கோவையிலிருந்து வந்திருந்த என் பேரக்குழந்தைகள் வந்த அன்றே ‘ஃபீனிக்ஸ்’ மாலுக்கு அழைத்துப் போகும்படி வற்புறுத்தினார்கள்.
நிறைய கடைகள், விதவிதமான பொருட்கள், கேளிக்கைகள், உணவுகள் என்று அத்தனையும் மனத்தை கிரங்க வைக்கும் கவர்ச்சிகள்தான். ஆனால் அங்குள்ள பொருட்களின் விலைகள் ஒரு நடுத்தர குடும்பத்தினருக்குக் கட்டுபடியாகுமா? யோசித்தேன்.
“சரி, இவ்வளவுதான் என்னிடம் ரூபாய் இருக்கு. அதுக்கு மேலே செலவு செய்ய என்னால் முடியாது.” என்று நான் முடிப்பதற்குள்…
“அடேங்கப்பா.. இது போதுமே..!” குழந்தைகள் இருவரும் உற்சாகமாகிவிட்டனர்.
“ஃபன் சிட்டி, ஃபுட் கோர்ட் இங்க மட்டும்தான் நாங்க உங்களுங்கு செலவு வைப்போம். எங்களுக்கு ஏதாவது பொருட்கள் வேணும்னா, அடுத்த வாரம் சென்னைக்கு வரும் எங்க டாடி கூடப் போய் வாங்கிக்கிறோம். நாங்க இப்ப ‘விண்டோ ஷாப்பிங்’ மட்டும்தான் பண்ணப் போறோம்.”
பேரக்குழந்தைகளின் தெளிவான புரிதல் என்னை வியக்க வைத்தது. எப்படியும் அவர்கள் ஆசைப்படும் பொருட்கள் இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாளில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களின் வார்த்தைகளில் தொனித்தது.
மருமகள் பேரக்குழந்தைகளோடு நானும் ஃபீனிக்ஸ் மாலுக்குள் சென்றோம். வெளி கேட்டிலிருந்து உள்ளிருக்கும் கட்டிடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.
எங்களுக்கு முன்னால் ஆறிலிருந்து பன்னிரண்டு வயதிலிருக்கும் நான்கு சிறுவர்கள் மிகவும் உற்சாகத்துடன் நடையிலே ஒரு துள்ளல் வெளிப்பட நால்வரும் கைகோர்த்தபடி நடந்துச் சென்றனர்.
குருட்டழுக்கு ஏறிய பழைய உடை, ஆனாலும் துவைத்து பெட்டி போட்டுதான் அணிந்திருந்தனர். தலையில் எண்ணை தடவி முடி படிய வாரி இருந்தனர். முதன் முதலாக அங்கு வருகிறார்கள் என்பது அவர்கள் பார்வையில் தெரிந்தது.
உள்ளே நுழையும் போது வாயிற்படியில் அடித்த சில்லென்ற காற்றில் மகிழ்ச்சி பொங்க துள்ளிக் குதித்து டான்ஸ் ஆடிய அந்த நால்வரையும் மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்தனர்.
சிறுவர்களுக்கான ஆயத்த துணிக்கடையில் நுழைந்தவுடன் ஒரு பையன், “அண்ணா, இந்த பனியனைப் பாரேன், நான் போட்டிருக்கிற மாதிரியே இருக்கு! ஆயிரத்து இருநூறு ரூபாய் விலைன்னு போட்டிருக்கு!”
உரக்க கூறிய சிறுவனை நோக்கி, “இது வேற துணி, அது வேற துணிடா. பேசாம பார்த்துக்கிட்டே வா.” பெரியவன் அதட்டினான்.
தம்பியை அடக்கி விட்டாலும் மற்றவர்களின் பார்வையும் ஒவ்வொரு துணியிலும் பதிந்து எழுந்த விதத்தை உற்று கவனித்துக் கொண்டே வந்தேன்.
நால்வரின் முகத்திலும் அவர்களது இயலாமை தெரிந்தது. அத்துடன் தங்களால் வாங்க முடியாதே என்ற ஏக்கத்துடன் அவர்கள் விட்ட பெருமூச்சு என்னைச் சுட்டது.
எங்கள் குடும்பத்தோடு நான் போய்க்கொண்டிருந்தாலும் எங்கள் கூடவே ஒவ்வொரு கடையிலும் நுழைந்து சுற்றிப் பார்த்த அந்தச் சிறுவர்களின் மேலேயே என் முழு கவனமும் படிந்தது.
‘ஃபன் சிட்டி’ என்னும் விளையாட்டரங்கத்தில் நுழைந்து சிறுவர்கள் அங்கு விளையாட வேண்டுமானால் குறைந்தது எழுநூறு ரூபாய்க்கு டோக்கன் வாங்க வேண்டும் என்று தெரிந்ததும்… ” அய்ய்யோ..! எழுநூறு ரூபாயா..!” மலைத்து போய் நின்றனர்.
பெரியவன் தன் தம்பியை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு விளையாட்டையும் தூர நின்று விளக்கிக் கொண்டிருந்தான்.
ஒரு பையன் ஆடிக்கொண்டிருந்த கார் ரேஸை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், தாங்களே விளையாடுவதைப் போன்று உற்சாகமானார்கள்.
“அண்ணே, உங்க காரை தொரத்திகிட்டு வர்ற கருப்பு காரை பாருங்க… ரைட்டுல வேகமா வருது… சீக்கிரமா லெஃப்டுல வளைங்க…” ஆர்வம் மேலிட விளையாடிக்கொண்டிருக்கும் பையனின் கையைப் பிடித்து வேகமாகத் திருப்பினான் ஒரு சிறுவன்.
அந்தப் பையன் கையை உதறி அவனை தூர விலக்கினான் விளையாடிக் கொண்டிருந்த பையன். அருகில் நின்றிருந்த தந்தை, சிறுவனை முறைத்துப் பார்த்து தள்ளிப் போகும்படி கோபத்துடன் அதட்டவும், சிறுவனின் முகம் கூம்பிய மலராக வாடி வதங்க, கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. மற்ற மூவரும் அவனை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினர்.
என் மருமகளிடம், ” குழந்தைகள் விளையாடி முடித்ததும் ஃபுட்கோர்ட்டுக்கு வந்து விடுங்கள். நான் அங்கு வந்து உங்களோடு சேர்ந்துக் கொள்கிறேன்.” – என்று கூறிவிட்டு அந்தச் சிறுவர்களைப் பின் தொடர்ந்தேன்.
“அங்கே பாரேன், பனிமலையில சருக்கலாமாம்!”
” 3D படமாம்..”
” அய்ய்யோ…! டிக்கெட் ஒருத்தருக்கு ஒரு ஷோவுக்கு முன்னூறு ரூபாயாம்..!”
” உள்ளார என்னதான் இருக்குமோ…?”
மாறிமாறி ஒவ்வொருத்தரும் வாயைப் பிளந்து கொண்டு மலைத்துப் போய் நின்று விட்டனர்.
“அம்மா அப்பவே சொன்னாங்க, அதெல்லாம் காரு போற இடம். நம்மளாட்டம் ஆளுங்க போற எடமில்லேன்னு… அவங்க பேச்சை கேட்காம வந்துட்டோம். சும்மா தூர நின்னு எல்லாத்தையும் பார்த்துட்டுப் போகலாம்.” – பெரியவன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
உலகத்திலுள்ள ஒட்டு மொத்த சந்தோஷமும் தங்கள் கைக்கு கிடைக்காமல் போகுதே என்ற சுய பச்சாதாபம் அவர்களையும் மீறி வெளியே தெரிந்தது.
“டேய், இதெல்லாம் வேண்டாம். வாங்க வேற இடத்துக்குப் போகலாம்.” – தம்பிகளை அழைத்துக்கொண்டு பெரியவன் அடுத்த பகுதிக்குள் நகர்ந்தான்.
“அண்ணா, ஒரேயொரு ஐஸ்கிரீமாவது வாங்கிச் சாப்பிடலாமா?”,
இரண்டாவது தம்பி கேட்கவும், பெரியவன் தன் பாக்கெட்டிலிருந்த ரூபாய் தாள்களையும் சில்லரைகளையும் எடுத்து எண்ணினான்.
“அம்மா மொத்தமே நூறு ரூபாய்தான் குடுத்தாங்க. பஸ் டிக்கட் போக மீதி எண்பது ரூபாய் இருக்கு. திரும்பி போக காசு வேணும். அங்க பாரு, ஒரு ஐஸ்கிரீம் எண்பது, நூற்றி இருபதுன்னு போட்டிருக்கு..!”
அவன் காட்டிய விலைப்பட்டியலை மூவரும் திரும்பிப் பார்த்தனர். மூவரில் இருவர் மௌனமாகிவிட கேட்டவன் குரல் மட்டும் கோபத்தில் வெடித்தது. ஓங்கி தன் தலையில் அடித்துக் கொண்டான். விரல்களைக் குவித்து பக்கத்திலிருந்த சுவரில் வேகமாகக் குத்தினான்.
“எனக்கு ஐஸ்கிரீம் வேணும். நீ வாங்கித் தர்றியா இல்லே நானே போய் யாருகிட்டேயாவது பறிச்சிட்டு வரட்டுமா?” பலமாக கத்தினான்.
ஒவ்வொரு இடத்திலும் அடக்கி அடக்கி வைத்திருந்த ஆசை உணர்வுகள் இப்பொழுது கட்டுப்பாடில்லாமல் பீறிட்டுக் கொண்டு வெளியேறுகிறது. இயலாமை தன்மானத்தைச் சீண்ட, உள்ளிருந்த முரட்டுத்தனம் அவனையும் மீறி அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்து விட்டது.
தனக்கு வேண்டியதை எப்படியாவது எடுத்துக் கொள் என்று மனம் இடும் கட்டளையை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. தவறான முறையிலும் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளத் துணிந்து விட்டான்.
ஆசையின் தீவிரம்… இயலாமையின் தீவிரம்… பிறர் அனுபவிக்க தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தின் தீவிரம்… என்று எல்லாமும் ஒன்று சேர்ந்து அவனை மெல்ல மெல்ல ஒரு தீவிரவாதியாக்கிக் கொண்டிருப்பதை நேரில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இதற்குமேல் நான் ஒதுங்கி இருக்கக் கூடாது என்று அவர்கள் அருகில் சென்று அச்சிறுவனின் கையை லேசாக அழுத்திப் பிடித்து அவன் கோபத்தை தணித்தேன்
.”குழந்தைகளே, எனக்கு இன்று பிறந்தநாள். அதனால் உங்களைப் போன்ற சிறுவர்களுக்கு ஏதாவது வாங்கித் தரலாம்னு வந்தேன். என்னோட வாங்க, ஏதாவது சாப்பிடலாம்..” சிரித்த முகத்துடன் அவர்களை அழைத்தேன்.
அவர்களின் தன்மானம் இடம் தரவில்லை என்பதை அவர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து வேண்டாமென்று தலையாட்டியதைக் கவனித்த பொழுது உணர்ந்தேன்.
“என்னை உங்கள் பாட்டிபோல நினைத்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் பக்குவமாய் பேசி ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றேன்.
குடிகாரத் தந்தை ஈட்டும் வருமானம் எதுவும் வீட்டுக்குப் பயன்படாத நிலையில் வீட்டு வேலை பார்க்கும் தாய்தான் குடும்ப வண்டியை இழுத்துச் செல்கிறாள் என்று தெரிந்த போது மனம் வலித்தது.
இந்த இடத்தில் என் பேரக்குழந்தைகளின் இயல்பான போக்கினை நினைத்துப் பார்த்தேன். தங்கள் தந்தை மீது கொண்ட நம்பிக்கை, சிற்சில ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் பாதுகாப்பான குடும்பச் சூழல் அவர்கள் மனதை பக்குவப் படுத்தியிருந்தது.
ஆனால் இச்சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையே சிக்கலாக இருக்கும்போது அவர்களின் ஆசை உணர்வுக்கு வடிகால்தான் எங்கிருக்கிறது?
குடிகாரர்களை மீட்கும் பொறுப்பைவிட, அவர்கள் குடும்பத்து குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களுக்கு நல்வழி காட்டுவதுதான் இன்றைய அவசரத் தேவை என்பதை உணர்ந்தேன்.
என் பயணம் அதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் அவர்களிடம் இருந்து விடை பெற்றேன்
******
நவம்பர் 2018, ருக்மணி சேஷசாயி நினைவு பரிசு பெற்றது
ஆசிரியரின் உரிய அனுமதியோடு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
******