இணைய இதழ்இணைய இதழ் 50சிறுகதைகள்

‘வீ ‘ என்கிற பூபி – இந்திரா ராஜமாணிக்கம்

சிறுகதை | வாசகசாலை

பேருந்திலிருந்து இறங்குவதற்கென எனக்கு முன்பாக நின்றுகொண்டிருப்பவளுக்கு அவசரமாக ஒரு பெயர் சூட்டியாக வேண்டும், தேர்ந்தெடுத்துத் தாருங்களேன்!

சீதா, கவிதா, நித்யா, திவ்யா?? 

இல்லை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி யோசியுங்கள்.

எஸ்தர், வசந்தா, சுமதி, ருக்மணி?

அட! இதெதுவும் அவளுக்குப் பொருந்தாது. அவள் பற்றி கொஞ்சம் சொல்கிறேன், அதன்பிறகாவது ஒரு சரியான பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்.

அவளை என் வாழ்நாளில் இதற்கு முன் நான் பார்த்ததேயில்லையென்கிற ஒன்று போதுமாயிருக்குமா உங்களுக்கு? அல்லது அவள் மத்திம வயதுக்காரி என்பது? ம்ம்ம்.. அவள் தன் மாநிறத்திற்கு ஏற்றவாறு சாக்லேட் நிற புடவையில் ஆங்காங்கே சந்தனப்பூக்களை தெளித்துவைத்திருந்தாள் என்பதை கூடுதல் தகவலாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு பொன்னிற ப்ளவுஸும், அதற்கு பொருத்தமாய் கருப்பு முத்துக்கள் பொருத்தப்பட்ட ஜிமிக்கிகளையும் அணிந்திருந்தாள். இப்போது பேரை சொல்வீர்கள்தானே?

ஸ்வேதா, சந்தியா, கீர்த்தனா?

ம்ஹூம்.

இன்னும் கொஞ்சம் தகவல் வேண்டுமெனில் அவளுக்கு சராசரிக்கு சற்று கூடுதலான கூந்தலிருந்தது, அதை ஜடையென தரித்து முன்பக்கமாக இடது மார்புரசும்படி இழுத்துவிட்டிருந்தாள். நீங்கள் ஒருவேளை டெய்லராக இருக்கும்பட்சத்தில், அவளுடைய ப்ளவுஸின் பின்னங்கழுத்து டிசைன் பற்றி யோசித்துக்கொண்டிருப்பீர்கள், அல்லது அவளது மார்பளவு குறித்து? நல்லது! எந்த வரைபடமுமில்லாத மிகச்சாதாரண ‘யூ’ வடிவ பின்னங்கழுத்தில் உங்களுக்கு எவ்வித சுவாரஸ்யமும் கிடைக்கப்போவதில்லை. சரி சரி..பெயர் கேட்டேனே…??

ரத்னா, ரேணுகா, ரம்யா, ராகிணி?

ப்ச்.. உங்கள் பழைய காதலிகள் பெயரையெல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தேவை, முதுகில் தழும்புள்ள பெண்ணிற்கு என்ன பெயர் சூட்டுவீர்களோ அந்தப் பெயர். 

அட! இதைச் சொல்ல மறந்துவிட்டேன் பாருங்களேன்! அவள் முதுகிலொரு தழும்பு இருந்தது. 

இறங்குவதற்காக கம்பியை கெட்டியாகப் பிடித்தபடி எழுந்து நிற்கும்போதுதான் நான் அவளை கவனித்திருக்க வேண்டும். முன்னமே தனது ஜடையை முதுகிலிருந்து முன்னுக்கு இழுத்திருந்தவள், பிறகு ஏன் அப்படியே விட்டிருந்தாள் என்பது பற்றி நான் யோசிக்கவேயில்லை. என் சிந்தனையெல்லாம், அவளது கைக்குட்டை மீதேயிருந்தது. சாக்லேட் நிறப் புடவை என்று சொல்லியிருந்தேனே.. அதற்கு கொஞ்சமும் பொருந்தாமல் ஆரஞ்சு வர்ணத்தில் கர்சீப் ஒன்றை கைக்குள் திணித்து வைத்திருந்தாள். நிறங்கள் பற்றிய எந்த மதிப்பீடுமின்றி அவள் வளர்ந்திருக்கக்கூடும், அல்லது அந்தத் தழும்பு உண்டானதால் அவள் தனது நிறப்பிரிகை கணிப்பை இழந்திருப்பாளாக இருக்கும்.

தவழ வராத குழந்தை சம்மணமிட்டு கணுக்கால்களை இழுத்தபடி நகர்வதுபோல, நிறுத்தம் வருவதற்கு நூறு மீட்டர் முன்னிருந்தே ப்ரேக்கை அழுத்த ஆரம்பித்த ஓட்டுனருக்கு ஐம்பத்தி இரண்டு வயதிருக்கலாம். ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த வலது கை மணிக்கட்டில் கருப்புக் கயிறுடன் இணைக்கப்பட்டிருந்த தாயத்து ஒன்றை யாரோ கட்டிவிட்டிருந்தார்கள். வெளிர் அடர் நீலச் சீருடையின் கசகசப்பில் அவ்வப்போது பின்னங்கழுத்து காலரை கடன்காரன் கழுத்தைப் பிடிப்பதாட்டம் இழுத்துவிட்டிருந்தார்.

ஓ… உங்களுக்கு முகம் சுளிக்க நன்றாக வருகிறது. அவளும் இதைத்தான் செய்திருந்தாள். நான் அவளது ஆரஞ்சு நிற கைக்குட்டையையும் அவள் உடுத்தியிருந்த புடவையின் ஃப்ளீட்சையும் ஒருசேர பார்த்துக்கொண்டிருந்தபோது.

பிரேமா, பவித்ரா, நந்தினி?

இதுதான் நிறுத்தம் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு படியை நோக்கி நகர்வதென்பது, இதுதான் சமயம் என்று திடீரென முத்தமிடுவதைப் போல சுலபமானதா என்ன! 

நீங்கள் யாரையாவது முத்தமிட்டிருக்கிறீர்களா? அதுவும் திடீரென?

திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது.. திடீரென மலையுச்சியிலிருந்து கீழே இறங்கும்போது.. திடீரென ஒரு புத்தகத்தை பரிசளிக்கும்போது.. திடீரென ஒரு மரணம் சம்பவிக்கும்போது.. திடீரென ஒரு கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது.. திடீரென பேருந்திலிருந்து இறங்கிக்கொண்டிருக்கும்போது! எனக்கு அவளை முத்தமிட வேண்டும்போலிருந்தது.

சரி போகட்டும்! அவள் இறங்குவதற்கு ஆயத்தமாய் படியை நோக்கித் திரும்பியபோதுதான் அந்தத் தழும்பு என் கண்ணில் பட்டது. அல்லது என் கண்களில் படுவதற்கெனவே அவள் ஒரு தழும்பினை வைத்திருந்தாள்.

தாட்சாயிணி, அக்ஷ்யா, நட்சத்திரா, ருக்ஸானா?

போதாது! ஏனெனில் அவளது தழும்பின் வசீகரம் அப்படி.

ஒரு தீப்பிழம்பு போல! ஒரு பனிச்சுழல் போல! பருகாமல் விடப்பட்ட தேநீருக்குள் மெல்லக் கரையும் நுரை போல! பிரியப் பற்தடம் போல! குரூர நக்கீற்று போல! இன்னும் இன்னுமென புணரத்தூண்டும் ஒருபிடி வனப்பு போல!

பெண்ணுடைய முதுகின் மேற்பகுதியில் இரு தோள்களும் நடுவாந்திரமாய் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் பூனைமுடிகள் ஏன் இத்தனை கிளர்ச்சியைத் தருகின்றன! கூடுதலாக, அதன் இடது பக்கவாட்டில், மாநிறத்தோலுக்குப் பொருத்தமாக கருஞ்சிவப்பிலான மெல்லிய தழும்பு இருக்குமாயின், ஒரு நெருப்புக்கீறிலிருந்து எழும் சூரியனாய், காற்றில் பறக்கும் கொழுத்த வெண்குதிரையின் மயிர்க்கற்றையாய். உங்களால் கற்பனை செய்துகொள்ள முடிகிறதா! அதைவிட பத்துமடங்காய் நான் அதற்குள்ளே சென்றுகொண்டிருந்தேன் அல்லது அது தன்னைநோக்கி என்னை இழுத்துக்கொண்டிருந்தது.

அவள் தழும்பின் விளிம்புக்கோட்டினை பென்சிலால் அச்சுப்பதிக்க நேர்ந்தால் உங்களுக்கு, துண்டு துண்டாய் உடைந்து வீழ்ந்த எரிநட்சத்திரத்தின் ஒருபகுதி கிடைக்கக்கூடும்.

எனக்கு அவசரமாக ஒரு பேப்பரும் பேனாவும் தேவைப்பட்டிருந்தது. அதிகபட்சம் ஒரு பென்சிலாவது! வட்டத்தின் மீதே வட்டம் வரைவது எத்தனை திருப்தியளிக்கும் செயல் தெரியுமா? ஏற்கனவேயிருந்த காற்தடத்தின் மீது பாதம் பதிப்பதாகட்டும், மறுபடி மறுபடி வீட்டிற்குத் திரும்புதலாகட்டும். சுழன்று சுழன்று.. சுழித்துச் சுழித்துச் சுழித்து…

மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் எனக்கு இப்போதைய அவஸ்தையெல்லாம், அவள் மூன்றாவது படியிலிருந்து தரையில் பாய்ந்து நிலத்தில் நடந்துசெல்லும்போது அவளை நான் பின்தொடராமலிருக்க வேண்டும் என்பது மட்டும்தான். 

ஒரு பெண்ணை எதற்காகவெல்லாம் நீங்கள் பின்தொடர்வீர்கள்?

மடோனா, ஸ்வஸ்திகா, சஹானா?

தழும்புகளுக்கென தனி வாசனையுண்டு தெரியுமா? சில தழும்புகளுக்கு ஆல்கஹால், சில தழும்புகளுக்கு மண்ணென்ணெய், சில தழும்புகளுக்கு நிக்கோடின், பால் வாசனை வாய்க்கும் தழும்புகள் சில உண்டு. இவளது தழும்பிலிருந்து காட்டுப்பூக்களின் வாசனை வருகிறது. 

வனத்திலிருந்து அல்லது வனம் நோக்கி பிரயாணப்பட்டிருப்பவளுக்கு அதிகபட்சமாய் என்ன தேவையாயிருக்கும்?

நல்லதாய் ஒரு பெயர்!

சித்தாரா, மதிவதனா, சுபத்திரா, ஆராதனா?

அழைக்க யாருமற்றுக் கிடக்கும் பெயர்களென்பவை, கோபுரத்தை வேடிக்கை பார்த்தபடி கோவிலுக்கு முன் படுத்துக்கிடக்கும் நாய்க்குட்டிக்கு நிகரானவை. கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் போடும் பிஸ்கெட் துண்டுகளை அவை ஒருபோதும் சீண்டுவதில்லை, அல்லது கொஞ்சமாய் அருகில் வந்து முகர்ந்துவிட்டு பின் நிகராகரித்தோடும். சூட்டப்படாத பெயர்களை கையில் வைத்திருப்பவர்கள், மாலை வேளைகளில் மலையுச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக முருகேசன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். முருகேசனுக்கு முருகேசன் என்று பெயரிடப்பட்டது பற்றி அவனிடம் நிறைய புகார்கள் இருந்தன.

கம்பியை ஒரு கையாலும் தோள்பையை ஆதுரமாய் இன்னொரு கையாலும் பற்றிக்கொண்டு நின்றிருந்தவள் ஒருமுறை என்னை திரும்பிப்பார்த்துக்கொண்டாள். நீங்கள் யாரையெல்லாம் திரும்பிப் பார்ப்பீர்கள்?

பரிட்சயமான சாயல் கொண்டிருப்பவர்களை? பிரியமானவர்களை? பைத்தியக்காரர்களை?

ஏதோ கோவில் கடந்திருப்பதை சுட்டிக்காட்டுவதாய், தோள்பையிலிருந்த விரல்களை விடுவித்து, தாடையைத் தொட்டு முத்தமிட்டுக்கொண்டாள். பேருந்திலிருந்த இன்னும் சிலரும் அவ்வாறே செய்துகொண்டனர். கொட்டாவிதான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும், தாடையைத் தொட்டு முத்தமிட்டுக்கொள்வதுமா? எனக்கு அவளுடைய தழும்பைத் தொட்டுப்பார்க்க வேண்டும்போலிருந்தது. அல்லது நுகர்ந்து பார்க்க வேண்டுமென.

நீங்கள் ஒரு பெண்ணிடமிருந்து எதையெல்லாம் தொட்டுப்பார்க்க நினைப்பீர்கள்?

மார்பு? உதடு? யோனி? உரையாடல்?

இன்னமும் காட்டுப்பூக்களின் வாசனை நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது. நெடி, உடம்பின் அத்தனை துவாரங்கள் வழியாகவும் பெரும்போருக்குத் தயாராகும் சிப்பாயென முன்னேறிச்சென்று பரிகாசம் செய்தபோதுதான் அவளுக்கு நான்,’வீ’ எனப் பெயரிட்டிருந்தேன்.

வசுந்த்ரா? விநோதா? வீணா?

இல்லையில்லை, வெறும்,’வீ’.

அவள் திரும்பாமலே புன்னகைத்தது போலிருந்தது. நீங்கள் கவனித்தீர்களா! ‘வீ ‘ எனப் பெயரிடப்பட்டவர்கள் ஒருவகையில் சுதந்திரமானவர்கள். சிரிப்பதற்கும் அழுவதற்கும் அவர்களிடம் எந்தத் தடைகளும் விதிக்கப்படுவதில்லை. மாறாக, இளைப்பாறுவதற்கான நிழலில்லாத வெற்றுவெளிகளில் பறப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பறத்தல் சுதந்திரம் என்று நினைக்கிறீர்கள்தானே! 

வீ என் கண்களுக்கு பறவையாகத்தான் தெரிந்திருந்தாள். அதிலும் ‘பூபி’ பறவையாய்.

பூபி பறவைக்கும் வேம்பையர் பறவைக்கும் நடுவிலான ஒப்பந்தமாய், ‘வீ ‘ யும் நானும் நின்றிருந்தோம். பூபியினுடைய உடலின் பின்புறச் சதையைக் கொத்தி, அதில் வரும் ரத்தத்தைக் குடித்து வேம்பையர் பறவை பசியாறிக்கொண்டிருக்கையில், பூபி எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நின்றுகொண்டிருக்கும் தெரியுமா! அதுபோலத்தான், அவளிடமிருக்கும் காட்டுப்பூக்களை வாசம்பிடித்து போதையேற்றிக்கொண்டிருக்கும் என்னிடத்தில், தன் தழும்பினை ஒப்புக்கொடுத்துவிட்டு வீ நின்றுகொண்டிருந்தாள்.

பிறகென்ன, பூபி என்றே பெயரிட்டிருக்கலாமே என்கிறீர்கள்தானே? அம்மாக்களுக்கு,’அம்மா’ என்றா பெயரிருக்கும் சொல்லுங்கள்! எனக்குத் தெரிந்த சில அம்மாக்களுக்கு ‘கா’, ‘யா’, ‘சீ’ என்று பெயரிட்டிருந்தார்கள். 

நான் மெதுவாக, எனக்கும் வீ-க்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறைத்துக்கொண்டிருந்தேன். ஐந்து.. நான்கு.. மூன்று.. கவுண்டவுன்கள் ஏற்படுத்தும் பதட்டத்தை உணர்ந்திருக்கிறீர்களா? 

நான் கிறங்கிக்கொண்டிருந்தேன், தழும்புகள் ஏன் இத்தனை தடுமாற்றத்தினை கொடுத்துத் தொலைக்கின்றன!

முருகேசனுக்கு தோள்பட்டையில் ஒரு தழும்பு இருக்கும், அதை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பான். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு காரணங்கள். 

”வண்டில இடிச்சுகிட்டேன்”

”கத்தியால குத்திட்டான்”

”கல்லால அடிச்சுட்டா”

”எனக்கு நானே சூடு வச்சுகிட்டேன்”

நானும் பெரிதாய் அதுபற்றி அலட்டிக்கொண்டதில்லை, எல்லாத் தழும்புகளுக்கும் காரணம் வேண்டுமா என்ன? என் பின்னங்கழுத்தில் கூட ஒரு தழும்பு இருப்பதாய் முருகேசன் சொல்லியிருக்கிறான். யாருக்குத் தெரியும்!

அவள் தன் தோள்பையை இறுகப் பற்றிக்கொண்டாள், எதையாவது இறுகப் பற்றிக்கொள்ளும்போது கிளம்புவதற்கு ஆயத்தமாகிறோம் என்கிற அர்த்தத்தை பரிசளிக்கிறார்கள். நீங்கள் கடைசியாக யாரைவிட்டுக் கிளம்பினீர்கள்?

அவள் இரண்டாவது படியில் காலை வைக்கும்போது, நான் முதலாவது படியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தேன். இதோ… காட்டுப்பூவின் வாசனை என் மண்டைக்குள் எதையோ நிகழ்த்திக்கொண்டிருந்தது. டைனோசர் ஒன்று என்னை பிய்த்து ருசிபார்க்க ஆரம்பிக்கையில், நான் எதையோ இசைத்துக்கொண்டிருந்தேன். பியானோவாக இருக்கலாம், ஒருவேளை புல்லாங்குழலாகவும். பாம்பு சட்டையைக் கழட்டுவதுபோல என் தோல் எனது உடம்பிலிருந்து கழன்றுகொண்டிருந்தது. முதுகெலும்பின் பிசிறு கொஞ்சமாய் அதோடு ஒட்டிக்கொண்டிருந்ததை. நுனிநாவால் சுவைத்துக்கொண்டிருந்த மரப்பல்லியொன்று என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆசனத்துவாரத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த என் சிறுகுடலை மெதுமெதுவாய் உருவிக்கொண்டிருந்த உடும்பு, பிறகு அதை மொத்தமாய் வாய்க்குள் போட்டது. நான் தலையை ஒருமுறை உதறிக்கொண்டேன்.

வீ, மூன்றாவது படியில் கால் வைத்திருந்தாள், நான் பதற்றமாக ஆரம்பித்திருந்தேன், என்னால் ஏன் நகரமுடியவில்லை? எதுவோ என்னைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டிருந்தது, எனக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது. ஆரஞ்ச் நிற கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டபடி ஒருமுறை திரும்பிப்பார்த்துக்கொண்டேன். கொஞ்சம் இடைவெளி விட்டு எனக்குப் பின்னால் யாரோ நின்றுகொண்டிருந்தார்கள். நான் வலுக்கட்டாயமாக முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.

அவள் சாலையில் இறங்கித் தெருவில் நடக்க ஆரம்பித்தாள், நான் கம்பியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். இப்போது என் பின்னங்கழுத்துத் தழும்பிலிருந்து அன்னாசிப்பழ வாசனை கிளம்பியிருந்தது.

அமுதன்? ஆதிரன்? இளஞ்செழியன்?

******

 – indhirarajamanickam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button