இணைய இதழ்இணைய இதழ் 90கட்டுரைகள்

சிறுகதைகளில் முடிவு – ந.சிவநேசன்

கட்டுரை | வாசகசாலை

ரு சிறுகதையின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும்? ட்விஸ்டுகளை அடுக்கி வாசகனின் எண்ண அலையை திருப்பிவிடுவதாக அமைய வேண்டுமென பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் சிறுகதை எழுதப்படும் எல்லாச் சூழலிலும் அது அவசியமாகிறதா என்பதே கேள்வி. தமிழ்ச்சூழலில் கையாளப்படும் சிலவகையான தேர்ந்த முடிவுகளை சில கதைகளின்வழிக் காணலாம். 

முதலில் காஞ்சனை.. ஒரு அமானுஷ்யம் மிளிரும் கதையை இலக்கியத்தரம் கொஞ்சமும் குறையாமல் எழுத முடியுமா? தாராளமாக முடியுமென இக்கதையில் புதுமைப்பித்தன் நிரூபித்திருப்பார். நாம் பார்க்கப்போவது அதை பற்றியல்ல. காஞ்சனையின் முடிவைப் பற்றி. தன்னையே கதைசொல்லியாக காண்பித்துக் கொண்டு கதையைத் தொடங்குபவர் அதை நெடுகிலும் வெற்றிகரமாக நீட்டித்திருப்பதில் கதையின் நம்பகத்தன்மை மேன்மேலும் பட்டை தீட்டப்பட்டு முடிவில் ஏதோ ஒன்று நிகழப்போவதான பயங்கரத்தை நமக்குத் தந்து விடுகிறது.

கதைப்படி வீட்டு வேலையாளாக வந்து சேரும் பெண்ணின் விநோதச் செயல்பாடுகளை எழுத்தாளரும் எழுத்தாளரின்வழி நாமும் அறிந்து கூர்ந்து நோக்கத் தொடங்குகிறோம். ஆனால் வீட்டிலிருக்கும் எழுத்தாளரின் மனைவிக்கு அப்படியெதுவும் புலப்படுவதில்லை என்பது தான் ஹைடென்ஷன். அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் மாயத்தன்மை கதையின் முடிவில் முழுவடிவம் பெற்று நம்மை நோக்கிச் சிரிக்கும் போதுதான் ஒரு நாவலின் முதல் அத்தியாயத்தைப் போன்று உண்மையில் கதை தொடங்குகிறது. 

அடுத்து என்ன நேரப்போகிறதோ என்ற பதட்டத்தை நமக்குத் தந்து முடியும்போது காஞ்சனை குறித்தான மர்மவெளிக்குள் நாம் பயணிக்கத் தொடங்குகிறோம். இதேபோன்று கதை முடிந்தபிறகு தொடங்கும் தன்மையை சுஜாதாவின் நகரம் உள்ளிட்ட பல சிறுகதைகளிலும் காண முடியும். 

ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென வெளிப்படும் பெண் கதாபாத்திரத்தால் அவர்களது திட்டம் சீர்குலைவது என நீடிக்கும் கதை நம்மையும் அவர்களைப் போன்று ஒரு புதருக்குள் பதுங்கி குற்றவாளிக்காக காத்திருக்கச் செய்கிறது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாய் அவனை கைது செய்து அழைத்து வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அவனது கூட்டாளியால் காவல் வாகன ஓட்டுநர் சாய்க்கப்படுகிறார். முழுக்க குற்றவாளிக்கு சாதகமான இடத்தில் அவனது மாயவலையினுள் அவர்கள் சிக்கிக் கொண்டதான சூழலை காட்சிப்படுத்தும் கதையின் கடைசி வரிகள் 

‘கட்டப்பட்ட கைகளோடு நிற்பவனின் முகத்தில் மெல்லிய நகைப்பு தோன்றி ரத்தம் காய்ந்து போயிருந்த உதட்டில் அது உறைந்து கொண்டிருந்தது’     

என முடிந்து எதிர்பாராதத் தன்மையின் நீட்சியை நமக்குள் நிகழ்த்தி அடுத்து நேரப் போகும் சம்பவங்களை எண்ணி பதட்டம் கொள்ளச் செய்கிறது. இப்படியா அல்லது அப்படியா என யோசிக்கச் செய்யும் இதுபோன்றக் கதைகளின் முடிவு கனமாக அமைவதன் காரணம் நாமும் கதை மாந்தர்களோடு பயணிப்பது தான்.

அடுத்தது ட்விஸ்டோடு முடியும் சிறுகதைகள்.. இவ்வகையானவை ஓ ஹென்றி, மாப்பசான் போன்ற பல சிறுகதை மேதைகளுக்கு பிடித்தமான கலை. குறிப்பாக மாப்பசான் எழுதிய மிகப்பிரபலமான நெக்லஸ் கதையின் முடிவைச் சொல்லலாம். இரவல் வாங்கிய வைர நெக்லஸை தொலைத்து விட்ட பெண்மணி அதே போன்ற ஒரு போலியை உருவாக்கி  அதன் சொந்தக்காரியிடம் தந்துவிடுகிறாள். ஆனால் தன் சுயத்தைக் காப்பாற்றுவதற்காக ஏற்கனவே வறுமையில் உழல்பவள் மேலும் தன்னை வருத்திக்கொண்டு அனைத்தையும் இழந்து படாதபாடு படுகிறாள். சில வருடங்களுக்குப் பிறகான ஒரு சந்தர்ப்பத்தில் நெக்லஸை வாங்குமளவு பொருளீட்டி அதை ஒப்படைப்பதற்காக அதன் சொந்தக்காரியை தேடும்போது எதேச்சையாக அவளை அணுகுகிறாள். தான் தொலைத்தது முதலான முழுக்கதையையும் அவள் விவரித்து முடிக்கையில் நெக்லஸ்காரி வந்து கைகளை பற்றிக்கொள்கிறாள்.

‘It was worth at most five hundred francs’ என அவள் சொல்லும் வரிகளோடு கதை முடிகிறது. அது ஏற்கனவே விலை மலிவான ஒரு டம்மி நெக்லஸ் தான் என்பதை நாமும் அறிகையில் மனமுடைந்துப் போகிறோம். அந்த நெக்லஸை வைரமென நம்பி இவ்வளவு சிரமங்களை அனுபவித்தவளின் முகத்தை காணத் துடிக்கிறோம். 1884ம் ஆண்டுக்கு கிளம்பிப் போய் அவளுக்கு ஆறுதலாக ஓரிரு வார்த்தைகளைச் சொல்லிவிட முயல்கிறோம். 

இதேபோன்ற கடைசி வரிகளில்

வறியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் செலுத்தும் அரசியலைச்  சொல்லிய கந்தர்வனின் சிறுகதை ஒன்று உண்டு. கதையின் பெயர் துண்டு. 

முதலாளியின் வீட்டுப்பக்கம் செல்லும்போதெல்லாம் துண்டு எடுத்துச் செல்வதும் அதை தலையில் கட்டுவதும், குனிந்து நிமிர்கையில், அவிழ்ந்து விழுகையில் என்ன செய்வதெனத் தெரியாமல் முழிப்பதும், முதலாளியிடம் பேசும்போது கக்கத்தில் இடுக்குவதுமாய் சிரமப்படும் ஒரு வேலையாள் அதனை தனது முள்கிரீடமாக நினைத்து அப்புறப்படுத்த நினைக்கிறான். நினைத்தது போலவே ஒருநாள் மனைவியிடம் அதுபற்றி சொல்லிவிட்டு துண்டை வீட்டிலேயே கடாசிவிட்டு வேலைக்குப் போகிறான்.

இதுவரை வெகு சாதாரணமான  பணியாளின் அன்றாட வாழ்வைச் சொல்லும் கதையாக கடக்கும் துண்டு கடைசி வரிகளில் வேறொரு தளத்துக்குத் தாவுகிறது.

‘துண்டு இல்லாம உன்ன பாக்க முடியலடா.. இந்தா பிடி’ என முதலாளி புது துண்டை நீட்டுகிறார். நீட்டும் சாக்கில் தலையில் கட்டிக் கொள்ளவும், கக்கத்தில் இடுக்கிக் கொள்ளவும் ஆணையிடுகிறார் இவனது மிக எளிய சுதந்திரத்தைக் கூட விரும்பிடாத அந்த முதலாளி.

ஒரு சாதாரண துண்டில் கூட தமது வர்க்கபேத அரசியலை புகுத்திவிடும் முதலாளித்துவம் காட்டுகின்ற போலியான பாசத்தின்வழி கசிகின்ற அசூயையை கந்தர்வன் இந்த முடிவில் நமக்குக் கடத்திவிடுகிறார். 

கதை தானாகவே வரவழைத்துக் கொள்ளும் இந்த இறுதி வரிகளின் திருப்பம் இயல்பானதாக அமைவதால் அதன் கருப்பொருள் குறித்த நெடிய சிந்தனையை நமக்குள் தூண்டி விடுகிறது.

ஜெயமோகனின் ‘வரம்’ சிறுகதையின் முடிவு வேறு மாதிரியானது. கதையின் முடிவை ஒருமாதிரி நாம் அனுமானித்திருந்தாலும் அதன் கிளர்ச்சி தரும் நிழலில் கொஞ்ச நேரம் இளைப்பாறச் செய்வதாக அது நீடித்துச் செல்கிறது. இக்கதையில் திருடன் ஒருவன் இரவின் கருமையில் கலந்து கைவிடப்பட்ட கோயிலுக்குள் சென்று பதுங்குகிறான். அங்கிருக்கும் பெண் தெய்வச் சிலைக்கு தான் எடுத்து வந்த அணிகலன்களைப் பூட்டி விளக்கேற்றுகிறான். இருண்டுக்கிடந்த  கருவறையை பிரகாசமான பக்தி கமழும் இடமாக மாற்றிவிட்டுக் காத்திருக்கிறான். அக்கோயிலை தொன்றுதொட்டு வழிபட்டு வந்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வாரிசான பெண்ணொருத்தி கோயில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்யும் மனோபாவத்துடன் உள்நுழைந்து கருவறையின் திடீர் மாற்றம் கண்டு திகைக்கிறாள். அம்பாள் எழுந்தருளியதாக எண்ணி கைகூப்புகிறாள். தன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்புகிறாள். இத்தோடு கிட்டத்தட்ட கதை முடிவு பெற்றாலும் கூட அதன்பிறகான அவளது வளர்ச்சி, அதை திருடன் அவ்வப்போது கவனித்தவாறே கடந்து போதல் என நீண்டு இறுதியில் அவளது தற்கொலை எண்ணம் திருடனுக்கு எப்படித் தெரிந்தது எனக் கூறுவதோடு கதை முடிகிறது. 

இதன் முடிவை நோக்கி நாம் நகரும்போது ஒரு பெண்ணைக் காப்பாற்றிய திருடனின் மேன்மையில் நாம் லயிக்கத் தொடங்கிவிடுகிறோம். அங்கே அடிக்கடி உதவ நினைத்து முடியாமல் போன நமது சராசரி மனப்பாங்கு நம்மை அந்தத் திருடனாக உருமாற்றி ஒரு பெண்ணுக்கு வாழ்வளித்த நற்குணத்தை நம்முடையதாக மாற்றுகிறது. அவளை வாழ வைத்து அழகு பார்ப்பதை அவன்வழி நாமும் கண்டு திளைக்கிறோம்.

இதற்கு நேர்மாறான முடிவைத் தருகிறது அதே தற்கொலை குறித்த அம்பையின் ‘வீழ்தல்’ சிறுகதை. அயல்நாட்டிலிருக்கும் மகனின் கைவிடுதலில் துணையை இழந்துப் பின் தனிமையிலிருந்து தப்ப அல்லது தனிமையோடு ஒன்றிவிட தற்கொலையை தேர்ந்தெடுக்கும் ஒரு பெண்ணின் வாழ்வைப் பற்றிய இக்கதையில் முதலிலிருந்தே கதை முடிவை நோக்கிப் பயணிக்கிறது. தற்கொலை செய்து கொள்வது குறித்தான வெவ்வேறு கருத்துகள் சமூகத்தில் இருப்பினும் இக்கதையில் அது அவளது விடுதலைக்கு உரியதென வலுவான அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளதில் நாமும் அத்துன்பியலை இயல்பாக ஏற்றுக் கொள்கிறோம். கதையின் முடிவில் அவள் புது உடைகளை அணிந்து வீழ்வதற்காக தன் கால்களை காற்றின் பாதையில் மிதக்கவிடும்போது நாம் கையறுநிலையோடு பார்வையாளனாக அதனைக் காண்பதான தருணத்தில் கதை பயணித்து முடிகிறது.

சிறுகதைகளின் முடிவை உணர்வுப்பூர்வமாகவும் கிராமியச்சூழலின் பூச்சு குறையாமலும் அமைத்துத் தருபவர் மேலாண்மை பொன்னுசாமி. அவரது சிறுகதைகளில் கிளப் கடையும் மிளகாய் மண்டியும் தீப்பெட்டி கம்பெனியும் அம்மண்ணின் கரிசல் நெடிமிகுந்த பக்கங்களை நமக்கு வரிகள்தோறும் எடுத்துக்காட்டுவன. பெரும்பாலும் துயர்மிகுந்தச் சூழலில் உழலும் நிரந்தரத் தொழிலற்ற மாந்தர்களின் வாழ்வைக் கூறும் அவரது ஒரு கதையில் பண்டிகை காலத்தில் துணியெடுக்க முடியாமல் உள்ளூர் ஜவுளிக்கடையில் கடனாக வாங்கும் ஒருவனது இயலாமை கடை ஓனருடனான நட்பை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைக் கூறுகிறது. எப்படியாவது கடனை அடைத்து விடத் துடிப்பவனின் மனோநிலையை அடுக்கடுக்காக வரும் செலவுகள் தொடர்ந்து பாதிப்பதைக் கூறி நகரும் கதை முடிவில் ஒரு நல்ல சிநேகிதம் கடனால் சிதைந்துப் போவதையும் மென்மையான வார்த்தைகளை மட்டுமே உதிர்த்த வாய் இறுக்கமேறியச் சூழலில் ஆயுள்முழுதும் அவமானங்களை சுமக்கச் செய்யும் சொற்களை உமிழச் செய்வதையும் வலுவாக நிலைநிறுத்தி முடிகிறது.

வணிகச்சூழலின் நிலையற்ற மனிதத்தொடர்பு, நஷ்டக்கணக்கால் ஏற்படும் பின்வாங்கல், கடன் கொடுத்தலும் பெறுதலுமான சங்கட நிமிடங்களைக் கூறும் மேலாண்மை பொன்னுசாமியின் இக்கதையைப் போன்றே பா.திருச்செந்தாழையின்        பெருவாரியான கதைகள் அமைந்திருக்கின்றன. அவரது  ‘ஆபரணம்’   எனும் கதையில் என்னதான் சகோதரர்களாக இருந்தாலும் குடும்பச்சொத்தை அடுத்து யார் கைப்பற்றுவது என்பதிலிருக்கும் போட்டி மனப்பான்மை சூது செய்து வெல்ல நினைக்கும் சராசரி மனிதனின் மனோநிலையை காட்சிப்படுத்துவதாக நீள்கிறது. 

தன் உடன்பிறந்தவனின் முன்னேறும் வழிகளையெல்லாம்

ஒவ்வொன்றாக அடைத்து வேறு வழியற்று தன்னை எதிர்பார்க்கச் செய்யும் திரவியமும் அதில் பெருமிதமடையும் அவன் மனைவி மரியமும் சிக்காமல் நழுவும் பகடைக்காயின் எண்களாக தம்மை கதை நெடுகிலும் வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றாகத் தோற்று நிற்கும் தன் கணவனின் சாபவாழ்வில் தானும் சிக்கி வழியற்று நிற்கும் சித்திரை கைக்குழந்தையோடு தடுமாறுகிறாள். 

எல்லாவற்றையும் அடைந்தப்பிறகு மூன்றாவதாக கருவுற்றிருக்கும் சித்திரையின் குழந்தை மீது குழந்தைப்பேறுக்காக ஏங்கும் மரியத்தின் பார்வை விழுகிறது. குழந்தையை தத்துத் தருவதன் மூலம் சித்திரை தன் கணவன் இழந்தவற்றில் சிலதை மீண்டும் பெறலாம்தான். ஆனால் இருவரும் கேட்டு வந்து நிற்பவர்களை பிடிவாதமாக மறுத்து அனுப்பி விடுகிறார்கள். செய்வதறியாது அவர்கள் தலைகுனிந்தபடியே நகர்வதான இக்கதையின் இறுதி வரி முக்கியமானது. நினைத்தவாறே கொழுந்தனின் குடும்பத்தை வீழ்த்திய மரியத்தின்  இதில் மட்டும் வீழ்த்த முடியாத ஏக்கத்தை, அதன்வழி திரும்பிச் செல்பவளின் மீது கவிழும் சோகத்தை எழுத்தாளர் சித்திரையின் பார்வையில் சொல்கிறார். பால்வாசனை எழுகின்ற குழந்தையின் முகத்தை முத்தமிடுபவளை உற்றுநோக்கும் ஏக்கம் கவ்விய மரியத்தின் கண்களை இவள் சட்டெனப் பார்க்கும்போது கார் கண்ணாடி அவசரமாக மேலெழும்பி மறைப்பதாக கதை முடிகிறது. யாரேனுமொருவர் யாரேனுமொருவரிடம் தோற்கும், தோற்கடிக்க முயலும் வாழ்வின் சதிராட்டத்தை மீறிய குழந்தைமையின் மீதான பற்றுதலுக்காக ஏங்கும் மனித மனங்களின் உளவியல் இங்கு காட்சியாகிறது.

ஒரு சிறுகதையின் இறுதி முடிவு ட்விஸ்டோடு முடிவது வலிந்து திணிக்கப்படாத வரை அக்கதை இலக்கியப்பரப்பிலிருந்து விலகிடாமல் நிலைத்து நிற்கும். அதே நேரம் கதையின் மைய இழை எவ்வித மேலோட்டமான கருத்தியலிலும் சிக்கிடாத வலுவோடு இருக்கும்போது அதற்கு ட்விஸ்ட் என்ற காரணி தேவையற்றுப் போகிறது என்பதைத் தான் மேலே குறிப்பிட்டுள்ள கதைகள் எடுத்துக் காட்டுகின்றன‌. கதாபாத்திரங்களின் மீது வாசிப்பவர் தம்மைப் பொருத்திக் கொள்ளும் ஈர்ப்பின் ஈரமோ, கதை நிகழ்தலின் மூலம் அவரது ஆன்மாவுக்குள் நிகழும் சிலிர்ப்பின் மீட்டுதலோ அச்சிறுகதையை காலத்தின் செல்லரிக்காத இலக்கியப்பரப்பின் மீது நிலைகொள்ளச் செய்துவிடுகிறது. தமிழில்  உங்களுக்குப் பிடித்த ஐந்து சிறுகதைகளை இப்போது பட்டியலிடுங்கள் பார்ப்போம். ஆன்மாவின் சிலிர்ப்பு நிகழட்டும்.

********

nsivanesan1988@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button