![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/02/36973612_699322040399872_449093557270085632_n-780x405.jpg)
6. எரிசக்தி
மனிதன் தன் தேவைக்காக எப்போது எரிசக்தியை பயன்படுத்த ஆரம்பித்தானோ அன்றைக்கு ஆரம்பித்தது ‘வளர்ச்சி’ என்கிற நுகர்வு வெறியும், இன்றைக்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற புவி வெப்பமடைதலும்.
இன்றைக்கு நாம் இழுவைத்திறனுக்காக பயன்படுத்தும் இருசக்கர வாகனம், மகிழுந்து, பாரஉந்து, விமானம், கப்பல் மற்றும், வெளிச்சத்திற்காகவும், வீட்டின் தேவைக்காக மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்திற்காகவும் புவியின் அடியாளம் வரை குடைந்து நாசமாக்கிக்கொண்டிருக்கிறோம் நமது பூமியை.
நாம் விரும்பியோ, விரும்பாமலோ இந்தச்சூழலுக்குள் சிக்குண்டிருக்கிறோம். புவியின் அடியாளத்திலிருந்து கிடைக்கும் எரிசக்தியானது இன்னும் பன்னிரெண்டாண்டுகளில் தீர்ந்து போகுமென்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். அப்படியொரு காலம் வருமுன் தற்சார்புக்கு திரும்ப நினைக்கிற நாம் தற்போது குறைந்தபட்ச அறத்தோடு எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்கிற திசையை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வளர்ச்சியென்கிற போதையில் வேகமாக பயணித்துக்கொண்டிருப்பவர்கள் இழுவைத்திறனுக்காக கழுதை, குதிரைகளையும், மரபில் நாம் தொலைத்துவிட்ட மாட்டுவண்டிகளையும் தேடத்துவங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இப்படி உலகத்தின் போக்கு ஒருபக்கம் இருந்தாலும், தற்போது நாம் என்ன செய்யப்போகிறோம்? என்பதுதான் நம் முன்னால் எழும் கேள்வி.
தோட்ட வேலையை முன்னெடுத்துக்கொண்டிருக்கும்போது முள்வேலிக்கட்டுகள், கற்தூண்கள், மற்றும் உட்கட்டுமானத்திற்கு தேவையான செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் உங்களுடைய நிலத்திலேயே தற்காலிக குடிசையமைத்து தங்க நேரிடும்.
அப்போது உணவின் தேவைக்காக அவ்வப்போது உணவகங்களுக்கோ, வீட்டிற்கோ சென்றுவர முடியாது. அந்த வேலையில் சமைப்பதற்குத்தேவையான மண்பாண்டங்களை வாங்கி வந்து சமைக்கத்துவங்கலாம்.
அங்கே கட்டுமானத்திற்காக வாங்கி வைத்திருக்கிற செங்கல்லையோ, கருங்கல்லையோ தரையில் ‘ஃ’ வடிவத்தில் பொருத்தி, அங்கே கிடைக்கிற சுள்ளிகளைப்பொறுக்கி தற்சார்பு எரிசக்தி முறைக்கு திரும்பலாம்.
பனை ஓலை, தென்னை ஓலை, செடிகொடிகளின் சருகுகளை தீயின் நாக்குகளுக்கு திண்ணக்கொடுத்து, அதன்பின்பு பெரிய கட்டைகளுக்கு தீயைக்கடத்தி நெருப்பு உச்சநிலையைத்தொட்டு உயரும் போது, அதுவரை எரிகுவளையின் தேவைக்காக உலக நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு செத்து மடிந்த பாவத்திலிருந்து உங்கள் மனம் விலகத்துவங்கியிருக்கும்.
பின்னாட்களில் ஆநிரைக்கூடம் அமைத்து, அதன் சாணம் மற்றும் தோட்டத்திலிருந்து கிடைக்கும் தாவரக்கழிவிலிருந்து ‘பயோ கேஸ்’ முறைக்கு மாறலாம். இப்போதெல்லாம் வெறும் ஐயாயிரம் ரூபாய் பணமதிப்பீட்டில் நல்ல தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய எரிசக்தி முறை சந்தையில் பிரபலம்.
‘போர்வெல்’ அமைப்பிலிருந்து தண்ணீரை மேற்கொண்டு வரவும், பண்ணையின் பிற எரிசக்திக்காகவும் பயன்படும் ‘சோலார் அமைப்பு’ முறைக்கு 90%மானியம் தருகிறது அரசு.
சோலார் அமைப்பை பொருத்தவரை நீர் தரைமட்டத்திலிருந்து முன்னூறு அடி ஆழம் வரை இறவைத்திறன் இருக்கும்.அதற்கும் அடியிலிருக்கும் தண்ணீர் அமைப்பிற்கு ‘சோலார் அமைப்பு’ எடுபடாது.
உங்களுடைய நிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் முன்னூறு அடிக்கும் குறைவான தூரத்தில் கிடைத்து விட்டால் எரிசக்தியில் தன்னிறைவை எட்டுவீர்கள். அப்படியில்லாமல் நிலத்தடிநீர் மட்டம் ஐநூறு அடி, எழுநூறுஅடி என்று நீண்டு கொண்டே சென்றால் வேறு வழியில்லை, அரசு தரும் மின்சார அமைப்புக்குத்தான் செல்லவேண்டும்.
வேளாண் விளைநிலங்களுக்கு மின்சாரத்தை மொத்தம் மூன்று வழிமுறைகளில் கொடுத்து வருகிறது. ஒன்று இலவச மின்சாரம். அதுவும் 2000ம் ஆண்டுக்கு பின்பு பதிவு செய்தவர்களுக்கு இனி இலவச மின்சாரம் கிடையாது என்று அரசே அறிவித்திருக்கிறது. தற்போது கொடுத்துக்கொண்டிருக்கும் இலவச மின்சாரத்தை அரசே எப்போது வேண்டுமானாலும் துண்டித்து அதை பணமாகத்தான் இனி தருவேன் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
இரண்டாவது 3Aமின்சார அமைப்பு இது ‘கமர்சியல்’ அமைப்பை விட சற்று குறைவானது.
மூன்றாவது முழுக்க முழுக்க ‘கமர்ஷியல்’ முறை.
தற்போது முன்பனமாக இரண்டு லட்சம் பணம் கட்டி மின் இணைப்பை ஆறே மாதத்தில் பெற்றுக்கொள்ளும்படியாக ‘தட்கல்’ முறையை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுகினால்தான் அதில் உள்குத்து எவ்வளவு இருக்கிறதென்று தெரியவரும்.
கிணறு அமைப்பில் நீரும் இருந்து மேற்கண்ட எந்த முறையும் உங்களுக்கு கைகூடாத பட்சத்தில், வேறு வழியில்லை இறவைத்திறனுக்காக மாடு பூட்டி இழுக்கும் நமது பழைய மரபான கமலைக்குத்தான் திரும்பியாக வேண்டும்.
பாதை விரியும்…
முந்தைய பகுதிகள்