சுமைதாங்கிக் கல்லருகே கைக்குழந்தையுடன் நின்றிருக்கிறாள்..,
தன் ஊருக்குச் செல்லும் பேருந்து வரத் தாமதமாக
நடையாய் நடந்துவிடலாம் என எண்ணியவளை
ஊரின் தூரம் மேலும் களைப்படைய வைத்தது…
சூரியனின் நடுநிசியின் சூடு
மண்டைக்குள் இறங்க…
தண்ணீருக்கு ஏங்கியது நாவு
சித்திரை மாதத்தில் மட்டும் கணவனிடம் சண்டையிடக் கூடாது
என்ற எண்ணம் தோன்றவே…
தளிர்
தூரத்தில்
கைகாட்டி
அப்பா அப்பா என்றது..
அவன் கோபமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு
அவளருகே நிறுத்தினான்…
முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறெங்கோ பார்த்தபடி
தேம்பி தேம்பி அழுதாள்…
கண்களில் கண்ணீர் மட்டும் வரவே இல்லை.
ஆத்திரத்தில் குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டே
பளீர் என்று அவள் கன்னத்தில் அறைந்தான்..
குழந்தையை முன் அமர வைத்துக்கொண்டு
அவளைத் திரும்பிப் பார்த்தான்
கண்களைத் துடைத்துக்கொண்டு
சைக்கிளின் பின்புறம் ஏறினாள்…
அவனிடம் ஏதோ முணுமுணுப்பாக சொல்லிக்கொண்டிருந்தாள்…
அவனும் தலையைத் தலையை அசைத்துக்கொண்டு
சைக்கிளை மிதித்தான்
தூரத்தில் அவள் செல்ல வேண்டிய பேருந்து வந்துகொண்டிருந்தது…
வெயில் சற்று குறைய…,
அவன் இடுப்பில் கை வைத்துக்கொண்டாள்…
மேகம் கருக்கத் தொடங்கியது…
***
ஒருமுறை பார்த்த பின்
மறக்காத இன்முகம் அல்லவா நீ…
துளிர் விடும் தூய தளிரின் இலை போல
மலரும் முகம் அல்லவா நீ…
தெளிந்த நதியின் அடியில் சிரிக்கும்
கூழாங்கற்கள் போல் தெளிந்த மனதுடைய அன்பு நீ அல்லவா…
பின் ஏன்…
ஒரு குரூரத்தின்
சீழ் படிந்த புன்னகையுடன்
என்னை விலக்கினாய்..
கனிந்த மனதிற்குள்
ஓர் மாயமென நிகழும்
வஞ்சத்தின்
முதல் கரு போல…
என் முன் நிகழ்த்தினாய்
உன் புன்னகையை….
நேசிப்பதை அறியாது
கை விரிக்கும் குழந்தை போல
உன் முன் நின்றேன்.
சட்டென்று வால் வீச்சு போல
பறக்கும் பறைவயைப் போல
என்னை உதறினாய்..
ஒரு சொல்லின்
ரசவாதத்தினால் பதறிய
கைகளை இறுகக் கட்டிக் கொண்டடேன்…
பின் தலை கவிழ்ந்து நடந்தேன்…
தூரத்தில் நீ சத்தமிட்டு சிரிக்கும் சிரிப்பு ஒர் பேரலையின் சுழலில் சிக்கியதோர் தோற்றம் எனக்கு…
ஆம்!!! நான் இறந்து கொண்டிருந்தேன்…
உனக்கு
என் முத்தங்கள் என்றென்றும்…
****