சிறுகதைகள்

மீராவாகிய நான்…! – கனி விஜய்

சிறுகதை | வாசகசாலை

தோ.. இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருத்தில்தான் பதினைந்து வருடங்களாகப் பயணித்து வருகிறேன். ஆனால் முதல் நாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது எனக்கும் இந்தப் பேருத்துக்குமான உறவு. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் முகத்தை வைத்துக்கொள்பவர்கள், பார்த்தும் பார்க்காதவர்கள் போல் திரும்பிக்கொள்பவர்கள், ’ ‘தள்ளு’, ‘ஒத்து’ என்ற ஒற்றைச் சொல்லைக்கூடப் பேசிவிடப் போகிறோம் என்று கட்டுப்பாடாக வார்த்தைகளை விழிங்கி, படாமல், தொடாமல், எட்டி, சாய்ந்து கம்பியைக் கட்டிப்பிடித்துப் போகிற மாமனிதர்களோடு பயணிக்கையில் என்ன மாறிவிடப் போகிறது வெறும் இந்தப் பதினைந்து ஆண்டுகளி்ல். அதிகபட்சமாக அவர்கள் என்னோடு பேசும் வார்த்தை, ‘க்க்க்கும்’ என்ற ஜாடையே. . . ! இருக்கை இருந்தாலும் நான் அமரந்து விடுவேனோ என்று நெருடலும் பாவமும் கலந்த அவர்களின் பார்வையின் சூட்டின்னூடே எப்போதும் என் பயணம் தொடர்ந்திருக்கும். ஏனெனில் ஆண்பால் பெண்பால் என்று இரண்டென வரையறுக்கப்பட்ட இந்த உயரிய சமூகத்தின், வகையில் இல்லா மூன்றாம் பால் நான்…!

எல்லா நேரங்களிலும் வாழ்க்கை அழகாய் இருப்பதில்லை, அதை அழகாக்கிக்கொள்ள  அத்தனை பேரும் ஓடிக்கொண்டிருக்கையில் நான் எனக்கான வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இதோ இன்று என்னோடு பயணிக்கும் அத்தனை பேரும் பயண முடிவில் அல்லது இந்த நாளில் முடிவில் யாரோ ஒருவரைச் சந்திக்கவோ பேசவோ போகிறார்கள். ஆனால் எனக்கான இந்தப் பயணம் எங்கே முடியும், யாரை பார்க்கப் போகிறேன் என்பது தெரியாமலே கடந்திருக்கிறேன் அவள் என் வாழ்வினை தேடித் தரும்  வரை.

ஆம்… அன்று எனக்கான பயணம் எப்போதும் போல இருக்கவில்லை. கூட்டம் மிகக் குறைந்த நாள் அன்று. இருப்பினும் எப்போதும் போல நான் எந்த இருக்கையிலும் அமரவில்லை. என் புன்னகைக்குப் பதில் கொடுத்தால் அவர்களுக்கும் என் மூன்றாம் பால் நோய் வந்துவிடுமெனப் பயந்து எவரும் சிரிப்பதில்லை. எனவே எனக்கான புன்னகையை நான் யாரிடமும் தந்ததில்லை. கண்ணாடியிடம் பேசுவது சிரிப்பதோடு சரி. அன்றும் அப்படியே நான் என் பார்வையை வெளியே செலுத்தி இருந்தேன். எதேச்சையாக அவள் பக்கம் என் பார்வை பட ஒரு துளிப் புன்னகை அவளிடம். நான் சட்டென வேறு பக்கம் திரும்பினேன். படப்படப்புத் தொற்றிக்கொள்ள இது நமக்கான புன்னகையா என்று ஆச்சரியத்தோடு நின்றிருந்தேன். “மறுபடி பார்க்கலாமா? வேண்டாமா? “சரி பார்த்து விடுவோம் நம்மைப் பார்த்து யார் சிரிக்கப் போகிறார்கள் என்று தோன்றியபின் அவள் பக்கம் திரும்பினேன். இப்போது அதை விடக் கொஞ்சம் பெரிய புன்னகை அவளிடம். நம்பமுடியவில்லை என்னால். மனதினுள் பெரு மகிழ்வு இருந்தும் கொஞ்சம் தயங்கித் தயங்கி நானும் புன்னகைத்தேன். அந்த மாலை நேரப் பயணம் அவளின் புன்னகைக்குப்பின் எப்போதும் போல் இல்லை.

அவள் கண் அசைவில் என்னை அவளருகே வந்து அமரச்சொன்னாள். எனக்கு உண்மையில் இது  கனவா என்றிருந்தது. நான் வேண்டாம் என்று தலையசைத்தேன். அவள் ஒப்புக்கொள்ளவில்லை. “வாங்க” என்று கையசத்தாள். என் வாழ்வின் முதல் முறை அஃறிணை அல்லாத சொல்லைக் கேட்டேன். அதற்காகவேணும் அவளிடம் பேசவேண்டும் போலிருந்தது. அவளருகே சென்று அமர்ந்தேன். எல்லோரும் என்னை உற்றுப் பார்ப்பதாய்த் தோன்றிற்று.

“யாரையும் பாக்காதீங்க” என்றாள்.

“ம்” என்றேன்.

“நான் உங்கள நிறைய முறை பார்த்து இருக்கேன்.. நீங்க இந்த பஸ்ல தான வரீங்க” என்றாள் மழலை முகம் மாறாதவள்.

“ஆமா ஆனா நான் உன்னைப் பார்த்ததில்லையே”என்றேன்

“நான் தினம் ஸ்கூலுக்கு இதுல தான் போவேன் வருவேன்” என்றாள்

”ஓ” என நான் மீண்டும் புன்னகைத்தேன்.

அவளின் ரிப்பன் கட்டிய ரெட்டை ஜடை என்றோ பார்த்த என் தங்கையின் சாயலைப் போலவே தோன்றியது. என் பால்ய நினைவுகளுக்குள் நான் மூழ்கையில்… என்னைத் தடுத்து,

“ஆமா . . . உங்க பேரு என்ன?” என்றாள்.

”அப்படி எதும் இல்ல…” என்றேன்.

அவள் கண்களில் பளீர் என்ற வியப்பு!

“என்னது பெயரே இல்லையா …? என்றாள்.

“ம்ஹீம்… இல்லை” என்றேன்.

”அப்போ உங்களை எப்படிக் கூப்பிடுவாங்க”என்றாள் ஆச்சரியத்தின் அழகியாய்.

“ஹே”, “அது” “இது” “ஒன்பது” எதும் இல்லனா கையத்தட்டிக் கூப்பிடுவாங்க….” என்றேன்.

அவள் எதோ கேட்க வந்து கேட்காமல் திரும்பிக்கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை.

“சரி பெயர் சொல்லியே ஆகணும்னு சொன்னா என்ன பண்ணுவீங்க” என்று கேட்டாள்.

“ம்… அப்போ என்ன தோணுதோ அதைச் சொல்லிடவேண்டியதுதான்”என்று சொல்லிச் சிரித்தேன். சட்டென அவளும் சிரித்தாள். என்னோடு சேர்ந்து சிரித்த முதல் அழகிய உயிர் அவள்.

“சரி … அப்போ நான் உங்களுக்குப் பேரு வெக்கட்டா” என்றாள் ஆர்வமாய்.

இது என்னவோ புது அனுபவம் எனக்கு. எனக்கான ஒரு பெயர். ஒரே ஒரு பெயர். அப்பப்பா …என உடல் சிலிர்த்தது.

“ம்ம்ம்ம்ம்…” என்றேன் உற்சாகத்தோடு.

அவள் யோசிக்கத் தொடங்கினாள். வெளியே பார்த்தாள் உள்ளே பார்த்தாள் என்னைப் பார்த்தாள்… சிரித்தாள் … திரும்பிக் கொண்டாள் மறுபடி திரும்பினாள். எதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய்…

“ஹான்ன்ன்ன்” என்றாள் அழுத்தமாய்

“ம்ம் என்ன என்ன” என்றேன்.

“மீரா” என்றாள்.

அவள் சொன்னதாலேயே அந்தப் பெயர் பிடித்துப்போனது எனக்கு.

“என்ன பிடிச்சிருக்கா…” என்றாள் செல்லமாய்.

“ரொம்ப… உன்னை மாதிரியே அவ்ளோ அழகு” என்றேன்

அவளின் மழலைச் சிரிப்பு என் வாழ்வில் எதையோ அடைந்ததை உணர்த்தியது எனக்கு.

“ஆமா, என் பேரு என்னனு தெரியுமா” என்றாள் கொஞ்சம் திமிராய்

“ம்ம்” என்றேன்

”என்னது தெரியுமா” என்றாள் ஆச்சரியமாய்

“ம்ம்” என்று சிரியதாய்ப் புன்னகைத்தேன்

“நீங்க பொய் சொல்றீங்க … சரி சொல்லுங்க பாப்போம் …” என்று அழகாய் அதடினாள்.

“அம்மா” என்றேன்.

ஆம். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு பொழியும் உள்ளத்துக்கு அது தானே பெயர் .

“ஹா ஹா ஹா… அம்மானா பெரியவங்க தான…. நான் சின்னப்பொண்ணு… என்னைப் போய் அம்மானு சொல்றீங்க….”என்று அழகாய்க் கேலி செய்தாள்

“அதுவும் சரிதான்…! ம்ம்ம்ம்ம்ம் சரி… அப்ப இனிமே  “அம்மாகுட்டி”னு கூப்பிடறேன் என்றேன்.

அதைக்கேட்ட உடன் என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். அவளின் அந்தத் தழுவலில் எனக்கு அவள் இரண்டாவது அம்மாவாகி இருந்தாள்.

“நல்லா இருக்கு இதுவும்” என்றாள்

“சரி என் ஸ்டாப் வரப்போகுது” என்றேன்

“அப்ப உங்க நம்பர் குடுத்துட்டுப் போங்க”என்றாள்

“என்கிட்ட போன் இல்லடா”என்றேன்

எதையோ யோசித்தவளாய்ச் சட்டெனப் பையைத் திறந்தாள் … ஒரு சீட்டில் எதையோ எழுதி , ‘இந்தாங்க… இது தான் என் அட்ரஸ் போன் இல்லனா என்ன லெட்டர் போடுங்க” என்றாள்

எனக்கான முதல் உறவு .. என் தேடலின் முடிவு அவளாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. பெரு மகிழ்வில் நிறைந்திருந்தேன். என் இடம் வந்த உடன் அவளின் கைப்பிடித்து  “நான் கிளம்புறேன்” என்றேன்.  “ம்ம்” என்று கொஞ்சம் சோகமாய்ச் சொன்னாள். பேரன்பின் பிரிவை நான் முதன் முறை அனுபவித்திருந்தேன். அங்கே எதுவும் பேசாமல் இறங்கிக்கொண்டேன். பேருந்து புறப்பட்டும் நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு குரல்,  மிக ஆழமாய் மிக அழுத்தமாய் …

“மீரா அக்கா….” எனக் கேட்டது.

அவளே. என் அம்மாகுட்டி. என் அன்பு அம்மாகுட்டி. என் உள்ளம் அன்பின் மழையில் அடங்காமல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் பேருந்தின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துக் கையசைத்துக் கத்தினாள்.

“நாளைக்கும் வருவீங்க- ல” என்றாள் சத்தமாய்.

அதைவிட என்ன வேலை இருக்கிறது என்பது போல “கண்டிப்பா செல்லம் “ என்றேன்… !

அன்றிலிருந்து இன்று வரை என் அம்மாகுட்டியினாலேயே என் உலகம் சுழல்கிறது. என் அம்மாகுட்டி இப்போது வெளியூரில் படிக்கிறாள். அவளுக்கு  எழுதும் எல்லாக் கடிதங்களிலும் அவள் ஆசையாய் எனக்கு வைத்த பெயரோடு, “மீராவாகிய நான்…” என்றே தொடங்குகிறேன். இப்போதெல்லாம் என் பயணங்கள் அவளுக்காகவே முடிகின்றன. வேறென்ன வேண்டும் ?!

——————————————————

இந்த உலகில் நாம் கொடுக்கும் துளியான அன்பும், காதலும் பிறர் பெறுகையில் கடலாகும்.

எதுவும் பெரிதில்லை பேரன்பின் முன்.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

11 Comments

  1. A good and perfect story line throughout the end❤️ ..
    Finally humanity speaks?.
    The name “மீரா” which gives a positive vibes..
    Well-done kani SIL for the lovely story
    Keep rocking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button