று போடுவார்கள். தென்னாடெங்கும் என்றால் என்ன? சென்னையைத் தாண்டி மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய பெரு நகரங்களிலும், தஞ்சை, நெல்லை, காஞ்சி, பழநி முதலான சிறு நகரங்களிலும், பெங்களூர், கொச்சி முதலான சில அண்டை மாநில நகரங்களிலும் படம் வெளியாகும். இதைத்தான் தென்னாடெங்கும் என்கிற சொல் குறித்தது. அது ஓர் உயர்வு நவிற்சி.
அந்நாளில் எனக்கு ஓர் ஐயம் இருந்தது. ஒரு படம் முதல் நாளில் எத்தனை அரங்குகளில் வெளியாகும்? ஒரு திரையரங்க மேலாளர், என் உறவினருங்கூட, அவர் என்னைப் பொருட்படுத்திப் பதில் சொன்னார். சராசரியாக 40. இந்த 40 பிரதிகள்தான் தங்கள் முதல் சுற்றை முடித்துக்கொண்டு அடுத்தடுத்த நகரங்களுக்குப் போக வேண்டும். காரைக்குடி ராமவிலாசில் தீபாவளிக்கு வெளியாகும் படம் ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடேஸ்வராவை எட்டும்போது பொங்கலாக இருக்கும். அதுவே நன்றாக ஓடும் படமாகயிருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ரசிகர்கள் அடுத்த தீபாவளி வரை காத்திருக்க வேண்டியதுதான்.
இந்த இடத்தில்தான் ஹாங்காங் ரசிகர்களின் விருப்பமும் சேர்ந்துகொண்டது. படப்பெட்டி உள்ளபடிக்கே தென்னாடெங்கும் சுற்றும் வரை காத்திருந்தால் படம் பழசாகிவிடும். சூடு மிகவும் ஆறுவதற்கு முன்னால் படப்பெட்டியை தமிழகத்திலிருந்து வருத்த வேண்டும். இது முதற் கட்டம். ஒரு படத்தை ஹாங்காங்கில் திரையிடுவதில் மேலும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. படப்பெட்டியை ஏற்பாடு செய்தபின் சுங்கத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். விமான நிலையத்திற்குப் போய் உரிய நேரத்தில் பெட்டியைப் பெற வேண்டும். திரையரங்கை அமர்த்த வேண்டும். தணிக்கைத் துறைக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும். பிறகுதான் படத்தைத் திரையிட முடியும். அந்நாளில் ஹாங்காங்கில் குறைவான தமிழர்கள்தான் வசித்தார்கள். ஆகவே ஒரு காட்சிதான் திரையிட முடியும். அரங்கு நிறையாது. அந்த வசூலில் எல்லாச் செலவையும் ஈடு கட்ட வேண்டும். காட்சி முடிந்ததும் படப்பெட்டியைத் திரும்ப அனுப்ப வேண்டும். இவை எல்லாவற்றையும் தனி நபர்களால் செய்ய முடியாது. அதற்கொரு அமைப்பு வேண்டியிருந்தது. அப்படித்தான் 1967இல் தமிழ்ச் சங்கம் உருவானது. சங்கத்திற்கு ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் என்று பெயர். சங்கம் இப்படியான பல தடைகளைத் தாண்டிக் குதித்துத்தான் ஒவ்வொரு படத்தையும் திரையிட்டது. என்றாலும் தடை தாண்டும் ஓட்டம் தொடர்ந்தது. ஏனெனில் ஓட்டத்தின் முடிவில் ஒரு தமிழ்ப்படம் பெரிய திரையில் விரிந்தது.
எனில், இந்தத் தடையோட்டம் சாகசம் மிகுந்ததாக இருந்தது. ஆதலால் ஒவ்வொரு ஆண்டும் குறைவான படங்களே ஹாங்காங் ஏகின. எழுபதுகள் முழுக்க இந்நிலை நீடித்தது. எண்பதுகள் காணொலிகளின் காலமாக இருந்தது. காணொலி நாடாக்களை வாடகைக்கு வழங்கும் கடைகள் இந்திய நகரங்களெங்கும் முளைத்தன. கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்துகளுக்குப் பதிலாகக் காணொலிப் படங்கள் திரையிடப்பட்டன. ஆம்னி பேருந்துகள் ஒரே பயணத்தில் இரண்டு படங்களைத் திரையிட்ட காலமெல்லாம் இருந்தது.
இதன் பாதிப்பு ஹாங்காங்கையும் எட்டியது. காணொலி நாடாக்கள் தமிழர்களின் வரவேற்பறைக்குள் பிரவேசித்தன. அதில் பழைய, புதிய படங்கள் எல்லாம் இருந்தன. ஹாங்காங் தமிழர்கள் சின்னத் திரைக்கு மாறிக்கொண்டார்கள்.
நான் 1995இல் ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தேன். அது காணொலி நாடாக்களின் கொடி சகல ஹாங்காங் தமிழர்களின் வீடுகளிலும் பறந்துகொண்டிருந்த காலம். அந்நாளில் சிம் ஷா சுய் என்கிற இடத்தில் மட்டும்தான் இந்திய மளிகைப் பொருட்களுக்கான கடைகள் இருந்தன. காணொலி நாடா வாடகைக் கடைகளும் அங்கேயே இருந்தன. தமிழர்களின் மளிகைப் பைகளில் சீனக் கடைகளில் கிடைக்காத துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சை மிளகாய், வெண்டைக்காய் முதலானவை இருக்கும். கூடவே முந்தைய வாரங்களில் வெளியான தமிழ்ப் படங்களின் நாடாக்களும் இருக்கும். அவை சட்டவிரோதமாகப் பிரதியெடுக்கப்பட்டவை. தென்கிழக்காசிய நகரங்கள் வழியாக ஹாங்காங் வந்தவை.
தமிழர்கள் தமக்குள் சந்திக்கிற எல்லாத் தருணங்களிலும் அவர்தம் உரையாடலில் அப்போது வெளியாகியிருந்த தமிழ்ப் படங்கள் தவறாமல் இடம் பெற்றன. சில தொலைபேசி உரையாடல் நீண்டு போவதற்கும் அதுவே காரணமாக அமைந்தது. அப்போது ஹாங்காங்கில் செல்பேசி பரவலாக வரவில்லை, ஆனால் உள்ளூர் அழைப்புகள் இலவசம்.
இந்த காணொலிப் படங்களிலிருந்து நான் இயன்றவரை ஓர் இடைவெளியைப் பராமரித்தேன். அஃதோர் உழைப்புத் திருட்டு என்பதைத் தவிர வேறு காரணங்களும் இருந்தன.
ஒருமுறை ஒரு நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தேன். அது அவர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அது வண்ணப் படம்தான். கறுப்பு, வெள்ளை தவிர மஞ்சள், பச்சை நிறக் கோடுகளும் திரையில் தெரிந்தன. முதல் காட்சியில் நாயகன் நாயகியைப் பொது இடத்தில் சீண்டியபடி இருந்தான். ஹாங்காங் பாலியல் பாகுபாட்டுச் சட்டம், பிரிவு 490இன் கீழ் நாயகன் இழைத்துக் கொண்டிருந்தது தண்டனைக்குரிய குற்றம். எனில் ஹாங்காங்கில் வசிக்கும் நண்பருக்கு அது பிரச்சனையாக இல்லை. சென்னையில் வசிக்கும் நாயகிக்கும் பிரச்சனையாக இல்லை. அடுத்த காட்சியில் ஒரு விசாலமான பால்கனியில் அதே நாயகன் அதே நாயகியோடு சிருங்கரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று தலை குப்புறத் தரையில் விழுந்துவிட்டான். ஏன்? எனக்குப் புரியவில்லை. அது காட்சிப் பிழை என்று விளக்கினார் நண்பர். காட்சி பால்கனியிலிருந்து தரைக்கு மாறியது. காணொலியில் நாயகனை விடாப்பிடியாகத் துரத்திய ஒரு மஞ்சள் கோடு அடுத்த காட்சியிலும் தொடர்ந்தது. அது பயிற்சிக் குறைவான என் கண்களுக்கு நாயகனே விழுந்து விட்டதான தோற்றத்தைத் தந்துவிட்டது. மற்றபடி நாயகன் பத்திரமாக இருக்கிறான் என்றார் நண்பர். நாயகன் விழுந்து தொலைத்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன். நண்பரிடம் சொல்லவில்லை. இப்படியாகக் கோடுகளுக்கும் தீற்றல்களுக்கும் இடையில் குதித்தாடிய சினிமாவை கொண்டுகூட்டிப் பொருள் கொள்வதில் நம்மவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள்.
புத்தாயிரமாண்டில் நாடாக்கள் குறுந்தகடுகளாகின. காணொலியின் வடிவம் மாறினாலும் உருவமும் உள்ளடக்கமும் மாறவில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகில் வேறு ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. தொழில்நுட்ப மாற்றம். முதலில் ஒலி மட்டுமே இலக்க (டிஜிட்டல்) வடிவிற்கு மாறியது. விரைவில் முழுப்படமும் இலக்க முறையில் வெளியானது. இதில் படங்கள் சுருள்களாக இராது. படப்பெட்டிகள் தேவைப்படாது. படங்கள் வட்டுகளில் (disk) அடக்கப்படும். பிரதி எடுப்பது எளிதானது. அது பாதுகாப்பானதாகவும் இருந்தது. வட்டை உயிர்ப்பிக்கக் கடவுச்சொல் வேண்டும்.
இந்த மாற்றத்தால் படங்கள் ஒரே நேரத்தில் பல திரைகளில் வெளியாகின. விளம்பரங்களில் இப்போது உலகெங்கும் என்று போட்டார்கள். இது இயல்பு நவிற்சி. ஏனெனில் இலக்கப் பிரதிகளின் வட்டுகள் உலகெங்கும் பறந்தன. அப்படியாக அவை ஹாங்காங்கிற்கும் வந்தன.
தமிழ்ப் படங்களைத் திரையிடுவதற்காகத் தொடங்கப்பட்டதுதான் தமிழ்ச் சங்கம். எனில், காணொலிகளின் செல்வாக்கால் இந்தச் சேவையைச் சங்கம் இடை நிறுத்தியிருந்தது. இன்ன பிற அயல் நாட்டுச் சங்கங்களைப் போலவே சிரிப்புப் பட்டிமன்றங்களையும் மெல்லிசைக் கச்சேரிகளையும் சிறுவர் நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டிருந்தது. இலக்க வட்டுகள் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தபோது சங்கம் தனது வரலாற்றுக் கடமையை நினைவூட்டிக்கொண்டது. இப்போது படப்பெட்டியோடு மல்லுக் கட்ட வேண்டாம். ஒரு வேதகாமப் புத்தகத்தின் அளவிலும் வடிவிலுமிருந்த வட்டை வருத்தினால் போதுமானது. கடவுச்சொல் தனியே வரும்.
அப்படியாகச் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்கள் மீண்டும் ஹாங்காங்கின் பெரிய திரைக்கு வந்தன. முதல் வரவு, ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ (2006). இன்றளவும் பகடிப் படங்களை(memes) உருவாக்குவோருக்கு அட்சயப் பாத்திரமாக விளங்கும் திரைப்படம். நண்பர்களோடு நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். களித்தேன்.
அடுத்த படம்தான் என்னளவில் பிரச்சனையாகிவிட்டது. அது, ’சிவாஜி த பாஸ்’ (2007). அந்தப் படத்தை முன்வைத்து ஹாங்காங்கில் சில சம்பவங்கள் நடந்தன. திரையரங்கில் வரவேற்பு வளையங்கள் வைக்கப்பட்டன. இனிப்புகள் வழங்கப்படன. ஹாங்காங்கிற்கு அருகாமையிலிருக்கும் ஷென் ஜென் நகரத் தமிழர்கள் ரஜினியின் படம் பொறித்த டி-ஷர்டுகளுடன் படம் பார்க்க வந்தனர். திரையில் ரஜினி சாகசங்கள் நிகழ்த்தியபோது அரங்கிற்குள் ஆர்ப்பாட்டமாக இருந்தது. அதைச் சிலர் படம்பிடித்துப் பகிர்ந்துகொண்டனர்.
உலகின் தலை சிறந்த படங்களையும் நிகழ்த்துக் கலைகளையும் பார்க்க வாய்ப்புள்ள ஹாங்காங் போன்ற பெருநகரத்தில் வாழும் தமிழர்களிடையே நாயக வழிபாடு தேய்ந்து போயிருக்கும் என்று நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை தவறானது என்று புரிந்தது. நம்மில் பலருக்கும் நமது நம்பிக்கைகள் பொய்க்கும் தருணங்கள் நேரும். அதில் ஒன்றும் புதுமை இல்லை. அதைக் கடந்து போக வேண்டும். அதுவும் எனக்குத் தெரியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நான் செய்த காரியம்தான் பிரச்சனையாகிவிட்டது. நான் ஒரு கவிதை எழுதினேன்.
எனக்கு கவிதைகளின் மீது எந்த விரோதமுமில்லை. மாறாக மிகுந்த மதிப்பு உண்டு. அதன் பொருட்டே கல்லூரிக் காலத்திற்குப் பிற்பாடு தமிழணங்கிற்குக் கவி மாலை சூட்டுவதை நிறுத்திக்கொண்டேன். என்றாலும் என்னை மீறி இது நிகழ்ந்துவிட்டது. கவிதையை ஓர் இணைய இதழ் (திண்ணை.காம், 5.7.2007) வெளியிட்டது. கவிதை இதுதான்:
தெய்வம் ஹாங்காங் வந்தது
பிரம்மனுக்கு நான்கு தலைகள்
மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள்
கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம்.
நல்லுலகிற்கு வெளியேயும்
தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும்.
அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும்.
மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி
சில நூறு கரங்கள் நீண்டன.
திருக்கரமொன்று ஹாங்காங் வந்தது.
பக்கத்து ஊர்களிலிருந்தும்
பக்தர்கள் திரண்டனர்.
கோயில் வாசலில்
தோரணங்கள் போஸ்டர்கள்
தெய்வத்தின் படம் பொறித்த சட்டைகள்
லட்சார்ச்சனைகள்.
தெய்வத்திற்கு இன்னும் பிரீதியானது
விசில் வழிபாடு.
முந்தைய தெய்வங்களுக்கும்
அதுவே ஆகி வந்தது.
பக்தர்களுக்கும் தெரிந்திருந்தது.
ஆண்டவன் பிரவேசிக்கும்போது
உச்சத்திற்குப் போனது குலவை.
அசுர வதம் நிகழும்போதும்.
என்றாலும் இன்னும் வழிபாடுகள் உள்ளன.
நல்லுலகைப் பார்த்து
பக்தர்கள் கற்பது நன்று.
தீபாராதனை
திருஷ்டிப் பூசணிக்காய்
பூச்சொறிதல்
பாலாபிஷேகம்
பீர் அபிஷேகம்.
சாத்துப்படிகள் தொடர்ந்தால்
தெய்வமே பக்தியை மெச்சக்கூடும்.
கவிதையில் ரஜினியின் பெயரோ படத்தின் பெயரோ இல்லை. என்றாலும் கவிதை என்ன சொல்கிறது என்பதை அறிய யாருக்கும் எந்தப் பின் நவீனத்துவத் தத்துவமும் தேவைப்படவில்லை. கவிதை வெளியானதும் ஒரு நண்பர், ‘சின்ன ஊரில் நாம் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டாமா?, ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாமா?’ என்று அறிவுரைத்தார். இன்னொரு நண்பர், ‘தமிழ்ச் சங்கத்தை ஆதரிக்கிற கடமை ஹாங்காங் வாழ் தமிழர் அனைவருக்கும் உண்டு’ என்று நினைவூட்டினார். பிறிதொரு நண்பர் எனக்கு அறிவுஜீவி என்று பட்டம் சூட்டினார். வெகுமக்களுக்குப் பிடித்தமான எல்லாவற்றையும் விமர்சிப்பவர்கள்தான் அறிவுஜீவிகள் என்பது அவரது துணிபு.
அது வாட்சப் இல்லாத காலம். கும்பல் தாக்குதல் புழக்கத்தில் வரவில்லை. ஆகவே எனக்குப் பெரிய சேதாரம் ஏதுமில்லை. இலக்கிய வட்டம் என்றொரு மின்னஞ்சல் குழுமம் வைத்திருந்தோம். அதில் ஒரு சின்ன சலசலப்பு ஏற்பட்டது. அதுவும் ஒரு வாரத்திற்குள் அடங்கிவிட்டது.
இவையெல்லாம் நடந்து ஆண்டுகள் சில ஓடிவிட்டன. இப்போது தொழில்நுட்பம் மேலும் வளர்ந்துவிட்டது. ஓ.டி.டி தளங்கள் திரைப்படங்களை வரவற்பறைக்குக் கொண்டு வந்துவிட்டன. இவை சட்டபூர்வமானவை. விண்ணிலேறி வரும் இந்தப் பிரதிகளின் தரத்தைக் குறித்து தொழில்நுட்ப ரீதியாக எந்த குற்றமும் சொல்வதிற்கில்லை. பால்கனிக் காட்சியையும் தரைக் காட்சியையும் குழப்பிக்கொள்ள வேண்டி வராது. ஹாங்காங் தமிழர்கள் இப்போது காணொலிக் காலத்தைப் போலச் சின்னத் திரைக்கு முற்றிலுமாக மாறிக்கொள்ளவுமில்லை. பெரிய திரைக்குப் படத்தை வருத்துவதும் இலகுவாகிவிட்டது. வட்டுகளின் காலம் முடிந்துவிட்டது. இலக்கப் படம் இணைய வெளியில் மிதக்கும். கடவுச் சொல்லைப் பதிந்தால் திரையிறங்கும்.
அப்படியாகக் கடந்த சில ஆண்டுகளில் தென் சீனக் கடலைத் தாண்டி ஹாங்காங் கரையேறிய படங்கள் பல. அவற்றுள் சில: எந்திரன், எளியவன், பிகில், மாஸ்டர், மெர்சல், தெறி, கத்தி, கபடா, பீஸ்ட், வேஸ்ட், ஜில்லா, தாலுகா, பேட்டா, டேட்டா, விஸ்வாசம், விவேகம், வேதாளம், பாதாளம், வலிமை, துணிவு. இவை நல்லுலகில் வெளியான அதே நாளில் ஹாங்காங்கிலும் வெளியாகின. இந்தப் படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை துலக்கமானது. இந்தப் படங்களில் காரம், மணம், குணம் எல்லாம் தேவையான அளவில் கலக்கப்பட்டவை. எந்த சர்வதேச அரங்கிலும் எம் தமிழர் செய்த படம் என்று நம்மால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியாதவை. எனில், இந்தக் காலகட்டத்தில் காத்திரமான படங்கள் தமிழில் வரவில்லையா? வந்தன. ஆனால் அவற்றுக்கு மாருதங்களையும் சமுத்திரங்களையும் கடக்கிற வலு இல்லை. மேலும், அப்படியான படங்களுக்கான பார்வையாளர்கள் ஹாங்காங்கில் குறைவாக இருக்கலாம். அவர்களால் திரையரங்கை நிறைக்க முடியாது. அவர்களுக்கும் ஆவலாதி இருக்கலாம். ஆனால் அதற்காக யாரும் கவிதை எழுதுவதில்லை. நானும் எழுதவில்லை. ஏனெனில், இப்போது நான் ஹாங்காங்கில் வசிக்கவில்லை. சங்கத்தின் எல்லா மின்னஞ்சல்களும் கிரமமாக வந்தபோதும், அவற்றைக் கடந்து போகக் கற்றுக்கொண்டு விட்டேன். முக்கியமாக, மேற்படிக் கவிதை எழுதிய பிறகு கவிதையின் மேலான என் அபிமானம் திரும்பிவிட்டது. ஆதலால் என் கவிதைக் கத்தியை உறைக்குள் சொருகிவிட்டேன். நாளதுவரை வெளியே எடுக்கவில்லை.
(தொடரும்…)
Mu.Ramanathan@gmail.com
தன் நெஞ்சில் உள்ள வலிகளையும் ஆதங்கத்தையும் சிறந்த தமிழில், என்னைப் போன்ற சாதாரணங்களுக்கு புரியாத சில அரிய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி, திரைப்படங்களின், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை மிகவும் அருமையாக பதிவிட்டுள்ளார் ஆசிரியர்.
இப்பதிவு உலக அளவில் ஏற்பட்ட வளர்ச்சியை பிரதிபலிக்கிறது
நிறைய அரிய தொழில்நுட்ப சொற்களுக்கு ஏற்ற தமிழ் வார்த்தையை உபயோகித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது
அந்த சக்தி வாய்ந்த கத்தியை உரையிலிட்டது தவறு என அடியேன் எண்ணுகிறேன்
ஒவ்வொரு புது முயற்சியிலும் ஆசிரியரின் வளம் திறன் மிக வேகமாக வளர்வது தெரிகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை
வாழ்த்துகள்
அவரின் அடுத்த கணங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்