
திரைக்கதை எழுத ஆரம்பித்து, பல புது முக இயக்குநர்களுடன் நட்பு ரீதியில் கதை ஆய்விலும், திரைக்கதையிலும் உடன் அமர்ந்திருக்கிறேன். வெகு சிலர் தவிர்த்து நான் சந்தித்த பெரும்பாலான இயக்குநர்கள் கதை சொல்லும் அளவில் மிக சாமார்த்தியசாலிகள். அவர்களிடம் எனக்கிருந்த சிக்கல் தன் மனதுக்குள் இருக்கும் கதையை எழுத்தாளர் எழுதித் தர வேண்டும் என நினைக்கின்றனர் , அதாவது வடிவமற்ற ஒரு சித்திரம் அவர்கள் மனதில் இருக்கும் அதை நாம் வரைந்து தர வேண்டும். அதிலும் அவர்களிடம் கதை இருக்காது, ஒன் லைன் எனச் சொல்லும் ஒரு முடிச்சு கூட இருக்காது, கோர்வை அல்லாத சுவாராஸ்யமான சம்பவங்களை வைத்துக் கொண்டு அதை பிணைத்து ஒரு கதை உருவாக்க நினைப்பார்கள் இப்படி விஜய் சேதுபதிக்காக கதை எழுதிய பல இயக்குநர்கள் என்னிடம் கதை சொன்னதும், கருத்து கேட்டதும் உண்டு. அதில் பெரும்பாலும் அவரை திருப்திபடுத்தும் விஷயங்களாக இவர்களாகவே சில வரையறைகளை வைத்து கதையாக பேசுகின்றனர். பல இடங்களில் இதற்காக நான் வெளி நடப்பு செய்ததுண்டு. இப்படியான கதைக்களத்தை அவர் விரும்புகிறாரா? இல்லையா? என்பதெல்லாம் தேவையற்றது ஆனால் விஜய் சேதுபதியை அணுகும் பலரும் முதலில் அவரின் ரசிகர்களாக இருந்து தனி மனிதனாய் அவரை நேசித்து ஆனால் படைப்பாளியாய் பல நேரங்களில் தவற விடுகின்றனர் என்பதே உண்மை..
“அனபெல் சேதுபதி” எனப் பெயர் கேட்டதும் நிச்சயம் பேய் படம் என்ற எண்ணம்தான் மனதில் உருவாகும், மக்களை ஈர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் . பிரியாணிக்காக காத்திருப்பவனை பசிக்க விட்டு, தயிர் சாதம் கொடுப்பது போல இருந்தது இந்த உணர்வு. சரி! காஞ்சனா, அரண்மனை, யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் ரீதியில் காமெடி HORROR ஆக இந்த படம் இருக்குமோ என நினைத்தாலும் அமானுஷ்யத்திற்கான சுவடு கூட இப்படத்தில் இல்லை. பெரிய தொழில் நுட்பம் இல்லாத ஜகன் மோகினி காலத்துப் படங்களில் கூட ரசிக்கும் படியான சுவாரஸ்யமான திடுக்கிடும் காட்சிகள் இருந்தது, இப்போதும் அந்த படங்களை தொலைக்காட்சியில் பலரும் ரசிக்கின்றனர். விஜய் சேதுபதி, டாப்சி, ஜெகபதி பாபு என பெரிய குழுவையே வைத்துக் கொண்டு யாருக்குமே எந்த வேலையும் இல்லாமல் வெறுமனே சுற்றுலா தளம் போல படம் முழுக்க அரண்மனையை சுற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கத்திய படங்கள் என இல்லாமல் எல்லா பேய் படங்களுக்கும் ஓர் அடிப்படை உண்டு. அது ஒரு வீடு அல்லது ஏதோ ஒரு இடத்தில் பேய் இருக்கும் அந்த இடத்திற்கு கதை நாயகர்கள் வருவார்கள் , அங்கு பேய் இருப்பதை உணர்வார்கள் , பிறகு பின் கதையை அறிவார்கள் , இறுதியில் நாயகர்களுக்கு என்ன ஆனது, பேய் பழி வாங்கியதா இல்லையா என CLIMAX முடிவுக்கு வரும். இவ்வளவுதான் கோடு. இதை எப்படி மாற்றிப் போட்டாலும் எதையும் தவிர்க்க முடியாது.
அமானுஷ்யப் படங்கள் போல ஏதோ ஒரு களமாக அரண்மனையில் ஆரம்பிக்கும் இந்த கதை எந்த வித முன் அறிவுப்பும் இன்றி ஒரு கூட்டத்தையே கண் முன் நிறுத்துகிறது, அதுவும் இன்னார் குடும்பம் இது என வெறும் டயலாக் வெர்ஷனாக ஒரு பட்டாளமே வழி மொழியப்படுகிறது. பார்வையாளருக்கு எந்த ஒரு உணர்வையும் தராமல் இத்தனை ஆட்களை எப்படி உள் வாங்க முடியும், எப்படி சம்மந்தப்படுத்தி பார்க்க முடியும்? அதிலும் மொத்த வசனமும் வாட்ஸப் ஃபார்வேட் போல வெறும் பெண்களை கேலி செய்யும், குறிப்பாய் மனைவியை கேலி செய்யும் இரண்டாம் தர வசனங்கள், மொத்தத்தில் எங்கோ ஓரிரு வசனம் தப்பாகிப் போகலாம் ஆனால் கேரக்டரைசேஷனாகவே அப்படி உருவாக்கியிருப்பதுதான் சலிப்பைத் தருகிறது. இவங்கெல்லாம் யாரு, இவங்க போனா என்ன? செத்தா என்ன என்பது போல காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் அவர்களுக்கென எந்த அழுத்தமும் தரப்படவில்லை.
கதையின் நாயகி டாப்ஸி, வடக்கில் எப்படியான படங்களில் நடித்திருக்கிறார், அவரை வச்சு செஞ்சுட்டீங்களே என்பது போல இருந்தது. இதில் டாப்ஸிக்கு காமெடி கேரக்டர் என படக்குழு அறிவித்திருந்தது , ஆனால் பட துவக்கத்தில் இருந்து கேரக்டர் ஒட்டி டாப்சியின் காட்சியோ, வசனங்களோ அமையவில்லை , கிளைமேக்ஸில் அவர்கள் தப்பிக்கும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் டாப்ஸியின் கேரக்டரைஷேசனை உணர முடிந்தது, அதற்கு முன்னான அனைத்தும் வெறுமனே ஹீரோயின்களுக்கு என வழக்கமாக வைக்கப்படும் துறுதுறு காட்சிகளாகவே தென்பட்டது, படத்தின் பிளாஷ் பேக்கில் டாப்ஸியின் ஒரு ஃபோட்டோ கிட்டதட்ட “காஞ்சுரிங்கின் வேலக்” போல மிகவும் விறுவிறுப்புடன் காட்டப்பட்டிருக்கும், அங்கிருந்து கதையை துவக்கியிருந்தால் கூட படத்தின் சுவாரஸ்யம் கூடியிருக்குமோ எனத் தோன்றியது. திரைக்கதையைப் பொறுத்த வரை ஒரு முடிச்சை இரண்டு விதமாக கையாளலாம், ஒன்று பார்வையாளர்களை யோசிக்க வைத்து, அவர்களுக்கு துருப்பும் கொடுத்து கடைசியில் அவர்களை மிஞ்சும் ஒரு முடிச்சை அவிழ்க்கலாம், அல்லது பார்வையாளர்களின் கணிப்பை பூர்த்தி செய்து அவர்களை பரவசப்பட வைக்கலாம், இரண்டில் எது இருந்தாலும் பார்வையாளர்கள் மகிழ்வார்கள் ஆனால் இந்த படம் அதற்கான எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை, வெறுமனே நகர்ந்து கொண்டிருந்தது.
பீரியட் படம் எனச் சொல்வதற்கான எந்த மெனக்கெடலும் கதையிலோ, காட்சி அமைப்பிலோ, உடையிலோ கூட இல்லை, குறைந்த பட்சம் விஜய் சேதுபதி உடையாவது அந்த காலத்திற்கு ஏற்ப அல்லது கற்பனையாக வடிமைத்திருக்கலாம். எதோ சேட்டு வீட்டு கல்யாணத்துக்கு குதிரை ஏறுபவர் போல சற்றும் பொருந்தாத உடையை கொஞ்சமும் கூச்சமின்றி வழங்கியிருக்கின்றனர். எழுத்தாளர் அராத்து விஜய் சேதுபதியின் ஸ்கீரின் பிரசன்ஸ் குறித்து ஒரு முறை எழுதியிருந்தார் அதற்கெல்லாம் நான் உடன்படவில்லை. நம் தலைமுறைக்கு முன் தலைமுறை ஹீரோக்கள் எல்லோரும் இதே உடல் அமைப்பு கொண்டவர்கள் தான். அவர்களின் உடல் அங்கு பொருட்படுத்தப்படாமல் நடிப்பும், கதாபாத்திரமுமே பேசப்பட்டது, இப்போதுதான் எல்லா காலத்திலும் கச்சிதமான உடலமைப்பை இந்த நிறுவன அமைப்புகள் காட்சிப்படுத்த நினைக்கின்றது. SIX PACK வைக்கும் பிரபா, ராணா போன்ற ஒருவரையே ராஜாவாக பார்க்கும் பார்வையையும் நமக்கு அது கொடுத்திருக்கிறது. எனவே உடல் அமைப்பு வைத்து சேதுவை ராஜாவாக பார்க்க முடியவில்லை எனச் சொல்பவர்கள் பற்றி இதில் எனக்கு அக்கறை இல்லை, நடித்திருக்கலாம் எனவும் சிலர் கவலை கொள்கின்றனர், எனக்கென்னவோ வழக்கமான துள்ளல் இல்லாமல் போனதும், தனக்கென ஒரு மாடுலேஷனை இப்படத்தில் கைவிட்டதன் வெளிப்பாடுமாகவே இது தோன்றுகிறது. இங்கு முக்கியமாக ஒரு ராஜாவுக்கான குறீயீடுகள் எதுவுமே செதுக்கப்படவில்லை . விஜய் சேதுபதி என்ற பிம்பத்தை மட்டுமே வைத்து காட்சியமைப்பை நகர்த்த நினைத்ததன் தொய்வு இது, அனாதைகள் போல ஹீரோவும், ஹீரோயினும் பார்ப்பது, காதலிப்பது, கல்யாணமும் செய்து கொள்வது, பிறகு டாப்ஸி கர்ப்பமாகி கொலை செய்யப்பட்ட பின்னும் யோகி பாபு தவிர இருவருக்குமே யாருமே இல்லாமல் இருப்பதெல்லாம் சற்றும் ஏற்றுக் கொள்ள் முடியாத ஓட்டைகள். பன்னி மூஞ்சு வாயாவில் தொடங்கி இப்போதும் யோகி பாபு அதே தொனி. வித்தியாசமே இல்லாமல் அதே உருவ எள்ளல்.
எல்லாம் கோணலாகிப் போன பின்னும் கடைசி வரை உட்கார்ந்திருந்தது அந்த பின் கதை முடிச்சிற்காகத் தான். மொத்த கதையில் எந்த லாஜிக்கும் பார்க்காத நிலையில் பின் கதையில் மட்டும் லண்டனில் இருந்து வந்த அனபெல்லா பல மாதமாய் வெறும் ஆங்கிலத்திலேயே பேசியதை மட்டும் லாஜிக் தவறாமல் வைத்துவிட்டார்கள் , காதல் காட்சியில் மொழி எவ்வளவு அவசியம், அதுவும் இது போன்ற பின் கதைக்கு உணர்வு கடத்துதல் என்பது முதுகெலும்பு போன்றது, முழு நீளப்படமான மதராசபட்டினத்தில் கூட அதை அழகாக கையாண்டிருப்பார்கள், படத்தின் மொத்தத்திற்கும் ராசய்யா அனபெல்லாவிடம் சொல்லும் அந்த காதல் காட்சி மட்டுமே மனதில் நின்றது, மற்றபடி அனபெல்லா காதலுக்காக ஒரு சிரத்தையும் எடுக்கவில்லை, அரண்மனை கட்டுவதற்கு சரி என்றார் ஆனால் அவர் காதலித்தாரா என்பது கூட நம் தேர்வு தான். வெறுமனே வழிப்போக்கனாய் ஹீரோ காரை ரிப்பேர் செய்தார், ராசய்யாவின் காதலை ஏற்றுக் கொண்டார், மற்றபடி ஒரு மாளிகை கட்டும் அளவிற்கு அனபெல்லாவின் அன்பு போதவில்லை. இருவருக்குமான எந்த அழகியலும் அதனுள் தென்படவில்லை .அப்படியே மறு பிறவியாய் ருத்ரா காதலும் “திருட” தனக்கு ஒரு அரண்மனை கிடைக்கிறது என்பதாய் அவசரமாய் நிறைவடைகிறது.
ரசிகர்களை மதிக்காமல் இப்படி படம் எடுத்தார்களா ? என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் ஆதங்கமாக வெளிப்பட்டாலும், உண்மையில் எந்த படைப்பையும் யாரும் அப்படியான எண்ணத்துடன் உருவாக்குவதில்லை. இயக்குனருக்கு கதை தெரிவதால் முன் கதையில் அவர் பொறுத்தியிருக்கும் சில முடிச்சுக்கள் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தமால் நீர்த்துப் போய்விட்டது , இரண்டாம் முறை படத்தைப் பார்க்க முடிந்தவர்கள் அதை உணரலாம். ஒவ்வொரு படமும் எவ்வளவு பெரும் உழைப்பிற்கும் போராட்டத்திற்கும் மத்தியில் உருவாகிறது என்பதை உணர்கிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் எடுக்கும் சிரத்தையில் ஒரு பகுதியேனும் கதை, திரைக்கதை, வசனம் இவற்றிற்கு கொடுக்கப்பட வேண்டும். கதையை தாளில் கொண்டு வந்துவிட்டாலே படப்பிடிப்பில் 90% முடிந்துவிட்டதாக ஹாலிவுட் தங்கள் கதைக்கான முழு அர்பணிப்பையும் பழக்கப்படுத்திக் கொள்கின்றது . அந்த அளவு இல்லை என்றாலும் பெரிய நடிகர்களும், PAN INDIA அளவிலான திட்டமிடலும் மட்டுமே படத்தை வெற்றிப் படமாக்குவதில்லை/ கதைதான் திரைப்படத்தின் நாயகன், திரைக்கதையும், வசனமும் அதனை உயிர்ப்பிக்கும் கலை என்பதை அவ்வபோது இப்படியான திரைபடங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இது துவக்கம் தான், எல்லா பிரச்சனைகளையும் களைந்து பார்ட் 2வில் வெற்றியுடன் சந்திக்கலாம். வாழ்த்துகள் குழு.
அனபெல்லா சேதுபதி – சேதுபதிக்கான வேக் அப் கால்…