
சட்டப்படி இரண்டு போதுமே!
அப்பொழுது அதன் பெயர் அதுவல்ல!
இப்படித்தான் அன்றும் ஆரம்பித்தது
அது ஒரே வார்த்தைதான்
மூன்றே மூன்று எழுத்துகள்தான்
இரண்டரை மாத்திரைகள்தான்
அதனால்
நடுகல்களையும் அண்டவெளியையும்
மட்டும் வணங்கியவர்களின் தெய்வங்கள்
முப்பத்து முக்கோடி என்று பல்கிப்பெருகின
குலம் கோத்திரமாகி அது
பிறப்பின் அடிப்படையில் என்றானது
கோடாரிக்காம்புகளும் வந்தேறிகளும்
அரசக்கட்டிலில் அதனை அமர வைக்க
சிறு குறு தெய்வங்களையும்
இந்த மண்ணில் உதித்த
அருமாந்த மார்க்கங்களையும்
தின்று வளர்ந்தது
உழுபவர்களையும்
உளி செதுக்குபவர்களையும்
தறி நெய்பவர்களையும்
வாளேந்துபவர்களையும் தரம் பிரித்து
அவர்களின் உழைப்புகளில்
தங்கள் பெயர்களை எழுதிக்கொண்டது!
எளிய மக்கள் அறியாமுறையில்
ஏதேதோ எழுதி வைத்தது!
சொந்தமண்ணில் தாழ்ந்துபோய்
அனாதைகளாய் மக்கள் அழிந்துபட
இன்னமும் மீள முடியாமல்
மக்களின் நம்பிக்கையில்
விருட்சமாய் வீறுகொண்டு நிற்கிறது அது!.
இப்பொழுதும் அது வருகிறது
அதே பெயர்தான்- ஆனால்
ஈறு மட்டும் உகரமில்லை!
அதே ஆட்சி அதிகாரத்தோடு
அதே பழைய சித்தாந்தங்களோடு
அதே வந்தேறிகள் கோடாரிக்காம்புகளின்
சூழ்ச்சிகளோடு
குற்றுயிரான வரியற்ற ஒலிகளை தின்றுவிட்டு!
காலம் காலமாக வந்தவர்களை வாழவைக்கவும்
அவர்களைப்புரிந்து கொள்ளவும்
எண்ணிலும் எழுத்திலும்
பல மாற்றங்களைக் கொண்ட மண்ணில்
எம்மை அறியவும் புரியவும்
தம்மில் எந்த மாற்றமும் எவரும் கொண்டாரில்லை!
உண்மையில்
எகர ஒகர வகர மற்றது நமக்கெதற்கு?
ஒன்றிற்கு மேல் பல என்றிருக்க,
இருமை என்பது நமக்கெதற்கு?
உயர்திணை அஃறினை
ஆண்பால் பெண்பால் என
இயற்கையோடியைந்த வகைமை போதுமே!
அஃறிணைகளில் பால்பேதங்கள் வேண்டாமே!
தாயில்லாதார்க்கு காக்கும் எவரும் தாய்தான்!
ஆனால்
தரணியில் சிறந்த தாய் கொண்டார்க்கு
மாற்றாந்தாய் மற்றொருவர் வேண்டாமே!
சட்டத்தின் வழிவந்ததால் மொத்தமும் இழந்த
ஒற்றைவரலாறு போதும்
அவரவர் விருப்பம்போல் எத்தனையும்
கைக்கொள்ளட்டும்
அதில் தவறொன்றுமில்லை
ஆனால் சட்டப்படி
இரண்டு நமக்குப் போதுமே!
*
அம்மாதானே!
இந்தத் தவணையும்
நெருங்கிய உறவுகளின்
வைபவங்கள் கைவிடப்பட்டு
பணம் மட்டும் அனுப்பிவைத்து
“விடுப்பு இல்லை” என்ற
குறுஞ்செய்தியையும் அனுப்பியாயிற்று.
அடுத்தவருடம் கட்டவேண்டிய
காப்பீட்டிற்கு, ’தொடர் வைப்பு’
தொடங்கியாயிற்று
பெருமைக்கு கொண்டாடிய
சிறு நிகழ்வுகளுக்கான கடனட்டை
கணக்குகள் தீர்த்தாயிற்று
கிழிந்த உள்ளாடைகளை
புதிதாக மாற்றும் முயற்சி
இம்முறையும்
தள்ளிவைக்கப்பட்டது
வண்டியின் மராமத்து
மூன்றாவது மாதமாக கைவிடப்பட்டது
செலவுகள் பல செய்யவும்
கடன்கள் பல வளர்க்கவும்
தெரிந்த வித்தை
வரவுகளைப் பெருக்க உதவவில்லை
எல்லாக்கணக்கும் போட்டபின்னும்
துண்டுவிழும் தேவைகளுக்கு
குறைக்கும் செலவுகளில்
அம்மாவிற்காக மாதந்தோறும்
அனுப்பும் சிறு தொகை
எப்பொழுதும்
அடிபட்டுப்போகும் மாயம்
மட்டும்
இன்னும் அறிகிலேன்.