
அதோ அந்தப் பறவைதான்
துக்கத்தின்போது பறவையைப் பார்த்தேன்
அதன் இறக்கைகள் காற்றை அசைக்க முடியாமல்
திணறிக் கொண்டிருந்தன
மேகங்கள் கெட்டிப்பட்டு
என் வேதனையின் முகங்களாய் மாறிப் போயிருந்தன
சூரியனின் புற ஊதாக் கதிர்கள்
அலை வடிவங்கள் கலைந்து
நேர்கோடாய் பூமியின் தலையில்
இறங்கி வந்தன
வான்வழியெங்கும் மூச்சுத்திணறல் உண்டானபோது
பிரபஞ்ச விதி பிசகி
தான்தோன்றித்தனமாக இயங்கத் தொடங்கியது
இவற்றை வேடிக்கை பார்ப்பதற்கு
அவ்வளவு கடினமாயிருந்தது
உலகம் மகிழ்ச்சியை இழந்த துக்கத்தை
தாங்க முடியாமல்
தேம்பித் தேம்பி அழுதேன்
பிறகு
என் துக்கத்தை மண் மீது இறக்கினேன்
அது ஒரு சிறு நிழலென
பூமியின் மடியில் பறந்து சென்றது.
****
புள்ளினங்கள்
எனக்கு முன் ஏதொன்றோ தோன்றி மறைகிறது
துருப்பிடித்த மூளை கொண்டு ஆராய்கிறேன்
நான்தான் தோன்றுகிறேனா அல்லது
நான்தான் மறைகிறேனா
ஒன்றும் பிடிபடவில்லை
மர்மமாக இருக்கிறது
யாரும் அறியக்கூடாத ரகசியம் ஒன்று
இந்தப் பூமியில் இருக்கிறதா
பாழடைந்த சிந்தனையில்
ஏதும் உதிக்கவில்லை
ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து
ஊதி அணைத்தேன்
இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
என்ன மிச்சமிருக்கப் போகிறது
காற்றெங்கும் அணைந்த மணம்போல்
அண்டத்திலிருந்து உதிர்ந்த
ஏதொன்றோ வரைய முற்படுகிறேன்
முதல் புள்ளியில் தொடங்கும் கோடு
பிறகு எப்பொழுதும் எதற்காகவும்
நிறுத்தியதேயில்லை
கோடிக் கணக்கான புள்ளிகளின் மேல்
அதனுரு பிரமாண்டமாய் வளரத் தொடங்கியிருந்தது
சோர்வுற்று கடைசி நிறுத்தக் குறியின்போது
என்னை அசைத்துப் பார்த்தது
இந்த புள்ளினங்கள்
பிறகு
எனக்குள்
ஒரு புழுவைப்போல் ஊர்ந்து போயின
****
அநாதை தனிமை
எல்லாவற்றிலிருந்தும் கைவிடப்பட்ட அறையில்
கனவுகள் பற்றி எரிகின்றன
துக்கங்கள் சாம்பலாகி
காற்றில் பறப்பது போல்
அநாதை தனிமையில்
உடல்
கர்ப்பத்தின் சூட்டைத் தேடி அலைகிறது
அங்கங்கே அசையும் நிழலை
குழந்தைகளைப் போல்
ஈக்கள் பிடித்து விளையாடுகின்றன
உலகத்தின் சத்தம் துண்டிக்கப்பட்ட
மௌனத்தின் பிரார்த்தனை
ஒரு தூக்குக் கயிற்றைப் போல்
வெளிச்சம் விழுந்த சன்னலில்
வந்திறங்கியது
கைகள் குவித்து வாங்கி பருகினேன்
சகலத்திடமிருந்தும் வெளியேறி
இதுவரை யாரும் கண்டிடாத
சூன்யத்தின் மையத்தில்
ஒரு ஆழ்ந்த கனவைப் போல் மிதந்துகொண்டிருந்தேன்.
*********