
வாழ்க்கை நின்றுகொண்டிருக்கும்
இடத்திலிருந்து
எல்லாத் திசைகளுக்குமாய்
எண்ணற்ற பாதைகள் நீளுகின்றன
ஒன்று கடலை நோக்கி
மற்றொன்று மலையுச்சிக்கு
ஒன்று கலைக்கூடத்திற்கு
மற்றொன்று மாபெரும் பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கு
ஒன்று விசாலத்தை முன்னிறுத்தி
மற்றொன்று குறுகலான முட்டுச்சந்திற்கு
ஒன்று அமைதியின் மையப்புள்ளிக்கு
மற்றொன்று கொலைவிழும் கலவரப்பகுதிக்கு
ஒன்று ஒன்றுமின்மையின் முற்றுப்புள்ளிக்கு
மற்றொன்று எப்போதும் திரும்ப முடியாமையின் மறுமைக்கு
நானோ
அனைத்து சாலைகளும்
துவங்கும் மையத்தில் நின்று
அதுவே போதுமென்று
அங்கேயே
ஒரு சிலையாகிவிட்டேன்
இப்போது யார்யார் எதை நோக்கி
போய்க் கொண்டிருக்கிறார்கள்
என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் நீங்கள்
ஆயினும் நான் வழிகாட்டியல்ல
எங்கும் பயணிக்காமலே
மாபெரும் பயணங்களை உருவாக்கும் ஒளிப்பந்து
சுடர்ச் சூரியன்.
****
பெண்ணுடல் அவிழ்கையில்
பேரின்பம் முன் நிற்க
பெருந்துன்பம் பின் நின்று
யாரிடம் உன் அகப்படுதல்
என்றோர் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகிறது
வலமும் இடமும் அற்று
நடுவிலோர் உயிரீர்ப்பு
உச்சபட்ச பலகீனம்
நட்டு வைத்த ஒழுங்கீனம்
உலக உயிர்க்கெலாம்
ஓங்கி நிற்கும் ஒரு பாடம்
கற்காமல் கற்றொழுகும்
கலவியது மெய்ப்பகுதி
எப்பிறவி எங்குயிர்த்தும்
மறக்கவொண்ணா நிலைப்பாடாம்
புறத்திலொரு
திரை மூடல்
அகத்திலொரு இளைப்பாறல்
உரையாடல் முடிவில்
உயிர்க்கும் நன் கவிதை.
****
யாரோ ஒருவரின்
அன்பின் வெளிப்பாடுதான்
மாபெரும் ஆகாயம்
யாரோ இருவரின்
கூட்டு முயற்சிதாம்
சோர்வறு
உயிர்த் தொடர்ச்சி
யாரோ ஒருவரின்
யாருமற்ற தனிமைதான்
பின் தொடரும்
மரணம்
யாரோ சிலரின்
கனவாகிவிட்ட ஒளியதுதான்
நிழலாடும்
வாழ்க்கை
யாரோ ஒருவரின்
உயிர்ப்படு மிகைதான்
சிலைகொண்ட
கடவுள்
யாரோ சிலரின்
அகப்படு பயம்தான்
வலைவீசும்
வகைப் பேய்கள்
யாரோ சிலரின்
நிறப்படு வெறிதான்
மனிதம் குதறும்
பகை நோய்கள்
யாரோ சிலரின்
நெறிப்படல் முறைதான்
காலம் போற்றும்
அறப்பாடல்
யாரோ பலரின்
அரசியல் பலம்தான்
அனைத்தையும்
சிதைக்கும் சிதையேறல்.
********