கிரிக்கெட் தனி ஒருவனால் வெல்ல முடியாத விளையாட்டு. அது ஒரு குழு ஆட்டம். பதினோரு பேரின் ஒத்துழைப்புடன் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதே கிரிக்கெட்டில் அனைவரும் கூறும் ஒன்று. ஆனால், எல்லா இடங்களிலும் எக்சப்சன்ஸ் என்கிற ஒன்று உண்டுதானே. அவை எப்போதும் ரூல்ஸில் வராது. அப்படியான ஒரு எக்சப்சனான ஒரு போட்டி 25.08.19 அன்று நடந்து முடிந்தது. ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க, அத்தனை பேரும் தன் வாழ்வில் இப்படி ஒரு முறையாவது ஆட வேண்டும் என கனவில் நினைக்கக் கூடிய ஒரு ஆட்டத்தை ஸ்டோக்ஸ் ஆடினார்.
ஒரு மிகச்சிறந்த போட்டி என்ன செய்யும்? அந்த போட்டியின் மீதான மதிப்பை உயர்த்தும். அதைப் போன்ற சிறந்த போட்டிகளை நமக்கு நியாபகப்படுத்தும். இவையிரண்டையும் அன்றைய போட்டி செய்தது.
டெஸ்ட் போட்டி போர்,மொக்கை என சொல்லுபவர்களிடத்தில் டெஸ்ட் போட்டிகள் எவ்வளவு விறுவிறுப்பானவை என்பதை நிரூபித்து கொண்டது.
இந்தப் போட்டி 81 ல் நடந்த ஆஷஸ் தொடரையும் அயன் போத்தனையும் , 2005 ஆஷஸ் தொடரையும் பிளின்டாபையும் நினைவுப்படுத்தியது. இவர்கள் இருவருமே தோல்வியில் இருந்த இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர்கள்.
81 ல் ஆடிய அயன் போத்தத்தின் ஆட்டத்தை விட ஸ்டோக்ஸின் நேற்றைய ஆட்டம் சிறந்தது . இதைக் கூறியவர் 8 விக்கெட் வீழ்த்தி அந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் பாப் வில்ஸ்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 67 ரன்களுக்கு ஆல்அவுட். இரண்டாவது இன்னிங்கஸில் 359 ரன் வெற்றி இலக்காக கொடுக்கப்படுகிறது. அவன் நூறு அடிக்கறதே பெரிய விஷயம் எப்படி 359 அடிப்பான் என கேலிப் பேச்சுகள் தொடர்கின்றன. இவ்வளவு பெரிய இலக்கைத் துரத்த துவக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு அவசியம். ஆனால், அவர்களோ ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். “ஜோ ரூட் தான் வெற்றிக்கான ரூட்” என நம்பிக் கொண்டிருந்த மிக முக்கியமான கட்டத்தில் ரூட் 87 க்கு ஆட்டமிழக்கிறார். பட்லரை பதற்றத்தில் ரன்னுக்கு அழைத்து ஸ்டோக்ஸே ரன் அவுட்டாக்கி விட்டார். கடைசி ரெக்கனைஸ்டு பேட்ஸ்மேன் பட்லர் தான். வோக்ஸ் பவுலிங் ஆல்ரவுண்டர் தான். வெற்றிக்கு 106 ரன்கள் தேவை. கைவசம் நாலு விக்கெட்.
தான் சந்தித்த முதல் 73 பந்துகளில் வெறும் மூன்று ரன்களே எடுத்திருந்த ஸ்டோக்ஸ் ஆட்டத்தின் போக்கு சிக்கலாகவும் ஆட்டத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் இவருக்கு சிறிதளவு ஒத்துழைப்பு கொடுத்த ஆர்ச்சரும் அவுட்டாக அதற்கடுத்த ஓவரில் ப்ராடும் அவுட். வெற்றிக்கு 73 ரன்கள் தேவை.
ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி.
துவக்கம் முதலே அனல் பற்றி எரிந்திருக்க வேண்டிய போட்டியானது எரிந்து சாம்பலாக ஆஸ்திரேலியாவிடமே சென்று விட்டது. 1-0 என முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா இந்த போட்டியிலும் வென்றால் 2-0 என வலுவான நிலைக்குச் சென்று விடும். பிறகு சாம்பல் தொடர் ஆஸ்திரோலியாவிற்குத் தான் என்றாகி விடும்.
எரிந்து போன சாம்பலிலிருந்து பறந்து வந்த பீனிக்ஸ் பறவை போல ஸ்டோக்ஸ் பறந்து வந்து இங்கிலாந்தைக் காப்பாற்றினார்.
ஆஸ்திரேலியா கடைசி விக்கெட்டிற்கு களமிறங்கிய லீச்சை அவுட்டாக்குவதைத் திட்டமாக வைத்திருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த திட்டம் தான்.
களமிறங்கிய லீச்சிடம் ஸ்டோக்ஸ் கூறிய வார்த்தைகள் ” முதல் ஐந்து பந்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.கடைசி பந்தை மட்டும் சமாளித்துக் கொள்” என்பதே. உண்மையில் லீச்சை ஸ்டோக்ஸ் நம்பினார்.
ஸ்டோக்ஸ் ஒன்று இரண்டு என சில்லறைகளாக ரன் சேர்க்காமல் நான்கு ஆறு என மொத்தமாக சேர்க்க ஆரம்பித்தார். டி20 போட்டியா டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் ஸ்டோக்ஸின் அந்த ஆட்டத்தைப் பார்க்கும் போது வந்திருக்கும்.
சதமடித்தவுடன் ஸ்டோக்ஸ் கொண்டாடவில்லை. ஹெல்மெட்டைக் கழட்டி வியர்வையை சிந்தி விட்டு பேடை இறுகக் கட்டிக் கொண்டு அடுத்த பந்திற்கு தயாராக நிற்கிறார். தன் வாழ்க்கையின் மிகச்சிறந்த சதம் என்பது ஸ்டோக்சிற்கு தெரியும். ஆனால் அதை அவர் கொண்டாடவில்லை.
அவருடைய மொத்த இலக்கும் வெற்றியின் மீதே. வெற்றிகரமான தோல்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு வரலாற்று வெற்றிக்காகப் போராடினார். இந்தப் போட்டியில் வெற்றிக்கு இரண்டு ரன் தேவை என்றிருக்கும் போது அவுட்டானாலும் அவ்வளவு தான்.
ஆஸ்திரேலியாவிற்கு பயம் வருகிறது. எப்படியாவது அவுட்டாக்கி விட வேண்டும் என தேவையில்லாத இடங்களிலெல்லாம் ரிவியூ கேட்டு ரிவீயூவை வீணடிக்கிறது. அது அவுட்டில்லை என ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அந்த ” ஹவ் இஸ் தட் ?” குரல் அவ்வளவு சத்தமாக ஒலிக்கிறது. அந்த சத்தத்தில் தான் எத்தனை ஏக்கம். ஒரு அற்ப ஆசைதான் அது அவுட்டாகயிருக்கூடாதா என்று.வெற்றிக்கு இரண்டே ரன்களே தேவை. லீச் கிரீசில் நிற்கிறார். தன்னுடைய முதல் ரன்னை எடுத்து வெற்றிச் சரித்திரத்தில் தன் பங்கும் உண்டு என எழுதிக் கொண்டார். அந்த ஒரு ரன்னிற்காகவோ அந்த ஒரு பந்திற்காகவோ அல்ல. அவ்வளவு நேரம் அத்தனை பந்துகள் ஸ்டோக்ஸிற்கு துணை நின்றதற்காக.
ஸ்கோர் சமமாக இருக்கிறது. முடித்து வைக்க நாயகனும் ஸ்ட்ரைக்கிற்கு வந்துவிட்டான். பிறகென்ன ஒரு மகிழ்ச்சியான முடிவு தானே. ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்து முடித்து வைக்கிறார். ஒட்டுமாெத்த அரங்கமும், ஆம், ஸ்டோக்ஸின் முகமூடி அணிந்து கிண்டல் செய்த ஆஸ்திரேலிய ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.
தன் சதத்தை கொண்டாடாத ஸ்டோக்ஸ் அணியின் வெற்றியை மகிழ்ச்சியாக குதித்து ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறார். இங்கிலாந்து ரசிகர்களோ ஸ்டோக்ஸைக் கொண்டாடினார்கள்.
131 வருடங்களில் முதல் முறையாக ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 70 க்கு கீழ் அவுட்டாகி வெல்கிறது.
இறுதி விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் ரன்கள் 76. இதில் லீச் அடித்த ரன் ஒன்று. இதுவே இரண்டாவது 9 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும்.
ஸ்டோக்ஸின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 258. உறுதியாகச் சொல்ல முடியும் அந்த இன்னிங்சை விட ஸ்டோக்ஸின் 135 ரன்கள் அடித்த இந்த இன்னிங்ஸே மிகச் சிறப்பானது என. ஏன் ஸ்டோக்ஸின் வாழ்நாளில் மிக முக்கியமான இன்னிங்ஸ் இது என்றாலும் மிகையில்லை. இப்படியான ஒரு ஆட்டம் போதும் ஒரு வீரனை ரசிகர்கள் மறக்காமல் இருக்க. ஆனால், இது போல ஸ்டோக்ஸ் ஒரு மறக்க முடியாத இன்னிங்ஸை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்கனவே கொடுத்திருக்கிறார்.
இங்கிலாந்து அணி 1-1 என ஆஷஸ் தொடரில் ஈடு செய்துள்ளது. ஸ்டோக்ஸ் எனும் ஈடில்லாத வீரனால். இன்னும் அடுத்த இரண்டு போட்டிகளே தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும்.