தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்;23 ‘கடலுக்குள் மெளன வசந்தம்’ – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

1962ல் வெளிவந்த “மௌன வசந்தம்” என்ற சூழலியல் புத்தகம், எல்லா இடங்களிலும் பரவி கண்ணுக்குத் தெரியாமல் நம்மை பாதிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றியது. பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காலகட்டம் அது. அப்போதே அதன் வீரியம் பற்றித் தெளிவாக எழுதியிருந்தார் ரேச்சல் கார்சன்.

2015ல் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரையில், “கடலுக்குள் ஒரு மௌன வசந்தம் நமக்குத் தெரியாமலேயே வந்துவிட்டது” என்று எழுதுகிறார் போரிஸ் வார்ம் என்கிற சூழலியலாளர். பொதுமக்களின் கவனத்தைப் பெறாத, ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் பிரச்சனை இது என்கிறார். கடலுக்குள் இருக்கும் நெகிழி (ப்ளாஸ்டிக்) மாசுபாட்டையே இவர், ‘மௌன வசந்தம்’ என்கிறார்.

உண்மையில் இது பலருக்கு அலுப்பை ஏற்படுத்தலாம். “ப்ளாஸ்டிக் ப்ரச்சனைதானே… நிறைய படிச்சாச்சு” என்று பலர் இந்தக் கட்டுரையை அப்படியே கடந்துபோகலாம். அந்த சலிப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சூழலியல் சீர்கேடுகளிலேயே மிக அதிகமாக விவாதிக்கப்படுவது நெகிழி மாசுபாடுதான்.  கல்வியறிவு, வர்க்கநிலைகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமே நெகிழி என்றால் ஏதோ பிரச்சனை என்று புரிகிறது. இன்னமும் சொல்லப்போனால் இது கிட்டத்தட்ட க்ளிஷேவான விஷயமாகவே ஆக்கப்பட்டிருக்கிறது எனலாம். இதைத் தாண்டி பிற சூழல் பிரச்சனைகளே இல்லையா என்றுகூட பலர் அயர்ச்சியுறுகிறார்கள்.

இத்தனை பழைய பிரச்சனையை 2021லும் இதைப் பற்றி ஏன் தொடர்ந்து பேசவேண்டியிருக்கிறது? ஏனென்றால் இன்னும் இது சரி செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடக்கும்போது, நெகிழியால் வரக்கூடிய, நாம் அறியாத புதுப்புது பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனாலும் தீர்வு வரவில்லை. உலகெங்கும் நிறைந்துவிட்ட நெகிழியிடமிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது என்று தெரியாமல் திணறுகிறோம்.

அனைவரும் நன்கறிந்த கடற்கரை குப்பை சீர்கேட்டையே எடுத்துக்கொள்வோம். அதன் தீவிரம் நம்மால் கற்பனை செய்ய முடியாதது. முதுநிலை பட்டப்படிப்பின்போது வருடத்திற்கு ஒருநாள் அந்தமானில் உள்ள ஒரு கடற்கரையை சுத்தம் செய்வதற்காக (Beach cleanup) எங்கள் ஆசிரியர்கள் அழைத்துச் செல்வார்கள். அவ்வளவாக சுற்றுலாப் பயணிகள் வராத ஒரு சிறு கடற்கரையிலேயே கிட்டத்தட்ட நூறு கிலோ அளவுக்குக் கூட குப்பைகளை வருடாவருடம் சேகரித்திருக்கிறோம்! இதனுடன் ஒப்பிடும்போது பெருநகரங்களில் உள்ள கூட்டம் நிறைந்த கடற்கரைகளில் வருடத்திற்கு எத்தனை டன் குப்பை சேரும், அதில் நெகிழிக் குப்பைகள் எத்தனை இருக்கும் என்பதை நாமே கணக்குப் போட்டுக்கொள்ளலாம்.

ஒரு சுவாரஸ்யத்துக்காக, உலகெங்கிலும் உள்ள 41 நாடுகளைச் சேர்ந்த 144 கடற்கரைகளிலிருந்து, குப்பையாகக் கிடக்கும் பந்துகள்/கால்பந்துகளை மட்டும் சேகரித்துப் பார்த்தார் சூழல் புகைப்படக்கலைஞர் மேண்டி பார்க்கர். வெறும் நான்கு மாத சேகரிப்பில் மொத்தம் 992 பந்துகள் கிடைத்தன! “Penalty” என்ற தலைப்பில் இந்தப் பந்துகளை ஒரு புகைப்படமாக எடுத்திருக்கிறார் அவர். இத்தனை பந்துகள் எவ்வாறு கடற்கரையைச் சென்றடைந்தன என்பதே சுவாரஸ்யம் நிறைந்த ஒரு ஆய்வாக இருக்கக்கூடும். உலகக் கடற்கரைகளில் பந்துகள் மட்டுமே 992 என்றால், பிற குப்பைகள் எவ்வளவு இருக்கும் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

“பெரும் பசிபிக் குப்பைக் களம்” (Great Pacific Garbage Patch) – வடக்கு பசிபிக் கடலில், கிட்டத்தட்ட 42,000 டன் குப்பைகளைக் கொண்ட, 16 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மிதக்கும் குப்பைக் களம் இது. ஒவ்வொரு தசாப்தத்துக்கும் இதன் அளவு 10 மடங்கு அதிகரிக்கிறது என்கிறது ஒரு தரவு. பெயரிடப்பட்டு ஆய்வுசெய்யப்படும் உலகின் முதல் குப்பைக் கூளமாக இது இருக்கக்கூடும். பசிபிக் பெருங்கடலை அடுத்து அட்லாண்டிக் கடலிலும் இப்படி ஒரு குப்பைக் களம் முளைத்திருக்கிறது. அதுவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்துகொண்டிருக்கிறது.

சமகாலத்தில் கடலில் குப்பைகள் ஏற்படுத்தும் பாதிப்பின் அவலத்தைப் புகைப்படங்களே தொடர்ந்து ஆவணப்படுத்துகின்றன. காது குடையும் பட்ஸ் குச்சியைப் பற்றிக்கொண்டிருக்கும் கடற்குதிரை, சிகரெட் துணுக்கைத் தன் குஞ்சுக்கு ஊட்டும் தாய் கடற்காகம், வயிறு நிறைந்த குப்பைகளோடு இறந்து கிடக்கும் கடற்பறவை, சங்கு ஓடுகளுக்கு பதிலாக பாட்டில் மூடிகளுக்குள் வசிக்கத் தொடங்கியிருக்கும் சங்குப்பூச்சிகள், கடலுக்கடியில் மிதக்கும் பாலிதீன் பையை உண்ணவரும் கடலாமை என்று பல்வேறு வைரல் புகைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

உண்மையில் நிலத்தில் இருக்கும் நெகிழிப் பிரச்சனைகளுக்கும் மேலே குறிப்பிடப்பட்ட தரவுகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. வயிறு நிறைய நெகிழிக் குப்பையோடு கரை ஒதுங்கிய திமிங்கிலமும், வயிறு நிறைய பாலித்தீன் பைகளோடு இறந்து கிடந்த பசுவும் ஒப்பீட்டளவில் ஒன்றுதான். கடலில் ஒரு குப்பை மேடு என்பது புதிய செய்தியாக இருக்கலாமே தவிர, கிலோ கிலோவாகக் குப்பைகள் நிரம்பிய இடங்களை நாம் தினசரி கடந்துசென்றுகொண்டிருக்கிறோம்.

அப்படியானால் கடலில் இருக்கும் நெகிழி மாசுபாடு ஏன் தனியாக பேசப்படவேண்டும்?

இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, கண்ணுக்குத் தெரியும் கடற்கரையின் குப்பைப் பிரச்சனைகளுக்கு அப்பால், கடலுக்குள் உள்ள சூழலில் நெகிழி எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பொதுவெளியில் அவ்வளவாக விவாதிக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நிலத்தோடு ஒப்பிடும்போது கடல்சார் நெகிழி மாசுபாட்டின் வீரியமும் பாதிப்பும் வேறு மாதிரியானதாக இருக்கிறது என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 80 லட்சம் டன் நெகிழிப் பொருட்கள் கடலுக்குள் வந்து சேர்கின்றன. கடல்நீரின் வெப்பநிலை, ஈரப்பதம், சூரிய ஒளி, அலைகளின் வேகம் ஆகிய அனைத்தும்  இந்த நெகிழிகளை  சிதைக்கின்றன. பெரிய நெகிழிப் பொருட்கள் சிதைந்து, நுணுக்கப்பட்டு, காலப்போக்கில் நுண் நெகிழிகளாக (Microplastics) மாறுகின்றன. ஒரு எள்ளை விட சிறியதாக, அதாவது ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட துணுக்குகளே நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன.

நுண் நெகிழிகளில் இரு வகைகள் உண்டு. நேரடியாக நுண் துணுக்குகளாகவே கடலுக்குள் வந்து சேரும் நெகிழிகள் முதல் வகை. பற்பசைகள், குளியல் பசைகள் (body wash) உள்ளிட்ட பல பொருட்களில், தேய்த்துக் கழுவும் ஒரு விசைக்காக நுண்மணிகள் (Microbeads) சேர்க்கப்படுகின்றன.  செயற்கை இழைகளாலான துணிகளை நாம் துவைக்கும்போது, அவற்றிலிருந்து நுண் இழைகள் வெளியாகின்றன. அவை எல்லா நீர்நிலைகளிலும் பயணித்து, இறுதியாகக் கடலை வந்தடைகின்றன. இவையெல்லாம் நேரடியான நுண்நெகிழிகள். நெகிழிக் கோப்பைகள், உறிஞ்சுகுழல் உள்ளிட்ட பொருட்கள் கடலில் சேர்ந்து சிதைக்கப்பட்டு அதிலிருந்து உருவாகும் நுண் துகள்கள் இரண்டாவது வகை.

கடலுக்கும் நிலத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, இந்த நுண் நெகிழிகள் எங்கு போய் சேர்கின்றன என்பதுதான். நிலத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவை மண்ணுக்குள்ளேயே  தங்கிவிடுகின்றன. ஆனால், கடலுக்குள் உணவு உண்ண வாயைத் திறக்கும்போது எல்லா கடல்விலங்குகளும் கடல்நீரை உட்கொள்கின்றன. அப்போது கடல்நீரில் மிதக்கும் நுண் நெகிழிகள், விலங்குகளின் உடலுக்குள் சென்றுவிடுகின்றன. உணவுச்சங்கிலியின் அடுத்தடுத்த படிநிலைகளில் இவை பரவி, எல்லா விலங்குகளையும் பாதிக்கின்றன.

2050க்குள் கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கைக்கு நிகராக நெகிழித்துணுக்குகளும் இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடல்நீரை வடிகட்டி உணவுத்துணுக்குகளை உட்கொள்ளும் சிப்பிகள் நேரடியாக நுண் நெகிழிகளையும் உண்கின்றன. நுண்நெகிழிகள் உடலில் சேரும்போது சங்குப் பூச்சிகளால் (Hermit crabs) பொருத்தமான சங்கைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை, எதோ ஒரு மனக்குழப்பம் ஏற்படுகிறது. பல கடற்பறவைகளின் கூட்டில், இரைப்பையில் நுண் நெகிழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடலில் 1000 அடிக்குக் கீழே வாழும் மீன்கள்கூட நெகிழித் துணுக்குகளை உண்பதாகத் தெரிவிக்கிறது ஒரு ஆய்வு. கடலாமைக் குஞ்சுகள் நுண் நெகிழிகளைத் தின்று இறக்கின்றன. நுண் நெகிழிகளை அதிகமாக உட்கொண்ட மீன்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அவை குழப்பமான முடிவுகளை எடுத்து எளிதில் இறக்கின்றன. நுண் நெகிழிகள், கடற்புழுக்களின் இனப்பெருக்க விகிதத்தைக் குறைக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு.

அலைகள் வந்து கரையில் மோதும்போது, அந்த நீர்க்குமிழிகள் வழியாக, காற்றுக்குள்ளும் பயணிக்கின்றன நுண் நெகிழித் துணுக்குகள். கடலுக்கு நாம் காற்று வாங்கப் போகும்போது இந்த நுண் நெகிழிகளையே சுவாசித்துத் திரும்புகிறோம்! கடல் உப்பில் நுண் நெகிழி இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பல கடல் மீன்களின் உடல் தசையில் நுண் நெகிழித் துணுக்குகள் உண்டு.  “எதிர்காலத்தில் மீன் வாங்கும்போது யாரும் தனியாக ப்ளாஸ்டிக் பை கேட்கவேண்டாம். வேண்டிய அளவு ப்ளாஸ்டிக் மீன்களுக்குள்ளேயே வந்துவிடும்” என்பதான ஒரு மீம் நினைவுக்கு வருகிறது.  கடல் உணவு மூலம் நம் உடலுக்குள் வரும் இந்த நுண் நெகிழிகள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கலாம் என்கின்றன முதற்கட்ட ஆய்வுகள்.

Loggerhead turtle (Caretta caretta) trapped in a drifting abandoned net, Mediterranean Sea.

கடலுக்குள் ஏற்படும் நெகிழி மாசுபாட்டின் அடுத்த முக்கியமான அம்சம் பேய் வலை (Ghost Net). கைவிடப்பட்ட வலைகள் என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். சூழல் மாறுபாடு காரணமாகவோ எதாவது திடீர் பிரச்சனையாலோ வலைகள் கைவிடப்படுகின்றன. சிலநேரம் வலுவின்றி வலை கிழிந்துவிட்டால் மேலே இழுப்பதற்கு முன்பாக அது மூழ்கிக் கடலுக்குள் சென்றுவிடுகிறது. சமகால வலைகள் எல்லாமே எளிதில் மக்காத நெகிழி இழைகளால் உருவாக்கப்படுபவை என்பதால், இவை மக்காமல் கடலுக்குள்ளேயே இருக்கின்றன. சரியாக இழுத்துக் கட்டப்பட்ட செவுள் வலைகள் (Gill nets), பல ஆண்டுகள் வரை தொடர்ந்து மீன்களைப் பிடித்தபடி இருக்கும்! மீன்கள் வருவதும் வலையில் மாட்டிக்கொள்வதும் அழுகுவதுமாக ஒரு வலை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மனிதனின்றி மீன்பிடிக்கும்! பேய் வலைகள் என்று இவை அழைக்கப்படுவதன் காரணம் இதுதான்.

ஒவ்வொரு வருடமும் ஆறு கோடி டன் பேய் வலைகள் கடலுக்குள் புதிதாக சேர்கின்றன. உலகின் மொத்த வலைகளில் 5.7 சதவிகிதமும், ஆயிரங்கால் மீன் தூண்டில்களில் (Fishing long line) 29 சதவிகிதமும் இவ்வாறு பேய் வலைகளாக மாறுகின்றன. பேய் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் கடலாமைகள், திமிங்கிலங்கள், பேய் வலைகளால் அறுபட்டு உடையும் பவளப்பாறைகள், பேய் வலைகளால் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழக்கும் கடல் பாலூட்டிகள் என்று இவற்றின் சூழல் தாக்கம் மிகவும் பெரியது.

உண்மையில் ஒரு வலை கடலுக்குள் மூழ்குவது என்பது மீனவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு. தமிழ்நாட்டில் மோட்டார் படகுகளில் பயன்படுத்தப்படும் சிறு வலைகளுக்கே ஆரம்ப விலை முப்பதாயிரம் என்று மீனவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகவே யாரும் வேண்டுமென்றே வலைகளைக் கடலுக்குள் தவறவிடுவதில்லை. பேய் வலைகளைத் தேடி எடுத்து அவற்றைக் கடலிலிருந்து மீட்கும்  சில நூறு தன்னார்வலர் குழுக்கள் உலகெங்கிலும் இயங்கிவருகின்றன. பேய் வலைகளிலிருந்து சிற்பங்களை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆஸ்திரேலியத் தொல்குடிகள் உண்டு. பிரச்சனையின் தீவிரம் பரவலாகத் தெரிந்திருந்தாலும், தீர்வு கைக்கெட்டும் தூரத்தில் இல்லை.

பேய்வலைப் பிரச்சனை என்பது ஒரு உலகளாவிய தலைவலி. அலைகளின்மூலம் வலைகள் பல நூறு கிலோமீட்டர்கள் வரை இழுத்துச் செல்லப்படலாம் என்பதால், அவை வீசப்பட்ட இடத்தை சரியாகக் கண்டுபிடிப்பதும் கடினம். ஒவ்வொரு வலைக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தலாம் என்பதுபோன்ற திட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன. மூன்றாம் உலக நாடுகளின் மீனவர்களால் இது முடியுமா என்பது பெரிய கேள்வி. வலைகளை மீட்டெடுப்பது செலவு பிடிக்கும் வேலையாக இருக்கிறது. ஆனால் செலவைப் பார்த்து வலைகள் கிடக்கட்டும் என ஒதுக்கிவிட முடியாது. மொத்த நெகிழிக் குப்பைகளில் 10% பேய் வலைகள்தான் எனும்போது, இதற்கான தீர்வு நிச்சயம் எட்டப்படவேண்டும்.

கடலின் நெகிழி மாசுபாடு ஒரு நுணுக்கமான சூழல் பிரச்சனை. நுண் நெகிழி என்று ஒரு பொதுப்பெயர் இருந்தாலும், நெகிழியின் அளவு, வேதியியல் கூறு ஆகியவற்றைப் பொறுத்து பாதிப்பு மாறுபடும். அதை உறுதிசெய்யவே இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. பாதிப்புகள் தெளிவாக வரையறுக்கப்படும்போதுதான் தீர்வும் பயனளிக்கும்.

சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணி கொண்டது நெகிழித் துறை. எளிதில் அதை முடக்கிவிட முடியாது. ஏற்கனவே குறிப்பிட்ட நுண்மணிகள் பிரச்சனையை எடுத்துக்கொள்வோம். அது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிந்த உடனேயே பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நுண்மணிகள் இல்லாத பற்பசையில் பெரிதாக சுவை மாற்றம் இருக்காது, விலை கூடுதலாக இருக்காது என்பதால் அதற்காகக் குரல் எழுப்புவதில் நுகர்வோருக்கும் பெரிய மனத்தடைகள் இருக்கவில்லை. நுண்மணிகளைத் தடை செய்வதில் அரசுகளுக்கும் பொருளாதார அரசியல் பிரச்சனைகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லபோனால், “நாங்கள் நுண்மணிகளைப் பயன்படுத்துவதில்லை” என்று விளம்பரப்படுத்திக்கொள்வது நிறுவனங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. ஆகவே அதற்கான தடை 2017, 2018ல் பல நாடுகளில் எளிதாக அமல்படுத்தப்பட்டது.

நுண் நெகிழி சார்ந்த எல்லா பிரச்சனைகளும் இத்தனை சுலபமாக இருப்பதில்லை. தீர்வுகள் சிக்கலானவையாக, செலவு வைப்பவையாக இருக்கும்போது தொழில் நிறுவனங்களும் உடன்பட மறுக்கின்றன. செயற்கை இழை கொண்ட துணிகளைத் துவைப்பதால் கடலில் நுண் இழைகள் சேர்கின்றன என்பதை எப்படி நாம் எதிர்கொள்வது? செயற்கை இழைத் துணிகளைத் தடை செய்துவிட முடியுமா? எல்லாரும் இயற்கை இழை ஆடைகளை மட்டுமே அணியவேண்டும் என்று சொல்லிவிட முடியுமா? குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்கு தடிமனான ஆடைகள் தேவை. அவர்களில் எல்லாராலும் விலை உயர்ந்த இயற்கை இழை ஆடைகளை வாங்க முடியாது… குளிர்நாடுகளைச் சேர்ந்த வறியவர்கள் என்ன செய்வார்கள்?

முதன்முதலில் நம் வாழ்க்கைக்குள் நெகிழி நுழைந்தபோது மனித இனமே கொண்டாட்டத்துடன் அதை எதிர்கொண்டது. “இல்லத்தரசிகளுக்கு விடுதலை அளிக்கும் அதிசயப் பொருள்” என்று 1955ல் எழுதியது டைம் இதழ். இப்போதோ அதே நெகிழியால் நம் சாக்கடைகள் மூச்சுத் திணறுகின்றன. நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நுரையீரல் பிரச்சனையால் இறக்கிறார்கள். மனிதக் குழந்தைக்கு உணவூட்டும் தொப்புள் கொடிக்குள் கூட நுண் நெகிழித் துணுக்குகள் கண்டறியப்படுகின்றன.

பிரச்சனையின் ஆணிவேர் இதுதான். அதிசயப்பொருள் என்று கொண்டாடிய நாம், நெகிழி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நம் அரசியல், சமூக, பொருளாதார அடுக்குகளுக்குள் அது பயணித்து, எட்டு கைகள் கொண்ட கணவாயைப் போல மனித இனத்தை அது கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கிறது. ப்ளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களுக்கு பதிலாக 300 ரூபாய் கொடுத்து இணையத்தில் மூங்கில் உறிஞ்சுகுழல்கள் வாங்கும் மேட்டிமைவாதிகள் பலரும் “ப்ளாஸ்டிக் இல்லாத வாழ்வு” என்ற அறைகூவலை முன்வைக்கிறார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் எல்லாருக்குமானவை அல்ல.

நெகிழி இல்லாத வாழ்வு எல்லாருக்கும் சாத்தியமா? அதை எப்படி நடைமுறைப்படுத்துவது? இதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய அரசியல், பொருளாதார சமரசங்கள் என்ன? மக்கக்கூடிய நெகிழி (Biodegradable plastic) என்கிறார்களே அதை அனைவராலும் வாங்க முடியுமா? அதற்குப் பின்விளைவுகள் உண்டா? நுண் நெகிழிகள் உருவாகும் எல்லா இடங்களையும் கண்டறிந்து, அவை கடலுக்குள் செல்லாமலேயே தடுக்க முடியுமா? செயற்கை இழை ஆடைகளுக்கான மாற்று என்ன? -இந்தக் கேள்விகளுக்கான உலகளாவிய விவாதங்களும் உள்ளூர் தீர்வுகளும் இப்போதைய அவசரத் தேவைகள்.

கடலை மனிதன் மாசுபடுத்திய கதை இது என்றால், கடலுக்கே மனிதன் எல்லைகளை வகுத்த வரலாறு ஒன்று உண்டு. அது என்ன?

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button