Just 6.5 (2019)
Dir: Saeed Roustayi | 131 min | Persian
ஈரானியப் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே, உலக சினிமா வகைமையில் எப்போதும் உண்டு. மிக மிக வித்தியாசமானது அத்திரைப்பட உலகம். மதத்தின் கைகள் ஓங்கி இருக்கிற ஒரு தேசத்தில், அதுவும் எல்லாவற்றையும் முடிவு செய்கிற அதிகாரத்தின் செங்கோல் மதத்தின் கைகளில் இருக்கிற ஒரு தேசத்தில், கலைப்படைப்புகளைக் கொண்டு வருதல் பெரிய சவால்தான். ஒவ்வொரு நாட்டின் திரைப்படைப்புகள் என அவை வெளிவருகையில் பார்த்துப் பழகிய கண்களுக்கும், உள்வாங்கி அசைப்போட்டுப் பழகிய மனங்களுக்கும் அவற்றில் இருக்கிற பொதுவான அம்சங்கள் பதிந்து போகும். படங்கள் வெவ்வேறான வகைமையில் இருப்பினும், உருவாக்கத்தில், அணுகுமுறையில், பேசுபொருளில் ஏதோ ஒரு மைய இழை ஊடுபாவாக பெரும்பாலான படைப்புகளில் இழைந்திருப்பதை உணர முடியும்.
ஈரானிய திரைப்படங்கள் எனும் இரு சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் நம்மில் பெரும்பான்மையோரின் மனதில், ‘யதார்த்தத்தின் சித்திரம்’ எனும் இரண்டு சொற்கள் எழலாம். பிற நாட்டுத் திரைப்படங்களில் இருந்து வேறுபட்டு தமக்கென ஒரு பிரத்தியேக திரைமொழியையும், தனித்த அழகியலையும் கொண்டவையாக மிளிர்பவை ஈரான் தேசத்துத் திரைப்படங்கள். இது பல திரைமேதைகளின் கூட்டு உழைப்பென்பது மறுக்க முடியாத உண்மை எனும் போதிலும், அவை ஒரு கலவையாக திரண்டு ஒட்டு மொத்த ஈரானிய திரைப்படங்களின் அடையாளமாய் மாறிப் போயிருப்பதும் நிதர்சனம்.
உலகில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிற ஏறத்தாழ எல்லா நாடுகளோடும் ஒப்பிடுகையில் மிக மிகக் கறாரான சட்டதிட்டங்களோடும், மூச்சு முட்டுகிற தணிக்கை விதிகளோடும் இங்கு இருப்பதைப் போல வேறு தேசத்த்தில் இருப்பதாய் ஒப்புமை கூறுவதே கடினம். உலகத் திரைப்படங்களில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை தனித்துவமான கோணத்தில் ஈரானிய படங்களில் நாம் காண வாய்ப்பதற்கான உப காரணங்களுள் ஒன்று, அங்கு நடைமுறையில் இருக்கிற தணிக்கை விதிகளும்தான். பெண்களைக் காட்சிப்படுத்துவதில் துவங்கி, எடுத்துக் கொள்கிற கதையில் மையக்கரு வரையிலும் இதைத்தான் தேர்ந்து கொள்ள வேண்டும், இவ்விடயங்களைத்தான் பேச வேண்டும் என்று கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைக்கிற பற்பல விடயங்களைத் தாண்டித்தான் அங்கு படங்கள் உருவாக்கப்படுகின்றன. எங்கே அடக்குதல் அதிகமாய் இருக்கிறதோ, அங்குதான் கலைத்தன்மை புதிய பரிமாணங்களில் பரிணமிக்கும் என்பதற்கு இங்கிருந்து வெளிவருகிற பல படைப்புகள் சான்று பகரும்.
என் பார்வை அனுபவத்தில், நான் முன்சொன்னது போல ஈரானியத் திரைப்படங்களில் பொதுத்தன்மையெனக் காணமுடிவது அவற்றுள் பல படைப்புகள் தனிமனித வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அச்சமூகம் செலுத்துகிற அதிகாரம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அலசுகிற, அவதானிக்கிற படைப்புகளாகவே இருப்பதாக உணர்கிறேன். பல உலகப்புகழ்பெற்ற ஈரான் திரைப்படங்களில் இதனைப் பொது அம்சமாகப் பார்க்க முடியும். இதன் காரணமாகவே இப்படங்களின் உருவாக்கப் பாணியிலும், காட்சி வடிவமைப்புகளிலும் (visual design) கூட ஒருசில பொதுவான அம்சங்களை நாம் காணலாம். பெருவாரியான காட்சிகளில் பின்னணி இசையில்லாத மௌனம், மெதுவாக நகர்கின்ற காட்சிகள், பல நேரங்களில் நிலையான காமிரா கோணம், மிகச் சொற்பமான கதை மாந்தர்கள் (தனி மனிதர்கள் அல்லது ஒற்றைக் குடும்பம்)புழங்கும் கதைகள், மற்றும் அம்மனிதர்களுக்கு நடைமுறையில் இருக்கிற கடுமையான சட்டதிட்டங்களால் நேர்கிற நெருக்கடிகள் போன்றவை குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள். பிற மொழிப்படங்களிலும் மேற்சொன்னவை இருக்குமெனினும் ஒப்பீட்டளவில் கடைசி அம்சம் ஈரானியப் படங்களிலேதான் அதிகம்.
இப்படிப் பழகிய கண்களுக்கு சையீத் ரௌஸ்தாயியின் இயக்கத்தில் 2019 இல் வெளியான Just 6.5 படம் மிக வித்தியாசமானதொரு பார்வை அனுபவமாக நிச்சயம் இருக்கும். துவக்கக் காட்சியே ஹாலிவுட் பாணியிலான ஒரு அதிபரபரப்பான துரத்தல் காட்சியாக இருக்கிறது. முதன்மையாக இப்படம் ஈரான் போன்ற குற்றங்களுக்கான மிகக் கடுமையான சட்டத்திட்டங்களும், தண்டனைகளும் அமலில் இருக்கிற ஒரு நாட்டிலும் கூட காவல்துறை எப்படி போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த திணறுகிறது என்பதை சமரசமின்றிக் காட்டிட முயல்கிறது. அந்த வகையில் இது போதைப் பொருள் பயன்பாடு சார்ந்த பிரச்சனை ஒட்டு மொத்த சமூகத்தையும் எப்படி பீடித்திருக்கிறது என்தாக ஒரு விரிந்த பார்வைக் கோணத்தில் பயணிக்கிறது. இது கதையின் மிக முக்கியமானதொரு அடுக்காக இருக்கிறது என்றால் அதனோடு தொடர்புடைய காவல் துறையினருக்கு ஏற்படுகிற பணி சார்ந்த நெருக்கடிகளையும், அது தனிமனிதர்களாக அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், கூடவே அந்த நெருக்கடிகள் அவர்களது பணிசார் உறவுகளை எவ்விதம் பாதிக்கிறது என்பதையும் சேர்த்தே திரைக்கதை கவனப்படுத்துகிறது.
வருடந்தோறும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகிற நாடுகளின் வரிசையில் பல ஆண்டுகளாக ஈரான் இரண்டாமிடத்தில் இருக்கிறது. முதலாவது இடம் சீனாவுக்கு என்பது உபரித் தகவல். போதை மருந்து குற்றங்கள் தொடர்பாக மிகக் கடுமையான சட்டங்கள் அந்நாட்டில் 1988 ஆம் முதல் அமலில் இருந்து வருகின்றன. அச்சட்டத்தின்படி சில வகையான போதை மருந்துகளை வெறும் 30 கிராம் முதல் 50 கிலோ வரையிலான அளவுக்கு (உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல்) வைத்திருப்பதே மரண தண்டனைக்குரிய குற்றம். இது பல போதைமருந்து வழக்குகளில் பிடிப்பட்டோரை நேரடியாக தூக்கு மேடைக்கு இழுத்துப் போனது. தண்டனை இவ்வளவு கடுமையாக இருக்கிற போதிலும் ஈரானில் போதை மருந்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதைக் கண்டு அரசும், காவல் துறையும் மலைத்துப் போகிறது. தோராயமான கணக்குப்படி வெறும் 82 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரானில் போதை அடிமைகளின் எண்ணிக்கை 6.5 மில்லியனையும் தாண்டுகிற அளவுற்கு நிலைமை மிக மிக மோசமாக இருப்பதாக சொல்லப்படுறது (படத்தின் தலைப்பை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம்).
மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிற (அம்னிஸ்டி இண்டர்னேஷனல் போன்ற) அமைப்புகளின் தொடர் அழுத்தத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஈரான் மஜ்லிஸ் (அவர்கள் நாட்டு நாடாளுமன்றம்) போதை மருந்துகள் தொடர்பான சட்டங்களின் கடுமையைக் குறைத்திட இசைவு தெரிவித்தது. அதன்படி ஒரு தனிநபர் கைவசம் வைத்திருக்கும் போதை வஸ்துவின் (மரண தண்டனைக்குரிய) அளவு சில கிராம்களில் இருந்து இரண்டு கிலோவாக அதிகரிக்கப்பட்டது. இது கணிசமான அளவு தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைத்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் அக்டோபர் 10, ‘உலக மரண தண்டனைக்கு எதிரான தினமாக’ (World Day Against Death Penalty) அனுசரிக்கப்பட்டு வருவது கூடுதல் தகவல்.
இப்படத்தின் கதை நடைபெறும் காலம் எது என நேரடியாக சொல்லப்படாவிட்டாலும், நாம் மேற்சொன்ன தகவல்களோடு பொருத்திப் பார்க்கையில் கதையின் காலம் 2017 ஆம் ஆண்டுக்கு முந்தையது என யூகித்துக் கொள்ளலாம். டெஹ்ரானில் இயங்கும் மிகக் கறாரான காவல்துறையின் போதை தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரி சாமட் மஜிதி தனது குழுவினரோடு பல சில்லறை போதை மருந்து விற்பனையாளர்களை வேட்டையாடுகிறார். பல புள்ளிகள் நாசர் காக்சாட் எனும் ஒற்றை மையத்தில் இணைவதைக் கண்டுபிடிக்கும் அவர், அவனை சலித்துத் தேடுகிறார். ஒரு கட்டத்தில் அதில் வெற்றியும் காண்கிறார். இதுவரையிலான கதையில் ஏறத்தாழ சாமட் ஒரு நாயகனாகவும், நாசர் ஒரு வில்லனாகவும் உருக்கொள்வதை நாம் புரிந்து கொள்ள இயலும். ஆனால் கதையின் விரிவு இதனை கேள்விக்குள்ளாகும் விதமாக அமைந்திருப்பது தான் சுவாரசியமான விடயம். குறிப்பாக நாசர் பாத்திரத்தின் போக்கு (character arc) மிக சுவாரசியமானது.
கடுமையான குற்றச்செயலில் ஈடுபடுகிற ஒரு தனிமனிதன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதனாக இருக்கிறான் என்பதற்கு முற்றிலும் தொடர்பற்றதாகக் கூட இருக்கலாம். அதாவது ஒரே மனிதனே, மிக நல்ல மற்றும் மிக மோசமான என இருவேறு மனநிலை கொண்டவராக இருக்கலாம். நாசர் கதாபாத்திரத்தை இப்படத்தில் நாம் சந்திக்கையில் இது நிச்சயம் தோன்றும். அதிகமான மாத்திரைகளை விழுங்கி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க, தற்கொலைக்கு முயலுகிற அவனைத் தான் சாமட் தலைமையிலான குழுவினர் கைது செய்து காப்பாற்றி சிறையிலடைக்கின்றனர்.
டெஹ்ரான் ஈரானின் தலைநகரம், துவங்க காட்சிகளில் வீதிவாழ் மக்களின் பெருங்கூட்டத்தினரிடையே பெரும்பான்மையோர் போதை அடிமைகளாய் இருப்பதையும், காவலர்களால் சுற்றி வளைக்கப்படுகிற அவர்கள் மந்தைகளைப் போல சிறைக்கூடங்களில் அடைக்கப்படுதையும் காண்கிறோம். இத்தனை துணை நடிகர்கள் உலவும் ஈரானியப் படமொன்றை எனது பார்வை அனுபவத்தில் நான் கண்டதே இல்லை. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போதை மருந்துத் தொழிலில் கொழித்து ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்த நாசர் பிடிபட்டு இம்மந்தையோடு ஓர் ஆடென அடைக்கப்படுகிறான். அவனது அகங்காரம் இதனை ஏற்க துளியும் இடந்தரவில்லை.
சாமட் முழுக்க முழுக்க தான் எதிர்கொள்ளுகிற மனிதர்களை, தனது விசாரணை முறை மற்றும் பொதுவான அணுகுமுறையிலேயே, உளவியல் ரீதியான் நெருக்கடிக்கு உள்ளாக்குகிற பாணியையே கடைபிடிப்பவராக இருக்கிறார். தனது சகாக்களையே கூட அவர் அதே விதத்தில்தான் அணுகுகிறார். அவரது விசாரணை நிமிடங்கள் வெறும் காட்சிகளில் நாடகீயத்தை உச்சத்திற்கு ஏற்றி பரபரப்பான மனநிலைக்கு நம்மையும் கொண்டுவருகிற விதத்தில் அமைகின்றன. பாரபட்சமற்ற, துளியும் சமரசம் செய்யாத அதிகாரியாகவே அவர் வலம் வருகிறார். ஆனால் அவரது அணுகுமுறை, அவர் நேர்மையான அதிகாரியெனும் முடிவுக்கு நாம் வருவதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அளவிற்கு ஊசாலாடுவதைப் போல இருக்கிறது. அவருடைய எதிர்வினைகள் மற்றும் பேச்சுகளில் எது அசலானது எது பாவனை எனப் பிரித்தறிய முடியாதராய் அவர் வருகிறார். பிடிபட்டவுடன் கர்வமிகுதியால் அவரையே விலைக்கு வாங்கிட பேரம் பேசுகிற நாசருக்கு இசைவது போல அவர் பேசுவதும் பின்னர் சமயம் பார்த்து நிஜமுகத்தை காட்டுவது ஒரு பக்கம் என்றால், மறுபுறம் நீதிபதியின் முன்னிலையில் விசாராணையின் போது தனக்குக் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி வசமாக சாமட்டை சிக்க வைத்து பழிதீர்த்துக் கொள்வது போல நடந்து கொள்கிற நாசர் மறுபுறமுமாக இவர்கள் இருவருக்கு இடையேயும் நடைபெறுகிற இந்த ஆடுபுலி ஆட்டம்தான் இப்படத்திற்கு வழமையானதொரு ஆக்ஷன் திரில்லரையும் விஞ்சுகிற ஒரு விறுவிறுப்பைத் தருகிறது.
எந்த ஒரு கதாபாத்திரமும் கருப்பு வெள்ளையில் அல்லாமல் கலவையான குணநலன்கள் கொண்டவர்களாகவே வார்க்கப்பட்டுள்ளனர். இதுவே படத்திற்கு ஒரு யதார்த்த சாயலை வழங்குகிறது. சாமட் மீதான வழக்குகள் குறித்து நாம் அறிந்து கொள்வதன் வாயிலாக, கதையின் இன்னொரு அடுக்கிற்குள் நுழைகிறோம். அது அந்நாட்டின் கடுமையான சட்ட விதிமுறைகள் என்பது இருபுறமும் கூர் தீட்டப்பட்ட ஒரு கொடுவாள் என்பதும், அது குற்றவாளிகளை தூக்கிலிடுகின்ற அளவுக்கு தனது கடுமையை காட்டுகிற அதே வேளையில், அதே சட்டத்தின் சிடுக்குகளுக்குள் விசாரணை அதிகாரிகளையும் துண்டாடி விடுவதாகவும் இருக்கிறது. இதனால் அதிகாரிகளே மிகுந்த அகநெருக்கடிக்குள்ளான ஒரு பணிச்சூழலில்தான் காலத்தைக் கடத்துகின்றனர் என்பது புலனாகிறது. அதுவே அவர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இரக்கமற்ற முறையில் அவர்களை நடந்து கொள்ளச் செய்வதாகவும் இருக்கிறது.
நாசர் காக்சாட் பாத்திரம் திரைமறைவு வாழ்கிற, சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடுகிற, சமூகத்தின் பொதுநலனுக்கு எதிரான ஒரு மனிதனை, அகமும் புறமுமாக கண் முன் நிறுத்துகிறது. ஒரு பக்கம், தனக்குள்ள பணபலம் மற்றும் அதிகாரத் தொடர்புகள் தருகிற மிதப்பில், அகங்காரத்தின் கொக்கரிப்போடு அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும், மறுபுறம் தன்னளவில் உள்ளுக்குள் வெறுமையாக இருக்கின்ற ஒரு மனிதனாகவும், அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறவனாகவும், பயம் பீடித்தவனாகவும் இருக்கிறான். இந்த மோசமான பக்கமுள்ள ஆளுமைக்குள் இன்னொரு மிக நல்ல பக்கமும் சேர்ந்தே இருப்பது ஆச்சரியமான கதபாத்திரமாக நாசரை நம் மனதில் இருத்துகிறது.
எப்படியாவது தன்னைத் தப்புவிக்க உதுவுமாறும், குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் பேரம் பேசுகிற அதே நாசர்தான், தான் இருக்கும் மனித சமுத்திரமாகிப் போன நெருக்கடியான சிறையறையில், ஒரு மோசமான தந்தைக்காக பழி ஏற்கத் துணிகிற ஒரு அப்பாவிப் சிறுவனுக்காக மருகுகிறான். அவன் மீதான பரிதாபத்தில் காவல் அதிகாரியிடம் அச்சிறுவன் பாவம் எனவும், அவன் மீதும், அவனது ஊனமுற்ற குற்றவாளித் தந்தை பேரிலும் இருக்கின்ற குற்றங்களையும் தன் மீதே சுமத்துமாறு உளப்பூர்வமாக சொல்கிறவனாய் ஆச்சரியப்படுத்துகிறான்.
மேலும் தனது மிகப் பெரிய குடும்பத்தை ஏழ்மையின் தீரா சாபத்திலிருந்து மீட்டெடுக்கவே தான் இந்த சமூக விரோத தொழில் ஈடுபட்டதாக நியாயம் கற்பிக்கிற அவன், தன்னுடைய உறவுக்கார இளையோரை அமெரிக்காவில் படிக்க வைக்கிறான். பாசம் கண்ணை மறைக்கிற அவனுக்கு தன் குடும்பத்தை வளமாக வாழவைக்கிற தான் ஈட்டும் பெரும் பணம் பல நூறு குடும்பங்களை நீர்மூலமாக்கி அழிக்கிற போதை மருந்திலிருந்தே ஈட்டப்படுகிறது என்பதை உணர மறுக்கிறவனாக இருக்கிறான். ஒரு வகையில் குடும்பம் எனும் அமைப்பே மனிதனை சுயநலக்காரனாக உருமாற்றி விடுகிறதோ எனவும் அதுவே சமூகத்தின் ஒட்டுமொத்த நலன் மீதான அக்கறையின்மையாக பரிணமிக்கிறதோ என்றும் நம்மை சிந்திக்கத் தூண்டுகிற ஒரு பாத்திரவார்ப்பு நாசருடையது.
உச்சக்காட்சியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிற தூக்கு மேடைக்கு கைதிகள் இட்டுச் செல்லப்படுகிற காட்சியில், தங்களது அகம்பாவங்களும் திமிரும் முற்றிலும் வடிந்து, தூக்குக் கயிறின் முன்னே வெளிறிப் போன பயம் அப்பிய சாதாரண மனிதர்களாக அவர்கள் நிராயுதபாணியாக தங்கள் மரணத்தை எதிர்கொள்கிற அத்தருணத்தில், அவர்கள் குற்றவாளிகள் என்பதையும் ஒரு கணம் மறந்து, முன்னரே எழுதப்பட்டுவிட்ட தங்களின் சாவு தங்களைத் தின்ன வருகின்ற இறுதிக் கணத்தில் கதறும் மனிதர்களாகவே நாம் அவர்களைப் பார்க்கிறோம். உயரத்தில், மதில் மேல் மரணத்தின் வாயில் கவ்வப்பட்ட சிறு பூனையென அலறித் துடிக்கும் நாசரை வெறித்துப் பார்க்கின்ற சாமட் மஜிதியின் கண்களில் மனதிற்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் வெற்றியின் களிப்பைக் காட்டிலும் அவரது அகப் போராட்டம்தான் அப்பட்டமாய் தெரிகிறது.
சட்டதிட்டங்களும், தண்டனைகளும் மிகக் கடுமையாக இருக்கிற ஒரு தேசத்தில் போதைப் பொருள் நடமாட்டம் போன்ற கடுமையான குற்றங்கள் குறைய வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு என்ற போதிலும், நேர் மாறாக குற்றங்கள் அதிகரித்தவண்ணம் இருப்பது தண்டனைகளின் கடுமை மட்டுமே ஒரு சமூகத்தை மேன்மையான குற்றங்களற்ற சமூகமாக மாற்றுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இது ஒரு தத்துவார்ந்த கேள்வியாக திரைக்கதையின் பின்புலத்தில் இயங்கிக்கொண்டே இருக்கிறது. சாமட் மஜிதியின் மனதை அரித்தெடுக்கிற இதே கேள்வி தான் இறுதியில் அத்தனை நாள் தேடியலைந்த நாசர் காக்சாட்டை ஒழித்துவிட்டதை நினைத்து அவரைத் துள்ள விடாமல், தன் பணியையே துறக்க வைக்கிறது.
போதை அடிமைகளின் பரிதாபகரமான வாழ்க்கை, போதை மருந்து கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வெறுமை, இவர்களைப் பிடித்து சட்டத்தை நிலைநாட்டுகிற காவல் துறையினரின் கொதிக்கிற தவிப்பான மனபோராட்டங்கள், குற்றவாளிகளின் உலகத்தில் வியாபித்திருக்கும் இருண்மை, துரோகம் மற்றும் குற்றங்கள் நிறைந்த அர்த்தமற்ற – சகலரையும் வீணாக்கி இறுதியில் தாங்களும் வீணாகிற அவலம் – என்பன போன்ற பல விடயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. இத்தனை அர்த்தப்பூர்வமான அடுக்குகள் இருக்கின்ற அதே வேளையில் மேலோட்டமாக வெறுமனே ஒரு சுவாரசியாமான திரைப்படத்தை மட்டுமே எதிர்பார்க்கிற ஒரு சராசரி ரசிகரின் எதிர்பார்ப்பையும் முற்றிலும் பூர்த்தி செய்கிற விதத்திலும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிற இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை கூடுதல் சிறப்பு.
(தொடரும்…)