இணைய இதழ்இணைய இதழ் 100மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

இலையுதிர்கால மேலங்கியும், அடைமழைக்கால விழிகளும்

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

சிங்களம் மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

“சரியான பட்டிக்காட்டான். இந்தக் காலத்துல பசங்க யாராவது தலைக்கு எண்ணெய் தடவுவாங்களா? ஜெல்தானே பூசிப்பாங்க?!”

“இது இளநீர் தைலம்… நல்ல வாசனையா இருக்குல்ல?”

“நாற்றமா இல்லைதான்.”

“பைத்தியக்காரி… உனக்குத்தான் இந்த இளநீர் தைலத்தோட வாசனை பிடிச்சிருக்குல்ல…? நான் அடுத்த கிழமை வீட்டுக்குப் போயிட்டு வர்றப்ப உனக்கும் எடுத்துட்டு வர்றேன்.”

“ஐயோ… எனக்கு வேணாம். நான் தலைக்கு எண்ணெய் வைக்கிறதில்ல. எண்ணெய் வைக்குற பட்டிக்காட்டான்களை மாத்திரம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.”

“பட்டிக்காட்டான்கள்?”

“ஆமா.”

“என்னைத் தவிர மற்ற பட்டிக்காட்டான்கள் யாரு?”

“நீ, நீ மற்றும் நீயேதான். நீ ஒருத்தனில்ல. பல பேர் சேர்ந்தவன்தான் நீ. போனாப் போகுதுன்னு நான் ஒரேயொரு பட்டிக்காட்டானை மட்டும் காதலிக்கும் அளவுக்கு முட்டாள்னு நினைச்சியா பட்டிக்காட்டானே?”

அது நாங்கள் இருவரும் சிரித்துக் கழித்த மிகவும் மகிழ்ச்சியான காலம். உண்மையில் பல்கலைக்கழகத்தில் அவளது புன்னகையில் ஈர்க்கப்படாத மாணவர்கள் எவரையும் நான் அந்தக் காலத்தில் சந்தித்ததேயில்லை. என்றாலும் அவளது புன்னகையானது மிகவும் பெறுமதியானது என்பதனால் எல்லா இளைஞர்களுக்கும் அந்தப் புன்னகை கிட்டவுமில்லை. அவர்கள் அதற்கான புண்ணியம் செய்திருக்கவில்லை. உண்மையில் நான்தான் இறுதியாக அவளிடம் புன்னகையை எதிர்பார்த்தவனாக இருக்கக் கூடும். அது, அவள் என்னை அருகாமையில் கடந்து போகும்போது கூட மிகத் தொலைவில், உயரத்தில் அவள் பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் கண்டதாலாக இருக்கலாம்.

அவளை உயர்வாகவும், என்னைத் தாழ்வாகவும் எண்ணிப் பார்ப்பதே எனது வேலையாக இருந்தது. அதில் போட்டி எதுவும் இல்லாமலே நான் தோல்வியை ஏற்றுக் கொண்டிருந்தேன். அவள் அல்லாமல் வேறொரு பெண்ணே கிடைக்கவில்லையா என்ற கேள்வி எவருக்கும் எழும் முன்பே நான் அதற்கு பதிலளிக்கிறேன். ஏனைய இளைஞர்களைப் போலவே நானும் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் என்பது நிஜம். அவளிடமிருந்த கிறங்கடிக்கும் அழகு வேறெவரிடத்திலும் இருக்கவில்லை என்பதால் எனக்கு பார்த்து ரசிக்கக் கூட வேறெவரும் இருக்கவேயில்லை. வேறு எந்தப் பெண்ணும் ஒருபோதும் என்னைக் கண்டுகொண்டதுமில்லை. எவருக்குள்ளும் என்னைக் குறித்து ஓர் ஈர்ப்பு இருக்கும் என்று கூட நான் நினைக்கவில்லை.

அது வைசாக மாதம். பல்கலைக்கழகத்தை அலங்கரிக்கும் வேலைகளில் நான் சுயமாகவே விரும்பிக் கலந்து கொண்ட புண்ணியத்துக்கான பலன் அன்றே எனக்குக் கிடைத்தது. எனது சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முழுமையான பூஜை மண்டபமானது அவளது விழிகளை விரியச் செய்ததோடு தனது விரல் நுனிகளால் அதைத் தடவிப் பார்த்தவாறே தனது வியப்பை வெளிப்படுத்தினாள்.

“ஆச்சரியமா இருக்கு. ரொம்ப அழகா இருக்கு. இந்த வேலையெல்லாம் எப்படிக் கத்துக்கிட்டீங்க?”

“இதுல புதுசா கத்துக்க என்ன இருக்கு?”

“அப்போ எங்கிருந்தாவது கொண்டு வந்திருப்பீங்க. இல்லையா?”

“கொண்டு வரத் தெரிஞ்சவங்க விரும்பினா கத்துக்கவும் முடியுமே.”

“இதை மட்டும்தான் செஞ்சீங்களா?”

“இல்ல. இன்னும் ரெண்டு, மூணு இருக்கு.”

“அதைக் காட்டுவீங்களா? அதைப் பற்றி சொல்வீங்களா இல்லன்னா கத்துக் கொடுப்பீங்களா?”

“மூணையுமே செய்யலாமே.”

“உங்களால முடியாததுன்னு எதுவுமே இல்லையா?”

“தெரியலையே.”

“எனக்கு அப்படித் தெரியலையே.”

அப்பேரழகி தனது அறிவாலும் என்னை அன்றுதான் ஈர்த்தாள். அதன் பிறகு புன்னகையாலும், பேச்சாலும் அவள் என்னை அடிமைப்படுத்தினாள். இவ்வளவு காலமாக என்னுடன் பழகாததைக் குறித்து அவள் ஆயிரம் தடவையாவது தனது கவலையைத் தெரிவித்திருப்பாள். அவளுடன் பழகத் தொடங்கியதன் பின்னர் நிறைய எதிரிகளைப் போலவே புதிய நண்பர்களும் எனக்கு அறிமுகமானார்கள். நானோ அவளைத் தவிர்த்து வேறு எவருடனும் பழக முயற்சிக்கவேயில்லை.

என்னிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் விரும்பிய போதிலும், அவள்தான் நிறைய விடயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தாள். கவிஞனல்லாத என்னைக் கவிஞன் ஆக்கினாள். அவளது அப்பாவித்தனமான விழியோரப் பார்வையையும், கிறங்கடிக்கும் புன்னகையையும், தீப்பற்ற வைக்கும் தீண்டல்களையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து பேனா முனையால் இன்பம் அனுபவிக்க அவளால் நான் கற்றுக் கொண்டேன். இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்றும், இலக்கியம் என்பது அதீதக் கற்பனை என்றும், அதெல்லாம் பாவ காரியங்கள் மாத்திரமே என்றும் எண்ணித் தவம் செய்து கொண்டிருந்த என்னை, அந்தத் தவத்திலிருந்து சுய நினைவுக்கு மீட்டெடுத்தவளும் அவள்தான். எனது அழுக்குகளை அகற்றினாள் அவள். தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த தேவதையொன்று அவ்வளவு காலமும் பெண்களுடன் பழகியே இருக்காத என்னுள் காதல் இளவரசன் ஒருவனை உருவாக்கினாள்.

நான் எழுதுபவற்றை அவள் வாசித்து மகிழ்வதைக் காணும்போதெல்லாம் நானே எனது கவிதைகளின் மீது பொறாமை கொண்டேன். அவள் என்னை விடவும் நான் எழுதுபவற்றைத்தான் காதலிக்கிறாளோ என்று சந்தேகப்பட்டேன். கவிதைகளை உறிஞ்சும் விழிகளால் என்னை உறிஞ்சுமாறும், பக்கங்களை புரட்டிப் பார்க்கும் கைகளால் என்னை அணைத்துக் கொள்ளுமாறும் எப்போதும் நான் அவளை வற்புறுத்தினேன். கட்டளையிட்டேன். மன்றாடினேன். நான் வற்புறுத்தும்போது அவள் சிரித்தவாறே தப்பித்து ஓடுவாள். என்றாலும் மீண்டும் அவளைத் தேடிப் போக நான் தூண்டப்படுவேன். நான் கட்டளையிடும்போது அவள் கோபப்பட்டுக் கத்துவாள். என்றாலும் மீண்டும் என்னை முத்தமிட்டு ஆற்றுப்படுத்துவாள். நான் மன்றாடும்போது அவள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தபோதிலும், மறுநொடியே சிரித்தவாறு என்னோடு ஒட்டிக் கொள்வாள்.

அவளது இந்த வசீகரமான நடவடிக்கைகள் என்னைப் பைத்தியக்காரனாக ஆக்கியவாறு, கோழையாக ஆக்கியவாறு, பிரபலமானவனாக ஆக்கியவாறு, பதற்றப்படுபவனாக ஆக்கியவாறு, சாந்தமானவனாக ஆக்கியவாறிருந்த அந்த யுகம் எனது வாழ்க்கையில் வர்ணஜாலங்கள் காட்டிய ஓர் இனிமையான அத்தியாயமாக இருந்தது.

அவள் அளவுக்கு எவருமே காதலின் மேன்மையான இடங்களை அறிந்திருக்க மாட்டார்கள். அவள் அளவுக்கு எவருமே காதலின் கடுமையையோ, மென்மையையோ அறிந்திருக்க மாட்டார்கள். அவள் அளவுக்கு எவருமே காதலின் இண்டுஇடுக்குகளையோ, ஓட்டைகளையோ, சிறு புள்ளிகளையோ கூட அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு முழுமையான ஓவியத்தையும், அதன் மூலப் பொருட்களையும் ஒரே தடவையில் காண முடிவது அவளது சிறப்பியல்பு. உண்மையிலேயே அவள் எனக்கு முற்று முழுதான, முழுமையான காதலியாக ஆனாள். அரைகுறையாக இருந்த நான் அவளால்தான் முழுமையானேன். எப்போதுமே என்னைப் பாராட்டியவாறு, என்னுள்ளே இருந்த திறமைகள் அனைத்தையும் வெளிக் கொண்டு வந்து நானே அறிந்திராத என்னை உலகுக்குக் காட்டி என்னை ஒரு புது மனிதனாக ஆக்கினாள் அவள். அவ்வப்போது தாயாகவும், சகோதரியாகவும், தோழியாகவும், தாசியாகவும் மாறி அவள் என்னை ஆற்றுப்படுத்தினாள். 

இவை அனைத்தோடும் அவள் எனக்குச் செய்த உதவிகளும் ஏராளம். என்னிடம் ஏதாவது பொருட்கள் இல்லை என்பதை அவள் உணர்ந்ததுமே, மறுநாளே அவற்றை ஏதோ தற்செயலாகத் தருவது போல பரிசாகக் கொண்டு வந்து தருவாள். அதை அவள் காதலோடு திட்டமிட்டுச் செய்ததை நான் வெகுகாலத்திற்குப் பிறகுதான் புரிந்து கொண்டேன். பொருளாதார ரீதியில் மிகவும் வசதியற்றிருந்த நான் அந்த வறுமையை உணராமலிருக்கவும், அதைக் குறித்து வருந்தாமலிருக்கவும் அவள் எவ்வளவு கவனமாகப்   பார்த்துக் கொண்டாள் என்பது கூட எனக்கு இப்போதும் ஆச்சரியத்தை அளிக்கிறது. எனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அணியும் அனைத்தும், ஆடை அணிகலன்களும், வாசனைத் திரவியங்களும் கூட அவள் பரிசளித்தவையாக மாறுவதற்கு வெகுகாலம் எடுக்கவில்லை. அவள் ஒரே தடவையில் சரஸ்வதியாகவும், லக்ஷ்மியாகவும், கண்ணகியாகவும் இருந்தாள். அவளால் எனக்குக் கிடைக்கும் இந்த வரப்பிரசாதங்களை நான் ஒரு கடனாகக் கருதக் கூடாது எனும் விதத்தில் மிகவும் சூட்சுமமாகத்தான் அவள் இவை அனைத்தையும் செய்தாள்.

ஒரு பெண்ணால் இவ்வளவு பாசமாக இருக்க முடியும் என்பதையே நான் அவளிடமிருந்துதான் அறிந்து கொண்டேன். இந்தப் பரிசுப் பொருட்களிடையே எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேலங்கியும் இருந்தது. அவளிடமிருந்து கிடைத்த முதற்பரிசு அந்தச் சட்டை. அவள் எனக்குப் பரிசளித்த ஆடைகளிடையே அந்தச் சட்டை எனக்கு மிகவும் பிடித்திருந்தமைக்குக் காரணம் அது அவளது முதற்பரிசு என்பதனால் மாத்திரமல்லாமல், அதன் வர்ணம் பொதுவாக இலகுவில் காணக் கிடைக்காத நீல நிறத்தோடு கலந்த ஒரு தனிப்பட்ட நிறத்தில் இருந்தமையாலாகும். அதனால் நான் அதை எப்போதாவதுதான் அணிந்து வந்தேன். நான் அதை அணியாமல் பத்திரப்படுத்தும் போதெல்லாம் அவள் ‘கஞ்சன்’ என்று கிண்டல் செய்து அதையே என்னை அணியச் செய்ததோடு, அதை மீண்டும் இன்னுமொரு நாள் நான் அணியாமலிருக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைச் செய்யும் அளவுக்கு அவள் குறும்புத்தனம் மிக்கவளாக இருந்தாள்.

உண்மையில் அந்தச் சட்டை மாத்திரமே ஒரு ஞாபகச் சுரங்கம். அதில், ஐஸ்கிறீம் துளிகள் தெறித்திருந்தன. கோப்பிக் கறைகள் படிந்திருந்தன. நீலப் பேனாவினால் கிறுக்கப்பட்டிருந்தது. சிவப்புப் பேனாவினால் ஒரு சிறு இதயம் வரையப்பட்டிருந்தது. ரம்புட்டான் பழக்கறை துடைக்கப்பட்டிருந்தது. அவள் எனது தோளில் சாய்ந்திருந்து எழுந்து போகும்போது இழுபட்ட நூலின் இழை கூட அப்படியே இருந்தது. நான் அந்தக் கறைகள் எவற்றையும் அகற்ற முயற்சிக்கவேயில்லை. அது அவளது நேசத்தை எடுத்துரைக்கும் மிருதுவான அழியாச் சின்னத்தின் வர்ணங்கள்.

வெகுகாலமாக அந்துருண்டைகள் இட்டு ஒரு நினைவுச் சின்னமாக நான் அந்த நீலச் சட்டையைப் பாதுகாத்து வந்தேன். பத்து வருடங்கள் கழிந்திருந்த போதிலும், இன்றும் கூட நான் அவளது காதலின் நேசத்தையும், மிருதுவான கறைகளின் வர்ணங்களையும் மீட்டிப் பார்ப்பதற்காகவே அடிக்கடி அந்தச் சட்டையை இரு கைகளிலும் ஏந்திக் கொள்வேன். அழுவேன். சிரிப்பேன். மீண்டும் மீண்டும் அழுவேன். முத்தமிடுவேன்.

இப்போது அவள் எங்கு என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற கேள்வி எனக்குள் எழுந்து என்னை வாட்டிய போதிலும் அவளைக் குறித்து தேடிப் பார்க்க இப்போது எனக்கு தைரியமில்லை. நான் ஒரு பாதகன். நான் ஒரு சுயநலவாதி. நான்தான் அவளை எனது வாழ்க்கையிலிருந்து கிள்ளியெறிந்தேன். என்றாலும் கடந்த பத்து வருடங்களாக நான் அவளது மகிழ்ச்சிகரமான நல்வாழ்வுக்காக தவறாமல் பிரார்த்தித்து வருகிறேன். அவளுக்கு எதுவும் தவறாக நேராது. அவளது மென்மையான, பாசமான, தயாள குணத்தால் ஆக்கிரமிக்க முடியாத, அந்த குணத்துக்குக் கட்டுப்படாத எந்த முரட்டு ஆடவனும் இருக்கவே முடியாது. அவளுக்குக் கிடைக்கும் ஆண்மகன் அவளுக்குக் கட்டுப்பட்டே இருப்பான். ஆகவே, உலக தர்மத்துக்கு ஏற்ப அவள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பாள்.

என்றாலும் அவளுக்குப் பிறகு நான் சந்தோஷமாகக் கழித்த நாட்களை என்னால் தேடிக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவளிருந்து வெற்றிடமாக்கிப் போன எனது வாழ்க்கையை நிரப்ப நான் பல வழிகளில் முயற்சித்த போதிலும், ஓய்வாக இருக்கும்போதும், தனிமையில் இருக்கும் ஒவ்வொரு கணத்திலும் நான் எனது இதயத்தில் குத்தப்பட்டிருக்கும் அந்தக் கூரிய கத்தியை அசைத்துப் பார்ப்பேன். அது இன்னுமின்னும் வலியைத் தரும். புதிது புதிதாகக் குருதி வழியும். ஒருபோதும் குணமாகவே கூடாது என்று நான் எதிர்பார்க்கும் அந்தக் காயத்தைத்தான் நான் காதலிக்கிறேன். 

“என்னோட வீட்டுல சம்மதிக்க மாட்டேங்குறாங்க விஜய். அப்பா சொல்ற பெரிய பெரிய அந்தஸ்துள்ள ஆட்களைக் கட்டிக்க என்னால முடியாது. எனக்கு நீதான் வேணும். உன்னைப் போல வேற யாரும் இல்ல விஜய். நாம ஓடிப் போகலாம். நீ நல்லா முன்னேறக் கூடிய ஒருத்தன். நாம முன்னேறிக் காட்டுவோம்.”

“வீட்டைப் பகைச்சுக்காதே மிஹிரி. அவங்க உனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்காங்க?! நாங்க கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம். நான் இன்னும் வேலை தேடிட்டிருக்கேன்.”

“எனக்கு அது தெரியும். உன்கிட்ட இருக்குற கண்ணியத்தையும், அறிவையும், விடாமுயற்சியையும் அவங்களுக்குக் காண்பிக்கணும். அதுதான் எனக்கு வேணும். ஒரே மாதிரியான அச்சுல வார்க்கப்பட்ட எந்தப் பணக்காரப் பையனோடும் என்னால வாழ முடியாது. எனக்கு நீதான் வேணும். உன்னைப் பற்றி அவங்க தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம்தான் வீட்டுல பார்த்திருக்குற சம்பந்தத்துக்கு சம்மதிக்கச் சொல்லி அவங்க என்னை வற்புறுத்திட்டிருக்காங்க. உனக்கு அது தெரியும்தானே விஜய்? நீ சீக்கிரமா ஒரு முடிவை எடுக்கலைன்னா நான் இல்லாமப் போயிடுவேன் விஜய். நானும் இப்போ ரெண்டு மாசமா உன்கிட்ட சொல்லிட்டே இருக்கேன். இன்னும் ரொம்ப நாள் என்னை விட்டு வைக்க மாட்டாங்க. குடும்ப பாரத்தை நீதான் சுமந்துட்டிருக்கேங்குறது எனக்குத் தெரியும். உனக்கு ரெண்டு அக்காக்களும், ஒரு தங்கச்சியும் இருப்பதுவும் எனக்குத் தெரியும். அக்காக்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்காம உன்னால கல்யாணம் பண்ண முடியாதுங்குறதும் எனக்குத் தெரியும். ஆனா, என்னையும் புரிஞ்சுக்கோ விஜய். நாம ரெண்டு பெரும் சேர்ந்து எல்லோரையும் கரையேத்துவோம். சிற்பங்களைச் செதுக்கியாவது உன்னால வாழ்ந்து காட்ட முடியும். உன்னால செய்ய முடியாதுன்னு எதுவுமேயில்ல விஜய்.”

“உனக்கு யதார்த்தம் புரியல மிஹிரி. நீ சகல செளபாக்கியத்தோடும் வாழுற பொண்ணு. நான் உன்னைக் கூட்டிட்டு எங்கேதான் ஓடிப் போறது? நீ என்னைப் பார்த்துக்கிட்ட விதத்தைப் பார்க்கும்போது நான் உனக்கு ஒரு சின்னக் கவலையைக் கூட தரக் கூடாது. என்னோட உடைஞ்சு சிதைஞ்சு போயிருக்கிற வீட்டுல விறகு வெட்டவும், தேங்காய் துருவவும் பழகிப்பேன்னு நீ சொல்றது நிஜம்தான்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னோட அக்காக்களும், அம்மாவும் உன்னை எப்படி நடத்துவாங்கங்குறத நினைச்சுப் பார்க்கவே எனக்கு பயமாயிருக்கு. என்னோட அக்காக்கள் கல்யாணம் பண்ற வயசையும் கடந்துட்டிருக்காங்க. உன்னோட அழகும், நல்ல மனசும் என்னோட வீட்டை நல்ல வீடாக மாற்றாது மிஹிரி. என்னோட அம்மா எப்படிப் போனாலும் என்னோட அக்காக்களோடு உன்னால ஒண்ணா வாழ முடியாது செல்லமே. உன்னோட புன்னகையிலிருந்து உன்கிட்ட இருக்குற எல்லாமே ஏனைய பொண்ணுங்க பொறாமைப்படுற விஷயங்கள். உனக்கு நான் சொல்றதெல்லாம் இப்போ புரியாது. எனக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கொஞ்சம் காலம் வேணும். என்னோட வீட்டு நிலைமை உன்னை விட எனக்குத்தான் நல்லாத் தெரியும்.”

“எனக்குப் புரியுது. ஐயோ, என்னால புரிஞ்சிக்க முடியுது. என்னால எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்க முடியும். ஆனா, நீயில்லாம இருக்குற கவலையைத்தான் என்னால தாங்கவே முடியாது. என்னைக் கூட்டிட்டுப் போ விஜய். இந்தக் கிழமைக்குள்ள நீ ஒரு முடிவை எடுக்கலைன்னா எனக்கு என்ன ஆகுமோ தெரியாது. உனக்கு என்னோட அப்பாவைப் பற்றித் தெரியும்தானே?”

“உனக்கு எதுவும் ஆகாது. நீ செய்ற நன்மைகள் உன்னைக் காக்கும். நீ தப்பான முடிவுகள் எதையும் யோசிச்சுக் கூட பார்க்காதே. என்னால உனக்குக் கஷ்டத்தைத் தர முடியவே முடியாதுன்னுதான் நான் சொல்ல வர்றேன். நீ வாழ்ந்துட்டிருக்குற சுவர்க்கத்திலிருந்து உன்னை நரகத்துக்குக் கூட்டிட்டுப் போக என்னால முடியாதுன்னுதான் நான் சொல்ல வர்றேன். எனக்கு இன்னும் ஒரு வருஷமாவது வேணும். எங்க காணிகளை வித்தும், வீட்டை அடகு வச்சும்தான் என்னைப் படிக்க வச்சிருக்காங்க. வீட்டுல எப்போதுமே வறுமை. அந்தக் கடனையெல்லாம் நான்தான் தீர்க்கணும். அதையெல்லாம் செய்யாம திடீர்னு நான் உன்னையும் கூட்டிட்டு வீட்டுக்குப் போய் நின்னா, என்னோட வீட்டார் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்கன்னு கூட நான் கவலைப்படல. அவங்க உன்னை எப்படி நடத்துவாங்கன்றதுதான் என்னால தாங்க முடியாமலிருக்கு. உனக்கு வீட்டுல பார்க்குற சம்பந்தம் நல்ல ஒண்ணுன்னா நீ அதுக்கு சம்மதிச்சிடு. உன்னோட அப்பாதான் நம்ம கல்யாணம் நடக்கவே நடக்காதுன்னு உறுதியா சொல்லிட்டாரே. என்னதான் நம்ம பிரிஞ்சு வேறு வேறாய்ப் போனாலும் நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்குறதைத்தான் நான் பார்க்கணும். அதான் எனக்கு வேணும்.”

“நல்லா இருக்கிறதை விடு. சந்தோஷமா இருக்கணும். அதான் எனக்கு வேணும் விஜய். ஐயோ, என்னைக் கைவிட்டுடாதே.”

நான் கையாலாகாதவனாக எதையும் செய்ய முடியாதவனாக இருந்தேன். வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள், துயரங்களுக்கு இலக்காகுபவர்களின் எண்ண ஓட்டங்கள் குறித்து அவள் என்னதான் அறிவாள்? அவள் போன ஜென்மத்தில் நிறைய நன்மை செய்திருப்பாள். நான் அனுபவித்துக் கொண்டிருந்த அந்தத் துயரம் மிகுந்த தரித்திர இருளுக்குள் நொடிப் பொழுதில் அவளையும் தள்ளி கஷ்டப்படுத்தும் பாவத்துக்கு நான் எப்படி ஆளாக விரும்புவேன்?! அவள் மீதிருக்கும் எனது காதல், அவளது காதலிலிருக்கும் பேராசைக்கு ஈடாகவே இருக்க வேண்டுமா என்ன?! நான் கரையேறும் வரைக்கும் அவளையும் சேற்றில் அமிழ்த்திக் கொண்டிருக்கையில், கரையேறும் முன்பே நாங்கள் இருவரும் மூழ்கிப் போனால் அவளுக்கு நேரும் இழப்பை நான் எவ்வாறு ஈடேற்றுவேன்?! ஆகவே, அந்தக் கணத்தில் நான் எடுத்த முடிவானது அவளது நலனை முன்னிட்டு மாத்திரமே எடுத்ததாகத்தான் இருந்தது. என்றாலும் அவள் அந்த முடிவை எனது சுயநலத்துக்காக எடுத்தது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுமாறுதான் நான் நடந்து கொண்டேன். அந்த நேரத்தில் எனக்கு வேறு வழியிருக்கவில்லை.

ஆரம்பத்தில் அவள் கதறியழுதாள். பின்னர் எனது தலைமயிரைப் பிடித்திழுத்தாள். அறையிலிருந்த பொருட்களையெல்லாம் தரையில் தூக்கியடித்தாள். எனது புத்தகங்களைக் கிழித்தெறிந்தாள். கையில் கிடைத்தவற்றால் என்னைத் தாக்கினாள்.

“கேடுகெட்டவன்! சுயநலவாதி! நான் முன்ஜென்மத்துல செஞ்ச பாவம்தான் உன்னைப் போல ஒருத்தனைக் காதலிக்க வச்சிருக்கு. பொய் பொய்யா ஏதேதோ சொல்லிட்டிருக்கே. என் மேல கொஞ்சம் கூட காதல் இல்ல உனக்கு? பொய்யா என்னைக் காதலிக்கிற மாதிரி நடிச்சிட்டிருந்துட்டு இப்போ வீட்டார் மேல பழி போட்டுட்டிருக்கே நீ. முதுகெலும்பில்லாதவன். உன் வீட்டுல என்னைப் பற்றி முன்னாடியே சொல்லியிருக்கலாமே. வீட்டார்க்கிட்ட நீ என்னதான் நல்லவன்னு காட்டிக்கிட்டாலும், நீ என்னெல்லாம் பண்ணியிருக்கேன்னு எனக்குத்தானே தெரியும். என்னோட வீட்டுலேருந்து முதல்ல பிரச்சினை வரட்டும்னு காத்துட்டிருந்த தந்திரக்காரன் நீ. இனிமே உன்னோட மூஞ்சைக் கூட பார்க்க விரும்பல நான். இனிமே என் கண் முன்னாடி வரவே வராதே. நீ எனக்கு இப்படிச் செய்வாய்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல. சின்னக் கவலையைக் கூட எனக்குத் தர மாட்டேன்னு சொன்னவன் நீ. ஆனா, இதை விடப் பெரிய கவலை இனிமே என் வாழ்க்கையில இருக்காது. இதுக்கெல்லாம் நீ அனுபவிப்பாய் விஜய்…”

கண்ணகி, காளியாக ஆனது போல அவளது சிவந்த விழிகளால் என்னை எரித்துச் சாம்பலாக்கி விட்டு அங்கிருந்து சென்றாள். அவள் சொன்னது பலித்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் அந்தக் கவலையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் இவ்வாறு துயருறவே வேண்டும். என்றாலும் எனது கனவுகளும் நடந்தேறின என்பது உண்மைதான். எனது வீட்டாரின் அனைத்துக் கடமைகளையும் ஈடேற்றி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விடவே எனக்கு பல வருடங்கள் எடுத்தது. அவள் என்னுடனே இருந்திருந்தால் அவளும் கஷ்டப்பட்டுக் கொண்டும், என்னைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டும் இருந்திருப்பாள் என்பது நிச்சயம்.

“விஜயேந்திரன்… வாங்கோ டீ குடிக்கலாம். காலையிலிருந்து ஒரே இடத்துல உட்காந்துட்டிருக்கிறியள். இஞ்ச வாங்கோவன்…”

இவள் ஸ்ரேயா. இந்த வீட்டின் புது மணப்பெண். எனது கவலையெல்லாம் இவளுக்குத் தெரியாது. நான் எழுதும் விடயங்கள் கூட இவளுக்குத் தெரியாது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இவளுக்கு இல்லை. புனைப்பெயரில் நான் எழுதி வருவதைக் கூட இதுவரை இவள் அறிய மாட்டாள்.

மிஹிரியையும், என்னையும் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருந்த போதிலும் கூட அவள் என்னை விட்டுப் பிரிந்து போன அந்தக் கடினமான, துயரம் மிகுந்த, கூராய்க் கிழித்த, நஞ்சூட்டப்பட்ட தினத்தின் ஞாபகத்தை மீட்டிப் பார்க்கையில் எனது கண்கள் குளமாகி விடுவதால் நான் இதுவரை அந்த தினத்தைப் பற்றி எதுவுமே எழுதியதில்லை. என்றாலும், இன்று நான் கண்ணீர் கண்களை மறைத்த போதிலும் பாடுபட்டேனும் அந்த ஞாபகத்தை எழுதி விட்டேன். இப்போதுதான் எனது மனதுக்கு சற்றேனும் ஆறுதலாக இருக்கிறது.

ஒருவேளை அவள் இப்போது என்னை மன்னித்திருக்கவும் கூடும். இந்த நொடியில் அவள் என்னை நினைத்துக் கொண்டிருக்கவும் கூடும். எனக்கு இப்போதே அந்த நீலச் சட்டையை இரு கைகளாலும் அணைத்துக் கொள்ளத் தோன்றியது. எனது கண்களில் அடைமழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் இந்தக் கண்ணீரால் அவளது மனதில் என்னால் ஏற்பட்டிருக்கும் காயத்தைக் குளிர்வித்து ஆற்ற முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

நான் எழுதிக் கொண்டிருந்த குறிப்பேட்டை மூடி வைத்து விட்டு எழுந்தேன். அலுமாரியைத் திறந்து அந்தச் சட்டையைத் தேடிப் பார்த்தேன். அது இருந்த இடத்தில் இருக்கவில்லை. பதற்றமுற்ற நான் அலுமாரியிலிருந்த ஆடைகளையெல்லாம் வெளியே இழுத்துப் போட்டேன். அந்தச் சட்டைக்கு என்ன நடந்திருக்கும்? அதற்கு எதுவும் ஆகக் கூடாது. நான் அடிக்கடி எடுத்துத் தொட்டுப் பார்த்து பத்திரமாக எடுத்து வைக்கும் அந்தச் சட்டை இவ்வாறு காணாமல் போக எந்தக் காரணமுமில்லை. நேற்றிரவு கூட நான் அதைக் கையிலெடுத்து முத்தமிட்டேனே?! அது எவ்வாறு இன்று காணாமல் போகும்?!

“விஜயேந்திரன்! என்ன இது? இண்டைக்குக் காலையில்தானே நான் இந்த உடுப்பையெல்லாம் அழுத்தி மடிச்சு அலமாரில அடுக்கி வச்சேன். ஏன் எல்லாத்தையும் வெளியே இழுத்துப் போட்டிருக்கிறியள்? ஏதாவது தேவை எண்டால் என்கிட்டே சொன்னீங்கண்டால் தேடித் தருவேன்தானே?”

“இல்ல… வந்து… இதுல ஒரு நீலக் கலர் ஷேர்ட் இருந்ததே. எங்கே அது?”       

“இவ்வளவு பதறிக் கொண்டு அதையா தேடினனீங்கள்? நிறைய கற்பூர உருண்டைகளைப் போட்டு சுருட்டி வச்சிருந்தீங்கள்… அந்த ஷேர்ட்தானே? உங்களுக்கு ஒரு ஷேர்ட்டைக் கூட ஒழுங்கா மடிச்சு வைக்கத் தெரியேல்ல. அதை சுருட்டி வச்சிருந்ததால நான் விரிச்சுப் பார்த்தேன். வடிவான நிறத்துல நிறையத் தடவை உடுத்தாத நல்லதொரு ஷேர்ட் அது. அதுல சின்னச் சின்னதா ஏதேதோ கறைகள் இருக்குறதாலதான் நீங்க அதை உடுக்காம வச்சிருக்கீங்கள்ன்றது புரிஞ்சது. அதான் சர்ஃப் எக்ஸெல்ல ஊறப் போட்டு நல்லாத் தோய்ச்சுக் கழுவினேன். எல்லாக் கறையும் போயிட்டுது. இப்போ அது பழைய ஷேர்ட் போலவே இல்ல. இவ்வளவு காலமும் கழுவாமலே வச்சிருந்திருக்கீங்கள். இப்போ அது காய்ஞ்சிருக்கும். இருங்கோ எடுத்துக் கொண்டு வாறன்.”

எனது மொத்த தேகமும் மரத்துப் போனது போல உணர்ந்தேன். ஸ்ரேயாவின் நீண்ட கூந்தலைப் பிடித்திழுத்து சுவரில் மோதச் செய்ய வேண்டும் என்ற ஆவேசம் தோன்றிய போதிலும் அதற்குக் கூட எனது மனதிலும், உடலிலும் பலமற்றிருப்பதை உணர்ந்தேன். எனது வாயிலிருந்து ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்காமல் நான் அந்த அறையிலிருந்து வெளியேறி வாசிப்பறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன். எனது அழுகை ஸ்ரேயாவுக்குக் கேட்டிருக்குமா என்பதை நானறியேன். அவள் வந்து கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தாள்.

எனது கண்களின் அடைமழையை விடவும் மிஹிரியின் மனக் காயம் விசாலமானது. அவளது மன்னிப்பு எனக்கு இன்னும் கிடைக்காமலிருப்பதற்கு அதுதான் காரணமாக இருக்கக் கூடும்.

*********

மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

இலங்கையில் சிங்கள மொழியில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வரும் எழுத்தாளர் மனுஷா ப்ரபானி திஸாநாயக்க ஒரு விளம்பர நிறுவனத்தில் கலை இயக்குநராகவும், விளம்பரங்களை எழுதுபவராகவும் பணி புரிந்து வருகிறார். மனிதர்களிடையேயான நேச உணர்வுகளைக் குறித்த சிறுகதைகளை அதிகளவில் எழுதி வரும் இவரது சிறுகதைகளில் ஒன்று உலகின் சிறந்த காதல் கதைகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இவரது சிறுகதைத் தொகுப்பு விதர்ஷன சாகித்திய விருதுவிழாவில் முதன்மையான ஐந்து சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

mrishansh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button