
“கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் பேரைச்சொல்லி நாலு படி பால் கறக்குது ராமாயி”, என ராமர் கோவில் ஸ்பீக்கரில் பாடல் அலறியது.
மார்கழி மாதத்து அதிகாலைப் பனி நாசிக்குள் சென்று முதுகுத் தண்டுவரை குளிர்ச்சியான குறுகுறுப்பாய் மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே, வரிசையாக பாடிக்கொண்டிருந்த கண்ணன் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஜெயா. என்னதான் போர்வையை இழுத்துப் போர்த்தியிருந்தாலும், இரவு அவளையும் மீறி நனைத்திருந்த ஆடையில் ஈரநசநசப்பும், மூத்திர வாடையும் குமட்டிக்கொண்டு வந்தது. எத்தனை தடவை பலிபீடத்தில் அம்மா சோறுவாங்கிக்கொடுத்து தின்னச் சொன்னாலும், விளக்கமாற்றைத் தலைமாட்டில் போட்டுக் கொண்டு திருநீறு பூசிக்கொண்டு படுத்தாலும், கனவுகளில் குதிரை மீது ஏறி அவளைத்துரத்தும் மொட்டை கிழவியிடமிருந்து தப்பிக்க அலறி,படுக்கையை நனைத்து விடுகிறாள்.
“ஏழாவது படிக்கிற எருமை மாடு, எப்பவேணாலும் வயசுக்கு வந்து உட்காரப்போற கழுதை. தினமும் இப்படி பாய் அலசிட்டு கிடக்கிற. உனக்கு அப்பறம் பொறந்தது எல்லாம் எவ்வளவு அழகா தூங்கி எந்திரிக்குதுங்க. ஏண்டி இப்படி பண்ற?” என அம்மா திட்டாத நாளில்லை.
‘இன்று அம்மா சத்தம் போடுவதற்கு முன்பே எழுந்திருச்சிடணும்’ என நினைத்துக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்த ஜெயா, படுத்திருந்த பாயைச் சுற்றிக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள். கம்பிக் கேட்டைத் திறந்து வாசலில் அடி எடுத்துவைக்கப்போனவளின் முன்பு ரோஸி தலைத்தெறிக்க ஓடியது. ரோஸி இவளது வளர்ப்புநாய். அது தெருநாய்தான். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்து ஒரு டம்ளரில் ஐஸ் தண்ணீரும், முனைகளில் மழைத்துளிகளைப்போல் டிசைன் செய்யப்பட்ட க்ளாஸ்கோ பிஸ்கட்டும் எடுத்துக்கொண்டு வந்து வரிசையாகக் கட்டப்பட்ட படிகளில் அமர்ந்து விடுவாள். தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டே தண்ணீரில் நனைத்து நனைத்து அந்த பிஸ்கட்டைத் தின்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்..அப்படி அமர்ந்திருக்கும் வேளைகளில் ரோஸி தான் அவள் தூக்கி எறியும் பிஸ்கட்டுகளுக்காக கூடவே வாலை ஆட்டிக் கொண்டு, ரோஜா இதழ் போன்று நெளிந்த தொளதொளவெனத் தொங்கும் நாக்கை நீட்டிக்கொண்டு இவளைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்கும்.
ஓடிய ரோஸியைத் துரத்திக்கொண்டு தொடர்ந்து ஏழெட்டு நாய்கள் ஓடின.இதைப்பார்த்த ஜெயா, “அம்மா! அம்மா! ஓடிவாங்க ,நாயா ஓடுது. யமாருக்கு” என உள்ளே பார்த்துக் கத்தினாள்.
“சனியனே! காலங்காத்தால எதுக்குடி வாசலுக்கு போன? தம்பிக்கு பால் கொடுத்திட்டு இருக்கேன். செத்த பொறுடி வர்றேன்!” எனச் சொன்ன கையோடு, மார்புகளில் பாலை உறிஞ்சுவதும் இவள் முகத்தைப் பார்த்து சிரிப்பதுமாக இருந்த ப்ரவீணை கொஞ்சிக்கொண்டே மார்பிலிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கித் தரையில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயாவின் தங்கை புவனாவின் அருகே கிடத்தினாள். ‘வர வர இந்த பீரவினுக்கு சேட்டை அதிகமாகிட்டு. ஆறுமாசக்குழந்தை மாதிரி செவனேன்னு கிடக்கறதில்லை..நவுந்து நவுந்துப் போயி எதையாவது எடுத்து வாயில வைக்க வேண்டியது அப்பறம் கழிஞ்சிட்டே கிடக்க வேண்டியது’ என எண்ணிக் கொண்டே ஜெயாவைப் பார்க்க வாசலுக்கு விரைந்தாள் மேகலா.
மேகலா ரொம்ப அழகென்று சொல்ல முடியவில்லையெனினும் லெட்சணமாக இருப்பாள். அதிகமான உயரமும், அகன்ற தோள்கள், உடலமைப்பு,விழிகள் எல்லாமே சிறிது ஆண்சாயலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். பார்ப்பவர்கள் அவளது உருவத்தை தலையிலிருந்து கால்வரை இவ்வளவு உயரமா என அளவெடுக்காமல் நகர மாட்டார்கள்
சரியாக மேகலா வாசல் வருவதற்கும்,ஓடிப்போன நாய்கள் அதே வேகத்தோடு திருப்பித் துரத்திக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.. இதைப்பார்த்த மேகலாவிற்கு கடுமையான கோபம் வந்தது.
“என்னங்க! என்னங்க.. ஜெயா அப்பா, இங்க பாருங்க. மார்கழி மாசம் ஆனால் இந்த நாய்களோட தொல்லை தாங்கல. சே..சே! கருமம். முனிசிபாலிடிக்கு போன் பண்ணிச்சொல்லுங்க. ஒரு நாய் விடாம ,எல்லாத்தையும் பிடிச்சிட்டுப் போகச்சொல்லுங்க. இதைப்பார்த்தாலே அருவெறுப்பாகுது. இல்லை.. விஷத்தை வச்சிக் கொல்லச் சொல்லுங்க. ஒரு நாய் பின்னாடி எத்தனை நாய் ஓடுது பாருங்க..அசிங்கம் பிடிச்சதுங்க,” என்று சொல்லிக் கொண்டே கணவன் சேகரைப் பார்த்தாள் மேகலா.
மாடிப்படி ஓரமாக முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டிவிட்டு, அதன் உயரத்திற்கு கால்களைப்பரப்பி தலையைக் குனிந்து சவரம் செய்துக்கொண்டிருந்தவன் திரும்பிப்பார்த்து, “ஏண்டி இப்படி கத்துற, மெதுவா பேசுடி. ப்ளேடு கிழிச்சிற போதுடி..நான் என்ன உங்க அப்பன் மாதிரி உட்காந்துகிட்டே வெள்ளாமையா பண்றேன்? கவர்மென்ட் வேலைடி. தினமும் நீட்டா போகணும். காதுல விழுது .. நான் என்ன செவுடா? ஏன் இப்படிகே கத்துற..பக்கத்துல உள்ளவங்க என்ன நினைப்பாங்க..ஆத்தாளும் பொண்ணும் எதுக்குடி காலங்காத்தால நாயப் போய் பார்த்துட்டு இருக்கீங்க..என்னை தான் அடக்கி வச்சிருக்க..நாயிகிட்ட எல்லாம் உன் ரூல்ஸ் செல்லாதும்மா “என்று மேகலாவிடம் குத்திக்காட்டிவிட்டு,” சரி சரி உள்ளப்போங்க..” என்று கூறியவாறே மேகலாவின் முகபாவனைகளை தந்திரமாகக் கவனித்துக்கொண்டே, கப்பிலிருந்த அழுக்குத்தண்ணீரை வாசலில் ஊற்றினான் சேகர்.
“அப்பா! நான் வாய்க்கால்ல போய் பாய அலசிட்டு வர போறேன்பா,ஜில்லுன்னு தண்ணி ஓடும்…இப்பல்லாம் தண்ணீல கலர் கலர் மீனு வருது..அத பிடிக்க தண்ணிப்பாம்பு நெளிஞ்சி நெளிஞ்சி வருதுப்பா. அப்ப நான் ஓடிப்போய் படித்துறையில ஏறிப்பனே!”என்று கண்கள் விரியப் பேசிக்கொண்டிருந்தவளிடம், “ஏய் ஜெயா, இருடி.. தம்பி மூத்திரத்துணியெல்லாம் தர்றேன். அப்படீயே சோப்புப் போட்டு அலசிட்டு வந்துரு” என்று சொல்லிவிட்டு ,சிறிய அன்னக்கூடையில் துணிகளையும் சோப்பையும் கொண்டுவந்து தந்தாள் மேகலா.
“ரொம்ப நாழி தண்ணீல ஆடக்கூடாது. போனோமா வந்தோமான்னு இருக்கணும் என்ன! வந்து ஸ்கூலுக்கு போகணும்..லேட்டா வந்தீன்னா தோலை உறிச்சிடுவேன்” என்ற மேகலாவின் கையிலிருந்து அன்னக்கூடையை வெடுக்கெனப்பிடுங்கி, சின்ன இடுப்பில் பொருத்திச் சாய்த்து வைத்துக்கொண்டு, மறுகையில் பாயைச் சுற்றி எடுத்துக்கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் ஜெயா.
அந்த அதிகாலை நேரத்து வெயில் அந்த புராணத்தெரு முழுவதையும் பொன்னிறமாக மின்ன வைத்துக் கொண்டிருந்தது. அனைத்து வீடுகளின் பக்கவாட்டிலும் கிளுவ இலை வேலி அடைத்து, உள்ளே வயலெட், ரோஸ், வெள்ளை, இராமர் நிற டிசம்பர் பூக்கள் மலர்ந்து ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. செம்பருத்தி பூக்கள் கன்னிப்பெண்களின் முணுமுணுப்பான பேச்சினூடே திறக்கும் இதழ்கள் போல மலரத் தொடங்கியிருந்தன.
இராமர் கோவில் மடப்பள்ளியில் வெண்பொங்கலுக்கான வாசம் மெலிதாகக் கமழ்ந்துக்கொண்டிருந்தது. தூரத்தில் தெரிந்த மிகப்பெரிய ஏரியின் நடுவிலிருந்த மேட்டுகளில் முளைந்திருந்த கருவேல மரங்களின் மேல் அமர்ந்திருக்கும் வெண்கொக்குகளும் ,நாரைகளும், வலசைப்பறவைகளும் சேர்ந்து இங்கிருந்து பார்க்க வெண்பஞ்சு மேகமொன்று இறக்கை விரித்துப் பறப்பது போலிருந்தது.. ஏரியில் காற்றினால் உருவாகிக் கொண்டிருந்த சின்ன அலைகளின் நுரைகள் கடல்பஞ்சுகள் போல ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருந்தன.. ஜெயா ஏரியைப்பார்த்துக்கொண்டே ,ஏரியைத் தாண்டி வயல்களுக்கு நீர்போகும் சிறிய வாய்க்காலுக்கு வந்தாள். இங்குதான் அவளது தோழிகள் குளித்துக்கொண்டிருப்பார்கள்.ஏரியில் குளிக்கப் போகலாமெனில் படித்துறை அருகிலேயே இவளது உயரத்திற்கு தண்ணீர் ஓடும். அம்மாவோடு வந்தால் தான் ஜெயா ஏரிக்கு குளிக்கச் செல்வாள். இல்லையெனில் அங்கு ஏரி ஓரமாக விளைந்திருக்கும் விரலளவு வெள்ளரிப்பிஞ்சுகளை ‘கறுக்முறுக்’ என்று மென்றுக்கொண்டே வாய்க்காலுக்கு வந்துவிடுவாள்.
“ஏண்டி தினமும் பாய் அலசுற?” என வினவும் தோழிகளிடம்,”தம்பி பையன் தினமும் உச்சா போயிடுறாண்டி!” என சிரித்துக்கொண்டே, மூஞ்சியை பாவமாக வைத்துக்கொண்டு பொய் சொல்வாள்..
2
“மேகலா! மேகலாக்குட்டி என்ன பண்ற?” என்று கூப்பிட்ட கணவனின் குரலுக்கு, நெற்றியைச் சுருக்கிக்கொண்டே, “எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு தெரியலையே” என்று வசீகரமாகப் புன்னகைத்தாள் மேகலா.
“உனக்காடீ தெரியாது? சரி, வா சீக்கிரம். நைட்டும் புள்ளைங்க தூங்க நேரமாகிடுது.பெரியவ குளிக்க போயிட்டா. இரண்டும் தூங்குது.. சீக்கிரம் வாடீ ..எல்லாம் முழிச்சிரப் போகுதுங்க. அது என்னவோ தெரியலடி உன்னைத் தொட்டதும் புள்ளைங்களுக்கு மூக்குல வேர்த்துடுது” என்றவாறே, மேகலாவை தன் பக்கம் இழுத்து நெஞ்சில் சாய்த்துக்கொண்டான் சேகர்.
“என்னங்க இது..நேரமா..? புள்ளைப் பிறந்து ஆறுமாசம் தானே ஆகுது” என வாய் சொன்னாலும், அவனை தூண்டத் தொடங்கியிருந்தாள் மேகலா.
“ச்சீ! வாயை எடுங்கங்க..குழந்தைக்கு பால் பத்தாம போயிடும்..சொல்றேன்ல்ல,” என அதட்டியவளின் குரல் கேட்டு மெல்ல முண்டி, பாலுக்கு அழத்தொடங்கினான் ப்ரவீன்..
“என்னாடி இது..சே! சரி,சரி புள்ளையப் பாரு. ஆபிஸ்க்கு லேட்டாகுது” என விலகி உடைகளை அணியத் தொடங்கினான் சேகர்.
அப்பொழுது மெலிதாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் வாசலுக்கு எரிச்சலாக விரைந்தான். அங்கே சிறிய கிண்ணத்தை கைகளில் வைத்துக்கொண்டு, “இல்லைங்க.. இங்க காலிங்பெல் எங்க இருக்குன்னு தெரியல. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்துருக்கோம். கொஞ்சம் ஜீனி வேணும். வீட்ல பொம்பளைங்க இருக்காங்களா?” என்பவளைப் பார்த்து பிரமித்து நின்றான் சேகர். வெள்ளை வெளீரென கைகள், முக்காடிட்ட முகத்தில் சிறிது வெளிபட்ட அழகிய கண்கள், சிறிய வாய், கூர் நாசி, கன்னங்களில் மின்னும் பளபளப்பு என அங்குலம் அங்குலமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, “யாரது?” எனக் கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தாள் மேகலா..
மரியாதை நிமித்தம் உள்ளே வந்து ஒரு பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டிருந்த சேகரின் கவனமெல்லாம் வாசலிலேயே குமிந்து கிடந்தது.
ஜீனியை கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தவளிடம், “என்ன மேகலா?யாரு இவங்க “என்று எரிச்சலாகக் கேட்பது போல் கேட்ட சேகரிடம், “பக்கத்து வீட்டுக்குப் புதுசா குடிவந்திருக்காங்க, அவுங்க புருஷன் துபாய்ல இருக்காராம். இரண்டு புள்ளைங்க..அவுங்க ஊரு கிராமமாம்..அதுனால புள்ளைங்க படிப்புக்காக இங்க வந்திருக்காங்க. என்னங்க! நீங்க பார்த்தீங்களா எவ்வளவு வெள்ளையா அழகா இருக்காங்கன்னு,” என்று சொன்ன மேகலாவை நிமிர்ந்து பார்த்த சேகர், “என்ன பெரிய அழகு..வெள்ளை..எல்லாம் மேக்கப்பா இருக்கும்.” என்றவனின் கண்களில் நரியின் தந்திரப்பார்வையும், வேட்டை விலங்கொன்றின் எச்சில் வழியும் கூர் பற்களும் மறைந்திருந்தன.
மேகலாவிற்கோ,புருஷன் தன்னைத்தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை என்ற கர்வம் தலைதூக்கியது.
ஒரு மாதம் சென்றிருக்கும். அன்று சாயங்காலம் பள்ளி விட்டு வந்ததும், ஜெயா வாசலில் வரும் கார்ப்பரேசன் குழாயில் வரும் தண்ணீரை அவளுக்குப் பொருத்தமாக இருந்த குட்டிக்குடத்தில் பிடித்து வாசலுக்கு தண்ணீர் தெளித்து, ஸ்டார் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.
“குட்டிப்பாப்பா.. அழகா கோலம் போடுறீயே, உன் பேரு என்ன?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்தில் நிழலாடுவதைக் கண்ட ஜெயா, “நீங்க யாரு? வாளியில என்ன வச்சிருக்கீங்க?” எனக் கோலம் போடுவதை நிறுத்தாமல், அண்ணாந்து பார்த்துக்கொண்டே கேட்டாள்.
“முறுக்கு இருக்கு. சாப்பிடுறீயா?” எனக்கேட்டவாறே இரண்டு முறுக்குகளை எடுத்து ஜெயா கையில் கொடுத்தாள் பவித்ரா.
அதை அவள் எடுத்து வாயில் வைக்கப்போகும்பொழுது, எங்கிருந்து வந்தாளோ தெரியவில்லை..பளீரென வாயிலேயே அறைந்து அந்த முறுக்குகளை கீழே தள்ளிவிட்டாள் மேகலா.
“ஏண்டி பொறம்போக்கு நாயே, அந்த சீட்டாட்ட க்ளப்புக்கு முறுக்கு விக்கப் போறதோட வச்சிக்க. என் பொண்ணத் தொட்டு பேசற வேலையெல்லாம் வச்சிக்காத.. நீ அங்க முறுக்கு விற்க எதுக்குப் போற..என்ன செய்யறேன்னு நல்லாத் தெரியும்டி” எனச் சொல்லிக்கொண்டே பவித்ரா நின்றிருந்த இடத்தில் குட்டிக் குடத்திலிருந்த தண்ணீரை ஊற்றி விளக்குமாற்றால் அவ்விடத்தைக் கூட்ட ஆரம்பித்தாள் மேகலா. “பேரைப்பாரு பாரு பவித்ரா..விளக்குமாத்துக்கு பேரு பட்டுக்குஞ்சமாம்” என அவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வன்மம் தெறித்தது.
“அக்கா, நீங்க திட்டறது ஒண்ணும் புதுசில்லை. ஊரே திட்டுது. நான் ஒண்ணும் சுகத்துக்காக இதப்பண்ணல.. இரண்டு பச்சப்புள்ளைங்களுக்கு பால்வாங்கக்கூடக் காசில்லாம தான் பண்றேன். எங்கூரு பக்கம் சொல்லுவாங்க, ஆயி செத்துட்டா அப்பன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சித்தப்பனாகிடுவான். அப்பன் செத்துட்டா அம்மா ஊர்மேல போயாவது புள்ளைங்கள காப்பாத்திடுவான்னு. நான் அத தாங்கா செய்யறேன்.. உங்கள்ட்ட ஒண்ணு சொல்லணும்..நான் வேணா வீணாப் போனவளா இருந்துக்கறேன்கா..உங்க வீட்டுக்காரர ஏரிக்கரைப்பக்கம் ஒரு முக்காடு போட்ட பொண்ணோட பார்த்தேன். வாழ்க்கையை நழுவ விட்டுட்டாதீங்க அக்கா. இந்தப்பக்கம் போறப்ப வர்றப்பல்லாம் பார்த்துருக்கேன். நீங்க வாசல்லக் கூட நின்னதில்லை. நான் சொல்லறத சொல்லிட்டேன். நான் வர்றேன்கா. புள்ளையப்போட்டு அடிஅடின்னு அடிச்சிப் பல்லுக்குத்தி இரத்தம் வழியுது பாருங்க.” என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவித்ரா.
அப்பொழுது தான் எச்சிலோடு இரத்தம் வழிய வழிய நிற்கும் ஜெயாவைப் பார்த்துப் பதறிப்போய், முந்தானையால் வாயைத் துடைத்துவிட்டுக்கொண்டே, வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள் மேகலா.
உள்ளே வந்தும் வேலையே ஓடவில்லை அவளுக்கு. எதோ சாப்பாடு செய்து பிள்ளைகளுக்கும்,சேகருக்கும் கொடுத்துவிட்டு யோசனையாகவே இருந்தாள். பவித்ரா சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. பத்து நாட்களாக,சேகர் எதாவது படிக்க வேண்டும், எழுத வேண்டும்.. எனக்கூறிவிட்டு திண்ணையில் படுத்துக்கொள்கிறான். சரியாகப் பேசுவதும் இல்லை. நேரமும் இல்லை. இவளுக்கோ பொழுதுக்கும் வேலைப்பார்க்கும் அசதியில் படுத்ததும் தூங்கிவிடுகிறாள். இன்று எப்படியாவது குழந்தைகள் தூங்கியதும் சேகரிடம் இதைப்பற்றி பேசவேண்டும் என எண்ணினாள்.
தன் மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்த ஜெயாவை அந்தப்பக்கமாகத் திருப்பி விட்டுவிட்டு, மெல்ல எழுந்து,நீண்டிருக்கும் நடைப்பாதை ரோதாவைக் கடந்து திண்ணைக்கதவை திறக்க முயன்றாள் மேகலா.
ஆனால், கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேகலாவிற்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை. சரி, பிள்ளைகள் வந்து விடுமென கதவை சேகர் பூட்டி வைத்திருக்கிறானென நினைத்துக் கொண்டே, சேகரைக் கூப்பிட வாயைத் திறந்தவள் அப்படியே உறைந்து நின்றாள். சேகரின் முயக்கத்துக் குரலும், வளையல் சத்தமும், மெலிதான கொலுசொலியும் அவள் காதுகளை எட்டியது..’நர்கீஷ்’ எனப் பிதற்றும் கணவனின் ஒலி கேட்டு அப்படியே வாயைப்பொத்திக்கொண்டு சத்தம் வெளியே வராமல் கதறினாள் மேகலா.
நடைபாதை முழுவதும் உருண்டு பிரண்டு அழுதாள். ‘ஏன் எனக்கு இப்படி நடந்தது..? நான் என் புருசனை முழுவதும் நம்பினேனே! வேற ஆண்களை நினைச்சுக்கூட பார்க்கலையே, நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டேனே, எனக்கா இப்படி நடந்துச்சி’ என கண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படி அழுதாள். அழுதுக்கொண்டே இருந்தாள். பின் குழந்தைகளின் அருகே வந்து படுத்துக்கொண்டே நெடுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தாள்.
காலையில் எதுவும் தெரியாத மாதிரி உள்ளே வந்த சேகர், “என்ன மேகலாக்குட்டி, கண்ணு சிவந்துருக்கு.. உடம்பு சரியில்லையா?” என நெற்றியில் கைவைத்துப்பார்த்தான்.
“ஆமாங்க, தலையவலிக்குது” எனச்சொல்லிக்கொண்டே, குழந்தைகளை சாப்பாடு கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சேகரையும் ஆபிஸுக்கு அனுப்பிவைத்தாள்.
3
சாயங்காலம் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்ததும், “அம்மா..அம்மா, திங்கறதுக்கு ஏதாவது கொடு” என்ற ஜெயாவிடம் இரண்டு முறுக்குகளும், புவனாவிடம் இரண்டு முறுக்குகளையும் கொடுத்த மேகலா, “ஜெயா, எங்கையும் போகக்கூடாது.பாட்டில்ல பால் ஆத்தி வச்சிருக்கேன். தம்பி அழுதாக்கொடு” என சொல்லிவிட்டு நன்றாக உடையணிந்து கொண்டு ஒரு வாளி நிறைய முறுக்குகளோடு கிளம்பினாள்.
ஒன்றும் புரியாமல் ஜெயா அம்மாவின் பின்னாலேயே ஓடிவந்து எங்கே செல்கிறாள் எனப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த தெருவின் முனையில் இருந்த சீட்டாட்ட கிளப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தாள் மேகலா. ஜெயாவிற்கு நேற்று அம்மா வாயில் அடித்த அடியிலிருந்த மீண்டும் இரத்தம் கசிந்து உப்புக்கரிக்க ஆரம்பித்தது.
******