இணைய இதழ்இணைய இதழ் 74கவிதைகள்

சு.ராம்தாஸ் காந்தி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அவள் வலது தொடையில் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தாள்?

“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த
ராஜாராணி ஆட்டம் இதோ ஆரம்பம்”

பஃபூனின் குரல் சபையில் ஒலித்ததும்
தவில்காரனும் பம்பைக்காரனும்
இறுக்கிப் பிடித்து
இசைக்கத் தொடங்குகிறார்கள்

வெளிச்சத்திற்கு வெளியேயிருந்து வருபவளின்
கால்சலங்கை மணியோசை காதில் பட்டு
மூளையில் தெறிக்கிறது

வாத்தியக்காரர்கள் ஒவ்வொருவரையும்
வயது வித்தியாசம் பாராமல்
கால்தொட்டு வணங்குமவள்
நெஞ்சில் கட்டியிருக்கும் மெல்லிய துணியை
மைக் ஸ்டாண்டில் போட்டுவிட்டு
தன் ஆட்டத்தைத் தொடங்குகிறாள்

ஆட்டத்தின் இடையில்
வயது முதிர்ந்தவர்களின்
துண்டைப் பிடுங்கி
தொடையிடுக்கில் துடைத்து
முகத்தில் வீசியெறிகிறாள்

இவள் நெருங்கிச் செல்வதை
உணரும் சிறுவர்கள்
அமர்ந்திருந்த நிலத்தில் புழுதி கிளம்ப
எழுந்து மிரண்டோடுகிறார்கள்

முன்வரிசையில் அமர்ந்திருக்கும்
ஒல்லிப்பிச்சான் சிறுவனொருவனை
சபை நடுவே தூக்கி வந்து
பிள்ளை போல், ‘தன்மேல் போட்டு’
விளையாட்டுக் காட்டுகிறாள்

உடன் ஆடும் ராஜா வேஷக்காரன்
ஓடிவந்து அடிவயிற்றில் இடித்ததில்
பிள்ளைப் பேறுக்காகச் செய்திருந்த
சிஷேரியனில் தையல் பிரிந்த வலியை கூட்டத்தின் ஆரவாரத்தின் ஓசையில் சிரித்தபடியே மென்று செரிக்கிறாள்

பால்கட்டியிருக்கும் வலிமிகுந்த மாரிலும்
தேள் கொட்டுவது போல
வலி பிடுங்கும் அடிவயிற்றிலும்
ரத்தம் உறைந்திருக்கும் தொடையிலும்
பலாச்சுளையில் ஈ மொய்ப்பது போல
பார்வையாளர்களின் விழிகள் குவிந்திருக்கின்றன

ஆடியே வலியை
உதறியெறிபவளைப் போல
உடற்பாகங்கள் வெளியில் சிதற
வெறிமீறிய காளியாய் நர்த்தனம் புரிகிறாள்

பன்னிரண்டடி ஏணியின் உச்சியில்
ஏறி நின்று தலைகீழாய்த் தொங்கும்
காவடி ஆட்டக்கலைஞனுக்காக
வலதுகை விரல்களால்
உதடுகளைத் தொட்டு
கடவுளை வேண்டிக் கொள்கிறாள்

நிகழ்வினூடே திடீரென மனமுடைந்து பேசும்
சக ஆட்டக்கலைஞனை வாஞ்சையுடன் நெஞ்சில் சாய்த்து
ஆறுதல் பகிர்கிறாள்

ஆட்டம் முடியப்போகும் ஓரத்தில்
கயிற்றுக்கு வெளியே அமர்ந்திருக்கும்
சிறுவர்களிடம் ஆதுரமாய்
விரல் நீட்டுபவளின் கண்களில்
கசிந்து வரும் நீர்மைக்குப் பொருள் என்ன?

ஆட்டம் முடியும் வரையிலும்
அவளது வலது முழங்காலின்
மேல்தொடையில் என்ன பச்சை குத்தியிருந்தாள் என்று
யாராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை

நிலத்தைத் தொட்டு வணங்கி
ஆட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறியவள் அதுவரையிலும்
அடிவயிற்றில், ‘ஊசிக்குத்தலாய்’
நிறைந்து போயிருந்த சிறுநீரைக் கழித்துவிட்டு
ஏற்பாடு செய்திருந்த வண்டியிலேறி
வியர்த்துத் தளர்ந்திருக்கும்
உடலைப் பரத்திச் சாய்க்கிறாள்

உறக்கம் தழுவும் கண்களில்
பதினான்கு வயதுப் பெண்ணாக
அம்மாளுடனும் அக்காளுடனும்
ஆட்டத்திற்கு வந்த, ‘அந்த முதல் நாள்’
அவளது கனவில் தோன்றியது

“மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழீ…”

காரில் ஒலிக்கத் தொடங்குகிறது.

(கரகாட்டக் கலைஞர் உச்சிப்புளி சத்யா அவர்களுக்கு…) 

***

மடி

தொப்புள் குழியில்
முத்தமிடுபவனை

பாலூட்டும்
பச்சைப் பிள்ளைக்காரியின்
பக்குவத்தோடு
மாரிலணைத்துக் கொள்கிறாள்
‘மணிக்கு இவ்வளவென ‘
பேசி அழைத்து வரப்பட்டவள்

தூரத்தில்
தொண்டை காய்ந்து வீறிடும்
ஒரு பிஞ்சுக்குரல்
காற்றின் மாராப்பை விலக்கி
காம்புகளைக் கவ்விக் கொள்ள
எம்புகிறது.

***

ஞானம்

எங்காவது
வழிப்போக்கில் பார்த்தால், ‘மன்னச்சிருங்க’ என்று
ஒரு வார்த்தை மட்டும்
கேட்க முடிவெடுத்திருக்கிறேன்
உலர்ந்த சருகிலையின்
இந்தப் பக்குவத்தை அடைய
நான் ஒரு வனத்தின்
மரகதக் கசப்பை
முழுமையாகப் பருக வேண்டியிருந்தது.

***

முளை

கடைசியாகப் பேசியபோது
மண்வாசனை மிகப் பிடிக்குமென்றாய்
தூறல் விழும் இந்த அந்தியில்
என் நிலம் இளகத் தொடங்கியிருக்கிறது
மண்திட்டைக் கிழித்துக்கொண்டு
அடர்ந்த மணத்துடன்
மேலெழுகிற என் நேசத்தை
ஏந்திக் கொள்ள
உன் வடிவான
நாசியைக் கூர்தீட்டிக் கொண்டாயா?

********

thagappansamy2000@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button