
மனம் மாறிய முயல்கள்
(கதைப்பாடல்)
வறண்ட இலந்தைப் புதரொன்றில்
வாழ்ந்து வந்தன சில முயல்கள்
வயல்களில் போதிய தானியமின்றி
வறுமையில் வாடி உழன்றன
உலவச் சிலர் வரும்போது
உடன் வரும் நாய்கள்
உரத்துக் குரைத்து அச்சமூட்டி
ஓடி வந்து கவ்வப் பார்த்தன
உணவின்றி பசியால் வாடுவதோடு
ஒளியும் புதரும் பசுமையிழக்க
முரட்டு நாய்கள் துரத்தலில்
அரண்டு போயின முயல்கள்
உயிரோடு இருப்பதில் நியாயமில்லை
உடனே தற்கொலை செய்கிறேன்
ஒரு முயல் புலம்பியது
உடனே இன்னொன்று சொன்னது
ஆமாம் இயற்கை வஞ்சித்தது நம்மை
ஆனையைப் போல் பெரிதாயில்லை நாம்
ஆற்றல்மிகு கொம்பில்லை மானென
ஆபத்தை சுமக்கிறது நம் தலை
இறக்க விரும்புகிறேன் நானும்
என்னோடு வருபவர் வாருங்கள்
இங்கே வாழ முடியாது
இறங்கிச் சாவோம் குளத்தில்
மூன்றாவது முயலும் உரைத்தபடி
முன்செல்ல பின்னேகின முயல்கள்
முற்றுகை இட்டன குளத்தை
மூழ்க நினைத்து கால்வைக்கையில்
கரையில் இருந்த தவளைகள்
கத்துவதை நிறுத்திக் கொண்டன
குதித்தன சட் சட்டென்று குளத்திற்குள்
காலில் மிதிபட்டு இறந்திடப் பயந்து
இப்போது தலைவன் முயல் பேசியது
இப்பரந்த பூமியில் நம்மை விட
சின்னஞ்சிறு உயிர்கள் வாழ்கின்றன
சிரமத்தைப் புரிந்து நடக்கின்றன
படைப்பில் எந்தக் குறையுமில்லை
பார்வை மட்டும் மாறிட வேண்டும்.
பிறப்பு என்பது ஒருமுறை
புரட்டிப் போடுவோம் அச்சத்தை
எல்லா முயல்களும் இவற்றைக் கேட்டு
எண்ணத்தை மாற்றிக் கொண்டன.
இடம்பெயர்ந்து வேறிடம் நோக்கி
இருப்பிடம் அமைக்க விரைந்தன.
நீதி:உனக்கும் கீழே உள்ளவர் கோடி.நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
***
அறியாமை
(கதைப்பாடல்)
நீண்ட காலமாக நட்புடன்
நெருங்கிப் பழகி வந்தன
காட்டு அரசன் சிங்கமும்
கடிது விரையும் புலியும்
ஆண்டுகள் உருண்டு ஓடின
ஆடிக் களைத்தன இரண்டுமே
அவ்வளவாக இரை இல்லை
அடிக்கடி பட்டினிக் கிடந்தன
அந்தப் பக்கமாய் மரத்தடியில்
அழகு மானொன்று மேய்ந்தது
அடித்துத் தின்றிட விரும்பின
ஆளுக்கொரு திசையில் நின்றன
வயது கூடிய சிங்கத்தால்
பாய்ந்து பிடிக்க இயலாது
பாதையின் குறுக்கே படுத்தது
பாய்ந்து புலியும் கவ்வியது
பங்கிட்டு ஈந்தால் பசியாறாது
சிங்கத்திடம் உனக்கில்லை இதில்
சும்மா கிடந்தாய் நீ
சுருட்டி வளைத்தது நான்
என்று சொன்னது புலி
ஏற்கவில்லை காட்டு அரசன்
இன்று மட்டும் நானரசன்
இந்த உணவு எனக்கே என்றது
சண்டை போட்டுக் கொண்டதனால்
மண்டை உடைந்தது இரண்டிற்கும்
கண்டு களித்த நரியுமே
கடித்துத் தின்றது மானையே!
பகிர்ந்து தின்ன மனமில்லாமல்
பகைத்துக் கொண்ட இருவிலங்கும்
பார்த்தவாறே படுத்திருக்க
பசியாறி விரைந்தது நரியுமே!
நீதி: ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
சிறிது குறையுமென இருவர் பகைத்துக் கொண்டால் மூன்றாமவர் லாபமடைவர்.
***
ஆசிரியை அவர்களின் கதைப் பாடல் கருத்துள்ள தாகவும் இனிமையாகவும் இருக்கிறது.வாழ்த்துகள்