புத்தகப் பூச்சி
இரவு இரவாக
நீண்ட காலமாய்
ஒரு புத்தகப் பூச்சிக்கு
உணவாக மாறியிருந்தேன்.
விசித்திரமான அப்பூச்சி
வாசிப்பு குறையும்
தினங்களில் மட்டும் அதிகம்
என்னை தின்னுகிறது
புத்தகத்துடன் உரையாடும்
போதெல்லாம்
மூளையின் மையத்தில்
மண்டியிட்டு
அமர்ந்துகொள்கிறது.
வான்காவை வாசித்த
தினத்தில் காதுக்குள்
ஊர்ந்து கொண்டேயிருந்தது
‘ரகசியம்’ படித்த தினத்தில்
கால்விரல்களுக்கிடையில்
ஒளிந்துகொண்டது
இறுதியில் என் இதயத்தை
ருசித்துவிட்டு
மண்டைக்குள்ளிருந்து
பர்பிள் நிறப் பட்டாம்பூச்சியாக
வெளியேறியது!
****
அவனுடைய குரல்
மற்றவை எல்லாம் கூட மறக்கமுடிகிறது ஆனால்
அவனுடைய குரலை என்ன செய்ய?
மழைப் பேச்சுகளின் பனியோடையில்
நனைந்து திளைத்தவள் நான்
சில நேரம் நள்ளிரவின் முடிவில்
மெல்லிய ரீங்காரமாய்
சில சமயம் வாகனங்கள் அதிரும்
சாலைகளில் துல்லியமாய்
பெருமழை சத்தத்தினூடே
சன்னமான ஒலியில்
தாள லயத்துடன்
தலைக்குள் ஏறிய அக்குரல்
செவிவழியே கசிந்து
அமிர்தமாகும்
நுனிநாக்கால்
முத்தமிட்டுச் சொல்கிறேன்
இத்தருணமே நிதர்சனம் – கடவுள்
****
இனிதான பொழுது
முதல் ரயிலை தவறவிட்டோம்
இரண்டாம் ரயிலையும்
பின் ஒவ்வொரு ரயிலையும் கூட
எப்படி பிரிவது முதலில் யார்
கையசைப்பது என்ற குழப்பம்
நான்கைந்து நாட்கள் சுற்றிய
தெருக்களின் வெளிச்சமும் இருளும்
மனதுக்குள் கனக்கிறது
இசை கச்சேரியில் கேட்ட குரலினியாளின்
அடர் வண்ண லிப்ஸ்டிக்
சிவப்பில் அரங்கு ஒளிர்ந்த
மைக்ரோ நொடியில்
காலம் நகர்ந்து வழிவிட
ஒரே சமயத்தில் சிரிக்கிறோம்
சாட் பஸாரில் சாப்பிட்ட
மோமோவின் சுவையின் மிச்சம்
இந்த நொடியின் கிறக்கமாகிறது
கைகளை இறுகப் பற்றி
உயர் பாலத்தின் மீதிருந்து
பார்த்த உலகம் நமக்குமேயானது
கடைசி ரயில் புறப்படும்
அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருக்க
பேருந்து நிறுத்தத்தை
நோக்கி ஓடுகிறோம்
********