அன்றொரு நாள்
பாதி இருள் சூழ்ந்த
அகலத் தெருவில்
என் நிழலோடு நானும் நடக்க
ஆயிரம் ஓட்டங்கள் மனதில்
பசி
வேலை
குடும்பம்
அடடா !
புளித்த தயிருக்குத்தான்
எத்தனை தாளிப்பு
வாயில் போட்டு
காரி உமிழ்வதற்குள்
குப்பைக்குப் போக
சமயம் பார்த்தேன்
தூரத்து மின்விளக்கு
எனைக் கையசைத்து
தானழைக்க
மண்டியிட்டு தான்
வணங்க
மீண்டும் வழி திரும்பினேன்
பசியாற்ற புறப்பட்டேன்
நிழல் இல்லா நிர்வாணமாய்.
***
நிசப்தம் நிறைந்த
ஆளில்லா தனித் தீவின்
யாமத்தில் அலை இசைக்க
அகம் வருடி
உயிர் பருகும்
ஓர் மரணம் கேட்டேன்.
***
முதலிரவு அறையை மட்டுமே
கொடுக்க விரும்புகிறது
இச்சமூகம்
நாங்கள் விரும்புவது
என்னவோ
திருமண மேடைகள்தான்.
*****