
அம்மாவின் மறைவு
அப்படி ஒன்றும்
மென்மனம் வாய்த்தவளில்லைதான்
ஏனோ
இப்பொழுதெல்லாம் சோகக்கதை வாசிக்கையில்
துளிர்க்கும் கண்ணீரை மறைக்க
ஓசையின்றி மூடி வைக்கிறேன் புத்தகத்தை
துன்பப்படும் உயிர்களை
காணொளியில் கண்டாலும்
உயிர் வரை வலிக்கிறது
அடுத்தவர் அழுந்திடும் குறைகளில் உருகி
குறைகள் எனக்குமாகி
பெருங்கவலையில் மூழ்கிப் போகிறேன்
ஞாபகங்களை
வற்றாத நதியில் அலசி அலசி
அதில் கரையேற விழைகிறேன்
பிரத்யோக வேண்டுதல் அற்றுப்போய்
எல்லோர்க்குமான பிராத்தனை
சாத்தியமாகிறது
அம்மாவின் மறைவிற்கு பின்தான்
மென்மனம் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும்.
********
அம்மாவின் அருகாமை
கொஞ்ச தூரம் கைகளைப் பிடித்துக்கொண்டேன்
வயர்கூடையின் பாரம் அழுத்த
பற்றியிருந்த கைகளுக்குள் விரல்களைக்
கோர்த்துக் கொண்டேன்
வியர்வையின் ஈரம் படரத் துவங்க
தோளில் தொங்கிக்கொண்டே தொடர்ந்தேன்
சோர்வதறிந்து
சிறுது தூரம்
இரு கைகள் வீசி நடந்தேன்
கொஞ்ச நேரம்தான்
என்னையறியாமல்
மீண்டும் அவள் கரம் பற்றியிருந்தேன்
அம்மாவின் அருகாமை
மட்டுமே போதுமாயிருக்கிறது
வெகு தூரத்தைக் கடக்க!
********
நீயற்ற பொழுதுகள்
நன்றாக உடை உடுத்திய நாளில்
எப்படி இருக்கிறது எனக் கேட்க நீயற்ற பொழுதில்
ஆசைப்பட்ட உணவை அவசரகதியில்
அள்ளி வாயில் தர ஆளில்லாத காலையில்
வாழ்த்துகளின் குதூகலம் நிறைந்த
நாளினைப் பகிர முடியாத நேரங்களில்
பெரும்முடிவுகளைப் பேசி ஆராய முடியாமல்
எனக்குள்ளாகவே யோசித்துச் சோர்ந்த கணத்தில்
நானே சமைத்துப் பந்தி வைத்து
பரிமாற முடியாமல் தவிக்கும் பகலில்
மேடையில் நான் பேசுவதைப் பார்த்தால்
என்ன சொல்லியிருப்பாய் என்ற கற்பனையில்
யாருமற்ற தனிமையை
கண்ணீரில் கரைக்கின்ற கழிவிரக்கத்தில்
மட்டுமல்லாமல்
பெயர் தெரியாத அந்தச் சிறியவள்
தன் அம்மையின் கை பற்றி நடப்பதைக் காண்கையிலும்
தவிர்க்கவே முடிவதில்லை
ஏன் இத்தனை சீக்கிரம் போனாய்
என்று அனத்துவதை!
******