இணைய இதழ்இணைய இதழ் 75தொடர்கள்

வெந்தழலால் வேகாது; 03 – கமலதேவி

தொடர் | வாசகசாலை

மானுட ஆடல்

னிதர்களுக்குள்ளான உறவும், அன்பும், உதாசீனமும் என்றைக்கும் புரிந்து கொள்ள முடியாத, விடைசொல்ல முடியாத உணர்வுகளாகவே உள்ளன. ஏன் ஒருவரை வெறுக்கிறோம் அல்லது நேசிக்கிறோம் என்பதற்கு சரியான பதில் இல்லை. இது நம்முடைய அறிவு என்ற நிலையில் இருந்து நழுவிய ஒன்று என்று நினைக்கிறேன். என்றாலும் பல நேரங்களில் கணக்கீடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. மனிதன் இன்னொரு மனிதனை பயன்படுத்திவிட்டு உதறுபவனாகவே இருந்திருப்பான் என்று நினைக்கிறேன். அதனால்தான் பந்த பாசம் என்ற கட்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.

இந்தக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகும் இருபது கதைகளின் பொது அம்சமாக மனிதர்களுக்குள் குறிப்பாக ஆண் பெண்ணிற்கு இடையேயுள்ள உள்ள உறவினை இரு எல்லைகளில் அணுகப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். ஒரு எல்லையில் வாழ்வின் தொடக்கத்தில் உள்ள இனிமை; மறு எல்லையில் வாழ்வின் முடிவில் உள்ள வெறுமை. இதில் கு.அழகிரிசாமியின் கதைகளில் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வாழ்க்கைப் போராட்டத்தைச் சார்ந்த உணர்வுகளை கதையாக்கி உள்ளார். கி.ரா இந்த இரு நிலைகளில் உள்ள கதைகளை எழுதியிருக்கிறார். 

1969 லிருந்து 1973 வரையான காலகட்டத்தில் தாமரை, குமுதம், கதடதபற,கணையாழி, சுதேசமித்திரன் மற்றும் சோதனை போன்ற இதழ்களில் கி.ரா எழுதிய பத்துக்கதைகள் இந்தக்கட்டுரைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல 1948 லிருந்து 1950 வரையான காலகட்டத்தில் சக்தி மற்றும் காண்டீபம் இதழ்களில் கு.அழகிரிசாமி எழுதிய பத்துக்கதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

கி.ரா வின் ‘கறிவேப்பிலைகள்’ மற்றும் ‘புறப்பாடு’ என்ற இரு கதைகளும் வாழ்வின் அந்திமத்தின் கதைகள். கறிவேப்பிலைகள் என்ற கதை எங்கிருந்தோ இந்த ஊருக்குப் பிழைக்க வந்த இரு தம்பதிகளின் முழு வாழ்வின் கதை. பப்பு பாட்டாவும், பப்பு பாட்டியும் ஊர் வேலைகள் செய்து பிழைக்கும் தம்பதிகள். குழந்தைகள் இல்லாதவர்கள். இந்த ஊரில் புறம்போக்கு இடத்தில் ஒரு சிறிய மண்வீட்டை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் பழுத்த வயோதிகத்தில் அந்த வீடும் மழைநாளில் இடிந்து விழுகிறது. வேலைகள் செய்ய முடியாதவர்களாகிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள கல் மண்டபத்தில் கந்தல் உடைகளுடன், ஒற்றை அகலுடன் யாசகம் வாங்கி உண்ணும் நிலைக்கு வருகிறார்கள். பப்பு பாட்டாவின் ஒரே ஆசை பருப்பிட்ட பூசணிக்காய் குழம்பில் நெல்லஞ்சோறு சாப்பிடுவதுதான் என்று கி.ரா எழுதுகிறார். பருப்புக்குழம்பை அவர் ஆசையாய் உண்பதாலேயே அவருக்கு பப்புபாட்டா என்ற பெயர் வந்தது என்று கதையின் துவக்கத்தில் வரும். இந்த நிராதரவான நிலை நம்மைத் தொந்தரவு செய்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக ஊரில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் வேலையை பகிர்ந்து பிழைத்தவர்கள் ஒரு கருவேப்பிலையை போல ஊர் ஓரத்தில் கிடக்கிறார்கள். இந்தக் கதையில் இவர்களுக்கு யாரும் உறவில்லை என்று வைத்துக் கொள்ளவோம். ஆனால், புறப்பாடு கதையில்அண்ணாரப்ப கவுண்டர் தன் நீள் ஆயுளின் காரணமாக உறவுகளால் தொந்தரவாக நினைக்கப்படுகிறார். அவர் எப்போது இறப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இவர் இறப்பைக் காத்து நின்று, கொள்ளுப் பேரப்பிள்ளகளைக்கு திருமணம் நிச்சயிக்க முடியவில்லை; வெளியூர் வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை என பல விஷயங்களுக்கு அவர் குறுக்கே நிற்பது உறவுகளுக்குத் தொல்லையாக இருக்கிறது. எருமைப்பால் புகட்டுவது, நடு இரவில் குளிர்நீரில் குளிப்பாடுவது என்று இறப்பிற்கான முயற்சிகளைத் தாண்டியும் அந்தப் பெரிய உயிர் பிழைத்து நிற்கிறது. இறுதியில், அவர் நிலத்தின் கரிசல் மண்ணை சங்கில் கரைத்து ஊற்றியதும் இறக்கிறார். உறவுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயன்பாடு அற்ற மனிதன் தேவையில்லையா என்ற கேள்வி எழுகிறது. கி.ரா ரொம்பவும் எதார்த்தமாக இந்தக்கதையை நகைச்சுவையுடன் எழுதியிருந்தாலும், நம் மீதே நமக்கு ஐயரவு பிறக்கும் தருணத்தை இந்தக்கதைகள் ஏற்படுத்துகின்றன. ஐயரவு என்றால் சந்தேகம். நாம் அன்பென்றும் உறவென்றும் பேசுகிறோமே அதன் மீது பாட்டா வலிக்காமல் கல்லெறிகிறார்.

இதே போல கு.அழகிரிசாமியின் ‘சத்தியவான்’ என்ற கதையில் இறப்பிற்குப் பின் தன் கணவனை மீட்டுக் கொண்டு வந்த சாவித்ரியின் கதையை எழுதிப் பார்க்கிறார். நம்முடைய புகழ்மிக்க புராணக் கதைகளில் ஒன்று சத்தியவான் சாவித்ரி கதை. அதில் எமனுடன் போராடி கணவனை சாவித்ரி மீட்பதுடன் கதை முடிக்கிறது. அழகிரிசாமி இந்தக்கதையை நல்ல ரசத்துடன் எழுதியிருக்கிறார். சாவித்ரி எமனுக்கு பின்னாலேயே செல்லும் சம்பவங்களும், எமனுக்கும் சாவித்ரிக்கும் இடையிலான உரையாடல்களும், வாக்குவாதங்களும் சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு இடத்தில் சாவித்ரி ‘ஆள்தான் முரடே தவிர புத்தி லவேசமும் கிடையாது. இவனை எளிதில் ஏமாற்றி கணவனை மீட்டுக்கொண்டு செல்லலாம்’ என்று எமனைப்பற்றி நினைப்பாள். எமனால் சாவித்ரியை மீறவே முடியாத காட்சிகளை மிக அழகாக நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார். வாசிக்கும்போது நாம் கேள்விப்பட்ட சோகக்கதையை நம் படைப்பாளியால் இப்படியும் பார்க்க முடிந்திருக்கிறதே என்று தோன்றும். மீட்டு கொண்டு வந்த பின் சத்தியவான், சாவித்ரியை மனைவியாக ஏற்க மறுத்து விடுவார். தன்னுடைய தர்மவிசாரங்களின் படி இது ஏற்புடையதல்ல என்று அவளை விலக்கி விடுவார். இந்த தர்மவான்களை விட எமனே இரக்கமுள்ளவன்தான் என்று ஆகிவிடும். சாவித்ரியை மேலும் அப்பாவியாகக் காட்டும் கதையை பெண் அன்பின் கதை என்று சொல்லலாம்.

கி.ராவின் ‘கனிவு’ என்ற கதை புதிதாக திருமணமான பெண் கணவனுடம், அவன் குடும்பத்துடனும் இணக்கம் கொள்ளும் நிகழ்வைச் சொல்கிறது. முதலில் வீட்டுப்பூனை அவளிடம் அன்பாகிறது. அந்த கிராமத்து மனிதர்களிடம் இருக்கும் பக்குவம் நம்மை அயரச்செய்வது. சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று மணமக்களை துன்புறுத்தாமல் காதல் செய்ய அனுமதிக்கும் மனிதர்களை கிராமத்தான்கள் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. மல்லம்மா கணவன் வீட்டிற்கு வந்த பின் அவளுக்கும் கணவனுக்கும் ஏற்படும் இணக்கமாக மனநிலைக்கு எடுத்துக்கொள்ளும் காலமும், அவர்கள் இயல்பாக அவர்களுக்குள்ளாக காதலை உணரும் தருணங்களையும், கி.ரா விவசாய வாழ்வின் கூட்டுக்குடும்ப பின்ணனியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். கனிவு என்ற பொருத்தமான தலைப்பு காதலையும் கனிவு என்று சொல்கிறது அல்லது இயல்பாக கனிவதை காதல் என்று சொல்வதாகவும் கொள்ளலாம். எதைச் சொல்லும் போதும் பாட்டாவின் வரிகள் கவித்துவமானவை. ‘உயிரோடு உயிர் ஒட்டும் நேரம் மிகவும் கொஞ்சம்’ என்று காதலை அழகாகச் சொல்கிறார்.

கு.அழகிரிசாமியின் ‘சிரிக்கவில்லை’ என்ற கதை ஒரு இனம் தெரியாத ஈர்ப்பின் கதை. காலகாலமாக உள்ள காதல் என்ற உணர்வை, அதுதான் காதல் என்று அறியாத பேதைப்பெண் ஒருத்தியின் கதை. அவன் திருமணமாகி வந்த பின் கூட அவள் வேறுபாட்டை உணராமல் அவனுடன் பேசுபவளாகவே இருக்கிறாள். அவன் குழந்தையைக் கண்டதும் தான் அவளின் சிறுபிள்ளை மனதிற்குள் இனி இவன் நம்மவன் இல்லை என்ற எண்ணம் தோன்றி அவனுக்கான அவளின் சிரிப்பு மறைகிறது. இவரின் ‘திரிபுரம்’ கதை பஞ்சத்தின், பசியின் கோரமுகம், பெண்களை எந்த விதம் பாதிக்கிறது; அவர்களை எந்த எல்லைக்கு இட்டுச் செல்கிறது என்பதை காட்டும் கதை. எங்கிருந்தோ வந்து ஒரு கிராமத்தில் விலைமகளாகிப்போகும் பெண்குழந்தையின் கதை நம்மை பதைக்க வைப்பது. திரிபுர நெருப்பு போல பசி அவர்களைச் சூழ்ந்து தகிப்பதை வாசிக்கும் பொழுது நம்மால் அந்த வெம்மையை உணர முடிகிறது.

‘தவப்பயன்’ என்ற கதையில் ஒரு வயோதிகத் துறவியின் மரணத்தை கதையாக்கியிருக்கிறார். அவர் மீண்டும் தன் சமாதியின் முன் சிறு அணிலாக பிறப்பெடுப்பதாக கதை முடிக்கிறது. அழகிரிசாமியின் இந்த மாதிரியான கதைகளை வாசிக்கும் போது அழகிரிசாமி சொர்க்கம் என்றும் ,முக்தி என்றும் சொல்லப்படுபவைகளை விட இந்த நிலத்தில் வாழ்தல் இனிது என்று சொல்பவராகவே தெரிகிறார். கி.ரா வின் ‘எங்கும் ஓர் நிறை’ என்ற கதை ஒரு பருத்தி விவசாயியின் பருத்தி வியாபரத்தை பற்றிச் சொல்கிறது. சரியான அளவைப் படிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தின் கதை இது. அதுவரை இருந்த அளவீடுகளின் குளறுபடிகளை கதையாக்கியிருக்கிறார். ‘படிகள் ஒன்றின் மேல் ஒன்றாக கோபுரம் போல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அம்புட்டும் புதுசாக வந்த கிலோகிராம் படிகள். அவரை அறியாமல் சந்தோசம் வந்தது. அந்தப்படிகளை மனசுக்குள் பாராட்டினார்’ என்று ஒரு விவசாயியின் மகிழ்வை எழுதும் இடம் தமிழில் குறிப்பிடத்தக்கது.

‘சந்தோசம்’ என்ற கதையில் முன்னயன் என்ற சிறுவன் அப்பொழுதுதான் முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சுவை தலையில் வைத்துக்கொண்டு தெருவில் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் ஓடி விளையாடுகிறான். அந்த ஊரின் கோழித்திருடன் அவனை ஏமாற்றி அதை வாங்கிச்செல்கிறான். ‘உன்னோடதா …சரி, கொண்டு போ’ என்று கையோடு சேர்த்து தள்ளினான் என்று சிறுவனின் வெகுளித்தனத்தை எழுதுகிறார். சிறுவன் அறியாமல் ஏமாறுகிறான். அது அவனுக்கு சந்தோசமாகவே உள்ளது. திருடனின் மனைவியும் அவனிடம் அறிந்தே ஏமாறுகிறாள். அதுவும் அவளுக்கு சந்தோசமாகவே உள்ளது. ஏமாற்றுபவனுக்கு ஏமாற்றுவதில் மகிழ்ச்சி. மூவரும் சந்தோசமாக இருக்கும் இந்தக்கதை வாழ்வின் வினோதத்தை வியக்கும் கதையாக உள்ளது.

‘மகாலட்சுமி’ என்ற கதையில் மோகி என்ற பெண்ணின் புகுந்தவீட்டு வாழ்வின் தொடக்கமும், குழந்தைப்பேறு நிகழ்வும் கதையாகி இருக்கின்றன. அவளின் சிரிப்பு மாறா முகத்தை நமக்குள் எழச்செய்வதற்கு கி.ரா அத்தனை மெனக்கெடுகிறார். ‘எதைக் கொடுக்கிறது? எதைக்கொடுத்தால் அந்த முகத்தில் பிரகாசத்தைத் தரிசிக்கலாம்,’ என்று அவளின் கணவன் திண்டாடுவான். பெண்ணிற்கு பணம், நகை, சீர்வரிசைகள் கொடுத்து மணம்முடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. விவசாய வாழ்வில் உழவு வடம், தார்க்கம்பு, கலப்பை போன்றவை திருமண நிகழ்விற்கான சடங்குகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. தலைப்பிள்ளை பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்ற அவர்களது வழக்கப்படி பெண் குழந்தையே பிறந்துவிட்டது. ‘இந்த பூமியின் விவசாய வாழ்விற்கு அவளின் உறுதுணையின்றி எதுவும் நடக்காது.. உழைப்பில் பெண் பங்காளி. இனி என்ன குறைவு அவர்களுக்கு’ என்று கி.ரா எழுதுகிறார். இந்த அளவிற்கு பெண்ணின் முக்கியத்துவம் கரிசலில் இருப்பதை வாசிக்கும் போது அந்த நிலத்து மனிதர்கள் நம்மை ஆட்கொள்கிறார்கள்.

மண்ணின் பாவனைகளே பொழுதுகளும் பருவங்களும் என்பதைப்போல பெண்ணின் பாவனைகளே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன என்று எழுத்தாளர் ஜெயமோகன் ‘தேவி’ சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதைப்போல, அவனின் வாழ்வை மோகியின் பாவனைகளும் அன்பும் ஈர்ப்புமாக அந்த வீட்டுக்கு வந்த அன்றே அவனை தன் வசம் எடுத்துக்கொண்டாள் என்று எழுதுகிறார். எழுதித் தீராத ஒன்று என்று வாழ்வை அழகாக்கும் அன்பின் கதைகளைச் சொல்லலாம். காதலுடன் இணைந்த அந்தக் கரிசல் நிலமும், விவசாய வாழ்வும், மனித சுபாவங்களும் வாழ்வின் உண்மையான ருசியை நமக்குத் தருகின்றன.

அழகிரிசாமியின் ‘ஓட்டப்பந்தயம்’ என்ற கதையில் வேலை தேடும் இளைஞர்களின் அலைக்கழிப்புகள் உள்ளன. இது அவர்களின் உடல், மன அவசங்களைக் காட்டும் கதையாக உள்ளது. எத்தனை முறை எத்தனை எழுத்தாளர்களால் எழுதப்பட்டாலும் தன் புதுமை மாறாத கருக்களுள் ஒன்று இது. வேலை தேடுதலில் உள்ள துயரம்தான் இந்தக்கதைகளின் அர்த்தமாகவும் அழகியலாகவும் உள்ளது. ‘பதினேழாம் நம்பர் வீட்டு நாய்’ என்ற கதை ஒரு உருவகக் கதை. ஒரு நாய் தெருநாய். இன்னொரு நாய் வீட்டில் கூண்டில் வளர்க்கப்படும் நாய். இரண்டும் பேசிக்கொள்வதாக கதை எழுதப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் துயரமும் திளைப்பும் ஒருங்கே சொல்லப்பட்டுள்ள கதை என்பதே இந்தத் கதையை முக்கியமானதாக்குக்கிறது.

நாய்களின் உரையாடலில் ஒன்று:

“குலைக்கிற சுதந்திரம் இல்லாத ஒரு குறை போதாதா, பைத்தியக்காரா?” 

“வயித்துக்கு சோத்தக் காணும்..குலைக்கனுமாம்,” என்பதுடன் இருநாய்களின் உரையாடல் முடியும்.

‘உலகம் யாருக்கு’ என்ற கதையும் வேலைக்காக வெளியூர் செல்லும் இளைஞர்களின் கதைதான். குறித்த நேரத்தில் செல்வதற்கான பதட்டத்தையும், நம் போக்குவரத்து அமைப்பின் அலட்சிய பாவத்தை 1948 ஆம் ஆண்டிலேயே அழகிரிசாமி எழுதியிருக்கிறார். ‘ரச விகாரம்’ என்ற கதையை பிறழ் உறவின் கதையாகவோ பொருந்தா உறவாகவோ கொள்ளலாம். மணமான பின் வேலைக்கு வந்த இடத்தில் பிள்ளையைப் போல நடத்தும் முதலாளியின் மகளுடன் மறைவான ஒரு பந்தத்தை அவன் ஏற்படுத்திக்கொள்கிறான். இதை விட கதையில் நான் முக்கியமாக காணும் மற்றொன்று உண்டு. படிக்காத கிராமத்து மனிதர்களுக்கு படித்தவர் மீதுள்ள மதிப்பை, அன்பை நான் நேரில் காண்பவள். அவர்கள் படித்தவர்களை கேள்விமுறை இன்றி மதிக்கக் கூடியவர்கள். இந்தக்கதையில் அவன் தன் குடும்பதிலேயே தவறு செய்த போதும் அவனை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது என்று தன் ஆத்திரத்தை, வன்மத்தை அடக்கியாளும் பெரியவரின் குணம் ஆபூர்வமானது. வாசிக்கும் நம்மை அது பாதிக்கிறது. 

இவரின் ‘காடாறு மாதம்’ என்ற கதை முக்கியமான கதை. சொந்த ஊரில், பழகியஇடத்தில் நமக்கு இருக்கும் ஒழுக்கப் பண்புகள் வெளியூரில் பழக்கமில்லாத மனிதர்கள் மத்தியில் எப்படி மாறுகின்றன என்பதே கதை. இரு இளைஞர்கள் சொந்த ஊரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்குகிறார்கள். சிகரெட் பிடிப்பதிலிருந்து,சாலையில் இயல்பாக பெண்களை பார்ப்பது, பாட்டுப் பாடிக்கொண்டு செல்வது என்று தம் ஊரில் பயந்த அனைத்தையும் அங்கு செய்து பார்க்கிறார்கள். மனித சுபாவம் விசாரணை செய்யப்படுதே கதையை முக்கியமானதாகவும், இன்றைக்கும் வாசிக்க வேண்டிய ஒன்றாகவும் மாற்றுகிறது. இது ஆழமான சமூகஉளவியலை, தனி மனித உளவியலை நோக்கி நகரும் கதை என்று நினைக்கிறேன்.

கி.ராவின் ‘வந்தது’ கனவு அல்லது நனவிலியில் எழுதப்பட்டக் கதை. இந்த மாதிரி ஒரு கதை கி.ராவின் படைப்புலகில் மிகவும் வித்தியாசமானது. மனித ஆழத்தின் அச்சம் விரவிக் கிடக்கும் கதை. இந்தக்கதை ஒரு பஞ்ச காலத்திலோ அல்லது மழை பொய்த்துப் போன காலத்திலோ ஒரு விவசாயியின் ஆழ்மன சஞ்சலமாக இருக்கலாம். ஒரு மனம் தன் இருப்பு கைவிட்டுப் போவதை கனவாகக் காண்கிறதோ என்று எனக்குத் தோன்றியது. பஞ்ச காலம், நிலம் விளையாத காலம் என்பது ஒரு விவசாயியை நிச்சயமின்மையின் சூனியத்தில் தள்ளுகிறது. பிணையலுக்கு அடியில் சிக்கிக்கொள்ளும் தன் குழந்தையின் இறப்பை கண்முன்னே காணும் விவசாயிக்கு குரல் எழவே முடியாத துக்கம் அவன் குரலை பிடுங்கிக்கொள்கிறது. அவன் சத்தமில்லாமல் அழுகிறான். விவசாயம் அத்தகையதொரு பிழைப்பாக,வாழ்க்கை முறையாக இன்றுவரை இருக்கிறது. அதே போல ‘வேட்டி’ என்ற கதையும் ஒரு உருவகக் கதை. இதில் ஒரு வேட்டியை மையமாகக் கொண்டு ஒரு தனிமனிதனின், ஊரின் பொருளாதார நிலையில் இருந்து சுதந்திரத்திற்குப் பின்பான நிலை வரை கதையில் சொல்லப்படுகிறது. ஒரு வகையில் லட்சியவாதியின் லௌகீக வாழ்வின் வீழ்ச்சியைச் சொல்லுவதாகவும் தோன்றியது.

கி.ராவின் ‘ஜீவன்’ கதை வாய்பேச முடியாத அங்குப்பிள்ளையின் கதை. ஒரு மென்மையான பையன் எப்படி வன்முறை நோக்கிச் செல்கிறான். மற்றவர்கள் மீது அதை பிரயோகிக்க முடியாத போது தன் மீதே அவன் கொள்ளும் குரூரம் அதன் உச்சத்தில் வெளிப்பட்டு பதைக்க வைக்கும் கதை. அவன் தன் இயலாமையால் அன்றாடத்தில் ஏற்படும் தொந்தரவுகளை, கேலிகளை, அவமானங்களை, குடும்பத்தால் தான் ஒதுக்கப்படுதலை எளிதாக கடந்து வந்துவிடுகிறான். திருமண விஷயத்தில் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்ததும், அவனின் அத்தனை வலிகளும் ரூபம் எடுத்து வன்முறையாகவும், தன் மீதான வன்மமாகவும் மாற்றம் கொள்ளும் இந்தக்கதை மனித மனதின் ஆழத்தை, அதன் உண்மையான ஆங்காரத்துடன் வெளிப்படுத்துகிறது. ஆனால், கதை முழுக்க அத்தனை ஈரம் இருப்பதும் உண்மையே.

கி.ராவின் ‘ஓர் இவள்’ என்ற கதை கணவன் மனைவிக்குள் திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கும் ஆழ் நீரோட்டம் போன்ற ஒரு உணர்வைச் சொல்கிறது. ‘எதில் அவன் மனம் லயித்தாலும் அதுக்கு ஒருவகை எதிர்ப்பு இருக்கும் அவளிடம்’ என்று கி.ரா எழுதுகிறார். எதிலும் தன்னவனை லயிக்க விடாத ஒரு பெண் அவனை தன் எதிர்ப்பாலும், அன்பாலும் ஆட்டுவிக்கும் கதை இது. பூனையிலிருந்து தன் குழந்தை வரை எதிலும் அவனை ஒன்றவிடாதவளாக அவள் இருக்கிறாள். எதற்காக இவள் இப்படி செய்கிறாள் என்று புரியாதவனாகவே கணவன் இருக்கிறான். இதைத்தான் நாம் இப்பொழுது ‘பொசசிவ்நெஸ்’ என்று கூறுகிறோம் என்று கதையை வாசித்து முடித்ததும் தோன்றியது. அன்பில் சில சமயம் இந்த மாதிரியான கிறுக்குத்தனங்களும், பித்தும் இருப்பது மனிதருக்கு இயல்பான ஒன்றே என்று கதை மிக இயல்பாக சொல்லிச்செல்கிறது. இதனால்தான் பாட்டாவை பெண் உணர்வுகளை ஆகச்சிறப்பாக எழுதியவர் என்று சொல்லத் தோன்றுகிறது.

கு.அழகிரிசாமியின் புகழ் பெற்ற கதைகளில் முதன்மையான கதை ‘ராஜா வந்திருக்கிறார்’. தாய்மையின் உயரத்தை, விசாலத்தை மிக எதார்த்தமாக உணர வைக்கும் சாகாவரம் பெற்ற கதை இது. குழந்தை விஷயத்தில் பெண் சுயநலமானவள் என்று பொதுவான கருத்து உண்டு. இந்தக்கதையில் தன் தாய்மையாலேயே அந்த எல்லையை தாயம்மாள் கடக்கிறாள். ‘என்னைச் சோதிக்கத்தான் வந்திருக்கேடா நீ,’ என்று தாயம்மாள் ஆடையில்லாமல் நிற்கும் யாரோ ஒரு குழந்தையை கேட்கும் கணத்திலேயே, அவனைத் தன் குழந்தையாக்கி விடுகிறாள். தமிழ் சிறுகதை தருணங்களில் முக்கியமான இடத்தில், ராஜா வந்திருக்கிறார் கதையின் இந்த இடத்தை வைக்கலாம்.

இந்த அனைத்துக் கதைகளையும் மனித சுபாவங்கள் என்ற இடத்தில் வைக்கலாம். இதில் கணிசமான கதைகள் காதல் கதைகள் அல்லது ஆண் பெண்ணிற்குள்ளான தீராத ஆடல் என்றோ சொல்லக்கூடிய கதைகள். முழு தாய்மையிலிருந்து ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தும் மனைவிக்கு அவனிடம் வெளிப்படும் அன்பு வரை விதவிதமான சுபாவம் கொண்ட மனிதர்கள் இந்தத் கதைகளில் விரவிக்கிடக்கிறார்கள். மனித சுபாவங்களுடன் இணைந்து அந்த ஊர்களும், கரிசல் மண்ணும், வெயிலும் தெருக்களும், பிராணிகளும் கதைகளை உயிர்ப்புள்ளதாக்குகிறார்கள். இந்த கதைகளின் தீராத வியப்பு மனிதர்களின் சுபாவங்கள்!

(தொடரும்..)

முந்தையது

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button