...
இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 18

தொடர் | வாசகசாலை

ப்போது ஒன்றாவது அல்லது இரண்டாவது படித்துக் கொண்டிருந்தேன். திருச்சியில் ஆண்டாள் தெருவில் இடுக்கான மூக்கப்பிள்ளை சந்து என்ற பகுதியில் வசித்து வந்தோம். வீட்டின் சமையலைறைக்கு அந்தப் பக்கம் வீட்டு உரிமையாளரின் மாட்டுக் கொட்டகை. சமையலறையில் சதா மாட்டு சாணத்தின் மணம் வீசிக் கொண்டிருக்கும். அந்த மணத்தைக் கட்டுப்படுத்த எந்நேரமும் காற்றை வெளியேற்றும் மின்விசிறி இயங்கிக் கொண்டேயிருக்கும். மின்வெட்டு ஏற்பட்டால் அந்த விசிறி மாற்று திசையில் சுழல ஆரம்பித்துவிடும். கட்டுப்பட்டிருந்த சாணத்தின் மணம் மீண்டும் வீட்டை நிறைத்துக் கொள்ளும். வீட்டுக்கு வெளியில் சின்ன சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. சாக்கடை என்றால் கழிவுநீரை மட்டும் வெளியேற்றும் சாக்கடையல்ல. மனிதக் கழிவுகளும் அதன் வழியாகத் தான் வெளியேறும். அந்த நாட்களில் அந்த வீடு எங்களுக்கு ஆசீர்வாதம் தான். வீட்டுக்குள் நுழைந்தாலே நரகமாக இருக்கும். தூங்குவதற்கு மட்டுமே வீட்டுக்குச் செல்வேன். மாலையில் கட்டாயம் சின்னக் கடைவீதிக்கு சென்றுவிடுவேன். எங்கும் செல்ல இயலாவிட்டாலும் மொட்டை மாடிக்குச் சென்றுவிடுவேன். அங்கிருந்து மலைக்கோட்டை பிரம்மாண்டமாகத் தெரியும். விடுமுறை நாள்களில் மலைக்கோட்டை உச்சியிலிருந்து ஆண்டாள் தெருவை பின்பற்றி எங்கள் வீட்டை கண்டுபிடிக்க முற்படுவேன். அந்த நாள்களில் இன்னொரு பெரிய ஆறுதல் சினிமா. சினிமா அரங்கங்களின் விசாலமான வெளி பெரிய அசுவாசத்தைக் கொடுத்தது. எல்லாம் ஒன்றாவது அல்லது இரண்டாவது படிக்கும் சமயம் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தச் சமயம் தொலைக்காட்சியில் ஒருநாள் பிரசாந்த்தும் சிம்ரனும் ஒரு பேரருவியின் முன் நின்றுக் கொண்டு பாடிக்கொண்டிருந்தக் காட்சி மிகவும் வசீகரமாக இருந்தது. அந்தப் பாடலின் இசையும் காட்சிகளும் மறக்க முடியாததாக இருந்தது. பள்ளிக்குச் செல்லும் போது அந்தப் படத்தின் பெயரை எழுத்துக் கூட்டி வாசிக்க முற்படுவேன். ரொம்ப நாளுக்கு அந்தப் படத்தின் பெயர் ‘ஜேடி’ என்று தான் நினைத்திருந்தேன். அதன் பிறகு தான் ‘ஜோடி’ என்று சரியாக எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். ரம்பா-ஊர்வசி தியேட்டரில் ‘காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்’ பாடல் காட்சிகளை பார்த்த போது உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. விவரம் தெரிந்த நாள்களில் அந்தப் பேரருவியின் பெயர் நயாகரா என்பதை அறிந்தேன். முதல் முறை நயாகராவை பார்த்த போது இத்தனையும் ஞாபகத்துக்கு வந்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பரித்துக கொட்டிக் கொண்டிருந்த அருவியை பார்த்ததும் இந்தியாவிலிருந்து யாரையாவது அழைத்துக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. இந்தியாவில் நள்ளிரவு யாரை அழைக்கலாம் என யோசித்துக் கொண்டே நின்றிருந்தேன். நம் வாசகசாலை நண்பர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்துக் கொண்டேன். அதில் யாரை முதலில் அழைப்பது? கார்த்திகேயனை அழைக்கலாம் என்றால் நள்ளிரவு. நல்ல நண்பர் ஆனால் புரவியின் ஆசிரியராக இருப்பதால் நட்பைவிட மரியாதை அதிகம். மேலும் அழைத்திருந்தால் அடுத்த நாள் “வணக்கம் வளன், நலமா? புரவிக்கான கட்டுரை வர தாமதமாகுதே!?! ரொம்ப நாள்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். பதினைந்தாம் தேதிக்குள் அனுப்பிவிடுங்கள்.” என்று வாய்ஸ் மெஸேஜ் மட்டும் போடுவார். ஊர் சுற்றாமல் சீக்கிரம் கட்டுரையை அனுப்பிவிடுங்கள் என்பது தான் இதன் பொருள். இது ஒரு புறமிருந்தாலும் நள்ளிரவில் ஒருவரை எழுப்புவது அறமாகாது. எனவே நம் அருணை அழைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அருணிடம் நள்ளிரவில் ‘நயாகரா’ என்று சொல்லியிருந்தால் தூக்க கலக்கத்தில் அவருக்கு ‘நயந்தாரா’ என்று கேட்டுவிடும் ஆபயம் இருக்கிறது. “நண்பா திரிஷாவின் அழகைவிட நயந்தாரா கொஞ்சம் கம்மிதான்” என்று சொல்லிவிடுவாரோ என்ற கலக்கம். அதனால் கூப்பிடவில்லை. புரவிக்காக உடல் பொருள் ஆவியை கொடுத்துக் கொண்டிருக்கும் இருவரையும் அந்த நள்ளிரவில் எழுப்புவது முறையாகாது என்று விட்டுவிட்டேன். மற்ற வாசகசாலை நண்பர்களை அவ்வளவாக தெரியாது. சேவியரைத் தெரியும் ஆனால் தொலைப்பேசியில் பேசியதில்லை. மற்ற நண்பர்கள் சென்னை வந்திருந்த போது சுவையான சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் செய்து கொடுத்தார்கள். பெயர் மறந்துவிட்டது என்றால் அவர்கள் மன்னிப்பார்களா? ஆக யாரையும் அழைக்காமல் நான் மட்டும் அந்த அதிசயத்தின் முன் வாயடைத்து நின்றுக் கொண்டிருந்தேன். மாலை சூரியன் மறைய ஆரம்பித்த சமயம் மீண்டுமாக நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். சாரு நிவேதிதாவை அழைத்தேன் .‘The Outsider’ ஆவணப்படப்பிடிப்பில் இருந்ததால் எடுக்கவில்லை. வினித்தை அழைத்தேன். பதினோரு மணிக்குத்தான் அவனுக்கு விடியல். மீண்டுமாக யாரையும் அழைக்காமல் அற்புதமானதொரு சூரிய அஸ்தமனத்தைக் கண்டேன். சிவந்த வானமும் ஆர்ப்பரித்துப் பாயும் நுரைத்த பேரருவிகளும் மனதை ஏதோ செய்துவிட்டன.

நான் வசிக்கும் ப்ரைன்ட்ரீயிலிருந்து நயாகரா 477மைல் தொலைவில் இருக்கிறது. என்னுடைய எல்லா பயணங்களை மாதிரியே திட்டமிடாமல் ஒரு திங்கள் கிழமை காலையில் கிளம்பினேன். மாலை நான்கு மணிக்கெல்லாம் நயாகரா வந்துவிட்டேன். பாய்ந்து வரும் நயாகரா ஆற்றை மட்டுமே ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவு அழகு! பாய்ந்து வரும் அந்த நதி அமெரிக்க-கனாடா எல்லையில் அமைந்திருக்கும் மலைக்குன்றுகளிடையே இருந்து கொட்டுகின்றன. முதல் பேரருவியை அமெரிக்க நீர்வீழ்ச்சி (American Falls) என்று அழைக்கிறார்கள். அதையொட்டி ஆட்டுத்தீவில் அமைந்திருக்கும் இன்னொரு சின்ன அருவி மணமகள் முக்காட்டுத் துகில் (Bridal Veil Falls). இவ்வருவியை ஒட்டி நிக்கோலோ டெஸ்லாவுக்கு ஒரு பெரிய சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. கோடையிலிருந்து இலையுதிர்காலம் வரை இந்த அருவிக்கு எதிரில் வாணவேடிக்கைகள் நடக்கும். அதிலிருந்து கொஞ்ச தூரம் சென்றால் லாட வடிவில் அமைந்திருக்கும் பேரருவி. இந்த அருவியில் சாகசம் செய்கிறேன் என்கிற பெயரில் நிறையப்பேர் இறங்கியிருக்கிறார்கள். அதேபோல நிறையப்பேர் இறந்தும் இருக்கிறார்கள். இவ்வருவி ஏற்படுத்தும் பிரம்மிப்பை அறிய இதனுள் இறங்க வேண்டுமென்பதெல்லாம் இல்லை. அமைதியாக நின்று அப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறிவிடும். பேரதிசயம்!

நம்மில் பலருக்கு ‘ஜோடி’ படத்தின் மூலம் பிரபலமான நயாகார ஒரு காலத்தில் தனியார் முதலாளிகள் வசம் இருந்திருக்கிறது. அமெரிக்காவில் இவ்வருவியை தொடக்க காலத்தில் பிரபலப்படுத்தியது இவர்கள் தான். காலணி ஆதிக்க சமயம் நயாகார பாய்ந்து வரும் இந்நிலங்களை பூர்வகுடிகளிடமிருந்து அபகரித்து அதன் கரைகளை பலகைகளால் தடுத்து அதில் சிறுதுளைகளிட்டு அந்தத் துளைகள் வழியே அருவியைப் பார்க்க அனுமதித்தார்கள். அப்படிப் பார்ப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும். தொழில்புரட்சி ஏற்பட்ட சமயம் பாய்ந்து வரும் நதியின் ஓட்டத்தை பயன்படுத்தி பல தொழிற்சாலைகளை அருவியின் முகடுகளில் அமைத்து நீர்வீழ்ச்சியை தடுத்திருந்தார்கள். ஆலைக்கழிவுகளால் நயாகரா நதி மாசடைந்திருந்தது. பிறகு 1885 பெரும் முன்னெடுப்புக்குப் பிறகு தொழிற்சாலைகள் மூடப்பட்டு நயாகரா அருவி தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. அன்றிலிருந்து யாவரும் நயாகாராவின் அழகை இலவசமாக ரசிக்கலாம் என்றானது. இன்று அருவியைப் பார்ப்பதற்கு காசு கொடுக்கத் தேவையில்லை ஆனால் கார் பார்க்கிங், படகு சவாரி (Maid of the Mist), அருவியை தொட்டுப்பார்க்க (Cave of the Wind) அனைத்துக்கும் காசு கொடுக்க வேண்டும். Cave of the Wind வழியாக அருவியை நெருங்கிப் பார்த்தேன். 181 அடியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டிருந்தது. அந்த சத்தமே மிரட்சியாக இருந்தது. நீரின் அளவை தோராயமாகக் கணக்கிட்டால் வினாடிக்கு 5,67,811 லிட்டர். அது பாறையில் மோதிச் சிதறி நம்மீது தெறிக்கும் போது நாம் மூர்ச்சையாகிவிடுவோம். அதே போல Maid of the Mis படகு சவாரியும் அற்புதமானது. குதிரை லாட வடிவ அருவிக்குள் சென்றதும் மூன்று புறமும் அருவிக் கொட்டிக் கொண்டிருக்கும். அந்த சில நிமிடங்கள் சொர்கத்துக்குள் நுழைந்துவிட்ட உணர்வை நமக்குக் கொடுக்கும்.

நயாகரா நதியின் இன்னொரு சிறப்பு யெரி என்னும் ஏரியில் (Lake Erie) உற்பத்தியாகி அன்டாரியோ என்னும் ஏரியில் (Lake Ontario) கலந்துவிடுகிறது. இவ்வருவியின் அழகை பல்வேறு ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்தில் அதில் சிலவற்றை நேரில் பார்த்து பிரம்மித்திருக்கிறேன். Albert Bierstadt ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஓவியர் நயாகராவை வெவ்வேறு கோணங்களில் வரைந்திருக்கிறார். குறிப்பாக அமெரிக்க பகுதியிலிருந்து நயாகராவின் காட்சியை வரைந்திருப்பதைப் பார்த்து பிரமித்துவிட்டேன். நயாகரா சென்று வந்த யாரைக் கேட்டாலும் அமெரிக்க பகுதியை விட கனாடா பகுதியிலிருந்து கிடைக்கும் காட்சி அற்புதமாக இருக்கும் என்பார்கள். ஒருவகையில் அது உண்மையும் கூட ஏனென்றால் மறுகரையிலிருக்கும் கனாடா, அருவியை தூரத்தில் காட்டும். அதனால் ஒட்டுமொத்தமாக அருவியைப் பார்க்கலாம். ஆனால் அமெரிக்க பகுதியும் எவ்வளவு அழகானது என்பதை ஆல்பெர்ட்டின் ஓவியங்கள் உணர்த்தும். அதேபோல William Mories Hunt மற்றும் John Frederick Kensett ஆகிய இருவரும் நயாகராவின் காட்சிகளை வரைந்ததில் மிக முக்கியமானவர்கள். இவ்வாறு ஓவியர்களால் நயாகரா அமெரிக்காவில் பிரபலமடையத் தொடங்கியது. அதன்பிறகு காதலர்களின் விருப்பத்துக்குரிய இடமாக நயாகரா மாறியது. உலகெங்கிலுமிருந்து திருமணமான தம்பதியர்கள் தேன்நிலவுக்காக நயாகரா வர ஆரம்பித்தார்கள். நான் சென்றிருந்த போதுகூட ஒரு காதல் ஜோடி என்னிடம் தங்களை படம் பிடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். குதிரை லாட அருவி பின்னால் இருக்க இருவரும் கட்டியணைத்துக் கொண்டு நின்றார்கள். இன்னொரு படம் எடுங்கள் என்று சொல்லி அதே ஃப்ரேமில் இருவரும் முத்தமிட்டுக் கொண்டார்கள். படம் எடுத்துக் கொடுத்துவிட்டு வாழ்த்துகள் சொல்லிவிட்டு வந்தேன். உண்மையில் நயாகரா ஒரு ரம்யமான இடம் தான்.

அவ்வளவு உயரத்திலிருந்து தண்ணீர் பிரவாகித்துப் பாய்வதை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றே தெரியவில்லை. அப்படி நீரைப் பார்த்ததே தியானம் செய்த திருப்தியைக் கொடுத்தது. கல்லெறி தூரத்தில் அடுத்த தேசம் இருந்தது. ரெயின்போ பாலம் வழியாக நடந்தே செல்லலாம் ஆனால் எனக்கு கனாடா வீசா இல்லாததால் ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டியதாகியது. மீண்டுமாக நண்பர்களை அழைத்து அந்த அழகையெல்லாம் வீடியோ காலில் காட்டலாமா என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என தீர்மானித்துக் கொண்டு வீடு திரும்பினேன். கார் ஓட்டிக் கொண்டிருந்த போதே இந்த அனுபவத்தை அந்நிய நிலக் குறிப்புகளில் எழுதிவிடாலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் எவ்வளவு எழுதினாலும் நயாகராவின் பேரழகை எழுத்தில் கொண்டு வந்திட முடியாது என்றும் தோன்றியது. இப்போதும் கண்களை மூடினால் ஓங்கரித்து வெண்புகை மண்டலாமாக நயாகரா என் மனதின் உள்ளே கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அதன் சிறுதுளியை உங்கள் மீது தெளித்த உவகையுடன் முடிக்கிறேன். அடுத்த மாதம் வேறுசில குறிப்புகளுடன்…

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.