சிறுகதைகள்
Trending

வருகை- எம் கே மணி 

அந்த மேட்டில் இருந்து இறங்கும் சாலை மிக நீளமானது. அப்புறம் கொஞ்சம் சமநிலை, அந்த இடத்தில் பாதையோரத்தில் இடுப்பளவு உயரத்தில் ஒரு கோவில் பண்ணி அதற்குள் கறுப்பாக ஒரு விநாயகரை வைத்திருக்கிறார்கள். இரவும் பகலும் அவர் இருப்பது இருட்டில்தான். இப்படி காடு பிடித்துக் கிடக்கிற மரங்களில் ஊடுருவி அவரை ஒளி வந்து தொட்டிருக்க முடியாது. அவர் கொஞ்சம் பாவமான ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்கிற துணிச்சலில், “எனக்கு இந்தக் காரியம் மட்டும் ஆகாமல் இருக்கட்டும், நான் மதம் மாறிச் சென்று விடுவேன்என்றெல்லாம் மனதிற்குள் அவரை மிரட்டிக் கொண்டிருந்தான் சீனு. கொஞ்ச நேரமாகவே ஒரு மொபைட் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. விநாயகரிடமிருந்து பார்வையைத் திருப்பி மேட்டைப் பார்த்து விட்டு சற்று நகர்ந்து வளைவுக்கு இறங்குகிற இறக்கத்தைப் பார்த்தான். யாரோ முறுக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

ஆஹாஒரு திடுக்கிடல் ஓடிற்று. சட்டென ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்தான்.

அவனது முகத்தின் மீது சப்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

வண்டி கோவிலுக்கு முன்னால் நிற்கிறது என்பதை அவனது முகத்தைப் பார்த்தால் தெரிந்து கொண்டு விட முடியும். மேலும் தன்னைப் பதுக்கிக் கொண்டான்.

வண்டியை ஸ்டான்ட் போட்டு பத்திரம் பண்ணுகிற ஒரு பெண் தனது பையில் இருந்து எடுத்த ஒரு கற்பூரக் கட்டியை வைத்துக் கொளுத்திவிட்டு விநாயகரைப் பார்க்கிறாள். அப்புறம் இவன் மறைந்திருந்த மரத்தைப் பார்க்கிறாள். சீனு தனது நெஞ்சைப் பிடித்துக் கொள்ள, அவள் ஒரு கல்லைப் பொறுக்கி கொஞ்சமும் குறி தவறாமல் இவன் மறைந்திருக்கிற மரத்தின் மறுபக்கம் அடிக்கிறாள். சீனு எச்சில் விழுங்கிகடவுளே…” என்று முனகிக் கொள்கிறான்.

அவள் கிளம்பிப் போன பின்னர் விநாயகர் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறான். அவரைப் பார்க்கிறான். என்ன இதெல்லாம் என்கிற மாதிரி அவரைக் கேட்கிறான். சரி, நடப்பது நடக்கட்டும் என்கிற எண்ணம் உருவாகிறது. அந்த ஊரில் எங்கே இருந்து பார்த்தாலும் ஒரு துண்டாவது தெரிகிற மேக சிகரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த பொண்டாட்டி இதோ வந்து கொண்டிருக்கிறாள். ஆட்டோ முக்கி முனகி ஏறிக் கொண்டிருக்கிறது. முன்னேறி நின்றான். ஆட்டோ நிற்பதற்குள் அதில் இருந்து குதித்த பத்ரி, ஆட்டோவினுள் பார்க்க முயன்ற சீனுவைத் தடுத்து கலவரமான ஒரு முகத்துடன் சொன்னான், “ஒரு சிக்கல் டா !”

பொண்டாட்டி வரலையா?”

ஆமாடா. வரல. ஓடிப்போயிட்டா

எது?”

அவ வீட்டுக்கு நாலு வீடு தள்ளி பெயிண்டர் ஒர்த்தன் இருக்கான். பாதி கிழவன். ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டிங்க அவனுக்கு. ரெண்டும் நைட்டோட நைட்டு எஸ்கேப்பு. பெரிய கலவரம் அங்க!”

சீனு எதுவும் பேசாமல் பாதையோரக் கல்லில் உட்கார்ந்தான்.

பத்ரி அவனைத் தொடர்ந்து உடனடியாக சமாதானம் செய்யும் பொருட்டு அவனுக்கு எதிரே முட்டியிட்டு உட்கார்ந்து கையின் மீது தட்டிக் கொடுத்தான்.

நீ மனச விட்டுரக் கூடாது சீனு!”

சீனு எதுவும் பேசவில்லை, பத்ரி வேகமாக அந்த அமைதியை நிரப்பினான். “நீ என்ன நம்பிட்ட. நான் கை விட்ருவனா?” என்று விட்டு டிரைவரிடம்ம்என்பது போல ஏதோ ஆணையிட அவன் உள்ளே பார்க்க ஆட்டோவில் இருந்து எகிறியது ஒன்று. பூரண கர்ப்பம். தலை நிறைய மல்லிகை. ஆபரணங்கள். பட்டுப்புடவை. ஆனால் அதை தொடை வரை லுங்கி மாதிரி மடித்துக் கட்டிக்கொண்டு பீடியை இழுத்து புகை விட்டது. “என்னங்கடாஎன்று தவுலத் நடையில் இவர்களை நெருங்கியது.

யாரு இது?”

விஜிடா. விஜய குமாரு. உன் பொண்டாட்டியா நடிக்கறதா இருந்தாளே, அவ தம்பி. அவள விட இவனுக்கு ஸ்டேஜ் எக்ஸ்பீரியன்ஸு ஜாஸ்தி. பொண்ணா வந்துட்டான் இல்ல, அப்டியே தளுக்கு பண்ணுவான்!”

ஒரு நிமிடத்தில் புடவையை சரி செய்து கொண்டு, பீடியின் கடைசி இழுப்பை இழுத்துப் போட்டுவிட்டு, உடலில் முதலில் ஒரு கண்ணியம் கொண்டு வந்து அப்புறம் நம்பவே முடியாத ஒரு பெண்மையுடன், “தாயே கருமாரி, எங்கள் தாயே கருமாரிஎன்று பாடிக் கொண்டு விஜி பரத அபிநயம் பண்ணிவிட்டு, சட்டென்று சீனுவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு எழுந்துகொண்டான். மிகுந்த குழப்பம். பத்ரியைப் பார்த்தான். அவன் அதேபோல தட்டிக் கொடுக்க  “நமக்கு டான்ஸ் சீன் எல்லாம் இல்ல. சொல்லிட்டியா, இல்லியா?”

என்று திரும்பிப் பார்ப்பதற்குள் ரோடைக் கடந்து சென்ற விஜி நின்றவாறு ஒன்னுக்குப் போகிற அழகு பயங்கரமாக இருந்தது.

 

***               

 

சீனு இதுவரைக்கும் ஆறு படங்களில் வேலை செய்திருக்கிறான். கடைசிப் படத்தில் இயக்குநர் ரமணி வர்மனுக்கு கோ டைரக்டராகக் கூட வேலை பார்த்தாயிற்று. அவரது படத்துக்காக கர்நாடகத்தில் லொகேஷன் பார்க்க வந்தபோது இந்த ஊரைக் காரில் கடந்து போனார்கள். வந்தது பெரிய பனிக்காலம் ஒன்றுமில்லை. இந்த மலைத்தொடரின் அந்த சிகரத்தில் மேகம் இறங்கியிருந்தது. நிறைய நேரம் அதைப் பார்த்தவாறு வர முடிந்தது. காரில் தூங்கிக் கொண்டு வந்த இயக்குநர் ஹோட்டலில் தண்ணி போட்டுக் கொண்டு தூங்கினார். எதற்கோ மலை சிகரம் நினைப்பில் இருந்தவாறு இருந்தது. “அதில் என்னவோ ஒரு செய்தி இருக்கிறது சீனு…” மறுநாள் தூக்கத்தில் இருந்து விழித்த இயக்குநர், எங்கிருந்தோ வந்த இருவருடன் பேசி, காரில் புறப்பட்டு ஒரு ஆற்றைப் பார்த்து நின்று விட்டு, அங்கே எடுக்க வேண்டிய பாட்டை சிங்கப்பூர் ஷாப்பிங் மாலில் டூயட்டாக  எடுத்து படத்தையும் முடித்து விட்டார். படத்தில் கதைக்கு அவ்வப்போது பேஸ்ட் போட வந்த எழுத்தாளர் சிவ தாசனிடம் இவன் தனது கருத்தை சொன்னான். அதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எதையாவது எழுதிக் கொண்டு வருவதற்கு அங்கே சென்று விடு என்று மட்டும் சொன்னார். “‘நயாகராஎன்கிற பழைய படம் பார்த்து இருக்கிறாயா?” என்றார். “குறைந்தபட்சம் ரே வின் கஞ்சன் ஜங்கா? இல்லை. உனக்கு ஒரு குஞ்சு இருக்கு. அதுதான் முழுசான உண்மை. ஆனா எவளையாவது லவ் பண்ணா ரோசாப்பூ வாங்கிக் குடுக்க மாட்டியா. கவிதை சொல்ல மாட்டியா? நாலு எடத்துக்கு கூட்டிட்டுப் போவ மாட்டியா? எல்லாம் முடிஞ்சு கடைசியா குஞ்சுக்கு, அதாவது உண்மைக்கு வந்து சேரரா மாதிரி ஒரு திரைக்கதை பண்ணிடுவோம், போயிட்டு வா…” என்றார். அவர் சொன்னது அவனுக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனால் ஒருநாள் கிளம்பி வந்து ஒரு மாதம், இரண்டு மாதம் தங்குவதற்கு இடம் பார்த்தான்.  

 

சிகரம்

சீனு பெரிய சவுந்தர்ய உபாசகனாக இருந்து பழக்கம் இல்லாதவன்தான் என்றாலும், அது மனதை அள்ளுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சிகரத்தை சினிமா பாஷையில் சொல்ல வேண்டுமானால் பொயடிக் பண்ண வேண்டும். தமிழர் பகுதி இருந்தது, ஒரே ஒரு வீடுமே இருந்தது. அங்கே இருந்து பார்க்கும்போது மலை ஜொலிப்பதை ஒரு சம்பவம் போல பார்க்கவும் முடிந்தது. உயரமாக முறுக்கு மீசை வைத்துக்கொண்டு இஸ்திரி போட்ட வார்த்தைகளில் ரத்தின சுருக்கமாக அந்த மீராபாபு ஒன்றுதான் கேட்டார், “உன் பொண்டாட்டி கூடதானே குடித்தனம் வருவே?“ 

திடுக்கிட்டு முழுங்கியதில் விரைவாக வந்த பதில் இதுவாயிற்று. “சார், என் வைஃப் பிரகனென்டா இருக்காங்க. நையன்த் மந்த்.”

ஓகே. ஒரு மூணு மாசம் கழிச்சு பொண்டாட்டியும் கைக்கொழந்தையுமா வாங்க! போயிட்டு வாங்க!”

சினிமாவில் இருக்கிறவனுக்கு லட்சியம் முக்கியம் என்பது அதில் பெரும்பான்மையோர் எடுத்துக் கொள்கிற சபதம். பழைய பேஷன்தான் என்றாலும் சீனுவும் அதைதான் கைக்கொண்டிருந்தான். வயது சென்று கொண்டிருக்கிறது. அந்த ஆள், “அதனால்தான் உனக்கு கல்யாணமாகி விட்டதா?” என்கிற மாதிரி கூட கேட்கவில்லை

பொண்டாட்டியோட வா!” 

வருகிறேன்…” 

என்று அட்வான்ஸைக் கையில் கொடுத்து வாங்க வைத்து விட்டான். இந்த விஜியை அவனது பொண்டாட்டி என்று நம்புவது இருக்கட்டும். முதலில் பொம்பளை என்று நம்ப வேண்டுமே? ஆட்டோவில் இருந்த அவனை ஒருமுறை பார்த்தபோது அவன் வெட்கப்படுவது பார்த்து திக்கென்று இருந்தது. அவன் பத்ரியின் காதில் என்னவோ சொன்னான். இவன் கண்டுகொள்ளவில்லை என்றாலும் இவனைத் தட்டி அடிக்கடி அவனைப் பார்க்க வேண்டாம், அவனுக்கும் வெட்கமாக இருக்கும் இல்லையா என்று பத்ரி கேட்டான். புது வம்பாக இருக்கிறதே என்று அங்கே போனபோது வேறு ஒரு வம்பு இருந்தது

காம்பவுண்டுக்குள் தனது டியூட்டி உடையை மாட்டிக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த மீராபாபு தனது பெல்ட்டை பாலிஷ் பண்ணிக் கொண்டிருந்தார். உட்கார்ந்த இடத்தில் திடுக்கிட்டார்கள். “அய்யோ மீராபாபு…” என்றார்கள். தாங்கள் இருவரும் கிரிமினல்கள் என்று அவருக்கு நன்றாக தெரியுமாம். “போன வருடம் நாங்கள் இருவரும் அவரிடம் சரியான அடி வாங்கியிருக்கிறோம்என்று பத்ரி எதையோ ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிக்க, சீனு அவன் வாயை மூட வைத்தான். “தேவையே இல்லை, என்ன செய்யலாம் இப்போ?” “நீ போய் சமாளி, ஏதாவது மாற்று ஏற்பாடு செய்கிறேன்என்று சீனுவை ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். விஜி தனக்கு மூத்திரம் முட்டுகிறது என்று நொடிக்கொரு தரம் பட்டுப் புடவையை தூக்கிக் கொண்டிருந்த விரசம் வேறு. ஒரு நிமிடம்தான் சீனு நின்றான். உள்ளே யாரும் இல்லை. சட்டென கேட்டைத்  திறந்து கொண்டு உள்ளே நகர்ந்து சாவியால் பூட்டை அவிழ்த்து கதவைத் திறந்து உள்ளே புகுந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான்

என்ன கதை சொல்லலாம்?

அங்கே இருந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்ததும் ஒரு சினிமா பழக்கத்தில் அவனது மனசாட்சி கேள்வி கேட்டது

நீ ஒரு சினிமா ஆசாமியாக இருக்கவேதானே இந்த மாதிரி மொக்கை சீன்களைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்? நன்றாக ஆழ்ந்து பார்த்துப் புரிந்து கொள், இது வாழ்க்கை. சந்தேகம் இருந்தால் ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள் !”

கண்ணாடி மனசாட்சி சீன் இதுவரை எத்தனை சினிமாக்களில் வந்திருக்கும் என்கிற யோசனை வந்தபோது யாரோ கதவைத் தட்டுகிறார்கள்

கதவைத் திறந்தால் மீராபாபு இல்லை. அவராக இருக்க வாய்ப்பில்லையே

வேறு யார், அவள் தான். சௌபி. பாபுவின் மகள்பிள்ளையார் கோவில் மரத்தில் கல்லைத் தூக்கி அடித்தவள்

வீடு பார்க்க வந்த அன்று வீட்டைச் சுற்றிக் காட்டியவள் அவள்தான்

அன்று ஒவ்வொரு அறையாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு படுக்கையறையில் இருந்த சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு நின்றபோது குளிரும் நிழலும் மனதைத் தொட்டது. ஆற்றின் சலசலப்பு கேட்டது. மௌனத்தின் பெருவெளியில் ஜிலுஜிலுத்துக் கொண்டிருந்த மரங்களின் அசைவை தனியாக உணர்ந்தான். அப்புறம் அவன் அறிந்தவாறே வந்திருந்த சிகரம். இப்போது அது ஒரு சந்திப்பு போல இருந்தது. போகட்டும், அதைக் காட்டிலும் முக்கியம், பின்னால் நின்று அவனைப் பார்த்தவாறு இருக்கிற அந்தப் பெண்ணைப் பற்றின விசாரம்தான் நெஞ்சில் ஓங்கி இடித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு அழகியாக இருப்பதாவது. மூச்சு நின்று விட்டு வந்தது. ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இந்த வீட்டில் இருக்கிற விதி இருந்து, அவளுக்கும் என்னைப் பிடித்து, அவள் சம்மதத்துடன் அவளை கண்ணுக்குள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு அவளது அப்பாவிடம் பேசி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். சீனு அவளுக்காக பல ரவுண்டுகள் மனதால் சுற்றி விட்டு வந்தான். சத்தியமாக அவளது வாளிப்பை தாங்க முடியவில்லை

கதை போகிற விதமே வேறு இப்போது

உள்ளே வந்தவள் அவனைத் தாண்டிக் கொண்டு எல்லா அறைகளுக்கும் சென்று பார்த்து கண்களால் எங்கே என்றாள்

இவன் புரியாத மாதிரி என்ன என்றான்

எங்க? வைப் வரலையா?”

இவன் அவளைப் பார்க்கிறான். என்ன பதில் பொருந்தும்?

ஆட்டோல வந்தவங்க அப்படியே போயிட்டாங்க? மேல இருந்து பாத்தேன்!”

நாளைக்கு வருவாங்க!”

அவள் தனது மூக்கின் முனையை சொறிந்தபோது, சீனு இது எதற்காக இருக்கும் என்பது போல பார்க்கும்போது அவள் இவனைப் பார்த்தாள். ‘பார்ப்போமே…’ என்று கொஞ்ச நேரம் பார்த்தான்தான்உயிரைப் பிழிய முந்துகிற அவளுடைய அந்தக் கண்கள், மனம் முழுக்க திணறலாக வந்து முறுக்குகிற குற்றவுணர்வு இரண்டில் எது முந்தி எழுந்தது தெரியாது, சீனு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றுவிட்டான்

ஜங்க்ஷன்ல இருந்தப்ப பாத்தேன். ஓர்த்தன் என் பக்கத்துல நின்னு வாடகைக்கு இமிடேஷன் ஜ்வல் வாங்கினான். உங்களுக்கு பொண்டாட்டி வேஷம் போட்டவன் ஆட்டோல உக்காந்து பீடி குடிச்சிக்கிட்டு இருந்தான்!”

சீனுவின் தலை இன்னமும் குனிந்தது

நீங்களும் பிள்ளையார் கோவில் பக்கத்துல அவங்களுக்காகதானே தேவுடு காத்துகிட்டு இருந்தீங்க?”

அமைதி

ஒரு டைமிங் வேணாமா? உங்கள நான் பாத்துக்கிட்டே வரேன். அவளோ லேட்டாவா ஒளியறது?”

மேலும் அமைதி

எதுக்கு தெரியுமா கல்லு விட்டு அடிச்சேன்?”

அவன் இப்போது நிமிரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்

உங்களப் பாத்துட்டேன்னு புரிய வைக்கத்தான்!”

இவன் சங்கோஜத்துடன் நிமிர்ந்து,  “நான் ஏதோ பிரார்த்தன போல ன்னு நெனச்சுக்கிட்டேன்!”

ஒரு கணம் ஒருவரை ஒருவர் ஆழமாக கண்களுக்குள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்

என்ன செய்யலாம்?” என்றாள்

அப்பா டூட்டில இருந்து திரும்பி வந்த ஒடனே அந்த அட்வான்ச வாங்கிக் குடுத்துடுங்க. இல்லாத பொண்டாட்டிக்கு நான் எங்க போறது? பொட்டிய கட்டிக்கறேன்.”   

வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்ததும் ஆட்டோ கிடைத்தது. கடைத்தெருவிற்குச் சென்றபோது ஒரு திண்ணை வைத்த வீட்டில் சாப்பாடு இருந்தது. சாம்பார், ரசம், மோர்தான். கூட்டு பொரியலும். ஆனால் அந்த இரண்டு பெண்மணிகளும் மத்தி மீன் வறுத்துக் கொடுத்தார்கள். சற்றுத் தள்ளி சாதா கோல்ட் பிளாக் கிடைத்தது. கொஞ்ச நேரம் பராக்கு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு ஒரு ஆட்டோ பிடித்து வந்து ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டான். கொஞ்சம் நடந்து ஆற்றங்கரைக்கு வந்து நிழலில் உட்கார்ந்தான். வேறு ஒரு வீட்டை தேடிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எப்போதோ வந்து விட்டது, ஆனால் மனம் சமாதானம் கொள்ளவில்லை என்பது பதற்றமாக இருந்தது. “என்னது இது, அவள் இல்லை என்றால் முடியாது போலிருக்கிறதேஎன்று நினைக்கும்போது சீனுவிற்கு பயமாக இருந்தது. சிகரெட்டின் புகையை நெஞ்சுக்கு இழுத்தான்.   

சௌபி என்கிற பெயர் மட்டுமே எவ்வளவு அழகாக இருக்கிறது? சீனு சௌபர்ணிகா ஆற்றைப் பார்த்திருக்கிறான். குளித்திருக்கிறான். வாழ்வில் ஒரு அற்புதமான நீரோடையை இழந்தாயிற்று!

வீட்டுக்குத் திரும்பியபோது பாபு ஹாலில்தான் அமர்ந்திருந்தார்

இவனைப் பார்த்து ஒரு புன்னகை. ஒருபோதும் யாரெவரும் அதற்கு விளக்கம் கொடுத்து விட முடியாது. அவருக்கு எதிரில் உள்ள நாற்காலியில் இவன் ஒரு மூலவியாதி ஆளைப் போல அமர்ந்தான்

அவரைப் பார்க்க மேலும் அதே தினுசுப் புன்னகை

சீருடையில் இருக்கும்போது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அவருடைய பாலிஸியாக இருக்கலாம்

இவன் மேம்போக்காக ஒன்றை அடித்தான்–  “வாழ்க்கைல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேஷம் போட்டுக்க வேண்டியதா இருக்கு. உலகமே ஒரு நாடக மேடைன்னு சொல்றார் ஷேக்ஸ்பியர்.!”

 “எனக்கு வேஷம் குடுப்பாரா?”

யாரு?”

ஷேசுபியர்தான்..!”

என்ன வேஷம்?”

போலீஸ் ஆபீசர் வேஷம்தான்!”

சீனு இதற்கு சிரிக்க ஆரம்பித்தான். வரவில்லை என்றாலும். உள்ளே இருந்து ஒரு கர்ப்பிணியான இளம்பெண்ணும், சௌபியும் வந்தார்கள். அந்த கர்ப்பிணிஎதுக்கு இப்ப இப்பிடி சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க? அவுரு என்ன சொல்லிட்டாரு ? ” என்றுவிட்டு கையில் இருந்த டிரேவை நீட்டி பாபுவுக்கு காப்பி கொடுத்து விட்டு, சௌபாவிற்கும் ஒன்றைக் கொடுத்து விட்டு சீனுவிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். “உங்களுக்கு வேண்டிய ஜாஸ்தி சுகர் போட்டுருக்கேன்!” என்றாள்

அவளை ஒருமுறை பார்த்துக்கொண்டு பாபுவிடம், “இவங்க யாரு?”  என்றான்

அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அனைவரும் அவளையே பார்க்க, அவள் ஒருவிதமாக சிரிப்பை அடக்கிக் கொண்டுசொன்னேன் இல்ல? அவர் கூப்பிட்ட டைமுக்கு நான் வரலேன்னு கோவம். எப்பிடி என்ன வெச்சு ஜோக் அடிக்கிறார், பாருங்க!”என்றாள். சட்டென்று மாறியது அந்த முகம், குழந்தை மாதிரி. ஒரு விதமான சிணுங்கலுடன் விரலை ஆட்டிஇருங்க. உங்களப் பாத்துக்கறேன்!”

சீனு மிக இலேசாக சௌபியைப் பார்க்கம்ம்…” என்பது போல தலையை ஆட்டினாள். பரவாயில்லை, நான் சிக்கி சிதறுவதற்குள் பத்ரி வேறு பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறான். எப்ப வந்தாளோ, இவர்கள் எப்போ பார்த்தார்களோ? கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். அபாரமான நடிகையாக இருக்கிறாள் என்று மெச்சிக் கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் அசலான ஒரு கர்ப்பிணியே வந்து தனது பாத்திரத்தைச் செய்வது என்பதில் எவ்வளவு  பூரணத்துவம்? எல்லோரையும் இருந்து சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்றாள். சமைத்துப் பரிமாறினாள். மீராபாபு சென்ற பிறகும் சௌபி இருந்து அந்தப் பெண்ணுக்கு உதவினாள். போகும்போது சீனுவின் இடுப்பைக் கிள்ளி விட்டு ஒன்றை சொல்லி விட்டுப் போனாள், “அவள கட்டில்ல படுக்க வெச்சுட்டு நீ தரைலதான் படுக்கனும். நான் ராத்திரில வந்து பாப்பேன், ஜாக்கரதை!”

சீனு பாத்ரூமில் இருந்து திரும்பியபோது அவள் தரையில் மெத்தை விரித்துத் தூங்கி விட்டிருந்தாள்

இவனுக்கு சரியாகத் தூக்கம் வரவில்லை

அவள் தூக்கத்தில் இருந்துகொண்டே  வயிற்றில் இருந்த தலையணையை தூக்கிப் போட்டாள்

இனி அவள் பக்கம் பார்ப்பதில்லை என்று திரும்பிப் படுத்துக்கொண்ட சீனு, பாதி இரவில் கண் முழித்து சன்னலைப் பார்த்தபோது திடுக்கிட்டான். வாயில்பேய்என்று வந்தது வெளியே வரவில்லை. ஆனால் அது பேய் இல்லையே. ஏன் வர வேண்டும்? சௌபி அங்கிருந்து நகர்ந்து போனாள். இவன் மனதை உறுதி செய்து கொண்டு ஒரு விதமான பீதியுடனும், மறுபுறத்தில் ஒருவிதமான மகிழ்ச்சியுடனும் குழப்பத்துடன் திரும்பிப் படுக்க குரல் கேட்டது

அவளுக்கு உன் மேல பைத்தியம். விட்டுராத. அள்ளி எடுத்துக்கோ!”

சைடில் பார்த்தால் அசைவில்லை, தூங்குவது போலவே இருந்தது. செல்லில் கொஞ்சம் சார்ஜை ஏற்றிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் ஒதுங்கி பத்ரிக்கு போனைப் போட்டான். காலையில் எழுந்ததும் முதல் காரியமாக

டே, பத்ரி!”

நீ குடுத்த காச என்னால திருப்பிக் குடுக்க முடியாது!”

எதுக்குடா திருப்பிக் குடுக்கனும்? ரெண்டாவது பொண்டாட்டி செம்ம. அட்டகாசமான பர்பாமென்ஸ். அப்பாவ அனுப்பிட்டியா? கொஞ்ச நேரத்துல வந்துருவாரா?”

என்ன அப்பா? என்ன கொப்பா?”

அவனிடம் மேலே பேசுவதற்குள்மாப்பிளே…” என்று குரல் கேட்டது

சீனு போனை ஆப் செய்து விட்டு முன்னேறிச் சென்றால் மீராபாபு முறைத்தார். அவருடன் ஒரு வயதானவர் நின்றிருந்தார். அவர் சீனுவிடம்  “வாங்க மாப்பிளே!” என்றார்

இவர்தானா? குடிகாரப்பயல். எதையாவது ஒழுங்காக சொல்லிவிட்டு செய்கிறானா? சாயந்திரம், ராத்திரி எல்லாம் மப்பு என்றால் காலையில் கூடவா? ஒவ்வொரு நிமிஷமும் அதிர்ச்சிப் பைத்தியம் போல இருக்க வேண்டியிருக்கிறது. சீனு மென்று முழுங்கிக் கொண்டு பாபு பக்கம் பார்த்தான். அவர் கோபமாகவே இருந்தார். “பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வர முடியலயா, அத நீ என்கிட்ட சொல்லி இருக்கணும். அத விட்டுட்டு அவளோட அப்பன்கிட்ட தகராறு வெச்சுப்பியா? அப்பனையும் பொண்ணையும் பிரிப்பியா? அதுவும் பொண்ணு முழகுகாம இருக்கற நேரத்துல?” சீனு தேமே என்று நின்றான். “பெரியவரே, நீங்க உங்க பொண்ண இன்னைக்கே கூட்டிக்கிட்டு போங்க, இந்தப் பையனை நாங்க பாத்துக்கறோம்!”  

உண்டு உறங்கி அப்படியாக அவர்கள் இருவரும் கிளம்பிப் போக வேண்டிய நேரம் வந்தது

போகும் போது அந்தப் பெண் சௌபாவிடம்அந்தப் பையனுக்கு உன் மேல பைத்தியம். விட்டுராதே. அள்ளி எடுத்துக்கோஎன்பதைத்தான் சொல்லிவிட்டுப் போனாள்.

   “நான் உன்ன வாங்க, போங்க எல்லாம் கூப்பிட மாட்டேன். நீ, வா, போ தான்!”

நீ எப்பவோ அப்டி கூப்பிட்டுட்டே. அப்றம் என்ன பர்மிஷன். சொல்லு?”

உன் பொண்டாட்டியா நடிக்க வந்த பொண்ணு பேரு சொல்லு!”

யாருக்குத் தெரியும்? சும்மா காமாட்சி ன்னு வெச்சுக்கோ. என்ன இப்போ?”

இல்ல. அவ பேரு மீனாட்சி. இந்த ஊர்க்காரி. நம்ம நெலம எப்படியோ தெரிஞ்சு நமக்கு உதவி செய்ய வந்துருக்காங்க.”

புரியல

அவளுக்கு செவ்வாய் தோஷம். கல்யாணப் பந்தல்ல கட்டின தாலியை அறுத்துகிட்டு போனாங்க. ஊரே காரித் துப்பிச்சு. அவளுக்கும் அம்மா இல்ல, என்ன மாதிரியே ! அதுக்குதான் தன்னோட அப்பாவ கூட்டிக்கிட்டு அவ வலுவில வந்து உதவி செஞ்சுட்டுப் போனா!”

சீனு கொஞ்சம் எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தான். இன்னும் அவனுக்கு புரியவில்லை

சீனு, எனக்கும் அந்த தோஷம் இருக்கு. வரனே வந்தது இல்ல. வந்தாலும் போயிரும். அவள் மாதிரிதான் நானும். எனக்கும் ஒரு அப்பா மட்டும்தான் இருக்கார்!”

நீ கொஞ்சம் கத கட்டற சௌபி. அவங்க இந்த ஊர்க்காரங்கன்னா உங்க அப்பாவுக்கு அடையாளம் தெரியாதா? அதுவும் ஒரு போலீஸ் ஆபீசருக்கு?”

அவள் தலையில் அடித்துக்கொண்டாள்

என்ன?”

நீ ஒரு அப்பாவி ராஸ்கல் சீனு. அதுக்கு தான் நான் உன்ன லவ் பண்றேன்!”

கண்டண்டை மாத்தாதே செல்லம். மேட்டருக்கு வா. உங்கப்பா என்ன லூசா?”

ஆமா!” என்றாள் அவள்.       

 சீனு அவளைக் கோணலாக ஒரு பார்வை பார்க்கிறான்.

அவருக்கு மறதி வியாதி வந்து, வேலை போயே எட்டு வருஷம் ஆச்சு. இப்பவும் டூட்டிக்கு கெளம்பறதா சொல்லி டிரஸ்சை போட்டுக்கிட்டு பெட் ரூமுக்கு போயிடுவாரு. அங்க ஒரு ஸ்டேஷன் செட் அப் இருக்கு, நான் வேலைக்கு போயிட்டா அவரப் பாத்துக்க ஒரு பையன் வருவான். என் மேல உயிரையே வெச்சுருக்க மனுஷன், வச்சு வச்சு பாத்துகிட்டு இருக்கோம். அப்படி கூட எல்லாரையும் ஏமாத்திட்டு கடைத்தெரு பக்கம் போனாருன்னா சட்டத்தை மீறுற ஒவ்வொருத்தரையும் சுத்தி வளைச்சு பின்னி எடுத்துருவாரு. நம்ம ஊர் போலீசு பரிதாபம் பாத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”   

அவள் சொன்னது உண்மை

பத்ரி நான் யாரையும் அனுப்பவில்லை என்றான். நான் இந்த உலகிலேயே ஐந்து வருடமாக பயந்து கொண்டிருக்கிற ஒரே போலீஸ் அதிகாரி உயர்திரு மீராபாபு மட்டும்தான் என்றான்.சீனுவும் ,சௌபியும் முதலில் தொட்டுக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு அப்புறம் முத்தமிட்டுக் கொண்டார்கள். அப்புறம் ஒரு வாரத்தில் உறவு கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு மாதத்துக்கு அப்புறம் அவன் சென்னைக்குக் கிளம்பி சென்று மறுபடியும் கதை எழுத வந்தபோது மீராபாபுவிடம் சௌபி, “என் புருஷன் வந்து விட்டார்என்க,  “வாங்க  மருமகனே!” என்றார் அவர். அன்று இரவு செமத்தியான ஒரு உடலுறவுக்கு பிறகு சிகரத்தின் மீதிருக்கிற சாயந்திரத்தைப் பார்த்து நின்றார்கள். “மீனாட்சியையும் அவளது அப்பாவையும் பார்க்கப் போக வேண்டும்என்று சாதாரணமாக சொன்னான் அவன்

என்ன சொல்றே நீ?” என்று கேட்டாள் அவள். “நான் உனக்கு அத சொல்லலையா?”  

அந்தக் கல்யாணம் நின்று போன பின்னர் அந்த சிகரத்தின் மீது ஏறிச் சென்று தந்தையும் மகளும் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போயினர். அது முடிந்து இருபது வருடமாகிறது

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button