
அக்காவின் மாமனார் தவறிவிட்டார் என்ற தகவல் அமீருக்கு வரும்போது மணி இரவு இரண்டு நாற்பத்தைந்து. அவனுடைய மச்சான் செய்யது, அதாவது அக்காவின் கணவன்தான் போனில் தெரிவித்தான். தனது உம்மா, வாப்பாவென எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னான். வீடே பட்டப்பகலானது மாதிரி எல்லா விளக்குகளும் நொடியில் ஒன்றொன்றாய் ஒளிர ஆரம்பித்தன.
அதே பரபரப்போடு சட்டையை மாட்டிக்கொண்டு வாசலை நோக்கிக் கிளம்பினான்.
“இப்பவா போகப் போறா? தொழுகைக்கு பாங்கு சொன்ன பிறகு போவேன்..” அவனுடைய தாய் தடுத்தாள். தன்னுடன் வருவது போல் கிளம்பிய தந்தையை வேண்டாமென நிறுத்தினான்.
“நீங்க எல்லாரும் விடிஞ்ச பிறகு வாங்க. நா மட்டும் இப்ப போறேன்” எனக் கூறிக் கொண்டே பைக்கை எடுத்தான்.
“பாத்து போ வாப்பா, மைய்யிருட்டால்ல கெடக்கு!” அனைவரின் கண்களிலும் அதிர்ச்சியும் சோகமும் அப்பியிருந்தது.
அவனுடைய அக்காவின் புகுந்த வீடு அங்கிருந்து பத்து பதினோரு கிலோ மீட்டர் என்றாலும். அந்நேரத்தில் ஒற்றை ஆளாகச் செல்வது அவனுக்கும் கூட அவ்வளவு சரியாகப் படவில்லை என்றாலும் அவனுடைய மச்சான் செய்யதிற்காகச் செல்ல வேண்டியிருந்தது. சாதாரணமாகவே குறை சொல்கிறவன். போன் வந்தும் விரையவில்லை என்றால் அதுவும் ஒரு குறையாக அவன் மனதில் படிந்துவிடும். அது எப்போதெப்போது வெளிப்படுமென்று தெரியாது.
அப்படிப்பட்ட விளைவுகளை அவ்வப்போது சந்திந்திருக்கின்றான். அதனால் அந்த இருட்டையும் முகத்தில் அடித்து பதம் பார்த்துக் கொண்டிருந்த பூச்சிகளையும் வண்டியின் வேகத்தையும் கவனத்தில் கொள்ளாது மின்னல் போல பாய்ந்துச் சென்று கொண்டிருந்தான். கூடவே, அக்காவின் மாமனார் மிகவும் நல்லவர் என்பதால் அந்த வேகம் நியாயமாகவும் பட்டது. ‘அவருக்கா இவர் பிறந்தார்?’ என்று அக்காவும் தம்பியும் செய்யதைக் கண்டுக் குமைந்து கொண்ட சந்தர்ப்பங்கள் ஒன்றா இரண்டா!
செய்யதும் நல்லவன்தான் ஆனால், அவனுள் எப்போதும் ஒரு சந்தேகப் பார்வையும், தன்னை மனைவி வீட்டினர் சரியாக மதிப்பதில்லை என்ற சுயவிரக்கமும் தவறான மதிப்பீடும் அவனை எப்போதும் இவர்கள் முன் ஒரு வித சீற்றத்தோடேயே வைத்திருக்கும்.
சரியாக பதினைந்து நிமிடத்தில் அக்கா வீட்டு வாசலை அடைந்திருந்தான். செய்யது, இவனைக் கண்டதும் சேரிலிருந்து எழுவதா இல்லை அப்படியே இருப்பதா என்ற குழப்பத்தில் ஓரிரு நொடிகள் அப்படியே அமர்ந்திருந்து பின்னர் எழுந்து நின்றான்.
அக்காவின் மாமனார் உறங்குவது போலவே படுத்திருந்தார். அவரின் முகத்தில் எப்போதும் தவழும் சாந்தம் சற்று கூடி, சிரித்த முகமாய் “மாப்ளே வந்துட்டியா..!’ என்று இவனை வரவேற்பது போலத் தோன்றியது. கண்களை முட்டிக்கொண்டு வந்த கண்ணீர் துளிகள் முத்து முத்தாய் வெடித்து கன்னம் முதல் விரித்திருந்த பாய் வரை உருண்டோடின. மௌனமாய் அழுதான்.
செய்யது சற்று முகம் தொங்கி காணப்பட்டாலும் எப்போதும் காட்டும் தனது மிடுக்கையும் விட்டுவிடவில்லை. அக்கா சாஹிபா என்ன செய்வதென அறியாது இவனையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய மாமியார் தனது கணவனருகே அமர்ந்து சத்தம் போட்டு, “என்ன செய்வேன் என்ன செய்வேன்” என அழுது கொண்டிருந்தாள். பிள்ளைகளும் அரை தூக்கத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பாட்டியாரின் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தனர்.
அக்கம் பக்கத்தில் பழக்கப்பட்டவர்கள் இருந்தாலும் வேறு யாரும் அந்த நேரத்தில் அங்கே தென்படவில்லை. செய்யதிற்கு இரண்டு அண்ணன்களும் இரண்டு அக்காக்களும் உண்டு. அனைவரும் கடை கண்ணி வைத்துக் கொண்டு வெவ்வேறு ஊர்களில் இருப்பதால், தகவலறிந்து வந்து கொண்டிருப்பதாக அமீர் அவர்களைப் பற்றி விசாரித்தற்குக் கூறினான்.
“மாமா மாமி வரல?”
“இந்த நேரத்துக்கு ஆட்டோ ஓட்ற அண்ணன் தூங்கிட்டு இருப்பாரு மச்சா.. காலைல உம்மா மட்டும் தனியா வர முடியாதுன்னு வாப்பாவை விடிஞ்சதும் கூட்டிட்டு வரச் சொன்னேன். அவ்வொளும் என்னோடயே துடிச்சிக்கிட்டு கிளம்பினாங்கதான். நான்தான் இருட்டுல மூணு பேரும் ஒரே வண்டில போக வசதி படாது, விடிஞ்சி வாங்கன்னு சொல்லிட்டு, நான் மட்டும் வந்திட்டேன் மச்சா..”
“ம்ம், மாமா மாமியும் எங்கிட்ட வெவரம் சொன்னாங்கதான்” என்றதும், அமீர் அப்புறம் ஏன் இந்தாளு தெரியாத மாதிரி விசாரித்தார் என்று சலித்தபடி தனது அக்காவைப் பார்த்தான். அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
அக்காவின் மாமியார் தனது அழுகையை அடுத்த ஆள் வரும் வரை தேக்கி வைத்துக் கொண்டாள். செய்யது மறுபடியும் சேரில் அமர்ந்தபடி தந்தை சார்ந்த சிந்தனைகளில் ஆழ்ந்தான். சொரசொரப்பான அந்த முரட்டு முகம் துணிகள் துவைத்து துவைத்து வழவழப்பான சலவைக்கல் போலிருந்தது.
அமீர் தயக்கமாய் ஒரு சேரை நாடி அமர்ந்து, தனது அக்காவை ‘ஏன் நின்றுக்கொண்டே இருக்கிறாய்? கீழே உட்கார்’ என்று கண்களால் கட்டளையிட்டான். அதுவரை கால் கடுக்க நின்றுகொண்டே இருந்திருப்பாள் போலும், சுவற்றை முட்டுக்கொடுத்தவாறு சரிந்தபடி சாய்ந்தமர்ந்து, முக்காட்டை சரி செய்துகொண்டாள். அவளது தங்கத்தோடுகளும் மாலைகளும் அந்த நேரத்தை மீறிய கவனத்தை ஈர்த்தன.
பிள்ளைகள் ஆகில் மற்றும் ஆலியா ‘மாமா’ என்று அமீரின் முட்டியைக் கட்டிக்கொண்டு தலை சாய்த்துக் கொண்டார்கள். இருவர் நெற்றியிலும் முத்தங்கள் வைத்தான்.
ஐந்து பத்து நிமிடங்கள் மௌனத்திலேயே சென்றன.
“ராத்திரி நல்லாத்தானே சாப்புட்டுட்டுத் தூங்குனாங்க..!” மாமியார் மறுபடியும் மெலிதாக அழுகையை ஆரம்பித்தாள். ‘ஸப்ர் செய்ங்க மாமி’ என்று தூரத்திலிருந்தே அவளை ஆறுதல் படுத்த முயன்றான். கொஞ்சம் சத்தம் நின்றது.
“மாமா எதுவும் உடம்பு சரியில்லாம இருந்தாங்களா மச்சா?” செய்யதிடம் கேட்க, அதெல்லாம் இல்லை என்பது போல மறுத்து தலையாட்டினான். மேற்கொண்டு அவனிடம் என்ன பேசுவது, கேட்பது என அமீருக்குத் தெரியவில்லை.
ஒரு அரை மணி நேரத்தில் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், இவர்கள் வீட்டில் விளக்குகள் எரிவதைக் கவனித்துவிட்டு என்ன ஏது எனக் கேட்டு வர ஆரம்பித்தனர். மீண்டும் அழுகைச் சத்தம். மைக்கில் அனோன்ஸ் பண்ண வேண்டும் என செய்யது கேட்டுக் கொள்ள, அப்போது வந்திருந்த பெரியவர் ஒருவர் இளைஞன் ஒருவனை அழைத்து பள்ளிவாசலுக்கு சென்று தகவல் சொல்லுபடி கட்டளையிட்டார்.
அவன் மணியைப் பார்த்துவிட்டு ‘இன்னும் தொழுகைக்கு பாங்கு சொல்ல நேரமிருக்கே. தொழுகை முடிந்து சொன்னால் என்ன’ என்பது போல் கேட்டான். ஆனால், அந்தப் பெரியவர் ‘நீ போய் பார், யாரும் இருந்தால் தகவல் சொல்லிவிடு. பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்றதும் சரி சரி தலையாட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
“வெளியூருக்கு தகவல் மச்சான்..” என்று செய்யதிடம் அமீர் பேச்சுக் கொடுத்தான்.
“கடையிலிருந்து வரும்போது அக்கா மகனுங்க அங்கங்க நிறுத்தி சொல்லிட்டு வந்துருவாய்ங்க” எங்கோ பார்த்து கொண்டு பதில் சொன்னான்.
பெண்களின் அழுகைச் சத்தம் கூடிக் கொண்டுச் சென்றது. வாசல் பக்கம் நின்று கொண்டிருந்த அமீர் உள்ளே எட்டிப் பார்த்தான். அவனது கவலையெல்லாம் வரும் கூட்டங்களின் மத்தியில் தனது அக்கா எப்படி ஓரிரு நாட்களை கடத்தப் போகிறாள் என்பதுதான்.
மறுபடியும் அவளுடைய மாமனாரின் நற்குணங்களையும், பெற்ற மகள் போல் தன்னுடைய அக்கா மீது வைத்திருந்த பிரியத்தையும் சமயத்தில் நினைவு கூர்ந்தவனாய் ‘ஒண்ணு ரெண்டு நாள்தானே சமாளித்துக் கொள்வாள்’ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.
தொழுகைக்கு பாங்கு சொன்னதும், “மச்சா, பள்ளி வரை போய்ட்டு வந்திர்றேன்” என்று கிளம்பினான்.
செய்யது மௌனம் சரி என அனுமதிக் கொடுத்தது.
அமீர் பள்ளியில் நுழைந்த போது எல்லோரும் செய்யது வாப்பாவின் மவுத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். கூடவே பெற்றோர்களுக்காக உள்ளூரிலேயே மளிகைக் கடை வைத்துக் கொண்டு, தாய் தகப்பனை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்த செய்யதை புகழ்ந்தவர்கள் தன்னுடைய அக்காவையும் சேர்த்துக் சொல்லாதது அவனுக்கு சற்று ஏமாற்றத்தைத் தந்தது. யார்தான் வந்த மருமகளை பாராட்டிப் பேசியிருக்கிறாள்? இதே பெற்றோர்கள் கஷ்டப்பட்டால் மட்டும் மொத்தப் பழியும் மருமகள்மீது விடிந்து விடுகிறது!
தொழுகை முடிந்ததும் மவுத்து செய்தியை அதாவது இறப்பு பற்றிய அறிவிப்பை அந்த பள்ளிவாசலின் இமாம் மைக்கில் சொன்னார். அந்த நேரத்தில் அங்கிருந்த சிலர் இவனை அடையாளம் கண்டுகொண்டு, “செய்யதோட மச்சினன்தானே?” என்று விசாரித்தது அமீருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதே நேரம் கொஞ்சம் பசிக்கவும் ஆரம்பித்தது. வீட்டை நோக்கி நடக்கலானான்.
பள்ளியில் தொழுது முடித்த அனைவரும் கூட இவனைத் தொடர்ந்து வந்தனர். வீட்டிலிருந்த சேர்கள் போதவில்லை என்பதால் பள்ளியிலிருந்து வாடகை சேர்கள் வரவழைக்கப்பட்டன. நேரமாக நேரமாக கூட்டம் கூடிக் கொண்டே சென்றது.
கொல்லைப் பக்கத்திலிருந்து டீ வாசம் வரவும் அமீருக்கு அதிகமாக பசிக்க ஆரம்பித்தது. அங்கே சென்று எட்டிப் பார்த்தான். பெண்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு இறந்தவரைப் பற்றியும் தத்தம் கதைகளை பேசிக்கொண்டும் அந்த அகன்ற டீச் சட்டியை கொதிக்க கொதிக்க கலக்கிக் கொண்டிருந்தனர்.
வெளியூரிலிருந்த செய்யதின் உடன்பிறப்புகள் கண்ணீரும் கம்பலையுமாக ‘வாப்பா.. மாமா.. அப்பா (தாத்தா)..!’ என்று உறவுமுறைகளை சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதற்காகவே காத்திருந்த செய்யதின் தாய் மேலும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து கண்ணீர் கரை புரண்டோட அனைவரையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
அமீர் தனது தந்தைக்கு போன் செய்து ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று விசாரிக்க, ‘வீட்டை நெருங்கிவிட்டோம்’ என்று தெரியப்படுத்தினார். செய்யது தனது உடன்பிறப்புகளை பட்டும் படாமலும் கடந்து சென்றான். ‘இருக்கும் காலத்தில் ஆசைக்கேனும் கொஞ்ச நாள் கூட தங்களோடு வைத்துகொண்டுப் பார்க்க முடியவில்லை; இப்போது மட்டும் என்ன இவ்வளவு பாசம் பொத்துக்கொண்டு வருகிறது?’ என்று மனசுக்குள் அனைவரையும் குறைப்பட்டுக் கொண்டிருந்தான்.
இருந்தாலும் அக்காமார்களை மட்டும் மன்னித்து ஏற்றுக் கொண்டான். அண்ணன்மாரை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தான். அவர்களோ பெரிய மனிதத் தோரணையில் மேற்கொண்ட வேலைகளுக்காக மற்ற மற்ற ஆட்களையும், தங்களின் பிள்ளைகளையும் அதைச் செய் இதைச் செய் என துரிதமாக ஏவிக்கொண்டிருந்தனர். சொல்லப்போனால் அதன் மூலம் தங்களின் குறைகளை இவன் முன் சமன் செய்யப் பார்த்தார்கள்.
தனது பெற்றோர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி வருவதை கவனித்துவிட்டு, அமீர் சென்றுக் கூட்டி வந்தான்.
செய்யது மாமனார் மாமியாரை பார்வையால் வரவேற்றான். அமீருடைய தாய் தனது சம்பந்தி மற்றும் மகளைக் காண உள்ளே சென்றுவிட, மற்றவர்கள் வாசலிலே நின்றுக் கொண்டனர்.
“ஃபஜர் தொழுதுட்டு வர கொஞ்சம் லேட்டா போச்சி. இருட்டா இருக்கேனு.. தம்பிதான் காலை வாங்கன்னு சொன்னான்..” மருமகனிடம் அமீரின் தந்தை தயங்கி தயங்கி சொன்னார்.
“பரவால்ல மாமா” அவனுடைய அந்த ‘மாமா’வில் அமீருடைய தந்தை மனம் கசிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவன் அப்படி அழைப்பது குறிஞ்சி பூப்பது போல எப்போதேனும்தான். தனது இருகரங்களால் மருமகனின் கரங்களை அர்த்தத்தோடு அழுத்தியபடி, “ஸப்ர் செய்ங்க!” ‘இறைவனுக்காக பொருந்திக் கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டே ‘உள்ளே சென்று பார்த்து வருகிறேன்’ என்று தனது மகனுக்கு ஜாடை காட்டினார்.
அமீர் அவரை உள்ளே அழைத்துப் போனான். செய்யதின் சகோதரர்கள் அவரைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமான ஸலாம் சொன்னார்கள். தனது தோழனைப் போல சம்பந்தியை, கண்ணீர் மல்க, அமீரின் தந்தை அவரின் அமைதி பொருந்திய முகத்தை கனிவோடு எதிர்கொண்டார். பல நினைவலைகள் அவருக்குள் எழுந்து எழுந்து அடங்கியது.
அங்கேயே சிறிது நின்று அவருக்காக பிரார்த்தனைகள் செய்தார். பின்னர் தனது தந்தையை அமீர், வாசலில் போடப்பட்டிருந்த சாமியானா பந்தல் பக்கம் அழைத்து வந்தான். செய்யதின் அக்கா பேரன்கள் வந்தவர்களுக்கு தேநீர் பரிமாறிக்கொண்டிருந்தனர். இவரிகளிடம் நீட்ட, ஒன்றை எடுத்து தனது தந்தைக்கு கொடுத்தான். அடுத்தது இவனுக்காக எடுக்கும் வேளையில் செய்யது அந்த பக்கம் எதிர்பட, எடுக்கச் சென்ற கையை கீழே தளர்த்தியபடி ‘வேண்டாம்’ என அந்த சிறுவர்களை போகச் சொல்லிவிட்டான்.
ஆனால், அவனுக்கு மிகவும் பசித்தது.
இதுபோன்ற நேரங்களில் தனது மச்சான் முன் உண்ணுவதோ பருகுவதோ அவனுக்கு தயக்கமாகவும் கொஞ்சம் பயமாகவும் தோணும்.
அது அமீருடைய அக்கா சாஹிபாவிற்கும் செய்யதிற்கும் கல்யாணம் நடந்த சமயம். நிக்காஹ் முடிந்து பந்தி சென்றுக்கொண்டிருந்தது. சாதிக், மஜீத், பாஸ்கர், தமீம் என இவனுக்கென சில நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், அந்த திருமணத்தின்போது சாதிக் சவுதியிலிருந்தான். மஜீதும் தமீமும் கூட சிங்கப்பூர் மலேசியா என ஆளுக்கொரு நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.
அச்சமயம் ஊரிலிருந்தது என்றால் பாஸ்கர் மட்டும்தான். இப்போதும் கூட அவன் மட்டும்தான் நண்பனென ஊரில் இருக்கிறான். பாஸ்கர் ஹோமியோபதி மருத்துவம் முடித்துவிட்டு உள்ளூரிலேயே வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அன்று மற்ற நண்பர்கள் இருந்திருந்தால் அவர்களோடு பாஸ்கரையும் சேர்த்து சாப்பிட வைத்திருப்பான். பாஸ்கர் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன் கூட. தனியாக அமர்ந்து சாப்பிட தயங்கிக் கொண்டிருந்தான்.
அமீரோ வீட்டிற்கு ஒரே பையன் அனைவரையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் வேறு. அதனால் அவனோடு சட்டென்று உட்கார்ந்து சாப்பிட முடியாத சூழல். ‘கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு’ என்று பாஸ்கரை ரொம்ப நிற்க வைத்து பார்க்கவும் முடியாமல், ஒரு கட்டத்தில் தானும் அவனோடு சேர்ந்து சாப்பிட வேண்டியதாயிற்று. அந்த நேரம் பார்த்து செய்யது அங்கே வந்துவிட்டான்.
“நானே இன்னும் சாப்பிடல, எல்லாரையும் கவனிக்க வேண்டிய நீ மொதல்லயே உக்காந்து சாப்புடலாமா?” புது மாப்பிள்ளை கோலத்திலிருந்த செய்யது கேட்டதும் அமீருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பாஸ்கரும் இதை எதிர்பார்க்கவில்லை. சாப்பிடுவதா எழுந்திருப்பதா என சற்று நேரம் விழித்தவனை, ‘சாப்பிடு சாப்பிடு’ என்று மரியாதைக்குச் சொல்வது போல சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான். இருந்தாலும் அந்த ‘சாப்பிடு சாப்பிடு’ என்று பதில் அவன் மனதை தைத்துக் கொண்டேயிருந்தது. ‘பொறுப்பற்று நடந்து கொண்டுவிட்டோமோ?’ என்று கவலையுற்றான்.
செய்யதோடு கூட வந்த அவனுடைய நண்பன், “என்ன மாப்ள இப்புடி கம்முன்னு வர்ற? மச்சினங்களை நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்!” என்ற பேச்சும் காதில் விழ, அந்த வருத்தம் கோபமாகவும் உருவெடுத்தது. இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அன்று பாஸ்கரோடு சாப்பிட்டு முடித்தான். ஆனால், அன்று எல்லோருக்கும் முன்பாக அமீர் சாப்பிட உட்கார்ந்திருந்ததை இந்த ஐந்தாறு வருடங்களில் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லிக் காட்டியிருப்பான். இத்தனைக்கும் அமீருக்கு அப்போது இருபது வயதுதான்.
செய்யதை அப்படியொன்றும் கடுமையானவன் என்றும் சொல்லிவிட முடியாது. அவனை பொறுத்தவரை இது போன்ற நேரங்களில் ஒரு வாய் தண்ணீர் குடித்தால் கூட கவுரவக் குறைச்சல் அல்லது வந்தவர்கள் எல்லோரும் உண்டு கழித்த பின்னரே சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் சாப்பிட கொள்ள அமர வேண்டும் என்பது அவனது பாலிசி. அதுபோல ஒரு சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
அது செய்யதுடைய மூத்த அக்கா மகள் திருமணம். முதல் திருமணம் என்பதால் பூர்வீக வீடான செய்யது வீட்டில் வைத்துதான் மிகவும் விமர்சையாக செய்தார்கள். மணமகன் கோவை. அங்கே இன்ஜினீரிங் படித்துக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் பழக்கமாகி பெற்றோரின் சம்மதத்துடன் அந்த திருமணம் நடந்து முடிந்தது.
இரு தரப்பிலிருந்தும் கூட்டம் அலைமோதியது. அமீர் முதல் நாளிலிருந்து தனது மச்சானுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் பார்த்து வந்தான். நிக்காஹ் முடிந்த கையோடு பந்தி வைப்பதில் மும்முரமானார்கள். பந்தி பன்னிரெண்டு மணிக்கே ஆரம்பித்திருந்தாலும் இரண்டு இரண்டரை ஆகியும் முடிவது போல் தெரியவில்லை.
இன்னொரு பக்கம் உறவினர்களுக்கும், மாப்பிள்ளை வீட்டார்களுக்கும் பார்சல்கள் கொடுத்துக் கொண்டிருந்ததில் சோறு மிச்சப்பட்டும் கறியெல்லாம் தீர்ந்துவிட்டிருந்தது. இடையிடையே சாஹிபா கண்ணைக் காட்டி அமீரை சாப்பிட்டுவிட்டு பந்தி வைக்குமாறுச் சொன்னாள். ஆனால், செய்யது மீதிருந்த பயத்தினால் அவனோடு இவனும் சேர்ந்து பம்பரமாய் இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருந்தான்.
எல்லாம் முடிந்து கடைசி ஆளாக மச்சானும் மச்சினனும் அதாவது செய்யதும் அமீரும் அமர்ந்தபோது பிரியாணி எனும் பேரில் வெறும் குஸ்காதான் கிடைத்தது. அப்போதும் வந்தவர்களுக்கெல்லாம் சரியாக இருந்ததா என விசாரித்தானே தவிர, சொந்த மச்சினனைப் பற்றி தனியாக அக்கறையேதும் எடுத்துக் கொள்ளவில்லை.
ஏதோ அன்று தால்சாவது மிச்சப்பட்டிருந்ததால் இரண்டு வாய் சோறாவது அவனுக்கு உள்ளே சென்றது.
அமீர் நிகழ் காலத்திற்குள் வந்தான். காலை சாப்பாடு என சரியாக எதுவும் தயார் செய்திருக்கவில்லை. அதை பற்றி யாரேனும் யோசித்தார்களா என்பதும் கேள்வியாக இருந்தது. துக்க வீட்டில் இப்படியெல்லாம் யோசிப்பது பாவமோ என்பது போல் அவ்வப்போது டீ மட்டும் வந்து கொண்டிருந்தது.
செய்யதின் அண்ணன்களில் ஒருத்தன் மணி ஒன்பது வாக்கில் ஓட்டலிருந்து ஏதோ வரவைத்திருந்தான். அண்ணன்கள் மீதான அதிருப்தியில் அவர்கள் பக்கம் செய்யது செல்லவில்லை. அண்ணன் தம்பிக்கு இடையேயான பிணக்கு இவனுக்கும் தெரியுமென்பதால் இவனும் அவர்கள் பக்கம் செல்லவில்லை. விடிந்ததிலிருந்து இருவரும் ஒரு வாய் டீ கூட குடிக்கவில்லை. பசியெல்லாம் அடங்கி புளித்த ஏப்பம் இவனுக்கு வரத் தொடங்கியது. அப்போதுதான் பாஸ்கர் வந்து சேர்ந்தான்.
அதற்கேற்றவாறு அடுத்த டீயும் பரிமாறிக் கொண்டிருந்தனர். அதில் ஒன்றை எடுத்து பாஸ்கரிடம் கொடுக்க, ‘நீயும் குடிடா’ என்று அவன் இவனை வற்புறுத்தினான். ‘சரி, இதுதான் சாக்கு’ என்று எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான். சொல்லி வைத்தாற்போல செய்யது அந்த பக்கம் வந்துவிட்டான். பாஸ்கர் அவனுக்கு வணக்கம் வைப்பது போல ஒரு கையைத் தூக்கினான். செய்யது அதை ஆமோத்திப்பது போல் பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.
காலையிலிருந்து செய்யது வாயிலும் ஒரு துளி பச்சைத் தண்ணீரும் படாதது அமீருக்கும் தெரியுமென்றாலும், கேட்டுக் கொடுக்க தயக்கமாக இருந்தது. பாஸ்கர் வந்த புண்ணியத்தால் கிடைத்த டீயைக் கூட ஒரு வித குற்றவுணர்வோடேயேதான் குடித்து முடித்தான்.
மீண்டும் பசி வயிற்றை கிள்ளத் தொடங்கியது
“ஏதும் சாப்டியாடா?” பாஸ்கர் கேட்டதற்கு இல்லடா என்பது போல் ‘ப்ச்’ என்று உதட்டை பிதுக்கினான்.
“வா, வெளில போயி ஏதாவது சாப்ட்டு வரலாம்!” என்று அமீரின் கையைப் பற்றி பாஸ்கர் இழுத்தான். ஆனால், இவனால் போக முடியவில்லை. செய்யதை விட்டுவிட்டு சாப்பிடவும் மனசு கேட்கவில்லை. ‘சாப்பாடு வாங்கிட்டு வரவா?’ என்று செய்யதிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.
“சரி, நீ இரு நான் போயி வாங்கிட்டு வர்றேன்” என்று பாஸ்கர் பறந்துவிட்டான். அவன் வாங்கிக்கொண்டு வந்தாலும் எங்கே வைத்து சாப்பிடுவது என்று அடுத்த யோசனைகள் எழுந்தது. ஆனாலும் சென்றவனைத் தடுக்கவில்லை. செய்யது அண்ணன் ஏற்பாடு செய்திருந்த காலை உணவை தனது பெற்றோரும் அக்காவும் உள்ளே சாப்பிட்டிருக்க வேண்டுமென பிரார்த்தித்தான்.
சரியான கூட்டம் வேறு. ஒவ்வொரிடத்திலும் வரும்போதிருந்த துக்கம் சில நொடிகளிலேயே மறைந்து மற்ற மற்ற கதைகளை பேசியும், கேட்டும் சகஜமாகிச் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், செய்யது மட்டும் தனது துக்கத்தை விடுவேனா என்று வலுக்கட்டாயமாக தம் கட்டி இழுத்துப் பிடித்து இங்குமங்கும் அலைந்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க அமீருக்கு பாவமாக இருந்தது.
செய்யதை அந்த நிலையில் பார்த்தபோது அமீருக்கு ஜலால் மாமாவின் ஞாபகம் வந்தது. ஜலால் ரத்த உறவு இல்லையென்றாலும் சொந்த தாய் மாமன் போல பிரியம் பாராட்டுபவர். ஒரே தெருதான். எப்போதும் இவனை ‘மருமகனே’ என்றுதான் அழைப்பார். ஊரில் பெருங்கொண்ட குடும்பம். அதனால் அவருடைய தந்தை ஹாஜியார் நல்லதம்பி மரைக்காயர் இறைவனின் அழைப்பை ஏற்ற சமயத்தில் இதை விட பல மடங்கு பலமான கூட்டம். ஜலால் வயது வித்தியாசம் பார்க்காமல் இவனோடு பழகுபவர் என்பதால் தனது பக்கத்திலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
என்னதான் அவ்வப்போது டீ பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தாலும் அவரது ரகசியப் பசி அடங்குவதாக தெரியவில்லை. அதெல்லாம் இவன் கவனிக்கவில்லை. அப்போது இவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். தான் மட்டும் வந்து வீட்டில் பசியாறிவிட்டுச் சென்றுவிட்டான். அவனை மெல்ல அழைத்து காதுக்குள் மந்திரம் ஓதுவது போல, “தங்கச்சிட்ட சொல்லி கஞ்சில எலுமிச்ச ஊறுகாயை பெசஞ்சி, நீராரம் மாதிரி டிபன்ல மாமாவுக்கு கொண்டு வந்து தரியா.. நான் அந்தப் பக்கமா வந்து குடிச்சிக்கிறேன்.. மாமாவுக்கு ரொம்ப பசிக்கிதுடா!” என்று அவர் கேட்கவும் இவனுக்கு சந்தோசம் தாளவில்லை! உடனே வீட்டிற்கு ஓட்டமெடுத்தான்.
தனது தாயாரிடம் விசயத்தை சொல்லவும், “அல்லாஹ்வே.. அண்ணன் அப்படியா கேட்டுச்சி..!” என்று அரக்கப் பரக்க பழைய கஞ்சியில் அவர் சொன்ன மாதிரி ஊறுகாய் உப்பெல்லாம் தேவையான விகிதத்தில் கலந்து, நைத்து நீராகரமாக்கி ஒரு சிறிய தூக்கு வாளியில் கொடுத்து அனுப்பினாள்.
யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக வந்து குடித்து முடித்த போது ஒரு பலமான ஏப்பம் ஜலாலிடமிருந்து வெளியேறியது. “அல்ஹம்துலில்லாஹ்!” இறைவனுக்கு வாயாற நன்றி சொன்னார். ‘தங்கச்சி நல்லா செஞ்சி கொடுத்திருக்கு!’ என்று மேலும் சிறு குழந்தையைப் போல தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
‘ஜலால் மாமா போல இந்த மச்சானும் இருந்தா என்ன? எப்ப பாரு உர்ருன்னு மூஞ்ச வச்சிக்கிட்டு. மனசுக்குள்ள என்ன கஸ்டம் இருந்தாலும் இப்புடியா அன்னம் தண்ணீ இல்லாம பொழுதன்னைக்கும் வெறச்சிக்கிட்டு திரியணும்!’ இயலாமையில் தனது மச்சானை கடிந்து கொண்டான்.
வெளியூரிலிருந்து வந்தவர்களுக்காக மதிய உணவு சமைக்க ஒரு ஆட்டை அறுத்துக் கொண்டிருந்தனர். குழம்பிற்குரிய மசாலாவை அரைத்துத் தயார் செய்யும் வாசம் காற்றில் கலந்து பரவி கமகமத்துக் கொண்டிருந்தது. ‘மச்சான் மத்தியானமாவது சாப்பிடுவாரா?’ என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
பாஸ்கர் பார்சலோடு வந்திருப்பதை சற்று தூரத்திலிருந்து ரகசிய சைகையால் தெரிவித்தான். பக்கத்திலிருந்த பள்ளியின் பின் புற காம்பவுண்டுச் சுவர் நல்ல தடுப்பு போலத் தெரிந்தது.
அந்தப் பக்கம் போய்விடலாமென அமீர் நகர்ந்தபோது சொல்லி வைத்தாற் போல எதிரில் செய்யது வந்துவிட்டான். “எங்க போற?” எனக் கேட்க, என்ன சொல்வதென தெரியாமல், சட்டென சுதாரித்துக் கொண்டு, “வாங்க மச்சான், உங்களுக்காக பாஸ்கர் டிபன் வாங்கிட்டு வந்திருக்கான், சாப்பிடலாம்!” என அழைத்தான்.
இதை சற்றும் எதிர்பாராதவன் போல ஒரு முகபாவனையைக் காட்டிவிட்டு, “சரி வா போகலாம்!” என மறுப்பேச்சில்லாமல் இவர்களைப் பின்தொடர்ந்தது நண்பர்கள் இருவருக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. இருந்தாலும் பாஸ்கர் அதிர்ச்சியாகி நின்றான்.
பள்ளிவாசல் பக்கம் செல்லாமல் செய்யதின் ஆணையின் படி பக்கத்து வீட்டிற்கே சென்றனர். அது செய்யதின் நண்பன் வீடு. அவனுடைய தாயார் மட்டும் இருந்தாள். இவர்கள் கையிலிருந்த முடிச்சைக் கவனித்துவிட்டு,
“வாங்க வாங்க, வவுத்துக்கு ஏதும் போட்டுக்கிட்டாதானே மவுத்தான வூட்ல வல்லமையா நிக்க முடியும்! வாங்க வாப்பா..! வந்து உக்காந்து சாப்புடுங்க!” என்று ஒரு தடுக்கை எடுத்துப் போட்டாள்.
“எனக்கா வாங்கிட்டு வந்தா?” பாஸ்கரைப் பார்த்து இன்னொரு முறை ஊர்ஜிதம் செய்துகொள்வது போல் கேட்க, “ஆமா மச்சா, சாப்புடுங்க!” என்று அமீர் பதில் சொன்னான். பாஸ்கர் தர்ம சங்கடத்தோடு நெளிந்தான்.
ஏனென்றால் பிரித்தபோது அதிலிருந்தது ஒரே ஒரு தோசை மட்டுமே!
“மாவு தீந்து போச்சாம் மச்சா..அதான்..” என்று பாஸ்கர் இழுத்தான்.
அதைப் பெரிது படுத்தாதவனாய்,”சரி, நீயும் சாப்புடு!” என்று அமீர் பக்கம் பாதியைப் பிய்த்து வைத்தான்.
“மாவு இல்லன்னா புரோட்டா வாங்கிருக்கலாம்ல? இது எவ்வளவு நேரத்துக்கு தாங்கும்?” பரோட்டா தீர்ந்துவிட்டதால்தான் இருந்த மாவில் ஓட்டல்காரர் தோசை சுட்டுத் தந்ததாக நிலைமையை சங்கடத்தோடு புரிய வைத்தான் பாஸ்கர்.
“ஓஹ்! அப்படியா சரி, சரி! காலைலேர்ந்து ஒருத்தனாவது ஒரு வாய் டீ வேணுமான்னு கேக்குறானுவளா? அமீரு, சாப்ட்டுட்டு, உள்ளே போயி நம்ம மூணு பேருக்கும் டீ வாங்கிட்டு வா!” அமீராலும் பாஸ்கராலும் நடப்பதை நம்பவே முடியவில்லை!
இந்த மனுசனா இவ்வளவு நேரம் அவ்வளவு மிடுக்கோடு இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தது! பாவம் எவ்வளவு பசியோடு இருந்திருக்கிறார்! என்று நெகிழ்ந்துப் போயினர்.
“பாஸ்கரு..! மத்தியானம் நம்ம வூட்ல நீ சாப்ட்டுதான் போகணும்! சரியா?” செய்யது உரிமையோடு கேட்டுக்கொண்டான். அவனும் ஆச்சர்யங்கள் விலகாமல் ‘சரி மச்சான்’ என்று ஆமோதித்தான்.
*********
அன்பும் மகிழ்ச்சியும் நன்றிகளும் தோழர்!