பாஸ்வேர்ட்
திடீரென அனைத்துக் கடவுச்சொற்களையும் மறந்து போகிறான்
துர்பாக்கியவாதி ஒருவன்
முகநூல் இன்ஸ்டாக்ராம்
ட்விட்டர் டின்டர்
ஓலா ஊபர்
ஸ்விகி ஜொமேட்டோ
ஃபோன்பே ஜிபே
அனைத்தும் ஒற்றைக் கடவுச் சொல்லுக்காக இறைஞ்சுகின்றன
அலுவலக மடிகணினியும்
சொந்த மடிகணினியும்
ஆளுக்கொரு புறம் திருப்பிக் கொண்டு
நிற்கின்றன
ஜி-மெயில்கூட கடவுச்சொல்லை
மறந்து விட்டமைக்காக
கோபித்துக்கொண்டு வெளியேற எத்தனித்திருந்தது
கடவுச்சொற்களையெல்லாம் மறந்துவிட்டால்
மனிதன் வாழவே முடியாதாவென்ற
அச்சம் பீடிக்க கைபேசியை
வெறித்துக் கொண்டிருக்கிறான்
திரை பாவமாக மின்னுகிறது
“என்னுடைய கடவுச்சொல்லாவது நினைவிருக்கிறதா?”
***
கடந்த எட்டு வருடங்களில்
நான்கைந்து கடவுச்சொற்களுக்கு
மாறியிருந்தாள்
எவ்வளவு முயன்றாலும்
ஒரு கடவுச்சொல்லை இரண்டு வருடங்களுக்குமேல்
வைத்திருக்க முடிவதில்லை
நீடித்திருப்பதற்காக
சில கடவுச்சொற்கள் நேரத்தையும்
சில கடவுச்சொற்கள் மகிழ்ச்சியையும்
சில கடவுச்சொற்கள் அவளையேகூட
காவு கேட்கின்றன
பிறகு
சோம்பேறித்தனம் பீடிக்க
இப்போது
கடைசிக் கடவுச்சொல்லையே
வெகுகாலமாக வைத்திருக்கிறாள்
ஒருநாள் ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது
“ஒரே கடவுச்சொல்லை வெகுநாட்கள்
வைத்திருப்பது பாதுகாப்பற்றது.
உடனே மாற்றுங்கள்.”
***
ஒருவழியாக
கடவுச்சொற்களால் கட்டமைக்கப்பட்ட
உலகில் இருந்து
மூச்சுவாங்க வெளியேறி விட்டான்
அதை மறந்து போனவன்
அங்கு
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு
புதிய கடவுச் சொல்லைத்
தேடிக் கொண்டிருந்தாள்
நோட்டிஃபிகேஷன் பெற்றவள்
அவசரத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள
அசடு வழிய அறிமுகப்படுத்திக் கொண்டனர்
அவன் தன் பெயரை மறந்து
மறந்துபோன கடவுச்சொல்லைக் கூற
அவள் அதை தூக்கிக் கொண்டு
ஓடத்தொடங்கினாள்
அவனுக்குத்தான் எந்தப் பக்கம் போவதென்று
தெரியவில்லை