விதைப்பு
நம் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு விதையும், விசையை அழுத்தியவுடன் துவக்கையிலிருந்து சீரிப்பாயும் ரவைகளுக்கு ஒப்பானது. யுத்தக்களத்தில் நிற்கும் ஒரு போர்வீரன் தேவையில்லாமல் ரவைகளை வீணடிப்பதில்லை. அதே போல வேளாண் குடிமக்களாகிய நாம் விதைகளை சரியான அளவீடுகளில் மண்ணில் இறக்க பழக வேண்டும்.
அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, பாலக்கீரை உன்னிட்ட கீரை விதைகள் 100 சதுர அடி கொண்ட பாத்திக்கு, 50 கிராம் அளவிலும்; சன்னரக ஒரு விதைத்தாவரச்செடிகளான கத்தரி, மிளகாய், தக்காளி உள்ளிட்ட விதைகள், ஏக்கருக்கு 150 கிராமும்; புடலை, பீர்க்கன் உள்ளிட்ட கொடித்தாவரங்களான விதைகள் 300 கிராமும்; வருடம் முழுவதும் பயிர்செய்யக்கூடிய செடித்தாவரங்களான வெண்டை ஏக்கருக்கு 2 கிலோவும்; கொத்தவரை 4 கிலோவும்; சிறுதானியப்பயிர்களான சாமை ஏக்கருக்கு 4 கிலோவும்; குதிரைவாலி 2 கிலோவும்; பயறு வகையான உளுந்து ஏக்கருக்கு 10 கிலோவும், துவரை ஏக்கருக்கு 1கிலோவும்; ஆநிரைத்தீவனப்பயிர்களான சோளம் ஏக்கருக்கு 6 கிலோவும்; வேலிமசால் ஏக்கருக்கு 8 கிலோவும்; நெல் ஏக்கருக்கு 5 கிலோவும் போதுமானது.
மண்ணின் தன்மை, பயிர் செய்யும் முறைகளைப்பொறுத்து விதைகளின் அளவுகளில் சிறிய மாற்றமிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதையே விதைக்கடைகளில் சென்று விசாரித்தால் ஐந்து மடங்குவரை விதைகளின் அளவுகளை உங்கள் கரங்களில் திணித்து கடனாளியாக்கிவிடுவார்கள்.
சந்தேகமிருந்தால் ஒருமுறை கடையில் சென்று விசாரித்துப்பாருங்கள்.ஒரு ஏக்கர் பயிர் செய்ய நெல்விதையை 30 கிலோ பரிந்துரைப்பார்கள். நம்முடைய வேளாண்மரபில் விதையென்பது ஒரு விற்பனைப்பண்டமல்ல.ஆனாலும் நாம் முதன் முதலில் வேளாண்மைக்குள் காலடி எடுத்து வைக்கும்பொழுது விலைக்கு வாங்கி பயிர்செய்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
கத்தரி, மிளகாய், தக்காளி:
இவற்றிக்கு நம் வீட்டிற்கு அருகிலேயே நாற்றாங்கால் அமைத்துக்கொள்ளவேண்டும். விதைகள் மிகவும் சிறிய ரகமாக இருப்பதால் எறும்புகள் வேட்டையாட வாய்ப்பிருக்கிறது. எனவே நாத்து பாவும்போதே வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்பெண்ணெயில் கலந்து நாத்து பாவி, பின் இலை, தழைகளால் ஆன மெல்லிய சருகுகளால் மூடி பாதுகாக்க வேண்டும். விதைத்த பத்தாவது நாளில் முளைவிட்டு முப்பது நாட்களுக்குள் நடவுக்கு தயாராகும் நாற்றுகள்.
செடிக்கு செடி இரண்டடி இடைவெளியும், பாத்திக்கு பாத்தி ஐந்தடி இடைவெளி விட்டு நடவு செய்யும்பொழுது நல்ல காற்றோட்டம் கிடைத்து உயர்விளைச்சலைத்தரும்.
புடலை, பாகல், பீர்க்கன்:
மேல்கொடியான இத்தாவர வகைகள் தனது கிளைகளைப்பரப்பி வளரும் தன்மையுடையதால் செடிக்கு செடி இரண்டடியும், பாத்திக்கு பாத்தி எட்டடியும் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை மணல் கலந்து வீச நிலத்தில் சரிசமகாக விதைப்பதற்கு பயன்படும்.( விதைக்கப்படும்?)
உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு போன்ற பயறு வகைகளை அப்படி அப்படியே மண்ணில் வீசி விதைக்கலாம்.
வேலிமசாலின் தோலானது கடினத்தன்மை கொண்டிருப்பதால் இளஞ்சூட்டு வெந்நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பாத்தியில் கோடு கிழித்து அதில் விதைகளை போட்டு மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நெல்லுக்கு மட்டும் தனியாக நாற்றாங்கால் அமைத்து விதைகளைத்தூவி பின் ஒரு மாத கால நாற்றாக எடுத்து நடலாம். விதையை இன்னும் மிச்சம் பிடிக்க வேண்டுமானால் உப்புக்கரைசலில் ஒரு கிலோ விதைநெல்லைக்கொட்டி நேர்த்தியான விதைகளை கண்டறியலாம். தரமானவை உப்புக்கரைசலில் மூழ்கியும், பதர்கள் மிதந்தும் நமக்கு பாடம் கற்பிக்கும். இந்த வகையில் நேர்த்தியை ஆராயும்போது ஏக்கர் ஒன்றுக்கு கால்கிலோ விதைநெல்லே போதுமானது.
எந்த மாதிரியான விதைகளை பயிர்செய்யும் முன்பும் சாணிப்பால் அல்லது பஞ்சகவ்யா போன்ற உயிர் உரங்களில் ஒரு நாள் முழுக்க ஊற வைத்திருந்து விதைநேர்த்தி செய்து விதைக்கும்போது நோய்நொடியில்லாமல், பூச்சித்தொல்லையிலிருந்தும் தன்னைத்தற்காத்துகொள்ளும் ஆற்றலைப்பெறுகிறது.
இவை தவிர உங்களது பண்ணையை மேலும் மெருகூட்ட வருங்காலத்தில் வரவிருக்கிற ஆநிரைக்கான உணவுக்காட்டை உருவாக்க சூபாபுல், மல்பெரி, கோ4, கோ5, அகத்தி, கய்யாணமுருங்கை, முயல் மசால், பூவரசு, காட்டு வாகை, போன்றவற்றை உருவாக்கி அவர்களை வரவேற்கத்தயாராக வேண்டும்.
விதைப்பு வேலை நடைபெறும்போதே மரங்களுக்கு தேவையான குழிகளை வெட்ட ஆரம்பிக்கலாம். பெருமரங்களுக்கு 3*3 என்ற அளவிலும், குறுமரங்களுக்கு 2*2 என்ற அளவிலும் குழியெடுத்து, மூன்று மாதம் குழியை ஆறவிட்டு பின் அதில் விலங்குக்கழிவு, தாவரக்கழிவைக்கொட்டி மேலும் மூன்று மாதம் அப்படியே வைத்திருந்து சுமார் ஆறு மாதம் கழித்து மரக்கன்றுகளை நடவேண்டும்.
இப்படி நடவு செய்யும்பொழுது வேர்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து வேர்ப்புழு தாக்குதலிலிருந்து தன்னைத்தற்காத்து மரங்கள் வேகமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
விதைத்து நீர்பாய்ச்சியவுடன், ஒர் அறிவுள்ள நுண்ணுயிர்களின் துணையோடு விதைகள் மண்ணைக்கிழித்துக்கொண்டு மேலெழுந்து முளைத்து வரும்.
சிறுகீரையும், பீர்க்கனும் இரண்டு நாளிலும்; நெல்லும், உளுந்தும் ஐந்து நாளிலும்; புடலையும், பாலக்கீரையும் பத்து நாட்களிலும் முளைத்து வெளிவரும்போது இரண்டு அறிவுள்ள மிஸ்டர்.பூச்சியார் அவைகளை வேட்டையாட உங்கள் தோட்டத்திற்கு படையெடுத்து வருவார்.
பாதை விரியும்…