இணைய இதழ் 125

காலக்கலம் – சசி

சிறுகதை | வாசகசாலை

முத்து மகிழ்நன் தன் முன் அமைந்திருந்த திரையில் விசைகளை முடுக்கி விண்கலத்தின் பயணப்பாதையை உறுதி செய்தான். 2178 வருடங்களுக்கு முந்தைய குறிப்பிட்ட நாள் ஒன்று பயண இலக்காக நீலநிற நியானில் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. காலக்கலம் விண்கலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு நிலையான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. இளந்திரையன் வன்பொருள் இணைப்புகளை மீண்டும் ஒருமுறை பரிசோதித்தான். மகிழ்நன் மென்பொருள் உத்தரவுகளைக் கணினித் திரையில் ஓடவிட்டு பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். இருவரும் தங்கள் இருக்கைகளுடன் தங்களைப் பட்டைகளால் இறுக்கி பயணம் தொடங்க ஆயத்தமானார்கள்.

தமிழில் கடமுடாவென்ற வன்பொருள் விண்வெளி அறிவியல் வேண்டாம் என்பவர்கள் அடுத்த மூன்று பத்திகளைத் தயக்கமின்றிக் கடந்து போகலாம்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மற்றும் கருந்துளை விதிகள் 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இன்றளவும் காலப்பயணம் நடத்தத் தேவையாகிறது. இவர்களது விண்கலம் குவாண்டம் க்ரோனோ-ஸ்டேபிலைசர் இணைக்கப்பட்டதால் முன்காலப்பயண முரண்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க உதவுகிறது.

கால முரண்பாடுகள் ஏதேனும் தோன்றினால், அவற்றைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இணைந்த ‘குவாண்டம் குரோனோ நிலைநிறுத்தி’, விண்கலன் பயணப்பாதையில் புழுத்துளையை (வார்ம் ஹோல் தான்) தேவைப்பட்ட கோணத்தில் துல்லியமாகச் சரித்துச் சரிக்கட்டும். இது மிகைநிறை துகள்களைப் பயன்படுத்தி, கிளைக்கும் காலவரிசைகளை ஊடுருவி முரண்பாடற்ற பயணப்பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறது.

விண்கலத்தின் உட்புற அமைப்பு கால நேரம் நிர்ணயம் அற்றது. எனவே வேறு எந்தச் செயலற்ற சக்திகளும் குழுவினரின் மீது செயல்படாமல், சார்பியல் மற்றும் பொதுவான இயற்பியல் போன்றவை இயல்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

பயணத் திட்ட வரையறைப்படி, பயணர்கள் இருவரும் சந்திக்கும் நபர் யார், அவரிடம் கேட்கப்படவேண்டிய மூன்று கேள்விகள் யாவை போன்ற தகவல்கள் விண்கலம் இலக்கை அடைந்ததும் திரையில் 70 நொடிகள் ஒளிரும். ஏற்கனவே மகிழ்நனும் இளந்திரையனும் யாரைச் சந்திக்கப்போகிறோம் என்ற ரகசியத்தைக் கிட்டத்தட்ட ஊகித்துவிட்டார்கள். ஆனாலும் கேள்விகள் என்னவாயிருக்கும் என்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது.

இந்த ‘காலம் முந்திய சந்திப்பு’ ஒளிப்படப் பதிவு வரையறைக்குள் வர முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட மூன்று கேள்விகள், அதற்கான பதில் அடங்கிய உரையாடல் மட்டுமே ஒலிப்பதிவு செய்ய அனுமதி. பயணர்கள் இந்தக் கேள்விகளுக்குச் சம்பந்தமான துணைக்கேள்விகளையும் கேட்கலாம். இவை இளந்திரையன் இடுப்பில் பொருத்தப்பட்ட ஒலிப்பதிவு கருவியில் தன்னிச்சையாகப் பதிவாகும். பின்னர் இந்த ஒலிப்பதிவு அடங்கிய கருவியைப் பத்திரமாக விண்கலத்திலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் சேர்க்கவேண்டும்.

பல நூற்றாண்டுகளாய் தமிழ்ச்சமூகத்திலும் இலக்கிய உலகிலும் புரையோடி விவாதிக்கப்பட்டு சச்சரவை உண்டாக்கிய இந்தக் கேள்விகளும் அதற்கான ஒவ்வொரு மதம் இனம் சார்ந்த தர்க்க விவரணைகளும் இந்த உரையாடல் பதிவின் மூலமாக முடிவுக்கு வரும்.

பயணத்திற்கு ஆயத்தமாகும் சமயத்தில் இளந்திரையன் மகிழ்நனிடம் கேட்டான், “இதற்காக ஐந்து பில்லியன் டாலர் செலவில் இந்தப் பயணம் அவசியமா?”

“திருக்குறள் இப்போது உலகம் முழுவதற்குமான ஒரு மதம் மொழி கடந்த வேதமாக மாறிவிட்டது. கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்கள் குறள்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து சலித்து அதில் ஆயிரம் குறள்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வியல் ஆயிரம் என்ற தொகுப்பாக்கிய நிகழ்வு உனக்கும் தெரியுமே. ஆனாலும் இன்றளவும் இதற்கு மத, இன சாயம் பூசும் வேலையும் நின்றபாடில்லை. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காணக் கண்டிப்பாக இந்தப் பயணம் அவசியமே.”

இளந்திரையன் கைப்பட்டையில் கட்டியிருந்த குறுங்காலக் கருவியின் பொத்தானை அழுத்த விண்கலத்திலிருந்து மீண்ட இருவரும் துல்லிய நுண்நொடியில் இலக்கை அடைந்தார்கள்.

கூரை வேய்ந்த மண்குடிசை வாசலுக்கு முன் சாணம் மொழிய முற்றத்தில் ஒரு வேப்பமரத்தின் கிளைக்கும் பத்தடி தொலைவில் நடப்பட்டிருந்த கழியையும் சணல் கயிறு ஒன்று இணைத்திருந்தது. அதில் பச்சை, காவி, வெண்மை மற்றும் நீலம் எனப் பல நிறங்களில் வேட்டி போன்ற தோற்றம் கொண்ட ஆடைகள் தொங்கின. முற்றிலும் எதிர்பாராத உருவமும் சிகையும் கொண்ட ஒருவர், இவர்களை எதிர்கொண்டார்.

“நீங்கள்தான் திருவள்ளுவர் பெருந்தகையோ?” என்று தயக்கத்துடன் மகிழ்நன் வினவினான்.

“திரு என்று அடைமொழி ஏனோ? வள்ளுவன் என்பார் எம்மை. சிலர் வள்ளுவனார் என்றும் சொல்வர்.” என்றார் அவர்.

சிறிது தயக்கத்துடன் அவர் அணிந்திருந்த வெளிர் நீல நிற ஆடையைப் பார்த்தபடி, முதல் கேள்வியைக் கேட்டான் மகிழ்நன். “நீங்கள் வழக்கில் விரும்பி அணிவது எந்த நிற ஆடையை? காவியா.. வெண்மையா..”

“விருப்பம் கருதியன்று, மாறாக, மானம் காக்கவன்றோ உடுக்கை. அது எந்த நிறமானால் என்ன? எல்லாம் உடுக்கவே. இவையனைத்தும் கனியமுதன் அன்புடன் நெய்து எனக்களித்தவை.” என்று கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த பல வண்ண ஆடைகளைச் சுட்டிக்காட்டினார் வள்ளுவனார்.

அவர்களை அவர் குடிசைக்குள்ளே அழைத்துச் சென்றார். தரையில் கோரைப்புல்லில் வேய்ந்த பாய் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. ஒரு நீர் நிரம்பிய மண் குடுவை. ஒரு மூலையில் துணியில் பொதிந்த ஓலைச்சுவடிக் கட்டுகள். மண் கலயங்கள். செப்புப் பாத்திரங்கள் சில.

“அய்யா, தங்கள் குலம் குடி குறித்துச் சொல்ல முனைவீரோ?” இந்தக் கடினமான வினாவைக் கேட்டது இளந்திரையன்.

“நல்லோர்க்கேது குடி? புலவனார்க்கேது குலம். செய்யும் தொழில் குடியோ குலமோ குறிப்பதன்றே! தொழில் வெவ்வேறாயினும். அவையனைத்தும் ஈடே. ஆயினும் இவற்றுள் உழுதுண்டு வாழ்வோரே தலை என்றே என் எண்ணம்.” என்றார் வள்ளுவர்.

“அய்யா, நீங்கள் செய்யும் தொழில் யாது?” துணைக்கேள்வியைக் கேட்டான் மகிழ்நன்

“செய்யுள் செய்யுங்கால் நான் புலவன். நாற்றங்கால் நட்டு பயிர் இடும்பொழுதில் உழவன். ஆடை நெய்தால் நெசவாளி. கலம் செய்தால் குயவன்”

“இவை அனைத்தும் நீங்கள் செய்வதுண்டா?” என்று மகிழ்நன் கேட்க, உரக்கச் சிரித்தபடி, “இவற்றுள் கலம் செய்ய இயலேன்.” என்றார் வள்ளுவனார்.

“அய்யா, நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவரோ?” தயங்கியபடி மூன்றாவது கேள்வியைக் கேட்டான் மகிழ்நன்.

சில நொடிகள் அமைதிக்குப்பின் பதில் சொன்னார் வள்ளுவனார், “அன்பிலே கண்டேன் இறை. அஃதிலார் வாழ்க்கை பிழை”

“அற்புதம் அய்யா. சுருங்கச் சொல்லி பெருவிளக்கம் தந்தீர்” உள்ளபடி மகிழ்ந்தான் மகிழ்நன்.

சற்றே குழப்பமுற்றார் வள்ளுவனார். “அற்புதம்? என்ன பொருள்? இது தமிழ்ச் சொல் அல்லவே. குறுகச் சொல்லுதல் நலமே என்பது உங்கள் கூற்றோ? நன்று. நீவிர் வடக்கிலிருந்து வருபவரோ. உங்கள் உடுக்கை கண்டதும் உள்ளினேன். பெண்டிர் அணிவது போன்றல்லவோ இடையில் கச்சை..”

இதைக்கேட்டதும் மகிழ்நன் கூச்சமுற்று சட்டென்று எழுந்திட முற்பட அவனது இடைக்கச்சை தளர்ந்து நழுவியது. சட்டென்று இடதுகையால் அதைப்பற்றிக்கொண்டு தன் மெல்லிய சிந்தெடிக் வலையில் பின்னிய ஃசூமர் ஜட்டி தெரியாதபடி மானம் காத்தான். அந்த நிகழ்வை வள்ளுவனார் சற்று கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியது.

“நீவிர் இருவரும் அருக்கரோ?”

“அருக்கரா? என்ன பொருள் அய்யா?”

“உமக்குள் நட்பு பாராட்டுபவர்”

“ஓ, ஆம், நண்பர்கள்”

“இடுக்கண் வருங்கால் உதவும் பாங்குடை உற்றோர்.” புன்னகை செய்து முறுவலித்தார்.

“அஃதே அய்யா!” என்றான் இளந்திரையன்.

“நன்று.. நன்று..” என்று முணுமுணுத்தபடி இடுப்புக் கச்சையிலிருந்த ஓர் ஓலைச் சுவடியில் அவசரமாக எழுத்தாணியால் ஏதோ குறித்துக் கொண்டார்.

இந்தக் கட்டத்தில் மகிழ்நன் ,பயணத்திட்டம் வெற்றி, என்று மேலுடுப்பில் பொருத்தியிருந்த நானோ ஒலிவாங்கியில் பதிவு செய்தபின் கைப்பையில் வைத்திருந்த குறுங்கால இணைப்புக் கருவியை எடுத்து நேரத்தைச் சரிசெய்து பொத்தானை அழுத்த இருவரும் மீண்டும் விண்கலத்திற்குள்ளே சென்றனர்.

இளந்திரையன் முகக்கவசம் இணைத்தபின் ஒலிப்பானில் பேசினான். “திருவள்ளுவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நாம் இருவரும் மாயமாக மறைந்திருப்போம் அல்லவா? என்ன நினைத்திருப்பார் நம்மைப் பற்றி.”

“‘மாயமாய் மறைந்த அருக்கர் இருவர் காயம் மறைக்கத் தெரிந்த அரக்கரோ’ என்று எண்ணியிருப்பார்” என்றான் மகிழ்நன். “நல்ல முயற்சி. ஆனாலும் இந்தக் குறளில் தகவல் இருக்கிறது. கருத்து ஏதுமில்லை” என்று கூறிச் சிரித்தான் இளந்திரையன்.

“”நாம் திருக்குறள் முழுமையும் படித்திருக்கிறோம். ஆனால் அதை எழுதிய திருவள்ளுவர் நம் முன் அமர்ந்திருந்தார். ஆனாலும் அவர் காலக் கணிதப்படி இன்னும் திருக்குறளை எழுதத் தொடங்கவேயில்லை. இப்போதுதான் அதுபற்றி சிந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.” என்று மகிழ்நன் சொல்ல,

வியப்புடன் இளந்திரையான் கேட்டான், “இப்போதுதான் திருக்குறள் எழுத நினைக்கிறார் என்று எப்படிச் சொல்கிறாய்?”

“பேசிக்கொண்டேயிருக்கும்போது தன் கச்சையில் இருக்கும் சுவடியை எடுத்து அவ்வப்போது குறிப்பெழுதிக் கொள்கிறார்.”

“நானும் கவனித்தேன்.”

“இப்போது அவரிடம் அவர் எழுதிய ஏதேனும் ஒரு குறளைச் சொன்னால் அவரது எதிர்வினை எப்படி இருக்கும்?”

“இதுபற்றி ஏற்கனவே நமக்களித்த எச்சரிக்கைக் குறிப்புகளில் விரிவாய் உள்ளது. அது பட்டாம்பூச்சி விளைவுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் பயணத்தின் அதிகபட்ச விதிமீறலுக்கு நம்மை உட்படுத்தி நம்முடைய இருப்பைக் கேள்விக்குரியதாக்கிவிடும். அதுமட்டுமல்ல, திருவள்ளுவரின் படைப்பின் மீதும் விளைவுகளை உண்டாக்கி திருக்குறளில் எதிர்பாரா மாற்றமுறச் செய்யலாம்.”

“புரிகிறது”

“கேள்விகளுக்கான பதில்களை இவ்வாறு நீ எதிர்பார்த்தாயா?” இளந்திரையன் வினவினான்.

“நிச்சயமாக இல்லை. அன்னார் எதற்கும் பிடிகொடுக்கவில்லை, கவனித்தாயா? இறைநம்பிக்கை குறித்த அவரது பதில் நான் சிறிதும் எதிர்பாராதது. மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வள்ளுவரும் குறளும் யாருக்கும் தனிச்சொத்தில்லை. எந்த இனத்துக்கும் மதத்திற்கும் உரிமையல்ல. திருக்குறள் உலகப்பொதுமறை என்ற கூற்று நிரூபணமானது.” என்று விவரித்தான் மகிழ்நன்.

“அதுசரி! உன் கச்சை அவிழ்ந்தபோது அதைப் பார்த்ததும் திருவள்ளுவர் உடனே சுவடியில் எழுத்தாணியால் கீறினார். கவனித்தாயா?” என்று கேட்டான் இளந்திரையன்.

“ஆமாம். அதனால் என்ன?”

“எனக்கென்னவோ அவர் மனதில் அப்போது ஒரு குறள் உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது.”

“என்னது?”

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே..”

“இடுக்கண் களைவதாம் நட்பு” அட, நம்மால் ஒரு குறள் உருவானதா?” அதெப்படி? அந்தக் குறள் நாம் இங்கு வருவதற்கு முன்னேரே இருந்ததே.”

“ஆனால் நாம் பார்க்கும்போது அவர் இன்னும் திருக்குறளை எழுதவில்லையே.”

“அதுவும் சரியே. இந்தக் காலமுரணைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் மண்டை காய்ந்துவிடுகிறது. இதெல்லாம் கதைகளில் படித்தபோதும் திரைப்படங்களில் பார்த்தபோதும் எளிதாக இருந்தது.”

“எதுவானாலும் திருவள்ளுவர் குறளில் சொன்ன அந்த ‘உடுக்கை இழந்தவன்’ நீதான் என்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.”

“இந்த காலமுரண் அனுபவம், திருவள்ளுவருக்குப் புரியாத ஒரு வார்த்தையில் சொல்வதானால் ‘அற்புதம்’ என்று சொல்லியபடி விசைகளை முடுக்கி ‘காலக்கலம்’ விண்கலனை மீள் பயணப்பாதையில் செலுத்தினான் மகிழ்நன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button