இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

பாலை மழை – அன்பாதவன்

சிறுகதை | வாசகசாலை

பாலை மழைஅன்பாதவன்

 மழை! இரவிலிருந்தே மழை! இடைவிடாப்பெருமழை! பேய்மழை கனமழை என்பார்களே அதுபோல நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது. வானத்தை யாரோ பெரியதொரு கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கிழித்தாற்போல கொட்டோ கொட்டெ’ன்று மேகம் தொடங்கி பூமி தொடும் நீர்க்கம்பிகளின் நீளத்தை அளக்க, மழைக்கடவுள் இந்திரனாலும் இயலாது. மழைக்கோளாலும் முடியாது.

          இதென்ன இயற்கை மழையா… செயற்கை மழையா…? விண் பிளந்து மேகம் வெடித்து வீழும் தண்ணீர்க் கடப்பாரைகளா….?

          வளைகுடா நாடுகளில் பல பகுதிகளில் இதே போல் இடைநில்லா தொடர் மழையாம்…

     தொலைக்காட்சி, செய்திகளைக் காணொளி[லி]களாய்த் துப்பிக் கொண்டிருக்கிறது.

          உலகின் ரெண்டாவது, பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில், சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கிட்டதட்ட 295 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓடுபாதையெங்கும் நீரோடும் பாதை… நிற்காத வெள்ளம். மழையில் நனைந்த பறவைகள் போல விமானங்கள் நின்று கொண்டிருக்கின்றன..

      துபாய் பெருநகரின் பல பகுதிகளில் வாகனங்களின் தேக்கம்

          பலரும் நம்பிக் கொண்டிருப்பது போல துபாய் என்பது ஒரு நாடல்ல…. ஐக்கிய அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று.

          நான் வசிக்கும் துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரை நகரம். பொதுவாக வெயில் கொளுத்தும் வெப்பப் பிரதேசம். பொதுவாகவே வறண்ட வானிலை. வருடத்துக்கு 100 மி.மீ.க்கும் குறைவாகவே பெய்கிற மழை மறைவுப் பிரதேசத்திற்கு இப்போ என்ன ஆச்சு!     ஏனிந்த கனமழை! கால இடைவெளி இல்லாத கடும் மழை! …? எதற்கிந்த மாரியாட்டம்?

          ஒரு ‘துண்டிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு மையம், சூடான ஈரமான காற்றை உள்ளிழுத்த மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது.          வளைகுடாப் பகுதி நீண்டகாலம் மழையின்றி இருந்த பிறகு ஒழுங்கற்ற, அளவற்ற மழையைப் பெறுகிறது. இது அரிதான நிகழ்வு! மழை நீரை சேமிக்க எந்த நீர்ப்பிடிப்பு பிரதேசங்களுமில்லை. பர்துபாய் மற்றும் தெய்ரா நகரங்களை இணைக்கும் அப்ரா-வில் கலந்து வீணாகக் கடலில் கலக்கும் மழைநீர். அதனாலென்ன எப்படியும் மினரல் வாட்டர் பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படத்தான் போகின்றன.

          துபாயின் கனமழை காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன! சில நிறுவனங்களுக்கு  WORK FROM HOME–ம் அனுமதிக்கப்பட்டது.

          நானோ மக்கள் தொடர்பே பணியாய்க் கொண்ட வங்கியாளன்- நானெப்படி வீட்டில் இருந்த பணி செய்ய….? எப்படியாவது வங்கிக்கு கிளம்பியாக வேண்டும். பார்ப்போம் யாராவது போன் செய்கிறார்களா என்று….

          காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கப்பலின் ஹாரன் சப்தம் போல காற்றின் பேரோசை…. சாலையோர மரங்களின் தலைவிரியாட்டத்தின் வேகத்தை அளக்க கருவி அது…? வானுக்கும் பூமிக்குமிடையில் ஒரு கருஞ்சுழல்….! சுழன்று சுழன்று நகர்கிறது…. நீண்டு.. நெடிதுயர்ந்த கட்டடங்களும் மறைகின்றன… கருஞ்சுழலில்… பெருவாகனங்கள் ஓரங்கட்டி நிற்க, சிறு வாகனங்கள் எனும் இருசக்கர வாகனங்கள், சிறிய வகை கார்கள் இந்தப் புயலின் அதிவேகத்தை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன.

          வானிலிருந்து மின்னல் கொடி ஒரு ஒளியால் தீட்டிய கோட்டோவியமாய் ‘பளிச்’சிட்டு மறைய… இடியொன்றின் பேரோசை. பெருமரம் முறிந்து வேரோடு வீழ்கிறது.

          துபாய் போன்ற நகரத்தில் மழையே அதிகம்…! மழையோடு புயலும் சேர்ந்தால் அதீதம்தான்!          நானெல்லாம் பரவாயில்லை!          பாதுகாப்பான வீடு…! பாதுகாப்பான அடுக்ககம்.          எளிய மக்கள் இந்தப் பெரும் புயலை… பேய் மழையை எப்படி எதிர்கொள்வார்கள்?

          பார்க்கவும், நினைக்கவும் ரத்தக் கொதிப்பின் அளவு கூடுகிறது . தொலைக்காட்சியைத் துண்டிக்கிறேன்.

          துபாயிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள அல்-ஐன் (AL- AIN) நகரில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 256 மி.மீ மழை பதிவாகியிருப்பதால் BBC உறுதி செய்கிறது.

          அல்-ஐன் நகரில் தான் இருக்கிறார் என் இனிய நண்பர் ராமதாஸ்!

          அல் அய்ன், அபுதாபியில் இருந்து 160 கி.மீ துபாயில் இருந்து 120 கி.மீ, அல் அய்ன், அபுதாபி அமீரகத்தை சார்ந்த ஒரு நகரம்.

      நீங்கள் சிற்றிதழ் ப்ரியரா நண்பரே….! அப்படியாயின் ராமதாஸை உங்களுக்குத் தெரிந்திருக்காமல் இருக்காது. இலக்கியப் பணிகளுக்கெனவே தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்ட அணில்தான் ராமதாஸ்

       ஐக்கிய அமீரகத்தின் அல் அய்ன் – நகருக்கும் பண்ருட்டி – சேமக்கோட்டைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? அந்த தொடர்பின் பெயர்தான் ராமதாஸ்! பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கும் பெயர் பெற்றது..இப்போது ராமதாஸாலும் தான்

          முகநூல் நண்பராக அறிமுகமாகி, நான் பணி நிமித்தமாக துபாய் சென்றபின் சிலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், திடீரென சென்ற மாதம் ஒருநாள் அழைத்தார்.

      – அண்ணே வெள்ளிக்கிழமை காலையில் பதினொரு மணிக்கு துபாய் வர்றண்ணே… உங்கள சந்திக்கலாமா…?

       – என்ன கேள்வி ராமதாஸ்! கண்டிப்பா வரணும்! உங்களுக்கு சேர்த்து சமைச்சு வைக்கிறேன். இந்த உரையாடல் நிகழ்ந்தது புதன்.

வெள்ளியன்று துபாய் பேருந்து நிலையம் இறங்கியவருக்கு, என் வீட்டின் இருப்பிடத்தையும் வீட்டுக்கு வரும் வழியையும் கைபேசியில் கூகுள் மேப் வழியாக அனுப்பி வைத்து விட்டு, சமையலைத் தொடர்ந்தேன்.

      – ராமதாஸ் வருவதற்குள் ஒரு சிறு குறிப்பு…. என்னைப்பற்றி தான்!

       நான், ஆனந்தன்! இந்தியாவின், மிகப் பெரிய வங்கிகளுள் ஒன்றான குஜராத் வங்கியில், முதுநிலை மேலாளராக பணியாற்றுகிறேன். ஐக்கிய அமீரகத்தில் முதுநிலை மேலாளராகப் பணி. அமீரகம் சாராத வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த எங்கள் வங்கிக்கு மட்டுமே, ‘வங்கிப் பணி’ செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அமீரகத்தில் 7-கிளைகள். துபாயில் மட்டுமே 3- கிளைகள். துபாயின்

பிரதானக் கிளையில் ஏற்றுமதி இறக்குமதி பிரிவில் பணியில் இருக்கும் நான் தனியன்! குடும்பமெல்லாம் தமிழகத்தின் விழுப்புரம் நகரில்! சின்ன வயசில், தொடங்கிய வாசிக்கும் பழக்கம் 52 வயசுக்கு எழுத்தாளன் முகத்தையும் வழங்கி இருக்கிறது. இலக்கிய உலகில் என் புனைப்பெயர் அன்பானந்தன்.

     “போதுமே உங்கள் சுயதம்பட்டம்” என, உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கும் அதே தருணத்தில்தான் அழைப்பு மணி ஒலித்தது.

   – வாங்க ராம்தாஸ்…. வாங்க… உள்ள வாங்க…

   – வர்றண்ணே…. நல்லாயிருக்கியளா…..ஒருவழியா… முகநூல்ல இருந்து முக தரிசனம் இன்னைக்கு அண்ணனோட தரிசன தினமா ஆயிடுச்சு….

   – எழுதறவங்களுக்கு பேசவா சொல்லித் தரணும்! சோபாவுல… ஒக்காருங்க… நல்லா கம்பர்ட்டபிளா ஒக்காருங்க என்ன சாப்பிடலாம்? ‘டீ’யா காப்பியா?

   – டீ’ யே மதுரம்ண்ணே!

   -அட்றா சக்க… வந்த ஒடனேவா… இந்தாங்க மொதல்ல ஜில்லுன்னு தண்ணியக் குடிங்க.. டீ போட்டு எடுத்துட்டு வர்ரன்.

    தேநீர் கொதிக்கும் நேரத்துக்குள் ராமதாஸ் பற்றிய சிறு குறிப்பு

        தமிழ்நாட்டின் மருதம் சார்ந்த ஒரு கிராமத்தில் பிறந்து வயிற்றுப்பாட்டுக்காக இந்தப் பாலை நிலத்தை தேர்ந்தெடுத்த இந்த ராமதாஸ் தனி மனிதனாக செய்த சாதனைகள்தான் எத்தனையெத்தனை….!

      மறந்து போன பல சிற்றிதழ்களை ஒளிப்படமாக்கி தொலைந்து போன பழைய நூல்களை டிஜிட்டலில் வாழ வைத்த சாகசக்காரன்.

          அதில்லாமல் அகால இடைவெளியோடு ஓர் சிற்றிதழ்! தமிழ் கூறும் நல்லுலகம் எந்த சிற்றிலக்கியவாதியை வாழ வைத்திருக்கிறது! கவிதையோ, கதையோ எழுதும் கொம்பு முளைத்த இலக்கியக்காரனில் பாதிப்பேர் சந்தா கட்டுவதில்லை; சிற்றிதழைப் பரவலாக்குவதில்லை… ஆனால், எல்லா இதழிலும், தனது படைப்புகள் வரணும்! தனது படைப்புகள் மட்டுமே வரணும் என்கிற பேராசை பிடிச்சவன்கள் அல்லவா தமிழ் இலக்கிய வியாதிகளில் சிலபேர்! அதுவும் முகநூல் என்ற ஒன்று பெரும் மைதானமாய் விரிய ஊருக்கு நூறு பேர் கவிஞர்கள்! எழுத்தாளர்கள்! விமர்சகர்கள்! இதை வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை! ‘என் படைப்புகளை படிக்க விரும்பாதவன் படைப்பை நானெதற்கு படிக்கணும்?’ என்கிற கடுகுள்ளம், வெறும் லைக், கமெண்ட்க்குள் படைப்பிலக்கியத்தை சுருக்கிவிட்டதே என்கிற ஆதங்கம்தான்! இந்கேதான் ராமதாஸ் எனும் உன்னதன் பெருங்கலைஞனாக, மாமனிதனாக உயர்கிறான்.

          பண்ருட்டியைச் சுற்றியுள்ள, திருவதிகை, சேமக்கோட்டை சுடுமண் சிற்பங்கள், நாவுக்கரசர் பிறந்த திருவாமூர், சுந்தரர் அவதரித்த. திருநாவலூர் ஸ்தலம், தடுத்தாட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் – என வரலாறு, புராணம் குறித்த தகவல்களை தன் சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்த ராம்தாஸ், சமகாலப் படைப்பாளிகளையும் -அறிமுகப்படுத்தத் தவறவில்லை, இதுதானே ஒரு இலக்கியவாதியின் பணி! பாலையின் வியர்வையில் குளித்த ‘திர்ஹாம்கள்’ ரூபாய் வடிவெடுத்து சிற்றிதழை வண்ணமாயமாக்கின!

     – டீ ரெடி…… பிறகு பேருந்து பயணமெல்லாம் எளிதாக இருந்ததா…?

    – அதண்ணே ரெண்டரை மணிநேரம்… பஸ்ஸூல ஒக்காந்து ஒரு புஸ்தகத்த பிரிச்சா துபாய் வந்துடப் போகுது.

     -எழுத்துப்பணியெல்லாம் எப்படி போகுது?

      -அண்ணா… தமிழ்ஈழப் போராட்டதளங்களை மையப்படுத்தி ஒரு நெடுங்கதை எழுதலாம்ணு மனசுல ஒரு நெனப்பு ஓடிகிட்டு இருக்கு எப்போ டேக் ஆப் ஆகும்னு தெரியல

     – அதெல்லாம் திட்டமிட்டா கச்சிதமா முடிச்சிடலாம். சரி…. என்ன ப்ரோக்ராம் இன்னைக்கு ராமதாஸ்…?

      – அண்ணே.. ஒங்க கிட்ட சொல்றதுக்கென்ன! இன்னும் ரெண்டு மாசத்துல, வேலைய விட்டுட்டு ஊர்ப்பக்கமே போயிடலாம்னு பாக்குறேன். திருவாமூர் பக்கமா கொஞ்சமா நிலம் வாங்கி போட்டுருக்கன்… பயிர் பண்ணலாம்… ஒரே பொண்ணு… +2 இந்த வருஷம்.. கடலூர்ல ஏதாவது காலேஜ்ல சேக்கணும்.. பண்ருட்டில எங்கயாவது ஜெராக்ஸ் கடைய போட்டுகிட்டு ஒக்காந்துடலாம்னு பாக்குறேன்…

    – நல்ல விசயம் தானே… ஏன் கொரல்ல சுணங்கல்…?

    – டீ, அருமையா இருக்குண்ணே… அது வேற ஒண்ணும் இல்லைண்ணே.. கம்பெனிகாரன்க பாஸ்போர்ட்ட திருப்பி குடுக்குறதுக்கு யோசிக்கிறானுங்க…! விசா கேன்சல் பன்ற செலவு… புதுசா எவனையாவது வேலைல சேக்கனும்… விசா எடுக்கணும்.. அது ஒரு செலவு… எனக்கு மொத்தமா பணம் செட்டில் பண்ணனும்… என்னைய.. இப்போ போவாத.. போவாதன்னு நெருக்குறான்க….

      – அடடே… பெரிய அதிகாரிங்க இருப்பாங்களே யாராவது… பேசிப் பாக்குறது தான…!

     – அதுவும் பேசிட்டண்ணே.. கம்பெனிக்கு மொதலாளி அரபிக்காரன்தான்! அவனோட அஸிஸ்டென்டு ஒருத்தன் நம்ம கேரளா முஸ்லீம்தான்… அபுபக்கர்னு. அவர் மூலமா குடும்ப சூழ்நிலையெல்லாம் சொல்லி, என்னைய விட்டுற சொல்லுங்க… ஆச்சு.. வந்து 27 வருஷம் காலம் தனியாவே போச்சு… இனிமேலாவது குடும்பத்துக்கூட கொஞ்ச காலம் இருக்கணும்னு சொல்லி கேட்டுருக்கன். பாக்கலாம்…! இது வாடகை வீடாண்ணே…?

      – இது எங்கள மாதிரி இந்தியாவுல இருந்து, டிரான்ஸ்பர்ல வந்தவங்கணுக்கான குவார்ட்டர்ஸ்… ரெண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், கட்டில், சோபா… கேஸ் ஸ்டவ் எல்லாமும் பேங்க்கே கொடுத்துடும். வீட்டப் பாருங்களேன்

       – சூப்பர்ண்ணே… இங்க தனியார் கம்பெனில எல்லாம் எப்படி தெரியுமா..?

       -கேள்வி பட்டிருக்கேன்… வாராவாரம் ரூம் க்ளின் பண்ண ராமநாதபுரத்துக்காரரு முத்துன்னு வருவாரு. அவருதான் சொல்வாரு… ஒரே ரூம்ல 8 படுக்கை 16 படுக்கையெல்லாம் அடுக்கடுக்கா இருக்குமாமே!

      -ஆமாண்ணே… எங்க லேபர் குவார்ட்டர்ஸ் பரவாயில்ல… ஒரு ரூம்ல மூணடுக்கு மூணடுக்கா ஆறு படுக்கை.. அட்டாச் பாத்ரூம், ஒரு டீவி… அது எந்த நேரமும் ஓடிக்கிட்டே இருக்கும்… ஏதாவது ஒரு பாஷை பேசிகிட்டு பாடிகிட்டு!

      – ஒரு வகைல, வேற வேற நாட்டுக்காரங்க, பாகிஸ்தானி, பங்காளதேஷின்னு புதுசா தொடர்புகள் கிடைக்கிறது அனுபவம் தானே…!

      -ஆமாண்ணே! என்ன பாஷை ஒரு பிரச்னை… அவன் சொல்றது நமக்குப் புரியாது… நாம சொல்றது அவனுக்கு புரியாது…நம்ம இந்தியாவுல இருந்து வந்தவங்கூடவே இந்த பிரச்னை.. இந்திக்காரன் சொல்றது என்னன்னு எனக்குப் புரியாது… நான் பேசுறது அவனுக்கு ஆவாது! ஓரளவு நமக்கு சாதகமா இருக்குறது மலையாளம்,.. ஆனாலும் கேரளாக்காரனுக்கு தமிழ்நாட்டுல எந்தவூர்க்காரனும் ‘பாண்டிப்பய’தான்!

      -சாப்பாடு எல்லாம் எப்படி… ராமதாஸ்…

       – அதெல்லாம் சமையல் செஞ்சி, ‘பேக்’ பண்ணி குடுக்குறதுக்குண்ணே பிரைவேட் கம்பெனிங்க இருக்கு.. நம்ம தமிழ்நாட்டு சாப்பாடு வேணும்னு சொல்லிட்டம்னா சாம்பார், ரசம், பொறியல், கூட்டுன்னு குடுத்துடுவாங்க வடக்கன்களுக்கு ரொட்டி, தால் இருக்கணும் பச்ச வெங்காயம் இல்லன்னா செத்தே போயிடுவான்.

     – உங்க கம்பெனி, இதுதான…Al ain General Public Contracting Company L.L.C, Al ain  இது லேபர் காண்ட்ராக்ட் கம்பெனிதான, அநேகமா எங்க பிராஞ்ச் கஸ்டமர்ன்னு தான் நினைக்கிறேன்

      – மொதல்ல.. இங்க உள்ளூர்ல எந்தெந்த கம்பெனிங்களுக்கு எந்த மாதிரி லேபர் வேணும்னு கேட்டுக்குவோம்ண்ணே…! ஸ்கில்டு லேபர்.. அன்ஸ்கில்டு லேபரான்னு பிரிச்சுக்குவோம் அந்தந்த கம்பெனிங்க தேவைக்கேத்த மாதிரி நம்பர்ல விடியற்காலை சாப்பாடு பார்சல குடுத்து பஸ் ஏத்தி விட்டுவாங்க… சாயந்திரம் வேல முடிஞ்சு, அதே பஸ்ல கூட்டிட்டு வந்து குவார்ட்டஸ்ல எறக்கி விட்டுடுவாங்க.. வெள்ளிக்கெழமை ஓய்வு நாள்… அதுலயும் வெளிவேலைக்கு ரூம் கிளீனிங் போல போறவங்க சில பேர் உண்டு.

      – ஆமாமா… என் வீட்டுக்கு வர்ர முத்து அப்டி வர்ரவருதான்… இன்னைக்கும் சாயங்காலமா வருவாரு..

      -எந்த நாட்டுல இருந்து லேபரா வந்தாலும் பாஸ் போர்ட்டை வாங்கி வச்சிக்குவாங்க.. புடிச்சாலும் புடிக்கலைண்ணாலும் கான்ட்ராக்ட் காலம் வரைக்கும் இங்க யூ.ஏ.இ-ல மூணு வருஷம்- கட்டாயமா இருந்தாகணும். ரொம்ப வற்புறுத்துனா ஆளவிட்டு அடிச்சி பாலைவன மணல்ல பொதச்சிடுவானுவோ

     – அப்புறம் ஏன் உங்கள விட மாட்றாங்க…. பாஸ்போர்ட்டை குடுத்து பணத்த செட்டில் பண்ண வேண்டியது தான..?

     -அதுதாண்ணே…. எனக்கு புரியல… நானும் லேபரா சேந்தவன்தான்…. கொஞ்சம் வேலயக் கத்துகிட்டு இன்னைக்கு ஆபீஸ்க்குள்ள இருக்குறன். அதனாலதான் சிற்றிதழ்ங்க… புக்ஸ் எல்லாம் ஆபீஸ்லேயே வச்சி ஸ்கேன் செய்ய முடியுது… மெயில்ல அப்டேட் பண்ண முடியது.எனக்கோ ஜாதகத்துல ’சகடை யோகம்’.அப்ப்டித்தான் வறுத்தெடுக்கும்.

     -அதென்ன ’சகடை யோகம்’ ராமதாஸ் புதுசா இருக்கே…!

     -ஜனன ஜாதகத்துல குரு இருக்குற எடத்துல இருந்து 6,8,12 ல சந்திரன் நின்னா சகடயோகம்னு சொல்லுவாங்க. சகடைன்னா சக்கரம்னு அர்த்தம். இதுபோல அமைப்புள்ள ஜாதகர் வாழ்க்கையில ஓய்வு ஒழிச்சலில்லாம சக்கரம் போல சுத்திக்கிட்டே இருப்பாங்க…அதேசமயம் இந்த ஜாதகர் ஓய்வில்லாம ஒழைச்சுகிட்டே இருந்தாலும் அதற்குண்டான நற்பலனையும் சம்பாத்யம் செல்வம் எல்லாமும் அடைவாங்கன்னு சொல்லுவாங்க… நானும் சக்கரத்தாழ்வார் போல சுத்திக்கிட்டே இருக்கன்..

        – சரி நல்லதே நடக்கும்.. மனச வுட்றாதீங்க… மதியத்துக்கு மீன் குழம்பு, மீன் வறுவல், சிக்கன் பிரியாணி, வெள்ளைச் சோறு போதும்தானே!

    – அண்ணே… வூட்டு சாப்பாடு சாப்ட்டே பல காலம் ஆச்சி… பழையது வெங்காயம் குடுத்தாக்கூட அமிர்தம்தான்! சாப்புட்டு சாயந்திரமா ‘தெய்ரா’ போறேன் அங்க சில நண்பர்கள் இருக்காங்க… பிறகு அங்கருந்து கௌம்பி ஷார்ஜா போயிட்டு வலங்கைமான் நூர்தீன் ரூம்ல தங்கி, சில ஃபிரண்ட்ஸ்ஸ பாத்துட்டு,, காலைல ஷார்ஜாவுல இருந்து அல்அய்ன் கௌம்பிடறேன். சரியா…அண்ணே இந்த கவிதைய கொஞ்சம் பாருங்க ..தேறுமான்னு சொல்லுங்க”.  காகிதத்தை கொடுத்தார்:

நிழல்எரியும்பொழுது

ABU DHABI

தத்தும் புறாக்குஞ்சுகளும் கத்தும் மைனாக்களும்இன்றி

வெறிச்சோடிக் கிடக்கிறது சாலை

மணல்வாரித் தூற்றும் கடுங்காற்று

புழுதித்திரையில் மறையும் ஒளிக்கதிர்

மஞ்சலொளி கக்கி வரும் வாகனங்களின் ஓலத்தோடு

கரைவந்து கடற்காகங்கள் அரற்றுவதன் அர்த்தமென்ன?

தங்கமாநகரை போர்வையால் மூடும்

மணல்புயல்.

முகம்மூடி கண்மறைத்து

தள்ளாடி நடக்கும் வெளிதேச உழைப்பாளிகளின்

நுரையீரலை அப்பும் மணல்புழுதி.

DUBAI

போர்வீரனாகி குண்டுவீச்சினைப்போல

வெப்பம் பொழிகிறான் பகலவன்

நிலவு வரும்வரையிலும்

அடங்கா அனல்

சாலையோர ஈச்சைகளுள்

பதுங்கிக் கிடக்கின்றன பாலைப்பட்சிகள்

தனிமையின் உக்கிரத்தில்

AJMAN

எதிர்பாராதவிதமாக மோதுகிறதோர் பெருங்கப்பல்

சாய்ந்துசரியும் பிறிதொரு கடற்கலம்

உப்புநீருக்குள் கண்டாய்னர்கள் மறைய

உடைந்து தெறிக்கும் எண்ணெய்ப்பீப்பாய்கள்

நீலநீரின் மீதான வன்புணர்வாய் படரும்

கறும்பச்சை திரவம்

செத்துமிதக்கின்றன மீன்கள்.. பறவைகள்..

இன்னபிற கடலுயிரிகளும்

இயல்பாய் கடக்கின்றன… பிற நாவாய்கள்

இயல்பாய் பதிவுசெய்யும்ஊடகங்கள்

இயல்பாய் மறந்துபோகும்சாமான்யர்

இயல்பாய் சுழல்கிறது பூமி.

UMM AL QUWAIN

பலதேச மனிதர் தம் பாதம்படும்

நடைமேடையில்

விச்ராந்தியாய் உறங்குமொரு பூனையை

ரசிக்குதொரு தேசங்கடந்த குழந்தை

’குயிங்குயிங்’ எனெ ஷூ ஒலியெழுப்ப

ஆமோதிக்கும் தோழமைக் குகுரலொன்று

‘மியாவ் மியாவ்’ என

கண்கடந்து செல்லும் முகங்களில்

எல்லைகளும் மொழியும் தாண்டிய விசாப் புன்னகை

குழந்தைக்கும் பூனைக்கும் ஏது மொழியும் நாடும்

வானிலிருந்து கீழிறங்கும் கடவுளின் குரல்.

FUJAIRAH

உலகின் மிக உயர்ந்த கான்கிரீட் சக்கரத்திலிருந்து

நோக்குமவன் கண்களில் தேங்கிய ஏக்கம்

கடல்தாண்டி தெரியுமோ காதலி வதனம்?

வயிறு துரத்த பாலை வந்தவனின்

தலையில் கொத்திப் பறக்குமொரு

கொடுங்கழுகு.

RAS AL KHAIMAH

தாழ்வாரத்துப் புறா பகர்ந்ததிது:

வளைகுடா வாழ்வென்பது

அத்தர்களின் சுகந்தமும் மஞ்சள்தங்கமும் மட்டுமே அல்ல

தோழனே அது பலதேச வியர்வை

தனிமைகளின் கண்ணீர்

சுண்டிப்போன சுக்கிலம்

வெயிலும் குளிரும் குடித்த

குருதியின் மிச்சம்.

-அடடே.. அபாரமா இருக்கே.. அடுத்த இதழ்ல வெளியிட்டுருங்க.. சரி வாங்க சாப்பிடலாம். உணவுக்குப்பின் விடைபெற்று கிளம்பிச் சென்றார் ராமதாஸ்.

*****

பாலைமழை சப்தம் தாண்டி கை பேசியின் அழைப்பொலி

அட வலங்கைமான் நூர்தீன்!

  -வணக்கம் நூர் ,நலமா..?

  -சேதி தெரியுமா ..?

  – தெரியாதே… என்ன விஷயம்?

 -தினத்தந்தி வாங்குறீங்க தானே ..எட்டாம் பக்கம் பாருங்க..

கொட்டும் மழையிலும் பேப்பர்கார கடமை வீரன் வாசலில் தினத்தந்தியை வீசி விட்டுச் சென்றிருக்கிறான்.. தினத்தந்தி துபாய் பதிப்பில் பார்வைக்குப் படாத ஒரு மூலையில் சின்னஞ்சிறு செய்தியாக ராமதாஸ் பதிவாகியிருக்கிறார்.

அல் அய்ன் பாலை வனத்தில் தமிழக வாலிபர் மர்ம மரணம்.           அல் அய்ன், நகரில் பிரபல தொழிலகம் ஒன்றில் ஊழியராகப் பணி புரிந்து வந்த தமிழ்நாட்டின், பண்ருட்டி பகுதியைச் சார்ந்த ராமதாஸ் என்கிற வாலிபர் தொழிலகத்தின் அருகிலுள்ள பாலைவனப் பகுதியில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அல் அய்ன், போலிசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.  

ராமதாஸ் ஞாபகச் சுழல் என்னுள் சுழன்று வீச மழை …இடைவிடாப்பெருமழை…! பேய்மழை கனமழை நிற்காமல் பெய்து கொண்டே இருக்கிறது.

anbaadhavanjp@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button