இணைய இதழ் 110சிறார் இலக்கியம்

அசாதாரணமான வெள்ளரிக் காய்-ஷாராஜ் 

சிறார் கதை | வாசகசாலை

(ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை)

ஒரு தோட்டக்காரரின் தோட்டத்தில் ஒருநாள் பீப்பாய் அளவுள்ள வெள்ளரிக் காய் காய்த்திருந்தது. அதன் ப்ரம்மாண்டத்தைக் கண்டு அவர் அதிசயித்தார். குடும்பத்தாரிடமும் அண்டை அயலாரிடமும் அதைத் தெரிவிக்கவே, அவர்களும் வந்து கண்கள் விரியப் பார்த்து அசந்தனர்.  

சேதி பரவி, ஊர் மக்கள் அனைவரும் ஆவலோடு வந்து அந்த அசாதாரணமான வெள்ளரிக் காயை வாய் பிளந்து பார்த்துச் சென்றனர். பணக்காரர்கள் பலரும் அதை விலை கொடுத்து வாங்க முற்பட்டனர். தோட்டக்காரர் விற்க மறுத்துவிட்டார்.  

“ஒரு வண்டி வெள்ளரிக்கு என்ன விலையோ, அந்த விலையைத் தருகிறேன்.” காய்கறி வியாபாரி சொன்னார். அப்போதும் சம்மதிக்கவில்லை.  

“நான் இரண்டு வண்டி வெள்ளரிக்கு உரிய பணத்தைத் தருகிறேன்.” ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பண்ணையார் ஆசை காட்டினார். அப்போதும் இணங்கவில்லை.  

செய்தி அண்டை ஊர்களுக்குப் பரவி, அங்கிருந்து அடுத்தடுத்த கிராமங்கள், நகரங்கள் எங்கும் பரவிக்கொண்டே இருந்தது. அந்த அதிசய வெள்ளரியைக் காண நாடு முழுதிலும் இருந்து யாத்ரீகர்கள் நடந்தும், குதிரை வண்டிகளிலும் வரலாயினர். பெரும் செல்வந்தர்கள் கை நிறைய தங்கக் காசுகளை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருந்தும், தோட்டக்காரர் அந்த வெள்ளரியை விற்க மறுத்துவிட்டார். அந்த அளவுக்கு அவர் அதைத் தன் பொக்கிஷமாகக் கருதினார்.  

******* 

வழக்கத்துக்கு மாறான அந்த வெள்ளரியைப் பற்றியும், அதை விற்க மறுக்கிற தோட்டக்காரர் பற்றியுமான செய்தி நாடெங்கிலும் பரவி, அரண்மனைக்கும் எட்டியது.  

இளவரசரன் எப்படியேனும் அந்த அதிசய வெள்ளரியை வாங்க ஆசைப்பட்டான்.  

‘யாருக்கும் கிடைக்காத அதை நான் அடைந்தே தீர வேண்டும்! அந்தத் தோட்டக்காரன், இளவரசனான என்னிடம் விற்க மாட்டேன் எனச் சொல்ல இயலாது’ என எண்ணிய அவன், ஒரு பை நிறைய தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு தேரில் அந்த கிராமத்துக்குச் சென்றான். தோட்டக்காரரிடம் தங்கக் காசுப் பையைக் காண்பித்து, ப்ரம்மாண்ட வெள்ளரிக் காயைத் தருமாறு கேட்டான்.  

“மற்ற செல்வந்தர்களிடம் மறுத்தது போல நான் உங்களிடம் மறுக்க இயலாது. நீங்கள் இளவரசர். தவிர, இந்த வெள்ளிரிக்கு பெரும் செல்வத்தை விலையாக வழங்குகிறீர்கள். ஆகவே, சம்மதிக்கிறேன்” என்றார் தோட்டக்காரர். 

இளவரசனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  

“ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் இங்கிருந்து செல்கையில் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஊர் எல்லையில் உள்ள, உயரமான சிகமோர் மரத்தை அடைகிற வரை நிற்காமல் செல்லவும் வேண்டும். அங்கே சென்றதும் நீங்கள் ஓய்வெடுக்கலாம்.” 

இளவரசன் தங்கக் காசுப் பையைக் கொடுத்துவிட்டு, அசாதாரண வெள்ளரியைத் தேரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான்.  

சட்டென்று ஸூமா எனப்படுகிற ஊது இசைக் கருவி, டேம்பொரின் எனப்படுகிற தோல் இசைக் கருவி ஆகியவற்றின் இசை ஒலித்தது. யாரோ, “இளவரசே,… தேரை நிறுத்துங்கள்! திரும்பிப் பாருங்கள்!” எனக் கூக்குரல் கொடுத்தனர். ஆனால், இளவரசன் தேரை நிறுத்தவுமில்லை; திரும்பிப் பார்க்கவுமில்லை.  

ஊர் எல்லையில் இருக்கும் உயரமான சிகமோர் மரத்தை அடைந்த பிறகே இளைப்பாறலுக்காகத் தேரை நிறுத்தினான். வெள்ளரியைப் பார்த்த அவனுக்கு, ‘எத்தனையோ பேர் பிரயத்தனப்பட்டும் அவர்களால் இந்த வெள்ளரியை வாங்க இயலவில்லை. என்னால்தான் முடிந்திருக்கிறது’ என்ற பெருமிதம் ஏற்பட்டது. அதை ஆசையோடு தொட்டுத் தடவினான்.  

அந்த வெள்ளரியை அரிந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. உடைவாளை உருவி, அதை அரியத் துவங்கினான். அதற்குள் வெள்ளரி தானாகவே இரண்டாகப் பிளந்தது. அதற்குள்ளிருந்து தங்க நிறக் கூந்தல் உள்ள அழகிய இளம் பெண் வெளிப்பட்டாள்.  

வெள்ளரிக் காய்க்குள்ளிருந்து ஓர் இளம் பெண் வந்தது அவனை பேராச்சரியப்படுத்தியது. அவளின் அழகோ அவனைத் திக்குமுக்காடச் செய்தது.  

அவ்வளவு அழகிய இளைஞியைப் பார்த்தால் எந்த இளைஞனுக்கும் கண்டவுடன் காதல் வரத்தான் செய்யும். அவனுக்கும் அது வந்தது. வெறும் காதலோடு நில்லாமல், அவளை மணந்துகொள்ளவும் விரும்பினான்.  

அவள் முன் மண்டியிட்டு, “என்னை மணந்துகொள்வாயா?” எனக் காதல் மயக்கத்தோடு வேண்டினான்.  

இளைஞியின் முகம் மலர்ந்தது. வெள்ளரியின் குளுமை கொண்ட பார்வையோடு இளவரசனை ஏறிட்டவள், “நான் உங்களுக்காகவே பிறந்தவள்!” என்றாள்.  

அதைக் கேட்டதும் அவனுக்கு இதயம் துள்ளாட்டம் போட்டது.  

“ஆனால், இப்போது, இந்த நிலையில் நான் உன்னை எனது மணப்பெண்ணாக அரண்மனைக்கு அழைத்துச் செல்ல இயலாது. நீ இளவரசியாக ஆகப்போகிறவள். எனவே, உன்னை அரச மரியாதையோடுதான் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு முன், அரசரான என் தந்தையிடம் உன்னைப் பற்றித் தெரிவித்து, நம் திருமணத்துக்கு அவரது அனுமதி பெறுவதும் அவசியம். அதன் பிறகு சேவக பரிவாரங்களோடும், மேள தாளங்களோடும் வந்து உன்னை மண ஊர்வலமாக அழைத்துச் செல்வேன்” என்றான்.  

வெள்ளரி அழகிக்கு அதைக் கேட்டு ஏகக் குதூகலம்.  

“நீ இந்த மரத்தில் ஏறி, யாரின் கண்களிலும் படாமல் தலைமறைவாகி, எனக்காகக் காத்திரு. வேறு யார் வந்து அழைத்தாலும் இறங்காதே!” 

அவள் ஏற்றுக்கொண்டாள். இளவரசன் அவள் மரத்தில் ஏற உதவினான். மரத்தின் அடர்ந்த இலைக் கூட்டங்களுக்கிடையே ஒளிந்துகொண்டு அவள் அவனுக்காகக் காத்திருக்கலானாள்.  

******* 

2 

இளவரசன் சென்ற சற்று நேரத்துக்குப் பிறகு ஒரு கிழவி அந்த மரத்தடியை அடைந்தாள். இலைக் கூட்ட நிழலுக்கு இடையே ஏதோ ஒரு மனித உருவம் இருப்பது நிழலுருவாகத் தெரிந்தது. அண்ணாந்து பார்த்தவள், ஒளிந்திருக்கும் இளம் பெண்ணைக் கண்டுவிட்டாள்.  

“அட, சுட்டிப் பெண்ணே…! இந்த மரத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்கிறாய்?  கீழே இறங்கி வா! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அன்பொழுகக் குரல் கொடுத்தாள்.  

“வர மாட்டேன். உன்னைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.”  

கிழவி பாதிப் பொக்கையும், ஓரிரு பற்களும் கொண்ட வாயில் சிரித்தாள். “பாங்கிழவியான என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறாய்? நான் பக்கத்து ஊர்க்காரிதான். வெளியூர் சென்றுவிட்டு, என் கிராமத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். தாளாத வெயிலால், நிழலில் இளைப்பாறுவதற்காக மரத்தடிக்கு வந்தேன்.”  

கிழவியின் சிரிப்பும் பேச்சும் அவள் வெகுளியான கிராமத்துக் கிழவி என்பதாகக் காட்டின. ஆனாலும், சூனியக்காரிகள் இப்படித்தான் வேடமிட்டும், நயமாகப் பேசியும் ஏய்ப்பார்கள் என்பதால் அவள் எச்சரிக்கையாக இருந்தாள்.  

“சரி, பாட்டி! உன்னைப் பார்த்தால் நல்ல மனுஷியாகத்தான் தெரிகிறது. நிழலில் இளைப்பாறிவிட்டு உன் வழியே செல். நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்.”  

“அங்கே நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” 

“எனது மணமகனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.  அவர் விரைவில் வந்து என்னை அழைத்துச் செல்வார்.”  

“அடடே…! யார் உனது மணமகன்?” 

“இந்த நாட்டின் இளவரசர்.” 

“அப்படியா…!? மிக்க மகிழ்ச்சி. வன தேவதை போல அழகாக இருக்கும் நீ, இளவரசனை மணப்பதுதான் பொருத்தமானது. உனக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!”  

“நன்றி பாட்டி!”  

“சரி,… உன் மணாளன் எப்போது வருவானோ? அதுவரை நீ அங்கே தனித்திருக்க வேண்டாம். நானும் மரத்தில் ஏறி மேலே வந்து, உன் அருகே துணையாக அமர்ந்துகொள்கிறேன். இருவரும் இணைந்து இளவரசனுக்காகக் காத்திருக்கலாம்.” 

“வேண்டாம், வேண்டாம்! அது தேவையில்லை!” அவசரமாகவும் உறுதியாகவும் மறுத்தாள்.  

“அப்படியானால் சரி.” கிழவி கமுக்கமாகச் சிரித்தாள்.  

அவள் ஒரு சூனியக் கிழவி. தங்கக் கூந்தல் இளைஞியை இடம்பெயர்த்திவிட்டு, அவளின் இடத்தில் தான் இருந்து, இளவரசனை மணந்துகொள்ள அவளுக்கு ஆசை உண்டாயிற்று.   

இளைஞியை நோக்கி நீண்ட கூர் நகங்கள் கொண்ட தனது கிழட்டுக் கரங்களை அசைத்து, துர்மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்யலானாள். மரக் கிளையில், இலைக் கூட்டங்களினிடையே அமர்ந்திருந்த அழகி, மெது மெதுவாக உருமாறி, ஒரு பறவையாக ஆகிவிட்டாள். பறவை செய்வதறியாது திகைத்து, கீச்சிட்டு சிறகடித்துத் தவித்தது.  

கிழவி அந்த இளைஞியின் உருவை எடுத்துக்கொண்டு, மரத்தில் ஏறினாள். அதைக் கண்டு பறவை அலறிப் பறந்து சென்றுவிட்டது.  

சூனியக் கிழவி குரூரப் புன்னகையோடு கிளையில் அமர்ந்து காத்திருக்கலானாள்.  

******* 

மறுநாளே இளவரசன் தனது நண்பர்கள் சூழ, அரச பரிவாரங்களோடும், இசைக் கலைஞர்களோடும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தான். தங்கக் கூந்தல் இளைஞியின் உருவில் இருந்த சூனியக்காரக் கிழவியைத் தனது மணமகளாக, அரச மரியாதையோடும், மேள தாளங்களோடும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.  

அப்போது சூனியக்காரியால் உருமாற்றப்பட்ட இளம்பெண்ணான பறவை, இளவரசனின் தலைக்கு மேல் சுற்றிப் பறந்து அவனது தோளில் அமர்ந்துகொண்டது. அவன் அதைப் பிடித்து ஒரு நண்பனிடம் கொடுத்தான். பறவை அவனிடமிருந்து விடுபட்டு, மீண்டும் இளவரசனின் தோளில் அமர்ந்தது. இளவரசன் மீண்டும் அதைப் பிடித்து வேறொரு நண்பனிடம் கொடுத்தான். அது மீண்டும் விடுபட்டு இளவரசனின் தோளிலேயே அமர்ந்தது.  

“இந்தப் பறவையால் தொல்லையாகிவிட்டதே…! இது ஏன் இப்படி என்னைத் தொந்தரவு செய்கிறது?” சலிப்போடும் வெறுப்போடும் சொன்னான்.  

“அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக வளர்ப்புப் பறவைகள் அன்றி வேறு எந்தப் பறவையும் மனிதர்களை அண்டாது. இது உன் தோளில் வந்து அமர்ந்தது மட்டுமல்லாமல், நீ அதை எங்களிடம் கொடுத்தாலும், மீண்டும் மீண்டும் உன் தோளுக்கே வருகிறதே…! இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும்” என்றான் ஒரு நண்பன்.  

மற்ற நண்பர்களும் ஆமோதித்தனர்.  

வெள்ளரி இளைஞியின் உருவில் உள்ள சூனியக்காரி அதைக் கேட்டு பதறினாள். தனது குட்டு வெளிப்பட்டுவிடுமோ என அஞ்சினாள். 

“ஆமாம், அது சூனியக்காரப் பறவையாக இருக்க வேண்டும். அதனால் நமக்கு ஆபத்து நேரலாம். உடனே அதன் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடுங்கள்” என்றாள்.  

இளவரசனும் அவ்வாறே அந்தப் பறவையைப் பிடித்து கழுத்தைத் திருகிக் கொன்று அப்பால் வீசினான். அது அருகே உள்ள விளைநிலத்தில் வீழ்ந்தது.  

******* 

உயிரற்ற பறவை விழுந்த இடத்தில் மறு நாள் ஒரு மல்பெரி மரம் காணப்பட்டது. 

“என்னடா இது, அதிசயமாக இருக்கிறதே…! பயிர் செய்த இடத்தில் திடீரென இந்த மரம் எப்படி வந்தது?” விவசாயி அதைக் கண்டு வியந்தார். 

“விளைநிலத்தில் இது இப்படிப் படர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தால் அதனடியே உள்ள பயிர்கள் வளராதே…!” என்றுவிட்டு, அந்த மரத்தை வெட்டலானார்.  

அப்போது தெறித்த, கரண்டி அளவிலான வெட்டுத் துணுக்கு, ஓர் ஏழைப் பெண்மணியின் வீட்டு வாசலில் விழுந்தது. அது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கரண்டியாக மாறியது.  

ஏழைப் பெண்மணி அதைக் கண்டு, “அடடே…! ஏது இந்தக் கரண்டி? மிகவும் அழகாக இருக்கிறதே…!” என வியந்து, சமையல்கட்டில் கரண்டிகள் வைக்கும் தாங்கியில் செருகி வைத்தாள்.  

மறு நாள் அந்தப் பெண்மணி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றதும் அழகிய மரக் கரண்டி தாங்கியிலிருந்து எம்பிக் குதித்து கீழே விழுந்தது. அது தரையைத் தொட்டதும் தங்கக் கூந்தல் கொண்ட அழகிய இளம்பெண்ணாக மாறியது.  

அவள் அந்த வீட்டின் அறைகளைப் பெருக்கி சுத்தப்படுத்தினாள். பொருட்களையெல்லாம் துடைத்து, ஒழுங்குபடுத்தினாள். சுவையான உணவும், சூப்பும் சமைத்து வைத்தாள். பிறகு மீண்டும் மரக் கரண்டியாக ஆகி, தாங்கியில் தன்னைப் பொருத்திக்கொண்டாள்.  

******* 

வீடு திரும்பிய வீட்டுக்காரி, கதவைத் திறந்து உள்ளே வந்ததும், நிகழ்ந்துள்ள மாற்றங்கள் ஒவ்வொன்றையும் கண்டு வியந்தாள்.  

“யார் வீட்டைப் பெருக்கியது? யார் பொருட்களையெல்லாம் துடைத்து நறுவிசாக்கி, ஒழுங்குபடுத்தி வைத்தது? யார் உணவும், சூப்பும் சமைத்து வைத்தது?”  

அயல் வீடுகளுக்குச் சென்று நடந்த சம்பவங்களைத் தெரிவித்த அவள், “பூட்டிய வீட்டுக்குள் யார், எப்படி வந்து இதையெல்லாம் செய்திருப்பார்கள்? ஒன்றும் புரியவைல்லையே…!” என்றாள்.  

ஒரு அயல்வாசிப் பெண் அறிவுரைத்தாள்: “நாளைக்கு நீ வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியே மறைந்திருந்து வேவு பார். ஒருவேளை அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கக் கூடும்.”  

மறு நாள் வீட்டுக்காரி கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று மறைந்திருந்தாள். சற்று நேரத்தில் அடுக்களைக்குள் பாத்திரச் சத்தம் கேட்டது. வெறுமனே சாத்திய ஜன்னலை லேசாகத் திறந்து உள்ளே நடப்பதைப் பார்த்தாள். கரண்டி எகிறிக் குதித்து, அழ்கிய இளம் பெண்ணாக மாறியது. அவள் வீட்டைப் பெருக்குவதையும், சமையல் செய்வதையும் வீட்டுக்காரப் பெண்மணி பார்த்து அறிந்துகொண்டாள்.  

இளம் பெண் சமையலை முடித்துவிட்டு கரண்டியாக மாற இருந்த சமயத்தில் வீட்டுக்காரியின் கை அவளை இறுகப் பற்றியது.  

“தயவுசெய்து என்னை விடுங்கள்! நான் முழு நேரமும் மனித உயிரியாக இருக்க விரும்பவில்லை.” அவள் கெஞ்சினாள்.  

வீட்டுக்காரியின் பிடி இறுகியது. “நான் உன்னை விட மாட்டேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வெளியூரில் வேலை செய்துகொண்டிருக்கிறான். உன்னைப் போல வீட்டைப் பராமரிக்கிற பொறுப்பான மருமகள்தான் எனக்கு வேண்டும். எனவே, என் மகனுக்கு உன்னை மணம் முடித்து வைப்பேன்.” 

“அது முடியாது. நான் இன்னொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டவள்.” 

“அப்படியானால் நீ எனக்கு வளர்ப்பு மகளாகவும், என் மகனுக்கு வளர்ப்புத் தங்கையாகவும் இரு.”  

“அது வேண்டுமானால் சரி. சிறிது காலம் உங்களோடு வசிக்க சம்மதிக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. என்னைப் பற்றி நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கக் கூடாது.”  

வீட்டுக்காரி சம்மதித்தாள்.  

தங்கக் கூந்தல் கன்னிகை அப்பெண்மணியோடு வசிக்கலானாள்.  

******* 

3 

இளவரசன் தங்கக் கூந்தல் கன்னிகையின் உருவில் இருந்த சூனியக்காரிக் கிழவியை மணந்து, அவளோடு வாழ்ந்துகொண்டிருந்தான். அவனது வாழ்க்கை உற்சாகமின்றியும், ஏகாந்தமாகவும் கழிந்துகொண்டிருந்தது.  

சிறிது காலத்துக்குப் பிறகு மன்னர் நாட்டு மக்களுக்கு ஓர் ஆணை பிறப்பித்தார். அரண்மனை லாயத்திலுள்ள ஒரு குதிரை, மக்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கொண்டு வரப்படும். அதற்கு அவர்கள் தீவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும்.  

எதற்கு இந்த ஆணை என்று மக்கள் யாருக்கும் தெரியவில்லை.  

மேற்கூறிய ஏழைப் பெண்மணியின் வீட்டுக்கும் அந்த முரட்டுக் குதிரை கொண்டு வரப்பட்டது.  

சேவகர்களிடம் அவள் முறையிட்டாள். “பலமற்ற நான் எப்படி இதைப் பராமரிக்க முடியும்? தவிர, இதற்குத் தீவனம் போட என்னிடம் எதுவுமில்லை.”   

“இது இளவரசரின் குதிரை. நீங்கள் விரும்புவதை இதற்குத் தீவனமாக அளித்தால் போதும். மன்னரின் ஆணையை எவரும் மீற முடியாது.”  

அது இளவரசனின் குதிரை எனக் கேட்டதும் தங்கக் கூந்தல் நங்கை, வளர்ப்புத் தாயிடம் சொன்னாள்: “வருந்த வேண்டாம். நான் அதை கவனித்துக்கொள்கிறேன்.” 

அவள் அதை வாசலில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து, ஊற்று நீரால் குளிப்பாட்டி, பசும் புற்களைத் தீவனமாக அளித்தாள். இடையிடையே குதிரையின் உடலைத் தேய்த்து, அதன் சருமத்தையும் ரோமங்களையும் மினுங்கச் செய்தாள். குதிரை வளப்பம் பெற்றது. அவளது பராமரிப்பில் மகிழ்ந்து அவளோடு ஒட்டுறவாக ஆகியும் விட்டது.  

குதிரையை அழைத்துச் செல்ல வரவிருக்கும் நாளில் அவள் அதனிடம் சொன்னாள்: “எனக்கு ஒரு உதவி செய். அவர்கள் உன்னை அழைத்துச் செல்ல வரும்போது நீ முரண்டு பிடித்து தரையில் படுத்துக்கொள். எவ்வளவு அடித்தாலும் எழாதே! பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்.”  

அரண்மனைச் சேவகர்களும் இளவரசனும் வந்தனர். சேவகர்கள் குதிரையை அழைத்துச் செல்ல முற்பட்டபோது அது சண்டித்தனம் செய்து தரையில் படுத்துக்கொண்டது. சாட்டையால் எவ்வளவு அடித்தும் எழவில்லை. இளவரசன் வந்து முயன்றும் பலன் இல்லை.  

“என்ன குதிரையை இப்படி வளர்த்து வைத்திருக்கிறாய்? முன்பு இது போல் சண்டித்தனம் செய்ததில்லையே…!” இளவரசன் அந்த வீட்டுப் பெண்மணியிடம் கடிந்துகொண்டான்.  

“மன்னிக்க வேண்டும் இளவரசே! எனது மகள்தான் அதைப் பராமரித்தாள். அவள் அதை எவ்வளவு வளப்பமாக வளர்த்தியிருக்கிறாள் என்பதை நீங்களே பாருங்கள்! அது அவள் சொல்படியெல்லாம் கேட்கும். ஆவளிடம் ஒருபோதும் இடைஞ்சல் எதுவும் செய்யாது.” 

“அப்படியானால் அவளை அழையுங்கள்!” 

தங்கக் கூந்தல் கன்னிகை வந்தாள். குதிரையைப் பார்த்து சத்தம் போட்டாள்: “நீ ஏன் அடம் பிடிக்கிறாய்? உனக்கு திடசித்தம் கிடையாதா? உனது எஜமானரும் அப்படியானவர்தான். தனது வாக்குறுதியைக் காப்பாற்றாதவர் அவர்.”  

அதைச் சொன்னதும் குதிரை எழுந்து நின்றது.  

இளவரசன் அந்த அழகிய கன்னிகையை உற்று நோக்கினான். அவள் அவனது மனைவியைக் காட்டிலும் அதிக அளவில், வெள்ளரிக்காயிலிருந்து வெளிப்பட்ட நங்கை போலத் தோற்றமளித்தாள். அவனுக்கு அவளது சொற்களும் தோற்றமும் குழப்பமளித்தன.  

அவன் குதிரையில் ஏறி, அமைதியற்ற மனதுடன் அரண்மனைக்குச் சென்றான். அவனால் அன்றிரவு உறங்க முடியவில்லை.  

` மறு நாள் அவன் ஓர் ஆணை பிறப்பித்தான். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் யாரேனும் ஒரு பெண், கம்பளியை நெசவு செய்ய அரசவைக்கு வர வேண்டும்.  

அவ்வாறே பெண்கள் திரண்டனர். தங்க நிறக் கூந்தல் நங்கையும் அவர்களில் ஒருத்தி. அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்தனர்.  

இளவரசன் அவர்களிடம் வந்து அறிவித்தான்: “அவரவர்க்கு வெகுமதியாக எது வேண்டுமோ கேளுங்கள்; கொடுக்கப்படும்.”  

ஒருத்தி சால்வை வேண்டும் என்றாள். இன்னொருத்தி பாசி மாலை வேண்டும் என்றாள்; வேறொருத்தி கைவளையம் வேண்டும் என்றாள்.  

தங்கக் கூந்தல் குமரியின் தருணம் வந்தபோது அவள் சொன்னாள்: “ஏனக்கு ஒரு மாதுளம் பழம், சிறிய பொம்மை, மொண்ணையான கத்தி ஆகியவை வேண்டும்.”  

அந்த வினோதமான கோரிக்கையால் இளவரசன் எதிர்பாராத வியப்புற்றான். எனினும் அவள் கேட்டவற்றைக் கொடுத்தான்.  

தனது வெகுமதியைப் பெற்றுக்கொண்ட அவள் வீடு திரும்பினாள். அவளிடம் ஏதோ மர்மம் உள்ளது என்பதை அறிந்த இளவரசன் அவளைப் பின்தொடர்ந்தான். மலைப் பாதை வழியே சென்ற மர்மக் கன்னிகை, ஒரு காட்டு ரோஜாப் புதருக்குப் பின் மறைந்தாள். புதரின் மறுபுறம் இளவரசன் ஒளிந்து நின்றான்.  

மறுபுறம் புதர் அடியில் அமர்ந்த இளைஞி சொல்லத் தொடங்கினாள். 

“ஓ,… மாதுளையே…! நான் சொல்லப்போகும் எனது துயரக் கதையை நீ கேட்டால், தானாகவே பிளந்து, துண்டு துண்டாக ஆகிவிடுவாய். ஓ,… பொம்மையே…! எனது சோகக் கதையை நீ கேட்டால், எனக்காக துக்க நடனம் ஆடுவாய். ஓ,… மொண்ணையான கத்தியே…! எனது அவலக் கதையை நீ கேட்டால், உன்னை நீயே தீட்டிக்கொண்டு கூர்மையிலும் கூர்மையாக ஆகிவிடுவாய்.”  

இதைச் செவிமடுத்த இளவரசன், அவ்வளவு துன்பக் கதையா அவளுடையது என வியப்புற்றான். அதைக் கேட்க அவனுக்கு ஆவல் உண்டாயிற்று.  

இளைஞி தனது கதையைச் சொல்லலானாள். அதைக் கேட்கக் கேட்க மாதுளை பிளந்து, துண்டு துண்டாக உடைந்தது; பொம்மை துக்க நடனமாடியது; மொண்ணைக் கத்தி கூர்மையாகிப் பளபளத்தது.  

கதையைச் சொல்லி முடித்த இளைஞி, “போதும் இந்தத் துன்பம். இனி என்னால் தாள இயலாது. இந்த வாழ்வை முடித்துக்கொள்கிறேன்” என்றுவிட்டு கத்தியை எடுத்தாள். தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யப் போகும் தருணத்தில் இளவரசன் ஓடி வந்து தடுத்து, கத்தியைப் பிடுங்கி தூர எறிந்தான்.  

“என்னை மன்னித்துவிடு. நடந்த எதுவும் எனக்குத் தெரியாது. அதனால்தான் தவறு நடந்துவிட்டது. சூனியக்காரியின் தந்திரத்தில் சிக்கி, நீ பறவையாக இருந்தபோது, உன்னை யார் என்று தெரியாமல், அவளது சொல் பேச்சு கேட்டுக் கொன்றுவிட்டேன். ஆயினும் நீ மரமாக உயிர்த்தெழுந்து, மரக் கரண்டியாக உருமாறி, பின் மீண்டும் பழையபடியே, வெள்ளரிக் காயிலிருந்து வெளிப்பட்ட பெண்ணாக, என் உண்மையான மணப்பெண்ணாக ஆகியிருக்கிறாய். இனி நான் உன்னைச் சாக விட மாட்டேன்” என்றபடி அவளை ஆரத் தழுவிக்கொண்டான்.  

இருவரும் அண்மனைக்குத் திரும்பினர்.  

நடந்த சம்பவங்கள் யாவும் அரசரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் சூனியக்காரக் கிழவிக்கு சிரச்சேத தண்டனை அளித்தார். அதன் பிறகு இளவரசனுக்கும் தங்கக் கூந்தல் குமரிக்கும் வெகு விமரிசையாகத் திருமணம் நடந்தது.  

திருமணத்தில் கலந்துகொண்ட தங்கக் கூந்தல் குமரியின் வளர்ப்புத் தாய், விருந்துக்கு வந்திருந்த மக்களிடம், “என் மகளின் இதயம் பரிசுத்தமானது. அவளது ஆசை நேர்மையானது. அதனால்தான் அத்தனை இடையூறுகளைக் கடந்தும் அவளுக்கு அது நிறைவேறியது. உங்களின் விருப்பங்களும் நல்லனவாக இருந்தால் நிச்சயமாக அது தடைகளைக் கடந்து நிறைவேறும்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். 

shahrajscape@gmail.com  

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button