இணைய இதழ்இணைய இதழ் 51சிறுகதைகள்

தக்கவைப்புகள் – மாறன். மா

சிறுகதை | வாசகசாலை

நீடித்த நித்திரையில், அறிவிப்பு மணியின் சத்தம் இடையூறாக இருக்க, குப்புறப் படுத்திருந்த சண்முகநாதன் கண்ணைத் திறக்காமல் கைகளால் அறிவிப்பு மணியை அணைத்துவிட்டு. மீண்டும் திரும்பி வலது காலை அதனருகில் இருந்த தலையணை மீது வைத்துக் கொண்டு அசந்து தூங்கினான். அடுத்த ஐந்தே நிமிடத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பு மணி அடிக்க, “ஒன்னு எந்திரி. இல்லனா அலாரத்த அமத்தி போட்டுட்டு தூங்கு, ரெண்டும் இல்லாம ஏன் இப்படி படுத்துற” என்ற பூர்ணிமாவின் குரல் சண்முகநாதனை விழிக்கச் செய்தது. 

“காலைலயே ஏண்டி கத்துற,” என்று பாதி தூங்கினாற் போல் கண்ணை வைத்துக் கொண்டு, பின் வலது கையால் கண்ணைத் தேய்த்து தூக்கத்தை வெளிவிசை மூலம் கலைத்து, இடது கையால் தனது தலையணைக்கு பின்னால் இருந்த கைபேசியை எடுத்து அவர் பார்க்க மணி காலை ஆறு ஆனது. “அய்யய்யோ, லேட்டாகிப் போச்சு “ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, “ஏய் பூர்ணிமா, எழுப்பி விட மாட்டியா? டையத்த பாரு ஆறு மணியாகிருச்சு“ என்று, தனது சோம்பலுக்கு பூர்ணிமாவை காரணமாகக் கூற, ‘நீதான என்ன எழுப்புவ. இன்னைக்கு என்ன புதுசா?’ என்று பதிலை தூக்கத்தோடு கூறி விட்டு மீண்டும் ஆழ்ந்து தூங்கினாள் பூர்ணிமா. 

படுக்கையிலிருந்து வேகமாக கீழிறங்கிய சண்முகம், தனது மகளை தூக்கி தலையணை மீது நன்றாகப் படுக்க வைத்துவிட்டு, அறையைவிட்டு வெளியே வந்து, வாசற் கதவைத் திறக்க, பாலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் சண்முகத்தின் தந்தை ராமன். இருவரும் ஒருவர் மீது ஒருவர் உரசி விடாமல் ஒதுங்கி சென்றனர். அந்த ஒதுக்கத்தில் இருந்தே அவர்களது உறவை விளங்கிக்கொள்ளலாம். தந்தையின் மீது மூச்சுக் காற்று கூடப் படாமல் வெளியே சென்று வாயில் கதவை சாத்தும் வேளையில், “கத்திரிக்காய் இருந்தா அரை கிலோ வாங்கு” என்று ராமன் கூற, “ம்” என்ற ஒற்றை ஒலியில் பதில் கூறி வெளியே நடைப்பயிற்சிக்கு புறப்பட்டான் சண்முகம். 

வழக்கமாக தாமரைத் தொட்டி வழியாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபயிற்சி முடித்து வரும் சண்முகம், அன்று சற்று அசந்து தூங்கிவிட்ட காரணத்தினால், வீட்டின் அருகிலேயே நடைபயிற்சியை முடித்து விடலாம் என்ற கணக்கில் சூர்யா நகர் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வழியாக தனது நடையை ஆரம்பித்தான். மெல்ல தொன்போஸ்கோ பள்ளிக் கட்டிடத்தை தாண்டியவனின் பார்வையில் ‘மதுரை சூர்யா நகர் மக்களின் மண்ணே’ என்று ஒரு சுவரொட்டி கண்ணில் தென்பட குபீரென்று சிரித்து, “என்னடா இப்படிலாம் போஸ்டர் ஒட்டி விடுறீங்க “ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே அந்த சுவரொட்டியை தெளிவாகப் பார்க்க, அதில் மதுரை சூர்யா நகரின் மண்ணனே என்று எழுத்துப் பிழையுடன் எழுதி இருந்ததை பார்த்து ஒரு நொடி அருகில் நடப்பவரை கவனிக்க, அவரும் சண்முகத்தைப் பார்த்து

“ரொம்ப வருஷம் கழிச்சு லோக்கல் எலக்சன் நடந்திருக்கு, பாவம் இந்த சுந்தரபாண்டியனும் கட்சில ஒட்டிக்கிட்டு நாலு காசு பாக்க வேணாமா? “ என்று கூறி சிரித்து வேகமாக நடந்தார். சுவரொட்டியை உற்றுப் பார்த்து அதை அடித்தவர் பெயர் சுந்தரபாண்டியன் என்று தெரிந்து மனதில் சிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான் சண்முகம். 

சக்கிலியங்குளம் போகும் பாதை வரை நடந்து சென்று அங்கு இருக்கும் மூன்று முக்கு சாலையுடன் நேரத்தை கருத்தில் கொண்டு வீடு திரும்ப முடிவெடுத்து, திரும்பிய தருணம் அங்கிருந்த ஒரு கடையின் கதவுக்கு இடையில் ஒரு சாம்பல் நிற நாய்க்குட்டி குளிர் தாங்க முடியாமல் கத்திக்கொண்டிருந்தது. அந்த நாய் குட்டியை பார்த்தவுடன் அவனுக்கு சட்டென அவனின் வீட்டை தத்தெடுத்து தற்போது அவன் வீட்டிலேயே வளரும் ஹிப்போவின் ஞாபகம் வரவே, அருகில் இருக்கும் கடையில் இருந்து ஒரு ரொட்டி பொட்டலத்தை வாங்கி வைக்க, சாப்பிட முடியாமல் உருண்டு பிரண்டு சாப்பிட போராடியது அந்த நாய்க்குட்டி. ஏறத்தாழ இதே போன்ற சிறு குட்டியாகத்தான் ஹிப்போவும் சண்முகத்தின் வீட்டிற்குள் நுழைந்தது, வீட்டு வாயிற் கதவில் இருக்கும் ஒரு மலர் வடிவ கம்பியின் துவாரம் வழியாக உள்ளே நுழைந்தவன் இந்த ஹிப்போ.

ஆரம்பத்தில் நாய்கள் மீது பெரிய அக்கறை இல்லாத சண்முகத்தை ஹிப்போ அவனது குறும்பின் மூலம் மாற்றவே, தெருவில் திரியும் நாய்கள் மீது சண்முகத்திற்கு ஒரு கரிசனம் ஆரம்பித்தது.”ஹிப்போ” என்ற பெயர் சண்முகத்தின் மகள் ரஞ்சனி வைத்தது. இந்த சாம்பல் நிறக் குட்டி பெரிதாய் சண்முகத்திற்கு ஹிப்போவை நினைவுப்படுத்த, அந்த குட்டியை தூக்கிச் செல்ல முடிவு செய்தான் சண்முகம். 

அருகிலிருந்த கடையில் இந்தக் குட்டி தனியாகவா திரிகிறது என்று விசாரிக்க, “ஆமா சார். இந்தத் தெருவுல ஒரு பொறம்போக்கு கூட்டம் இருக்குது, தெரு நாய்ங்களுக்கு சாப்பாடு வெக்கிறோம்னு சொல்லி காச அடப்பு போடுவானுங்க, முந்தாநாள் அப்புடி ஒருத்தன மண்டையைக் கழுவி கூட்டி வந்து, அந்த பாருங்க ஒரு கருப்பு வெள்ளை நாய் அதுக்கு பிறந்தநாள் கொண்டாடுனானுங்க, அப்ப எங்கிருந்தோ பாவம் இந்தக் குட்டிய தூக்கிட்டு வந்துட்டானுங்க.” என்று நெடிதாய் கூறி முடிக்க, குட்டியை எடுத்துக்கொண்டு தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான் சண்முகம். 

இடது கையில் குட்டி நாயைத் தூக்கிக் கொண்டு, மெல்ல நடந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த சண்முகத்தை வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்த ஹிப்போ, அவனது கையிலிருந்த குட்டியைக் கண்டு நாலே எட்டில் கீழே வந்து வாயிற்கதவில் நின்று வழக்ககத்தை விட சத்தமாக குரைக்கத் துவங்கியது. வீட்டினுள் இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்து ஹிப்போவை சமாதானம் செய்தும் ஓயவில்லை அந்த சத்தம். சண்முகத்தின் கையில் நாய்க்குட்டி இருப்பதைக் கண்ட ராமன், கத்தரிக்காய் இல்லாமல் இருக்கவே லேசான மன சோர்வடைந்து. “அந்த குட்டிய பாத்துதான் கத்துது அதத் தூக்கி கொண்டு எங்கயாவது விட்டுட்டு வரச் சொல்லு “ என்று தனது மனைவி கௌரியிடம் கூற. எப்போதுமே தந்தையின் சொல்லைத் தவறிக் கூட நிறைவேற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளும் சண்முகம், “அது என்ன அவ்ளோ கொழுப்பு இந்த நாய்க்கு” என்று கூறி, அந்த குட்டியை உள்ளே தூக்கி வந்து தனது மகிழுந்துக்கு பின்புறம் ஒரு சாக்கை விரித்து அதில் படுக்க வைத்த பின் வீட்டினுள் நுழைந்தான். 

சிறிதும் சத்தத்தை குறைக்காமல் குரைத்துக் கொண்டிருந்தது ஹிப்போ. அந்தக் குட்டியைத் தாக்கவும் செய்யாமல், தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தது. வந்த சிறிது நேரம் வரை ஹிப்போவின் அலறலைப் பார்த்து அஞ்சி நின்ற குட்டி, பின் இது அவ்வளவுதான் என்று மனதில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு விரித்த சாக்கில் பயமின்றி படுக்க ஆரம்பித்தது. குரைத்து ஓய்ந்த ஹிப்போ இருப்புக் கொள்ளாமல் சண்முகத்தின் மகிழுந்தை சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. குளித்து முடித்து வந்த சண்முகம் ஹிப்போவிற்கு ஒரு அலுமினியத் தட்டில் சாப்பாடு வைத்து, ஒரு புது குடுவையில் பாலை ஊற்றி அந்தக் குட்டியிடம் வைத்தான். சாப்பாடை முகர்ந்து கூட பார்க்காமல் ஹிப்போ மொட்டை மாடிக்குச் செல்ல, வைத்த பாலை முழுவதுமாய் குடித்துவிட்டு பரவசமாய் சாக்கில் முன்னங்காலை முட்டுக் கொடுத்து தூங்க ஆரம்பித்தது அந்தக் குட்டி.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அலுவலகம் செல்ல சண்முகமும், பூர்ணிமாவும் தயாரானார்கள். வெளியே வந்து வண்டியை வாயிலை விட்டு வெளியே எடுக்கும்போது, சாப்பாடு அப்படியே இருந்த ஹிப்போவின் தட்டை நோட்டம் விட்ட பூர்ணிமா, “அட பாவம்பா எங்க மாடில நிக்கிதா” என்று சண்முகத்திடம் கேட்க, “ஆமா, அதுக்கு என்ன அவ்வளவு திமிரு” என்று கூறியவாறே வண்டியை எடுத்தான். வண்டியை எடுத்து இரண்டு நிமிடத்தில் இருந்த அண்ணா நகர் கோல்ச்சா காம்ப்ளெக்ஸ் வந்து பூர்ணிமாவை இறக்கி விடும் வரை, தொடர்ந்து அலுவலக பணிச் சுமையை எண்ணி புலம்பியவாறே வந்து கொண்டிருந்தான் சண்முகம். இறங்கிய பூர்ணிமா, “டென்ஷன் ஆகாத, மூணு சைட்டுக்கு மேல பார்க்க முடியலைன்னா, ரிஸோர்ஸ் எக்ஸ்ட்ரா வேணும்னு சொல்லுப்பா. ஒரே ஆள் எப்படி மூணு சைட்ட மெயின்டெய்ன் பண்ண முடியும்?” என்று பூர்ணிமா கூற, “ஆமா, ஏற்கனவே சொல்லிட்டேன் இன்னைக்கு போய்ட்டு கண்டிப்பா திரும்பச் சொல்லணும் “ என்று பதில் கூறி அங்கிருந்து கிளம்பினான் சண்முகம். 

அண்ணா நகரிலிருந்து தெப்பக்குளம் வழியாக காமராஜர் சாலை வந்து கொண்டிருக்கும் போதே அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்து, அரசரடி துணை மின் நிலையத்தின் கூடுதல் பொறியாளரைப் பார்த்து வரும்படி செய்தி வர, அங்கிருந்து தமிழ் சங்கம் சாலை பிடித்து அரசரடி துணை மின் நிலையம் வந்து சேர்ந்தான் சண்முகம். உள்ளே பொறியாளர் அறை முன் அமர்ந்து, அலுவலக ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு, இன்று காலை அருப்புக்கோட்டை சைட்டுக்கு அனுப்ப வேண்டிய வரைபடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மின்மாற்றி ஆகியவற்றை பற்றிக் கேட்க, மின்மாற்றி இன்னும் வரவில்லை என்றும் வரைபட வேலை நடந்து கொண்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர் லதா தெரிவிக்க, யாரை வைத்து வரைபட வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று குழம்பி அதிலிருந்து வெளிவரும் முன்னே அவன் கண் முன் வந்து நின்றார் கூடுதல் பொறியாளர் சேவுக மூர்த்தி. 

“என்ன சண்முகம் நல்லாருக்கீங்களா, என்ன பரலாச்சி சைட்டு பி.பி.எ வாங்கினதில இருந்து, ஆளையே காணோம்? சைட்டு கமிசின் பண்றப்ப லோக்கல் எஸ்.எஸ் சப்போர்ட் வேணும் சார் “ என்று கூறிய சேவுகமூர்த்தியை நோக்கி, “சார், அப்டிலாம் ஒண்ணுமில்ல, வேற ஒரு சைட்டு சி இ ஜி க்ளியரென்ஸ் சார், அதான் உங்களப் பாக்க முடியல. இன்னும் பத்து நாள்தான் சார். பரலாச்சி சைட்டு முடிஞ்சிடும், வாங்க அன்னைக்கு அப்புடியே ஒரு ட்ரிப்ப போட்டுருவோம்” என்று அதிகாரி மீது பனி மழை பொழிய, “நல்லா கூட்டிட்டு போவீங்க வாயாலேயே..எப்படி..நாலு சைட்டுக்கு தனித் தனியா போனா செலவாகும்னு, இன்ஸ்பெக்ஷன் ஒரே நாள் வெச்சு என்ன அன்னைக்கு சுத்துனீங்களே அப்புடியா? உங்களோட அந்த வண்டில வந்துதாங்க எனக்கு பைல்ஸ் வந்திருச்சு, டெய்லி மாத்திரை போட்டுக்கிட்டு இருக்கேன்”. என்று சிரிப்போடு கூறி முடிக்க, “சார், இந்த தடவ பாருங்க. வெச்சு கலக்கிருவோம் அன்னைக்கு” என்று கூறி முடித்த சண்முகத்திடம், என்ன விஷயம் என்று ஆரம்பித்தார் மூர்த்தி. “சார், நீங்கதான் வர சொன்னீங்களாமே “ என்ற சண்முகத்திடம், “ஏங்க, அந்தம்மா எதுக்குன்னு கூட உங்கள்ட்ட சொல்லாதா? “ என்று மூர்த்தி கேட்க, “சார், வண்டி ஓட்டிட்டு இருந்ததால கேக்க முடியல “ என்று கூறி சண்முகம் சமாளிக்க, தனது அறைக்கு அழைத்துச் சென்று, “விரகனூர் எஸ்.எஸ்ல லோட் இருக்கானு கேட்டிருப்பீங்க போல. அதுக்குதான் ஓலை அடைச்சிருக்கானுங்க, 4 மெகாவாட் அவைலபிலிட்டி இருக்கு” என்று கூறியபடியே, கையில் இருந்த அறிக்கையை சண்முகத்திடம் கொடுக்க, அறிக்கையை வாங்கி வைத்துக் கொண்டு அலுவலகம் நோக்கி விரைந்தான் சண்முகம். 

சண்முகத்திற்கு யார் வரைபட வேலையை முடித்தது என்று மிகப் பெரும் குழப்பம், வேகமாக பழங்காநத்தத்தில் உள்ள தனது அலுவலகம் வந்து சேர்ந்து உள்ளே நுழைய, சண்முகத்தின் இருக்கைக்கு அருகே மற்றுமோர் இருக்கை. புதிதாக சண்முகத்திற்கு இணையாக சக்தி கணேஷ் என்ற புதுப் பொறியாளரை பணிக்கு எடுத்திருந்தது நிர்வாகம். சக்தி கணேஷை கண்டவுடன் சண்முகத்திற்கு ஒரு இனம் புரியாத அசௌகரியம். பார்த்து மெல்லிதாக ஒரு புன்னகை மட்டும் செய்து விட்டு தனது இருக்கையில் அமர்ந்து தொலைபேசியில், “ ராஜு, கொஞ்சம் உள்ள வரியா?” என்று இரண்டாம் படி பொறியாளர் ராஜூவை அழைக்க, “சார், சக்தி சார் என்ன டிசைன் சப்மிட் பண்ண அனுப்பிச்சிருக்காரே” என்று ராஜு பதிலளிக்க, பட்டென கண்கள் சிவந்த சண்முகம் “டேய், போகும்போது சொல்லிட்டுப் போகணும்னு அறிவில்லையா உனக்கு?” என்று ஆரம்பித்து கண்டபடி கத்தி முடித்து அழைப்பைத் துண்டித்தான். அடுத்ததாக லதாவை அழைத்து “நா வரவரைக்கும் ராஜூவ வெயிட் பண்ண சொல்ல மாட்டிங்களா? இப்ப யார நா யூஸ் பண்ண..இல்ல வாங்கிட்டு வந்திருக்க ரிப்போர்ட் கொரியர் வேலையும் நானே பாக்கவா?” என்று வார்த்தைகளை கொட்டி முடித்து, அடுத்த அரை மணி நேரம் எந்த பணியையும் பாராமல் அமர்ந்திருந்தான். 

சரியாக அரை மணி நேரத்தில் பூர்ணிமாவின் அழைப்பு வந்தது சண்முகத்தின் கைபேசிக்கு. சண்முகம் தனது திட்ட இயக்குனருடன் பேசச் சென்றதால் கைபேசியை இருக்கையிலேயே விட்டுச் செல்ல, அழைப்பு நின்று போனது, அடுத்து அலுவலக தொலைபேசிக்கு மறு அழைப்பு வந்தது. சக்தி அவ்வழைப்பை எடுக்க, சண்முகத்தின் குரலை எதிர்நோக்கிய பூர்ணிமா “ மே ஐ ஸ்பீக் டு மிஸ்டர் சண்முகம்…” என்று கேட்க, “ ஹீ இஸ் நாட் இன் தி சீட் மேம் “ என்று பதில் வந்தது. திரும்பி வந்த சண்முகத்திடம் ‘உங்களுக்கு ஒரு லேடி போன் பண்ணாங்க’ என்று சக்தி கூற, அழைப்பு முகப்பை பார்த்து, பூர்ணிமா என்று கண்டதும் கைபேசியில் அழைத்தான் சண்முகம். அழைப்பை எடுத்த பூர்ணிமா “ என்ன காலைல பொலம்பிகிட்டேப் போன. புதுசா ஒருத்தர கூடுதலா எடுத்திருக்காங்க போல” என்றதும், ஏதோ பெரிய பாரம் குறைந்தது போல் தோன்றியது சண்முகத்திற்கு. ஆனால், அவனால் இயல்பாய் பேச முடியவில்லை. “இனியாவது வீட்ல வந்து பொலம்பாத “ என்று கூறிய பூர்ணிமாவிடம் பிறகு பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்து, இருக்கையில் சற்று சாய்ந்து அமர்ந்து யோசிக்க, “டாடி, ஹிப்போ இன்னும் கத்திட்டே இருக்கு என்று” புலனத்தில் குரல் செய்தி அனுப்பியிருந்தாள் மகள். சண்முகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் கத்தியது நினைவுக்கு வர, கூச்சமடைந்து சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். பின்னர் இருக்கையில் இருந்து எழுந்தவன் “ப்ரோ ,டீ குடிக்க போலாமா?” என்று சக்தியிடம் தனது முதல் பேச்சை உதிர்த்து தோழமையில் நகர்ந்தனர் இருவரும்.

அலுவலகம் விட்டு வெளியே வர வாசலில் தக்கை வைக்காமல் ஆணி அறைந்து கொண்டு நின்ற பாதுகாப்பு பணியாளரிடம், “அண்ணே தக்கைய வெச்சு அடிங்கணே, அப்பத்தான் நிக்கும்” என்று கூறிவிட்டு வெளியே வந்தான் சண்முகம். 

வெளியே வந்தவுடன் தெருநாய்களை பராமரிக்கும் தனது நண்பனை அழைத்து வீட்டிற்கு வந்த குட்டியை பற்றிக் கூறி, இரவு அவரது இடத்தில் வந்து அதனை விடுவதாகத் தெரிவித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல பைக்கை உதைத்தான். 

******

think.maran@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button