யாரோ செய்த வன்மங்கள்
யாரோ செய்த புறக்கணிப்புகள்
யாரோ தோண்டிய குழிகள்
நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக
நாளங்களில் வெட்ட வெட்ட
காலொடிந்த புறா ஒன்றின்
நெடுநேர முனகல் சத்தம்
காதில் ஒலிக்க ஒலிக்க
நான் அதைத் தாண்டுகிறேன்
எந்தக் குற்றவுணர்வுமற்று
அந்தப் புறாவின் எழும்பல்
அந்தப் புறாவின் இருப்பு
அந்தப் புறாவின் முனகல்
என்னைத் தொந்தரவு செய்கிறது
கழுத்தைத் திருகிப் போடவும் முடியாது
காலொன்றை ஒட்டவும் வழியற்று
அதைக் கடந்து செல்லும் கணம்
செய்வதறியாது ஊர்கிறது
யாரோ செய்த அத்தனையும் போல.
***
கைகளை விரித்தபடி அணைத்துக் கொள்கிற கரங்கள்
வாழ்விற்கும், உலகிற்கும் எப்போதும் வாய்ப்பதில்லை
விரிந்ததாலேயே எப்போதும்
அணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு
அவையும் தயாராவதில்லை
சிதைந்து சிதைந்து மீண்டு எழுகிறதன் பொது விதிகளின் முன் வேகத்துடன் போராடுவதே சாசுவதமாகியிருக்கிறது
ஏதேனும் ஒன்று இல்லை என்கிற சொல்
யாவருக்குமான பொதுவுடமைச்
சொல்லாக மாறியிருக்கிறது
அத்தனைப் பொய் நாகரீகங்களைக் கற்க வழியற்று
இயல்பில் தனித்து நிற்பது கூச்சமுறு நிர்வாணம்.
***
நீ எதைத் தேடியலைகிறாய் சகி ?
கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை
புரிந்துகொள்ள முடியாத ஒன்றை
அரூபமாய்க் கிறங்கடிக்கிற ஒன்றை
கற்பனையில் களிக்கிற ஒன்றை
கனவுகளில் தலைகோதுகிற ஒன்றை
காற்றில் கனமற்றுப் பறக்கும் ஒன்றை
எதில்தான் இம்மனக்குரங்கு திருப்தி கொண்டது?
எதைத்தான் இம்மனப்பேய் நிறைவென ஏற்றது?
போதாமைச் சாத்தான் ஏன் எப்போதும்
குரல்வளை நெரிக்கிறது?
தேடலின் பைசாசம் நிற்காது ஏன் ராட்சத நடனமாடுகிறது?
யாருமறியா அரூபமாய் தலைவிரித்து
திசைதோறும் உக்கிரமாக ஓடுகிறது?
அள்ளி முடிந்து மீண்டும்
ஒன்றும் அறியாததாக மூச்சிரைக்க
முதலைக் கண்ணீர் சிந்துகிறது
பற்று மட்டுமல்ல பெருஞ்சாபம்
பற்றற்றுக் கிடத்தல் போலிருத்தலும் பெருஞ்சாபம்.
********
அருமை…. வாழ்த்துக்கள்